Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

தீபம் நா. பார்த்தசாரதியின்
மணிபல்லவம் (சரித்திர நாவல்)
பாகம் 1 (தோரண வாயில்)

maNipallavam -part 1 (Historical Novel)
by nA. pArtacArati
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our thanks also go to the Tamil Virtual Academy for providing a scanned PDF copy of this work.
    This e-text has been generated using Google OCR online followed by proof-reading and corrections.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2019.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

தீபம் நா. பார்த்தசாரதியின்
மணிபல்லவம் (சரித்திர நாவல்)
(கல்கியில் தொடராக வெளிவந்த சரித்திர நாவல் )
பாகம் 1 (முதல் பருவம்/தோரண வாயில்)

Source:
மணிபல்லவம் (சரித்திர நாவல்)
நா. பார்த்தசாரதி
தமிழ்ப் புத்தகாலயம்,
8, மாசிலாமணி தெரு, சென்னை-600 017
ஏழாம் பதிப்பு: டிசம்பர் 2000 (மூன்றாம் பதிப்பு 1970)
-------
Manipallavam (Tamil Historical Novel)
by Naa. Parthasarathy
Seventh Edition, December 2000, pages 956
Published by: Tamil Puthakalayam
8, Masilamani Street, T. Nagar, Chennai-600 017
Printed at Udayam Enterprises, Chennai-2
-----------

மணிபல்லவம் -முதல் பருவம் (தோரண வாயில்)
உள்ளடக்கம்

எழுதியவன் கதை
0 தோரண வாயில்20. விளங்காத வேண்டுகோள்
1. இந்திர விழா21. மணிமார்பனுக்குப் பதவி
2. சக்கரவாளக் கோட்டம்22. நகைவேழம்பர் நடுக்கம்
3. கதக்கண்ணன் வஞ்சினம் 23. நாளைக்குப் பொழுது விடியட்டும்!
4. முல்லைக்குப் புரியவில்லை! 24. வானவல்லி சீறினாள்!
5. பூதசதுக்கத்திலே ஒரு புதிர் 25. முரட்டுப் பிள்ளை
6. வம்பு வந்தது! 26. கொலைத் தழும்பேறிய கைகள்
7. வீரசோழிய வளநாடுடையார் 27. தேர் திரும்பி வந்தது!
8. சுரமஞ்சரியின் செருக்கு 28. வேலும் விழியும்
9. முறுவல் மறைந்த முகம் 29. நிழல் மரம் சாய்ந்தது!
10. பெருமாளிகை நிகழ்ச்சிகள் 30. நெஞ்சில் மணக்கும் நினைவுகள்
11. அருட்செல்வர் எங்கே! 31. இருள் மயங்கும் வேளையில்...
12. ஒற்றைக்கண் மனிதன் 32. மாறித் தோன்றிய மங்கை
13. இது என்ன அந்தரங்கம்? 33. பூமழை பொழிந்தது! பூம்புனல் பரந்தது!
14. செல்வ முனிவர் தவச்சாலை 34. திருநாங்கூர் அடிகள்
15. இளங்குமரன் ஆவேசம் 35. தெய்வமே துணை!
16. திரை மறைவில் தெரிந்த பாதங்கள் 36. இன்ப விழிகள் இரண்டு
17. வேலியில் முளைத்த வேல்கள் 37. கருணை பிறந்தது!
18. உலகத்துக்கு ஒரு பொய்!38. உள்ளத்தில் ஒரு கேள்வி
19. நீலநாகமறவர்39. மனம் மலர்கிறது!


மணிபல்லவம் - எழுதியவன் கதை


இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.

நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப் பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.

போர்க்களங்களில் வில்லும் வேலும் வாளும் கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.

இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும் கூட தான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.

ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - "இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை" - என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய்சிலிர்க்கச் செய்வது இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. "பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறு பெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.

இதைத் தொடர்கதையாக வெளியிடுவதில் பலவிதத்திலும் அன்புடன் ஒத்துழைத்த கல்கி அதிபர். திரு. சதாசிவம் அவர்களுக்கும், காரியாலயப் பெருமக்களுக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நாவல் பொழுது போக்கிற்கு மட்டுமன்று, சிந்தனைக்கும் சேர்த்துத்தான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும்.

சென்னை         அன்புடன்
1-6-1970         நா. பார்த்தசாரதி
--------------
மணிபல்லவம் - முதல் பருவம்
தோரணவாயில்


பூரணமான இந்தக் கதை மாளிகையின் தோரணவாயிலில் ஆவல் பொங்க நிற்கும் வாசக அன்பர்களுக்குச் சில வார்த்தைகள்; சற்றே கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்! மணிமேகலையும், சிலப்பதிகாரமும் நிகழ்ந்த காலத்துப் பூம்புகார் நகரத்தையும், மதுரையையும், வஞ்சி மாநகரையும் ஒரு விநாடி உருவெளியில் உருவாக்கிக் காணுங்கள். பழைய பெருமிதத்தோடு சார்ந்த எண்ணங்களை நினைத்துக் கொண்டே காணுங்கள்.

அடடா! எவ்வளவு பெரிய நகரங்கள். எத்துணை அழகு! மாட மாளிகைகள் ஒரு புறம், கூட கோபுரங்கள் ஒருபுறம். சித்திரப் பொய்கைகள் ஒருபுறம், செந்தமிழ் மன்றங்கள் ஒருபுறம். பல பல சமயத்தார் கூடி வாதிடும் சமயப் பட்டிமன்றங்கள் ஒருபுறம். கோவில்கள், கோட்டங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பெருந்தோட்டங்கள், பூம்பொழில்கள் - நினைப்பில் அளவிட்டு எண்ணிப் பார்க்க இயலாத பேரழகு அல்லவா அது! சங்குகள் ஒலி விம்ம, மகரயாழும் பேரியாழும் மங்கல இசை எழுப்ப, மத்தளம் முழங்க, குழலிசை இனிமையிற் குழைய, நகரமே திருமண வீடு போல், நகரமே நாளெல்லாம் திருவிழாக் கொண்டாடுவது போல் என்ன அழகு! என்ன அழகு! சொல்லி மாளாத பேரழகு! சொல்லி மீளாத பேரழகு!

நம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடித்த பழமையை நினைக்கும் போது, எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது. இன்று அந்தப் பழம்பெரும் நகரங்களையும் அவற்றின் அரச கம்பீர வாழ்வையும் நினைக்கும்போது நீங்கள் உணர்வதென்ன? விழிகளில் கண்ணீரும், நெஞ்சில் கழிவிரக்க நினைவும் சுரக்க, உருவெளியில் அந்த மாபெரும் நகரங்களைக் கற்பனை செய்து காண முயலும் போது உங்கள் செவிகள் அவற்றில் ஒலித்த இன்னொலிகளைக் கேட்கவில்லையா? உங்கள் நாசியில் அகிற்புகை, சந்தனம், நறுமண மலர்கள் மணக்கவில்லையா? உங்கள் சிந்தனை அவற்றின் வளமான பெருவாழ்வை நினைக்கவில்லையா? அத்தகைய பெருநகரங்களின் செழிப்பு நிறைந்த வாழ்வினூடே நமது கதை நுழைந்து செல்கிறது என்பதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம் அல்லவா?

தமிழகத்தில் சரித்திர நாவல்கள் என்றால் அரசர், அரசி, படைவீரர், படைத்தலைவர், அமைச்சர் என்று கதாபாத்திரங்களை வகுத்துக் கொண்டு எழுதுவதே இது வரை வழக்கம். இதனால் ஆண்ட வாழ்வின் ஒரு பகுதி ஒளி நிறுவிக் காட்டப்பட்டதே தவிர ஆளப்பட்ட வாழ்வு என்ற பெரும் பகுதி விவரிக்கப் பெறவில்லை. பேரரசர் பலர் போர்கள் செய்து வெற்றி வாகை சூடி வீர வாழ்வு வாழ்ந்தும், அரசவையில் அரியணையில் அமர்ந்தும், பீடுறக் காலங் கழித்த நாளில் அவர்கள் அங்ஙனம் காலங்கழிக்கக் காரணமான மக்களும் பல்லாயிரவர் வாழ்ந்திருக்கத்தானே வேண்டும்?

அந்த மக்களிலும் வீரர்கள் இருந்திருப்பார்கள். பல்வேறு சமயச் சார்புள்ள விதவிதமான மக்கள் விதவிதமாக வாழ்ந்திருப்பார்கள். ஈடு சொல்ல முடியாத அழகர்கள் இருந்திருப்பார்கள். அரச குலத்து நங்கையரை அழகிற் புறங்காணும் பேரழகிகள் இருந்திருப்பார்கள். அவர்களிடையே நளினமான உறவுகள், காதல், களிப்பு எல்லாம் இருந்திருக்கும். வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையானதும், சரித்திரத்தை உண்டாக்கியதும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் நாயகம் கொண்டாடும் பேரரசர்களை அப்படிப் பேரரசர்களாக ஆக்கியதுமான இந்த மக்கள் கூட்டத்தின் மேல் வரலாற்று நாவலாசிரியர்கள் எந்த அளவு ஒளியைப் படர விட்டார்கள்? எந்த அளவு கவனம் செலுத்த முயன்றார்கள்?

பழைய வாழ்வின் இந்த அழகிய பகுதி மறைந்தே இருக்கிறது. மணிபல்லவம் கதையின் முக்கிய நோக்கங்களில் இந்த அழகிய வாழ்க்கையைப் புனைந்து கூற முயல்வதும் ஒன்று. மணிபல்லவம் கதையின் நாயகன் ஓர் அற்புதமான இளைஞன். காவிரிப்பூம் பட்டினத்துப் பொது மக்களிடையே வாழ்ந்து வளர்ந்து அழகனாய், அறிஞனாய், வீரனாய், உயர்ந்து ஓங்குகிறவன். பருவத்துக்குப் பருவம் அவனுடைய விறுவிறுப்பான வாழ்வில் மாபெரும் மாறுதல்கள் நிகழ்கின்றன. அதனால் இந்தக் கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் பாகம் என்று பெயரிடாமல் கதாநாயகனின் வாழ்க்கை மாறுதல்களை மனத்திற்கொண்டு பருவம் என்று பெயரிடுகிறேன். கதாநாயகனின் வாழ்வில் நிகழும் பெரிய பெரிய மாறுதல்களுக்கு எல்லாம் மணிபல்லவத் தீவு காரணமாகிறது. அவனுடைய வாழ்வில் இறுதி வரை விளங்கிக் கொள்வதற்கு அரிதாயிருக்கும் மிகப்பெரிய மர்மம் ஒன்றும் மணிபல்லவத்தில்தான் விளங்குகிறது. அந்த மெய் அவன் கண்களைத் திறக்கிறது. தன்னைப் பற்றிய பரம இரகசியத்தை அன்று அங்கே அவன் விளங்கிக் கொள்கிறான்.

இன்னும் இந்தக் கதையில் எழில் நிறைந்த பெண்கள் வருகிறார்கள். ஆனால், அவர்கள் அரசகுல நங்கையரில்லை. காதலும், வீரமும், சோகமும், இன்பமும், சூழ்ச்சியும், சோதனையும் வருகின்றன. ஆனால், அவை அரண்மனைகளையும் அரச மாளிகைச் சுற்றுப்புறங்களையும் மட்டும் சார்ந்து வரவில்லை. போரும் போட்டியும் வருகின்றன. ஆனால் அவை மணிமுடி தரித்த மன்னர்களுக்கிடையே மண்ணாசை கருதி மட்டும் வரவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெருங் காவியங்கள் பிறக்கக் காரணமாயிருந்தோர் இலக்கிய காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு அந்தப் பெருங்கதையில் கண்ட மிகப்பெரியதும் அளப்பரியதுமான பூம்புகார் நகரை உங்கள் கண்பார்வையிற் கொண்டு வந்து காட்ட முயல்கிறேன்.

அதோ!

சிறப்பு மிக்க சித்திரை மாதம். காவிரிப்பூம் பட்டினம் இந்திர விழா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. எங்கும் இனிய ஒலிகள், எங்கும் அலங்காரப் பேரொளி. எங்கும் மணமலர், அகிற்புகை வாசனை. எங்கும் மக்கள் வெள்ளம். காவிரி கடலோடு கலக்கும் சங்க முகத்தில் விழாக் கூட்டம். எங்கு நோக்கினும் யானைகளிலும், குதிரைகளிலும், தேரிலும், சித்திர ஊர்திகளிலும் விரையும் மக்கள். கடல் முடிந்து கரை தொடங்குமிடத்தில் மற்றொரு கடல் தொடங்கி ஆரவாரம் செய்வது போல் அலை அலையாய் மக்கள் குழுமியிருக்கின்றனர். மஞ்சளும் சிவப்புமாய் வண்ண வண்ண நிறம் காட்டும் மாலை வானத்தில் கோல எழில் குலவும் வேளை, அடங்கிய பொழுது, அமைந்த நேரம். அந்த நேரத்தில் அந்த விழாக் கோலங்கொண்ட கடற்கரையில் ஒரு பரபரப்பான இடத்தில் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கதாநாயகனைச் சந்திக்கிறோம். கதை தொடங்குகிறது. கதை மாளிகைக்குள்ளே நுழையலாம், வாருங்கள்.
-----------

முதல் பருவம் : 1. இந்திர விழா


பூம்புகார் நகரம் புது விழாக் கோலம் பூண்டு எழிலுடன் விளங்கிய சித்திரை மாதத்தில் சிறப்பு வாய்ந்த சித்திரை நாள். வானத்தின் கீழ் மூலையில் வெண்மதி முழு நிலா விரித்துக் கொண்டிருந்தது. 'இந்திர விழா தொடங்குகிறது' என்று வச்சிரக் கோட்டத்து முரசம் ஒலி பரப்பிய போதே அந்தப் பேரூர் விழாவுக்கான புதுமையழகுகளைப் புனைந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. விழாவுக்கான புத்துணர்வும் புது மகிழ்வும் பெற்று விட்டது.

அடடா! அதோ, காவிரி கடலோடு கலக்கும் காவிரி வாயிற் சங்கமத் துறையில் தான் எவ்வளவு பெருங்கூட்டம். கடலுக்கு அது கரை. ஆனால் அந்தக் கரைக்குக் கரையே இல்லாதது போல் மக்கள் திரண்டிருந்தனர். ஆடவரும், பெண்டிரும், இளைஞரும், முதியவரும், சிறுவரும், சிறுமியருமாக அழகாகவும் நன்றாகவும் அணிந்தும், புனைந்தும், உடுத்தும் வந்திருந்தனர். நோக்குமிடம் எங்கும் நிருத்த கீத வாத்தியங்களின் இனிமை திகழ்ந்தது. இந்திர விழாவுக்காக எத்தனை விதமான கடைகள் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டோ, அவ்வளவும் கடற்கரைக்கு வந்திருந்தன. இன்ன இன்ன கடையில் விற்கப்படும் பொருள்கள் இவையிவை என்பதை அறிவிக்க ஏற்றிய பல நிறக் கொடிகள் வீசிப் பறந்து கொண்டிருந்தன. பூவும் சந்தனமும் கூவிக் கூவி விற்கும் மணம் நிறைந்த பகுதி, பொன்னும் மணியும் முத்தும் பவழமும் மின்னும் ஒளி மிகுந்த கடைகள், பிட்டு விற்கும் காழியர்களின் உணவுக்கடைகள், பட்டுந் துகிலும் பகர்ந்து விற்கும் கடைகள், வெற்றிலை விற்கும் பாசவர்களின் கடைகள், கற்பூரம் முதலிய ஐந்து வாசனைப் பொருள்களை விற்கும் வாசவர் கடைகள் - எல்லாம் நிறைந்து கொடுப்போர் குரலும், கொள்வோர் குரலுமாகப் பேராவாரம் மிகுந்து கடற்கரை கடைக்கரையாகவே மாறியிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க பட்டினப்பாக்கத்து மக்களும், மருவூர்ப்பாக்கத்து மக்களும் கழிக்கரைகளில் வசித்து வந்த யவனர்களும், எல்லோரும் கடற்கரையிலே கூடிவிட்டதனால் நகரமே வறுமையடைந்து விட்டாற் போல் வெறுமை பெற்றிருந்தது. நாளங்காடித் தெருவிலுள்ள பூத சதுக்கத்துக் காவற் பீடிகையில் மட்டும் பொங்கலிடுவோர் கூட்டம் ஓரளவு கூடியிருந்தது. அது தவிர, மற்றெல்லாக் கூட்டமும் கடற்கரையில்தான்!

அவ்வழகிய கடற்கரையின் ஒரு கோடியில் மற்போர் நடந்து கொண்டிருந்த இடத்தில் பரபரப்பு அதிகமாயிருந்தது. கூத்து, இசை, சமய வாதம் முதலியனவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த அரங்கங்களை விட மற்போர் அரங்கத்தில், ஆர்வம் காரணமாக ஆண்களும் பெண்களுமான இளவயதினர் மிகுந்து கூடியிருந்தனர். முழுமதியின் ஒளி பரவும் வெண்மணற் பரப்பில் பலவகைக் கோலங்களைப் பாங்குறப் புனைந்து நின்றிருந்த பட்டினப் பாக்கத்துச் செல்வ நங்கையர் கந்தருவருலகத்து அரம்பையர் போல் காட்சியளித்தனர். எட்டி, காவிதி போன்ற பெரும்பட்டங்கள் பெற்ற மிக்க செல்வக் குடும்பத்து இளநங்கையர் சிலர் பல்லக்குகளில் அமர்ந்தவாறே திரையை விலக்கி மற்போர் காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர். அவர்கள் செவ்விதழ்களில் இளநகை அரும்பிய போதெல்லாம், எதிர்ப்புறம் நின்றிருந்த பூம்புகார் இளைஞர் உள்ளங்களில் உவகை மலர்ந்தது. பொன்னிறத்துப் பூங்கரங்களில் வளைகள் ஒலித்த போதெல்லாம் அங்கே கூடியிருந்த இளைஞர் நினைவுகளிலும் அவ்வொலி எதிரொலித்தது. அவர்கள் மென்பாதங்களில் மாணிக்கப்பரல் பொதித்த சிலம்பு குலுங்கின போதெல்லாம் இளைஞர் தம் தோள்கள் பூரித்தன. அல்லிப் பூவின் வெள்ளை இதழில் கருநாவற்கனி உருண்டாற் போல் அவர்கள் விழிகள் சுழன்ற போதெல்லாம் இளைஞர் எண்ணங்களும் சுழன்றன. மற்போரும் களத்தில் நடந்து கொண்டு தான் இருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் அலட்சியம் செய்தவன் போல் ஒதுங்கி நின்று கொண்டிருந்த தீரன் ஒருவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். கூட்டத்தில் அவன் நின்ற இடம் தனியாய்த் தெரிந்தது. கைகளைக் கட்டியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்த அழகிய இளைஞன் பார்வையிலிருந்தும் நின்ற விதத்திலிருந்தும் தான் எதற்கும் அஞ்சாதவன், எதற்கும் கவலைப்படாதவன் என்று தன்னைப் பற்றி அனுமானம் செய்து கொள்ள வைத்தான். அவனுக்குப் பணிந்து வணக்கம் செய்யக் கூடியவர்கள் போல் தோற்றமளித்த நாலைந்து விடலைத்தனமான இளைஞர்களும் அவனைச் சூழ்ந்து நின்றனர். செந்தழல் போல் அழகிய சிவப்பு நிறமும், முகமும் எழில் வடிந்த நாசியும், அழுத்தமான உதடுகளும் அவனுடைய தோற்றத்தைத் தனிக் கவர்ச்சியுடையதாக்கிக் காட்டின. அமைந்து அடங்கிய அழகுக் கட்டு நிறைந்த உடல், அளவான உயரம், மிகவும் களையான முகம், இவற்றால் எல்லோரும் தன்னைக் காணச் செய்து கொண்டு, தான் எதையுமே காணாதது போல் மற்போரை மட்டும் கவனித்துக் கொண்டு நின்றான் அந்த இளைஞன். இணையற்ற அழகுக்குச் சரிசமமாக அவனுடைய விழிகளின் கூரிய பார்வையில் அஞ்சாமையின் சாயல் அழுத்தமாகத் தெரிந்தது. 'இவன் நம் பக்கம் சற்றே விழி சாய்த்துப் பார்க்க மாட்டானா?' என்று முறுவலுக்கும், வலையொலிக்கும் சொந்தக்காரர்கள் ஏங்க, எதற்குமே தான் ஏங்காதவன் போல் மற்போரில் கவனமாக நின்றிருந்தான் அந்த இளைஞன். ஏக்கங்களைப் பலருக்கு உண்டாக்கிக் கொண்டு நிற்கிறோம் என்பதையே உணராதவன் போல் சிறிதும் ஏங்காமல் நின்றான். ஆசைகளுக்கும் ஆசைப்படுகிற அழகாகத் தெரியவில்லை அது! ஆசைகளையே ஆசைப்பட வைக்கிற அழகாகத் தோன்றியது. அவ்வளவிற்கும் ஆடம்பரமான அலங்காரங்கள் எதுவும் அவனிடம் காட்சியளிக்கவில்லை. முத்தும், மணியும், பட்டும் புனைவுமாகச் செல்வத் திமிரைக் காட்டிக் கொண்டு நின்ற பட்டினப்பாக்கத்து இளைஞர்களின் தோற்றத்திலிருந்து வேறுபட்டு எளிமையாகத் தோன்றினான் அவன். அவனைச் சுற்றி சீடர்கள் போல் நின்ற இளைஞர்கள் இடையிடையே மற்போர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவனிடம் ஏதோ கூறிய போதெல்லாம் 'சிறிது பொறுத்திருங்கள்' என்று பதறாமல் மெல்லக் கூறினானே தவிர, அவன் உணர்ச்சி வசப்படவில்லை. ஆனால் மற்போரை நன்கு கூர்ந்து கவனித்து வந்தான். மற்போரை உற்சாகப்படுத்தி நடுநடுவே கூட்டத்தினர் ஆரவாரக் குரலொழுப்பிய போது அதிலும் அவன் கலந்து கொள்ளவில்லை. அலட்சியமான புன்னகை மட்டும் அவனது சிவந்த இதழ்களில் ஓடி மறைந்தது.

மிகவும் வலிமை வாய்ந்த யவன மல்லன் ஒருவன் களத்தில் வெற்றியோடு போர் புரிந்து கொண்டிருந்தான். போர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அவனே வென்று கொண்டிருந்தான். அதே களத்தில் மூன்று தமிழ் மல்லர்களையும் நாகர் இனத்தைச் சேர்ந்த இரண்டு மல்லர்களையும் தோற்கச் செய்து அந்த வெற்றியாணவத்தில் மேலும் அறைகூவி ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தான் யவன மல்லன். அவனுடைய முகத்திலும் தோள்களிலும் வெற்றி வெறி துடித்தது. செருக்கின் சாயல் தெளிவாய்த் தெரிந்தது. காரணம் அவனால் தோல்வியடைந்த மூன்று தமிழ் மல்லர்களும் சோழ நாட்டிலே சிறந்த மற்போர் வீரர்களெனப் பெயர் பெற்றவர்கள். வெற்றியில் பெருமிதம் தான் இருக்கிறது. ஆனால் வல்லவர்களை வெல்லுவதில் பெருமிதத்தைக் காட்டிலும் இன்னதென்று கூற இயலாததொரு பேருணர்வும் இருக்கிறது. அந்தப் பேருணர்வில் திளைத்த யவன மல்லன் அறைகூவல் என்ற பேரில் என்னென்னவோ பேசினான். சோழ நாட்டு ஆண்மையையே குறைத்துக் கூறுகிற அளவு அவனிடமிருந்து சொற்கள் வெளிப்பட்டன. அவனுடைய அறைகூவலில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ் இனத்து ஆண்மை இகழப்படுவதை உணராமலோ அல்லது உணர்ந்தும் வேறு வழியின்றியோ கூடியிருந்த பட்டினப்பாக்கத்துச் செல்வர்களும் செல்வியர்களும் குலுங்கக் குலுங்க நகைத்துக் களிப்படைந்து கொண்டிருந்தனர்.

அப்படிக் களித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் கணீரென்று ஒலி முழக்கி நகைப்புக்களை அடக்கி மேலெழுந்தது அந்த கம்பீரமான ஆண்மைக் குரல்!

"பிதற்றாதே! நிறுத்து!" - பாய்கின்ற புலிபோல் திரும்பி இந்த இரண்டு சொற்களுக்கும் உரியவன் யார் என்று காணக் கண்களைச் சுழற்றினான் யவன மல்லன். அவனுடைய விழிகள் மட்டுமா சுழன்றன? அல்ல. அங்கே கூடியிருந்த வேல்விழி நங்கையர்கள், நாகரிக நம்பியர்கள் அனைவர் பார்வையும் இந்தத் துணிவான சொற்களைப் பிறப்பித்தவனைத் தேடி விரைந்தன! ஆவலோடு பாய்ந்தன.

அவன் தான்! அந்த அழகிய இளைஞன் இயல்பாகச் சிவந்த தன் முகமே மேலும் சிவக்க நின்றான். அவனுடைய வனப்பு வாய்ந்த கூர் விழிகளில் துணிவின் ஒளி துள்ளியது. தோளோடு போர்த்திருந்த ஒரு பழைய பட்டுப் போர்வையை விலக்கிச் சற்றே கிழிந்த மேலங்கியையும் கழற்றிவிட்டுக் கட்டமைந்த செம்பொன் மேனி சுடர்விரிக்க அவன் முன் வந்தான்; அப்போது அவனுடைய தோள்களில் எத்தனை நூறு வேல்விழிகள் தைத்திருக்கும் என்று அளவிட்டு உரைப்பதற்கில்லை. அந்த ஒரு விநாடி வேல்விழி நங்கையர் அனைவரும் கண்கள் பெற்ற பயனைப் போற்றியிருப்பார்கள். பெண்களாகப் பிறந்ததற்காகவும் நிச்சயமாகப் பெருமை கொண்டிருப்பார்கள். யவன மல்லனை நோக்கி வீரநடை பயின்ற அவனை "இளங்குமரா நிதானம்! அவன் முரடன்!" என்று அவன் அருகில் நின்ற இளைஞர்களில் ஒருவன் எச்சரிக்கை செய்து கூவியதிலிருந்து அவன் பெயர் இளங்குமரன் என்பது அங்கிருந்தவர்களுக்குத் தெரிந்தது. அவன் முகத்துக்கும் தோளுக்கும் பரந்த மார்புக்கும் தன் நெஞ்சையும், நினைவுகளையும் தோற்கக் கொடுத்த பட்டினப்பாக்கத்துப் பெருஞ் செல்வ மகள் ஒருத்தி பல்லக்கிலிருந்தவாறே அந்தப் பெயரை இதழ்கள் பிரிய மெல்லச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். அவள் இதழ் எல்லையில் அப்போது இளநகை விளையாடியது. நெற்றியிலும், கருநீல நெடுங்கண்களிலும், மாம்பழக் கன்னங்களிலும் நாணம் விளையாடியது. நெஞ்சில் பரவசம் விளையாடிக் கொண்டிருந்தது.

"வசந்தமாலை! எவ்வளவு அழகான பெயர் இது. நீ கேட்டாயல்லவா!" - என்று பல்லக்கில் எதிரேயிருந்த தோழியை வினவினாள் அந்தச் செல்வ மகள். தோழி பொருள் நிறைந்த நகை புரிந்தாள். இதற்குள் களத்தில் அந்த இளைஞனும் யவன மல்லனும் கைகலந்து போர் தொடங்கியதால் எழுந்த ஆரவாரம் அவர்கள் கவனத்தைக் கவரவே, அவர்களும் களத்தில் கவனம் செலுத்தலாயினர். 'இவ்வளவு திறமையாக மற்போர் செய்யத் தெரிந்தவனா இதுவரை ஒன்றுந் தெரியாதவனைப் போல் நின்று கொண்டிருந்தான்?' என்று கூடியிருந்தவர்களை வியக்கச் செய்தது இளங்குமரன் என்று அழைக்கப்பட்ட அந்த இளைஞனின் வன்மை! மின்னல் பாய்வது போல் தன் பொன்நிறக் கரங்களை நீட்டிக் கொண்டு அவன் பாய்ந்து தாக்கிய போதெல்லாம் யவன மல்லனுக்கு விழி பிதுங்கியது. இளங்குமரனை உற்சாகமூட்டி அவனுடன் இருந்த இளைஞர்கள் கைகளை ஆட்டியவாறே ஆரவாரம் செய்து கூவினர்.

இந்தச் சமயத்தில் சித்திரப் பல்லக்கிலிருந்த பட்டினப் பாக்கத்து இளநங்கை தன் தோழி வசந்தமாலையை நோக்கி இனிய குரலில் யவன மல்லனைத் திணறச் செய்யும் அவன் புகழை வாய் ஓயாமல் கூறிக் கொண்டிருந்தாள்.

"நீங்கள் எதையுமே அதிகமாகப் புகழும் வழக்கமில்லையே. இன்றைக்கு ஏனோ இப்படி...?" என்று தொடங்கிய அவள் தோழி வசந்தமாலை, சொற்களில் சொல்ல ஆரம்பித்ததைச் சொற்களால் முடிக்காமல் தன் நளினச் சிரிப்பில் முடித்து நிறுத்தினாள்.

களத்தில் மற்போர் விறுவிறுப்பான நிலையை அடைந்திருந்தது. இருவரில் வெற்றி யாருக்கு என்று முடிவு தெரிய வேண்டிய சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோருடைய உள்ளமும் அந்த விநாடியை ஆவலோடு எதிர்கொள்ளத் தவித்துக் கொண்டிருந்தது. இன்னாரென்று தெரியாமல் இன்ன காரணம் என்று விளங்காமல் எல்லாருடைய மனத்திலும் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டிருந்த அந்தத் தமிழ் இளைஞனே வெல்ல வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்த்தனர். அவன் தோற்றால் அத்தனை பேருடைய உள்ளமும் தோற்றுவிடும் போலிருந்தது. களத்தில் அவனுடைய கவர்ச்சி வளரும் விழிகளில் சோர்வு தெரிந்த போதெல்லாம் காண்போர் விழிகளில் பதறி அஞ்சும் நிலை தெரிந்தது. பொன் வார்த்து வடித்து அளவாய் அழகாய்த் திரண்டாற் போன்ற அவன் தோள்கள் துவண்ட போதெல்லாம் சித்திரப் பல்லக்கிலிருந்த எட்டி குமரன் வீட்டுப் பெருஞ்செல்விக்குத் தன் நெஞ்சமே துவண்டு போய்விட்டது.

இறுதியாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த விநாடியும் வந்தது. வேரற்றுச் சாயும் அடிமரம் போல் யவன மல்லன் விழி பிதுங்கி மணற்பரப்பில் சாய்ந்தான். இளங்குமரன் வென்றான். வெற்றி மகிழ்ச்சியில் கூட்டம் அடங்காத ஆரவாரம் செய்தது! அவனுடைய நண்பர்களோ களத்துக்குள் ஓடிவந்து அவனை அப்படியே மேலே தூக்கிவிட்டனர். இந்திர விழாவுக்காக அங்கே வந்திருந்த மலர்க்கடையிலிருந்து முல்லை மாலை ஒன்றை வாங்கிக் கொணர்ந்து அவன் கழுத்தில் சூட்டினான் உடனிருந்த நண்பர்களில் ஒருவன். வெற்றிக் களிப்போடு அவன் அழகு திகழச் சிரித்துக் கொண்டு நின்ற போது, மலர்ந்த மார்பில் அலர்ந்து நெளிந்த முல்லை மாலையும் சேர்ந்து கொண்டு சிரிப்பது போல் தோன்றியது. அந்தச் சிரிப்பையும் வெற்றியையும் கூட்டத்திலிருந்த சில யவனர்கள் மட்டும் அவ்வளவாக விரும்பவில்லை போல் தோன்றியது. அங்கே கூடியிருந்த கூட்டம் சிறிது கலைந்து போவதற்கு வழி ஏற்பட்ட போது அவனும், அவனுடைய நண்பர்களும் மணற்பரப்பில் நடக்கத் தொடங்கினர். அப்போது வழியை மறிப்பது போல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது அந்தச் சித்திரப் பல்லக்கு. நுண்ணிய பூ வேலைப்பாடுகள் அமைந்த பல்லக்கின் ஓவியத் திரை விலகியது. வளைகள் குலுங்கும் செந்நிற முன்கை ஒன்று நீண்டது. அந்தக் கையின் மெல்லிய நீண்ட காந்தள் விரல்களில் பேரொளி நிறைந்ததும் விலை வரம்பற்றதும் நவமணிகளால் தொகுக்கப்பட்டதுமான மணிமாலை ஒன்று இலங்கியது. அந்த மாலை ஏந்திய செந்தாமரைப் பூங்கரம் இளங்குமரனுடைய முகத்திற்கு முன் நீண்ட போது அவன் ஒன்றும் புரியாது திகைத்தான். நிமிர்ந்து பார்த்த போது பல்லக்கினுள்ளிருந்து அந்த இளநங்கை முகத்திலும், கண்களிலும், இதழ்களிலும், எங்கும் சிரிப்பின் மலர்ச்சி தோன்ற எட்டிப் பார்த்தாள். பல்லக்கினுள்ளிருந்து பரவிய நறுமணங்களினாலும், திடீரென்று ஏற்பட்ட அந்தச் சந்திப்பினாலும் சற்றே தயங்கி நின்றான் இளங்குமரன். சொல்லைக் குழைத்து உணர்வு தோய்த்த மெல்லினிமைக் குரலில் அவள் கூறலானாள்:

"இந்தப் பரிசை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேணும்."

"எதற்காகவோ...?"

"பெருவீரமும் வெற்றியும் உடையவர்களைப் பரிசளித்துப் போற்றும் பெருமையை அடையும் உரிமை இந்தப் பூம்புகார் நகரத்தில் ஒவ்வொருவருக்கும் உண்டு! எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகிற இந்திர விழாக்காலத்தில் இப்படிப் பரிசளிக்கும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்."

சற்றும் தயங்காமல் துணிவாக இவ்வாறு மறுமொழி கூறிய அந்த எழிலரசியின் வதனத்தைச் சில விநாடிகள் இமையாது நோக்கினான் இளங்குமரன். அவள் இன்னும் நன்றாக, இன்னும் அழகாக, இன்னும் நிறைவாக நகைத்துக் கொண்டே மணிமாலையை அவனுக்கு மிக அருகில் நீட்டினாள். அந்தத் துணிவும், செல்வச் செழிப்பும் அவன் மனத்துக்குப் புதுமையான அனுபவத்தை அளித்தன. பல்லக்கிலிருந்த அடையாளங்கள் அவள் எட்டிப் பட்டம் பெற்ற பெருங்குடியைச் சேர்ந்தவள் என்பதை அவன் உய்த்துணர இடமளித்தன.

பதில் ஒன்றும் கூறாமல் மெல்ல நகைத்தான் இளங்குமரன். அந்த நகைப்பில் எதையோ சாதாரணமாக மதித்து ஒதுக்குகிறாற் போன்ற அலட்சியத்தின் சாயல்தான் அதிகமிருந்தது. அவன் நண்பர்கள் அமைதியாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். இளங்குமரன் அதே குறும்பு நகையோடு கேட்டான்:

"அம்மணி! எனக்குச் ஒரு சிறு சந்தேகம்!"

"என்ன சந்தேகமோ?"

"இதை எனக்குக் கொடுத்து விடுவதனால் நீங்கள் பெருமைப்பட இடமிருக்கிறது. ஆனால் இதை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வதனால் நான் பெருமைப்பட்டுக் கொள்ளச் சிறிதாவது இடமிருக்கிறதா என்பதுதான் என் சந்தேகம்" என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி இளங்குமரன் கேட்ட போது அவள் மருண்டாள். அவளுடைய மலர் விழிகள் வியந்தது போலகன்றன.

"வாங்கிக் கொள்ளுங்கள், ஐயா! எங்கள் தலைவி நீங்கள் மற்போர் செய்தபோது காட்டிய ஆர்வத்தைக் கண்டு நானே வியப்படைந்து விட்டேன்" - எழிலரசிக்கு எதிரே தோழி போன்ற தோற்றத்தோடு வீற்றிருந்த மற்றொரு பெண் இளங்குமரனை நோக்கி இவ்வாறு பரிந்து கூறினாள். இதைக்கேட்டு இன்னும் பெரிதாக நகைத்தான் இளங்குமரன். அவள் முகம் அந்த நகைப்பொலியால் சுருங்கிச் சிறுத்தது போல் சாயல் மாறியது.

உடனே, "வசந்தமாலை! பத்து நூறாயிரம் பொன் பெறுமானமுள்ள மணிமாலையைப் பரிசு கொடுப்பதற்காக நாம் பெருமைப்படுவது பெரிதில்லையாம். இவர் பெருமைப்படுவதற்கு இதில் இடமிருக்கிறதா என்று சிந்திக்கிறாராம்" என்று அவள் தோழியிடம் கூறுவது போல் அவனுக்குக் கூறிய குறிப்புரையில் கடுமையும் இகழ்ச்சியும் கலந்திருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவன் வதனத்தில் நகைக் குறிப்பு வறண்டது. ஆண்மையின் கம்பீரம் நிலவியது.

"மன்னியுங்கள், அம்மணீ! உங்கள் மணிமாலையின் பெறுமானம் பத்து நூறாயிரம் பொன்னாயிருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம்! ஆனால் என்னுடைய வீரத்தின் பெறுமானமாக அதை நீங்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 'கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது; கொள்ளமாட்டேன் என்று மறுப்பது அதை விட உயர்ந்தது' என்று பழைய நூல்களில் படித்திருப்பீர்கள். என்னைப் போல் ஆண்மையும் தன்மானமும் உள்ளவர்கள் பிறருடைய கைகளிலிருந்து அவசியமின்றி எதையும் பெற விரும்புவதில்லை. இந்தப் பெரிய நகரத்திலே *இலஞ்சி மன்றத்திலும், உலக அறவியின் வாயிற்புரத்திலும் (* வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரில் இருந்த இடங்கள்) கூனும் குருடுமாக, நொண்டியும் நோயுடம்புமாக ஆற்றலும் வசதியுமில்லாத ஏழையர் எத்துணையோ பேர் பிச்சைப் பாத்திரங்களுடன் ஏங்கிக் கிடக்கிறார்கள். அப்படிக் கொடுப்பதானால் அவர்களுக்கு வாரிக் கொடுத்துப் பெருமையடையுங்கள். வணக்கம். மீண்டும் உங்களுக்கு என் நன்றி, போய் வருகிறேன்" என்று விரைவாக விலகி நடந்தான் இளங்குமரன். அவனைப் பின்பற்றி நடந்த நண்பர்களின் ஏளன நகையொலி அவள் செவியிற் பாய்ந்தது. இளங்குமரனின் கழுத்தில் வெற்றிமாலையாக அசைந்த முல்லை மாலையின் நறுமணம் அவன் விரைவாகத் திரும்பி நடந்த திசையிலிருந்து பல்லக்கினுள் காற்றோடு கலந்து வந்து பரந்தது. ஆனால் அந்த மணத்தினால் அவளுடைய கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஆற்ற முடியவில்லை. பல்லக்குத் தூக்கி நிற்பவர்க்கும் தோழிக்கும் முன்னிலையில் தன்னை எடுத்தெறிந்து பேசி விட்டுப் போன அவன் செல்லும் திசை நோக்கி அவள் கண்கள் சீற்றத்தைப் புலப்படுத்தின. அவள் தன் கைவிரல்களை மணிமாலையோடு சேர்த்துச் சொடுக்கினாள். அவளுடைய பவழ மெல் உதடுகள் ஒன்றையொன்று மெல்லக் கவ்வின.

வேகமாக நடந்த இளங்குமரன் சற்றே நின்று கேட்க முடிந்திருந்தால், அந்தப் பல்லக்கு அங்கிருந்து நகர்ந்த போது, "வசந்த மாலை! இவனை அழகன் என்று மட்டும் நினைத்தேன்; முரடனாகவும் திமிர் பிடித்தவனாகவும் அல்லவா இருக்கிறான்?" என்று சீறி ஒலித்த செல்வமகளின் கோபக் குரலைத் தானும் செவிமடுத்திருப்பான். ஆனால் அந்தச் சீற்றக் குரலில் சீற்றமே முழுமையாக இருந்ததா? இல்லை! கவனித்தால் சீற்றமும் சீற்றமற்ற இன்னும் ஏதோ ஓருணர்வும் கலந்து இருந்தது புலப்பட்டது.
------------

முதல் பருவம் : 2. சக்கரவாளக் கோட்டம்


இராப்போது நடு யாமத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்திர விழாவின் ஆரவாரங்கள் பூம்புகாரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக இல்லை. புறநகரில் சக்கரவாளக் கோட்டத்தை அடுத்திருந்த சம்பாபதி வனம் இருண்டு கிடந்தது. நிலா ஒளியின் ஆற்றல் அந்த வனத்தில் தன் ஆதிக்கத்தைப் படரவிட முடியாது. அடர்ந்து நெருங்கிய மரங்களும் செடி கொடிகளும் பின்னிப் பிணைந்து நெடுந்தொலைவுக்குப் பரந்து கிடந்தது சம்பாபதி வனம். அந்த வனத்தில் மற்றோர் புறம் காவிரிப்பூம்பட்டினத்து மயானமும், சக்கரவாளக் கோட்டமென்னும் அங்கங்களாகிய முனிவர்களின் தவச்சாலையும் கந்திற்பாவை கோட்டமும் உலகவறவியும் இன்னொரு பக்கத்தே இரவின் அமைதியிலே மூழ்கிக் கிடந்தன. மரக்கிளைகளின் அடர்த்திக்கு இடையே சிறு சிறு இடைவெளிகளின் வழியே கருப்புத் துணியிர் கிழிசல்கள் போல் மிகக் குறைந்த நிலவொலி சிதறிப் பரவிக்கொண்டிருந்தது. நரிகளின் விகாரமான ஊளை ஒலிகள், கோட்டாண்களும் ஆந்தையும் குரல் கொடுக்கும் பயங்கரம் எல்லாமாகச் சேர்ந்து அந்த நேரத்தில் அந்த வனப் பகுதி ஆட்கள் பழக அஞ்சுமிடமாகிக் கொண்டிருந்தன. வனத்தின் நடுவே சம்பாபதி கோயில் தீபத்தின் மங்கிய ஒளியினால் சுற்றுபுறம் எதையும் நன்றாகப் பார்த்து விட முடியாது. நரி ஊளைக்கும் ஆந்தை அலறலுக்கும் இணைந்து நடுநடுவே சக்கரவாளக் கோட்டத்து வன்னி மரங்களின் கீழ் கபாலிகர்களின் நள்ளிரவு வழிபாட்டு வெறிக் குரல்களும் விகாரமாக ஒலித்தன.

இந்தச் சூழ்நிலையில் சம்பாபதி வனத்தின் ஒருபகுதியில் இளங்குமரன் அவசரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். தோளிலும் உடலின் பிற அங்கங்களிலும் மாலையில் கடற்கரையில் அந்த யவன மல்லனோடு போரிட்டு வென்ற களைப்பு இருந்ததாயினும் மிக முக்கியமான காரியத்தை எதிர்நோக்கிச் செல்கிறவன் போல் அந்த அகால நேரத்தில் அங்கு அவன் சென்று கொண்டிருந்தான். கடற்கறையிலும், நாளங்காடிப் பூத சதுக்கத்திலும் இந்திர விழாக் கோலாகலங்களைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது மருவூர்ப் பாக்கத்தில் நண்பர்களை ஒவ்வொருவராக அனுப்பிவிட்டு, வேண்டுமென்றே தனிமையை உண்டக்கிக் கொண்டு புறப்பட்டிருந்தான் அவன். இந்தச் சம்பாபதி வனமும், சக்கரவாளக் கோட்டமும், பயங்கரமான இரவுச் சூழலும் அவனுக்குப் புதியவை யானால்தானே அவன் பயப்பட வேண்டும்? உயிர்களின் அழிவுக்கு நிலமாக இருந்த இதே சக்கரவாளத்துக்கு அருகில் இருந்த வனத்தில் தான் அவன் வளர்ந்து செழித்துக் காளைப் பருவம் எய்தினான்! இதே சம்பாபதி கோவில் வாயிலிலுள்ள நாவல் மரங்களின் கிழ் விடலை வாலிபர்களோடும், முரட்டு இளைஞர்களோடும், அலைந்து திரிந்துதான் வலிமையை வளர்த்துக் கொண்டான். இங்கே ஒவ்வோரிடமும், ஒவ்வோர் புதரும், மேடு பள்ளமும் அவனுக்குக் கரதலப் பாடம் ஆயிற்றே! எத்தனை வம்புப் போர்கள், எத்தனை இளம்பிள்ளைச் சண்டைகள், எத்தனை அடிபிடிகள், அவனுடைய சிறுபருவத்தில் இந்த நாவல் மரங்களின் அடியில் நடைபெற்றிருக்கும்! அவனுடைய அஞ்சாமைக்கும் துணிவுக்கும் இந்தச் சுழ்நிலையில் வளர்ந்ததே ஒரு காரணமென்று நண்பர்கள் அடிக்கடிக் கூறுவதுண்டு. மனத்தில் அந்தப் பழைய நினைவுகள் எல்லாம் தோன்றிப் படர வேகமாக நடந்து கொண்டிருந்தான் இளங்குமரன்.

'இன்றைக்கு இந்த நள்ளிரவில் நான் தெரிந்து கொள்ளப் போகிற உண்மை என் வாழ்வில் எவ்வளவு பெரிய மலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது! என்னைப் பெற்ற அன்னையை நினைவு தெரிந்த பின் முதன் முதலாக இன்று காணப் போகிறேன். அவளுடைய அருள் திகழும் தாய்மைத் திருக்கோலத்தை இந்த இருண்ட வனத்துக்குள் சம்பாபதி கோவிலின் மங்கிய விளக்கொளியில் காணப்போகிறேனே என்பதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது! இன்னும் ஒளிமிக்க இடத்திலே அவளைக் காண வேண்டும். தாயே! என்னை வளர்த்து ஆளாக்கி வாழ விட்டிருக்குமந்தப் புனிதமான முனிவர் இன்று உன்னை எனக்குக் காண்பிப்பதாக வாக்களித்திருக்கிறார். 'சித்திரை மாதம் சித்திரை முழுமதி நாளில் இந்திர விழாவன்று உன் அன்னையைக் காண்பிக்கிறேன்' என்று மூன்றாண்டுகளாக ஏமாற்றி என் ஆவலை வளர்த்து விட்டார் முனிவர். இன்று என் உள்ளம் உன்னை எதிர்பார்த்து நெகிழ்ந்திருக்கிறது. அன்னையே! உன்னுடைய பாதங்களைத் தொட்டு வணங்கும் பேறு இந்தக் காளைப் பருவத்திலிருந்தாவது எனக்குக் கிடைக்கவிருக்கிறதே! இன்று என் வாழ்வில் ஒரு பொன்னாள்' என்று பெருமை பொங்க நினைத்தவனாக விரைந்து கொண்டிருந்தான் இளங்குமரன். தாயும் தந்தையும் எவரென்று தெரியாமல் சக்கரவாளக் கோட்டத்துத் தவச் சாலையிலுள்ள முனிவரொருவரால் வளர்த்து ஆளாக்கப்பட்டவன் அவன். வயது வந்த பின் அவன் தன் பெற்றோர் பற்றி நினைவு வரும் போது எல்லாம் ஏதேதோ சொல்லி ஆவலை வளர்த்திருந்தார் அந்த முனிவர். சித்திரா பௌர்ணமியன்று காட்டுவதாகச் சொல்லி மூன்று முறை இந்திர விழாக்களில் அவனை ஏமாற்றி விட்டிருந்தார் அவர். எத்தனைக்கெத்தனை தைரியசாலியாகவும் அழகனாகவும் வளர்ந்திருந்தானோ, அத்தனைக்கத்தனை தன் பிறப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தவிக்கும் தணியாத தாகம் அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது. அதில் மிகப் பெரிய மர்மங்களும் அதியற்புதச் செய்திகளும் இருக்க வேண்டும்போல் ஓர் அநுமானம் அவனுள் தானாகவே முறுகி வளரும்படி செய்திருந்தார் அந்த முனிவர்.

அன்று இரவு நடுயாமத்திற்கு மேல் சம்பாபதி கோவிலின் பின்புறமுள்ள நாவல் மரத்தின் கீழ் அவனைப் பெற்ற தாயையும் அவனையும் எவ்வாறேனும் சந்திக்க வைத்து விடுவதாக முனிவர் உறுதி கூறியிருந்தார். 'ஆகா! அதோ நாவல் மரத்தடி வந்துவிட்டது. மரத்தடியில் யாரோ போர்த்திக்கொண்டு அடக்கமாக அமர்ந்திருக்கிறார் போலவும் தெரிகிறது. பக்கத்தில் சிறிது விலகினாற்போல் நிற்பது யார்? வேறு யாராயிருக்கும்? முனிவர்தான்! என் அருமை அன்னையை அழைத்து வந்து அமர வைத்துக் கொண்டு என்னை எதிர்பார்த்து ஆர்வத்தோடு நிற்கிறார் போலும்! நான் தான் வீணாக நேரமாக்கி விட்டேன். இன்னும் சிறிதுபோது முன்னாலேயே வந்திருக்கலாமே!'

இவ்வாறு உணர்வுமயமான எண்ணங்களோடு மரத்தடியை நெருங்கிய இளங்குமரன், "சுவாமி! அன் அன்னையை அழைத்து வந்து விட்டீர்களா? இன்று நான் பெற்ற பேறே பேறு" என்று அன்பு பொங்கக் கூறியவாறே முனிவரின் மறுமொழியையும் எதிர்பார்க்காமல் அமர்ந்திருந்த அன்னையுருவை வணங்கும் நோக்குடன் நெடுஞ் சாண் கிடையாக மண்ணில் வீழ்ந்தான். 'அம்மா' என்று குழைந்தது அவன் குரல்.

அம்மாவின் பதில் இல்லை! ஆசி மொழி கூறும் அன்னையின் பாசம் நிறைந்த குரலும் ஒலிக்கவில்லை! மெல்லச் சந்தேகம் எழுந்தது இளங்குமரனின் மனத்தில். 'அன்னையைக் காணும் ஆர்வத்தில் இருளில் யாரென்று தெரியமலே வீழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிறோமோ!' என மருண்டு விரைவாக எழுந்திருக்க நிமிர்ந்தான்.

இரண்டு வலிமை வாய்ந்த கைகள் அவனுடைய தோள் பட்டைகளை அமுக்கி மேலே எழ முடியாமல் செய்தன. வேறு இரு கைகள் கால் பக்கம் உதற முடியாமல் தன்னைக் கட்ட முயல்வதையும் அவன் உணர்ந்து கொண்டான்.

அன்னையைக் காணும் ஆர்வத்தில் ஏமாந்து தப்புக் கணக்குப் போட்டு விட்டோம் என்று தீர்மானமாக உணர்ந்து எச்சரிக்கை பெற்ற அவன் துள்ளி எழுந்து திமிர முயன்றான். நாவல் மரத்தில் ஆந்தை அலறியது. மரத்தைப் புகலடைந்திருந்த ஏதோ சில பறவைகள் இருளில் ஓசையெழுமாறு சிறகடித்துப் பறந்தன.
-----------

முதல் பருவம் : 3. கதக்கண்ணன் வஞ்சினம்


உயிர்க்குணங்களுள் ஏதேனும் ஒன்று மிகுந்து தோன்றும்போது மற்றவை அடங்கி நின்றுவிடும் என்று முனிவர் தனக்கு அடிக்கடிக் கூறும் தத்துவ வாக்கியத்தை அந்த பயங்கரமான சூழ்நிலையில் பகைவர் கரங்களின் கீழே அமுங்கிக் கொண்டே மீண்டும் நினைத்தான் இளங்குமரன். தாயைக் காணப் போகிறோம் என்ற அடக்க முடியாத அன்புணர்வின் மிகுதியால், முன் எச்சரிக்கை, தீரச் சிந்தித்தல் போன்ற பிற உணர்வுகளை இழந்து, தான் பகைமையின் வம்பில் வகையாகச் சிக்கிக்கொண்டதை அவன் உணர்ந்தான். மேலே எழ முடியாமல் தோள்பட்டைகளையும் கால்களையும் அழுத்தும் பேய்க் கரங்களின் கீழ்த் திணறிக் கொண்டே சில விநாடிகள் தயங்கினான் அவன். சிந்தனையைக் கூராக்கி எதையோ உறுதியாக முடிவு செய்தான். மனத்தில் எல்லையற்று நிறைந்து பெருகும் வலிமையை உடலுக்கும் பரவச்செய்வது போலிருந்ததே தவிர அவனது சிறிது நேரத் தயக்கமும் அச்சத்தின் விளைவாக இல்லை!

முதலில் வணங்குவதற்காகக் கீழே கவிழ்ந்திருந்த உள்ளங் கைகளில் குறுமணல் கலந்த ஈரமண்ணை மெல்லத் திரட்டி அள்ளிக் கொண்டான். 'பிறந்த மண் காப்பாற்றும்' என்பார்கள். சிறுவயதிலிருந்து தவழ்ந்தும், புழுதியாடியும் தான் வளர்ந்த சம்பாபதிவனத்து மண் இன்னும் சில கணங்களில் தனக்கு உதவி செய்து தன்னைக் காப்பாற்றப் போவதை எண்ணியபோது இளங்குமரனுக்குச் சிரிப்பு வந்தது. தன் வன்மையை எல்லாம் திரட்டிக்கொண்டு திமிறித் தலையை நிமிர்த்தித் தோளை அமுக்கிக் கொண்டிருந்தவனுடைய வயிற்றில் ஒரு முட்டு முட்டினான். அந்த முட்டுத் தாங்காமல் முட்டப்பட்டவன் நாவல் மரத்தடியில் இடறிவிழுந்தான். அதே சமயம் பின்புறம் காலடியில் கால்களைப் பிணைத்துக் கட்ட முயன்று கொண்டிருந்தவனையும் பலமாக உதைத்துத் தள்ளிவிட்டு, உடனே விரைவாகத் துள்ளி எழுந்து நின்று கொண்டான் இளங்குமரன். முன்னும் பின்னுமாகத் தள்ளப்பட்டு விழுந்த எதிரிகள் இருவரில் யார் முதலில் எழுந்து வந்து எந்தப் பக்கம் பாய்ந்து தன்னைத் தாக்குவார்களென்று அநுமானம் செய்து அதற்கேற்ற எச்சரிக்கையுணர்வோடு நின்றான். அடர்ந்த இறுண்ட அந்தச் சூழலில் கண்களின் காணும் ஆற்றலையும், செவிகளின் கேட்கும் ஆற்றலையும் கூர்மையாக்கிக் கொண்டு நின்றான். அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. கால் பக்கம் உதைப்பட்டு விழுந்தவன் எழுந்து இளங்குமரனைத் தாக்கப் பாய்ந்து வந்தான். இருளில் கனல் துண்டங்களைப் போல் தன்னைக் குறி வைத்து முன் நகரும் அவன் விழிகளை கவனித்தான் இளங்குமரன். மடக்கிக் கொண்டிருந்த தன் கைகளை உயர்த்தி. "இந்தா இதைப் பெற்றுக்கொள்; சம்பாபதிவனத்து மண் வளமானது, பழமையும் பெருமையும் வாய்ந்தது" என்று கூறிச் சிரித்துக்கொண்டே, விரல்களைத் திறந்து எதிர்வரும் கனற் கண்களைக் குறிவைத்து வீசினான். கண்களில் மண் விழுந்து திணறியவன் இளங்குமரன் நிற்குமிடம் அறியாது இருளில் கைகளை முன்நீட்டித் தடவிகொண்டு மயங்கினான். அப்போது மற்றொரு எதிரி எழுந்து வரவே, இளங்குமரன் அவனை வரவேற்கச் சித்தமானான். அவன் கைகளிலும் நெஞ்சிலும் வலிமை பெருக்கெடுத்து ஊறியது. தாயையும் முனிவரையும் சந்திக்க முடியாமையினால் சிதறியிருந்த இளங்குமரனின் நம்பிக்கைகள் பகைவனை எதிர்க்கும் நோக்கில் மீண்டும் ஒன்றுபட்டன. நாவல் மரத்தடியிலிருந்து எழுந்து வந்தவனும் இளங்குமரனும் கைகலந்து போரிட்டனர். எதிரி தான் நினைத்தது போல எளிதாக மடக்கி வென்றுவிட முடிந்த ஆள் இல்லை என்பது சிறிது நேரத்துப் போரிலேயே இளங்குமரனுக்கு விளங்கியது. வகையான முரடனாக இருந்தான் எதிரி. இரண்டு காரணங்களுக்காகப் போரிட்டவாறே போக்குக்காட்டி எதிரியைச் சம்பாபதிகோவில் முன்புறமுள்ள மங்கிய தீபத்தின் அருகே இழுத்துக் கொண்டு போய்ச் சேர்க்க விரும்பினான் இளங்குமரன். முதற்காரணம்: 'யார் என்ன தொடர்பினால் தன்னை அங்கே அந்த இரவில் கொல்லுவதற்குத் திட்டமிட்டுச் செய்வதுபோலத் தாக்குகிறார்கள்' என்பதை அவன் நன்றாக இனங்கண்டு அறிந்து கொள்ள விரும்பினான். அப்படி அறிந்து கொள்ளாமல், அவர்கள் தன்னிடமிருந்தோ, தான் அவர்களிடம் இருந்தோ, தப்பிச் செல்லலாகதென்று உறுதி செய்து கொண்டிருந்தான் அவன். இரண்டாவது காரணம், முதலில் தன்னால் கண்களில் மண்தூவப் பெற்ற எதிரியும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்வை தெரிந்து மற்றவனோடு வந்து சேர்ந்து கொண்டு தன்னைத் தாக்குவதற்குள் ஒருவனை மட்டும் பிரித்துச் சிறிது தொலைவு விலக்கிக் கொண்டு போகலாமே என்பதும் அவன் திட்டமாயிருந்தது.

ஆனால் இளங்குமரன் எவ்வளவுக்குத் தன்னோடு போரிட்டவனைச் சம்பாபதி கோவில் முன்புறமுள்ள தீப ஒளியில் கொண்டு போய் நிறுத்த முயன்றானோ அவ்வளவுக்கு முன்வரத் தயங்கி இருட்டிலேயே பின்னுக்கு இழுத்து அவனைத் தாக்கினான் அவனுடைய எதிரி. இதனால் இளங்குமரனின் சந்தேகமும் எதிரியை இனங்கண்டு கொள்ள விரும்பும் ஆவலும் விநாடிக்கு விநாடி வேகமாகப் பெருகியது. தீப ஒளி இருக்கும் பக்கமாக இளங்குமரன் அவனை இழுப்பதும் இருள் மண்டியிருக்கும் பக்கமாகவே அவன் இளங்குமரனை பதிலுக்கு இழுப்பதுமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது.

"தைரியசாலிகள் வெளிச்சத்துக்கு வந்து தங்கள் முகத்தைக் காட்ட இவ்வளவு கூசுவது வழக்கமில்லையே!" என்று ஏளனமாக நகைத்துக்கொண்டே இளங்குமரன் கூறியதன் நோக்கம் எதிராளி கூறும் பதிலின் மூலமாக அவன் குரலையாவது கேட்டு நிதானம் செய்து கொள்ளலாம் என்பதுதான். ஆனால் இந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. எதிரி வாயால் பேசவில்லை. தன் ஆத்திரத்தை யெல்லாம் சேர்த்துக் கைகளால் மட்டுமே பேசினான். மீண்டும் இளங்குமரன் அவன் தன்மானத்தைத் தூண்டிவிடும் விநயமான குரலில் "இவ்வளவு தீவிரமாக எதிர்த்துப் போரிடும் என்னுடைய எதிரி கேவலம் ஓர் ஊமையாக இருக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை" என்று வாயைக் கிளறமுயன்றான். அதற்கும் எதிரியிடமிருந்து பதில் இல்லை. எதிரி தன்னைக் காட்டிலும் முதியவன் என்பதும் வன்மை முதிர்ந்தவன் என்பதும் அவனுடைய வைரம் பாய்ந்த இரும்புக் கரங்களை எதிர்த்துத் தாக்கும் போதெல்லாம் இளங்குமரனுக்கு விளங்கியது. ஏற்கெனவே மாலையில் கடற்கரையில் மற்போரிட்டுக் களைந்திருந்த அவன் உடல் இப்போது சோர்ந்து தளர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு அவன் கை தளர்ந்து கொண்டு வந்த நேரத்தில் கண்ணில் விழுந்த மண்ணைத் துடைத்து விழிகளைக் கசக்கிக் கொண்டு தெளிவு பெற்றவனாக இரண்டாவது எதிரியும் வந்து சேர்ந்து விட்டான். இளங்குமரனின் மனவுறுதி மெல்லத்துவண்டது. 'இவர்களென்ன மனிதர்களா, அரக்கர்களா? எனக்குத் தளர்ச்சி பெருகப் பெருக இவர்கள் சிறிதும் தளராமல் தாக்குகிறார்களே!’ என்று மனத்துக்குள் வியந்து திகைத்தான் இளங்குமரன். அவன் நெஞ்சமும் உடலும் பொறுமை இழந்தன. எதிர்த்துத் தாக்குவதை நிறுத்திவிட்டு உரத்த குரலில் அவர்களிடம் கேட்கலானான்.

"தயவு செய்து நிறுத்துங்கள்! நீங்கள் யார்? எதற்காக இப்படி என்னை வழிமறித்துத் தாக்குகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? முனிவர் அருட்செல்வர் இன்று இந்நேரத்தில் இங்கு என் அன்னையை அழைத்து வந்து காட்டுவதாகக் கூறியிருந்தார். அன்னையையும் முனிவரையும் எதிர்பார்த்துத்தான் இங்கே வந்தேன். அன்னை அமர்ந்திருப்பதாக எண்ணியே வணங்கினேன்"

வேகமாகக் கூறிக் கொண்டே வந்த இளங்குமரனின் நாவிலிருந்து மேற்கொண்டு சொற்கள் பிறக்கவில்லை. அப்படியே திகைத்து விழிகள் விரிந்தகல இருபுறமும் மாறி மாறிப் பார்த்து மருண்டு நின்றான்.

ஆ! இதென்ன பயங்கரக் காட்சி! இவர்கள் கைகளில் படமெடுத்து நெளியும் இந்த நாகப்பாம்புகளை எப்படிப் பிடித்தார்கள்? இளங்குமரனுக்கு இயக்கர் நடமாட்டம், பேய்ப்பூத நிகழ்ச்சி இவற்றில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை. சம்பாபதி வனத்திலோ, சக்கரவாளக் கோட்டத்துச் சுற்றுப் புறங்களிலோ பேய் பூதங்கள் பழகுவதாகச் சிறு வயதில் அவன் இளம் நண்பர்கள் கதை அளந்தால் அதைப் பொறுத்துக் கொண்டு அவனால் சும்மா இருக்க முடியாது.

"பேய்களாவது பூதங்களாவது? நள்ளிரவுக்கு மேலானாலும் தாங்களும் உறங்காமல் பிறரையும் உறங்கவிடாமல் வன்னி மரத்தடியில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் காபாலிகர்களும், புறநகர்ப் பகுதிகளில் காவலுக்காகத் திரியும் ஊர்க்காப்பாளர்களும்தான் பேய்கள் போல் இரவில் நடமாடுகிறார்கள். வேறு எந்தப் பேயும் பூதமும் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை" என்று அத்தகைய நேரங்களில் நண்பர்களை எள்ளி நகையாடியிருக்கிறான் அவன்.

அவனே இப்போது மருண்டான்; தயங்கினான். ஒன்றும் புரியாமல் மயங்கினான். ஆனால் அந்த மயக்கமும் தயக்கமும் தீர்ந்து உற்றுப் பார்த்த போதுதான் உண்மை புரிந்தது. இருபுறமும் தன் தோளில் சொருகிவிடுகிறாற் போல் அவர்கள் நெருக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவை நாகப் பாம்புகள் அல்ல; பாம்பு படமெடுப்பது போல் கைப்பிடிக்கு மேற்பகுதி அமைந்ததும் அதனுடல் நெளிவதுபோல் கீழ்ப்பகுதி அமைந்ததுமான கூரிய வாள்கள் என்று தெரிந்தது. அந்தக் காலத்தில் சோழ நாட்டில் இத்தகைய அமைப்புள்ள சிறுபடைக்கலங்களைப் பயன்படுத்துகிறவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திலும் சுற்றுப் புறத்துக் காடுகளிலும் வாழ்ந்த எயினர் எனப்படும் ஒருவகை முரட்டு நாக மரபினர் என்பதும் அவனுக்குத் தெரியும். எயினர் பிரிவைச் சேர்ந்த நாகர்கள் அரக்கரைப்போல் வலிமை உடையவர்களென்றும் உயிர்க்கொலைக்கு அஞ்சாதவர்களென்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். சூறையாடுதலும், கொள்ளையடித்தலும் வழிப்பறி செய்தலும் ஆறலை கள்வர்கள்* (* சிறு வழிகளிலும் பெரு வழிகளிலும் போவோரை அலைத்துத் துன்புறுத்தும் கள்வருக்கு அக்காலப் பெயர்.) செய்யும் பிற கொடுமைகளும் எயினர் கூட்டத்தினருக்குப் பொழுது போக்கு விளையாட்டுக்கள் போன்றவை என்றும் அவன் அறிந்திருந்தான். ஒளிப்பாம்புகள் நெளிந்து கொத்துவதற்குப் படமெடுத்து நிற்பது போல் தன்னை நோக்கி ஓங்கப்பட்டிருக்கும் அந்த வாள்களின் நுனிகளில் அவனுடைய உயிரும் உணர்வுகளும் அந்தக் கணத்தில் தேங்கி நின்றன. இத்தகைய குத்து வாள்களைக் 'குறும்பிடி' அல்லது 'வஞ்சம்' என்று குறிப்பிடுவார்கள். 'வஞ்சம் என்பது இப்போது என் நிலையை வைத்துப் பார்க்கும்போது இவற்றுக்கு எவ்வளவு பொருத்தமான பெயராய்ப்படுகிறது. வஞ்சங்களின் நுனியில் அல்லவா என் உயிர் இப்போது இருக்கிறது!’ என்று ஏலாமையோடு நினைக்கும்போது இளங்குமரனுக்குப் பெருமூச்சு வந்தது. காவிரி அரவணைத்தோடும் அப்பெரிய நகரத்தில் எத்தனையோ ஆண்டுகள் வீரனாகவும், அறிஞனாகவும், அழகனாகவும், வாழ்ந்து வளரத் தன் மனத்தில் கனவுகளாகவும், கற்பனைகளாகவும், இடைவிடாத் தவமாகவும், பதிந்திருந்த ஆசைகள் யாவும் அந்த வாள்களின் நுனியில் அழிந்து அவநம்பிக்கைகள் தோன்றுவதை அவன் உணர்ந்தான், ஏங்கினான், உருகினான். என்ன செய்வதெனத் தோன்றாது தவித்துக் கொண்டே நின்றான். ஓர் அணுவளவு விலகி அசைந்தாலும் அருட்செல்வ முனிவர் பரிந்து பாதுகாத்து வளர்த்துவிட்ட தன் உடலின் குருதி அந்த வாள்களின் நுனியில் நனையும் என்பதில் ஐயமே இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அவன் மனத்தில் நினைவுகள் வேகமாக ஓடலாயின.

'அன்னையே! கண்களால் இதுவரை காணாத உன்னை நினைத்து நினைத்து அந்த நினைப்புக்களாலேயே நெஞ்சில் நீ இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உள்ளத் திரையிலே எண்ணக் கோலமாய் இழைத்து வைத்திருக்கிறேன். எண்ணக் கோலத்திலே கண்டதையன்றி உன்னை உனது உண்மைக் கோலத்தில் காணும் பாக்கியமின்றி இன்று இந்த வனத்திலே நான் அனாதையாய்க் கொலையுண்டு விழப் போகிறேனா? உன்னைக் காண முயலும் போதெல்லாம் எனக்கு இப்படி ஏதேனும் தடைகள் நேர்ந்து கொண்டேயிருக்கின்றனவே! அப்படி நேர்வதற்குக் காரணமாக உன்னைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் யாவை? அல்லது என்னைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் யாவை?'

'சுவாமி! அருட்செல்வ முனிவரே, தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை வளர்த்து ஆளாக்கி விட்ட தங்களுக்கு நன்றி செலுத்துமுகமாக என் வாழ்நாள் நெடுகிலும் என்னென்னவோ பணிவிடைகள் எல்லாம் செய்ய வேண்டிய உடல் இங்கே கொலையுண்டு வீழ்த்தப்படும் போலிருக்கிறதே.'

அப்போது பூம்புகாரின் அன்பிற்கினிய நண்பர்கள் வெற்றிப் பெருமையோடு முல்லைமாலை சூடிநின்ற போது தன்னுடைய சிரிப்பினால் அவனுடைய நெஞ்சில் மற்றொர் முல்லை மாலையைச் சூடிய அந்தப் பெண், தோற்று வீழ்ந்த யவன மல்லன் - என்று இவ்வாறு தொடர்பும் காரணமுமில்லாமல் ஒவ்வொருவராக இளங்குமரனின் நினைவில் தோன்றினர். அவன் ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளையும் இழந்து விட்ட அந்தச் சமயத்தில் சம்பாபதி கோவிலின் கிழக்குப் புறத்திலிருந்து குதிரைகள் வரும் குளம்பொலி கேட்டது. புறநகர்ப் பகுதிகளிலுள்ள இடங்களைக் காக்கும் யாமக் கவலர்கள் சில சமயங்களில் அப்படி வருவதுண்டு. இளங்குமரன் மனத்தில் நம்பிக்கை சற்றே அரும்பியது. ஆனால், எதிரிகளின் பிடி அவனை நெருக்கிற்று. குளம்பொலி அருகில் நெருங்கி வந்து கொண்டேயிருந்தது. இராக்காவலர்கள் எழுப்பும் எச்சரிக்கைக் குரலும் இப்போது குளம்பொலியாடு சேர்ந்து ஒலித்தது. அதில் ஒரு குரல் தனக்குப் பழக்கமான சக்கரவாளக் கோட்டத்துக் காவலர் தலைவன் கதக்கண்ணனுடையதாயிருப்பது கேட்டு இளங்குமரனுக்கு ஆறுதலாயிருந்தது.

வருகிற காவலர்களுடைய தீப்பந்தத்தின் ஒளியும் குதிரைகளும் மிக அருகில் நெருங்கியபோது, "இளங்குமரனே! தெரிந்துகொள். நீயோ உன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த அப்பாவி முனிவரோ உன் தாயைப் பற்றி அறிந்து கொள்ளவோ, அவளை நேரில் காணவோ முயன்றால் மறுநாள் உன்னையும், அந்த முனிவரையும் இந்த இடத்தில் பிணங்களாகக் காண்பார்கள் பூம்புகார் நகர மக்கள். இது நினைவிருக்கட்டும். மறந்துவிடாதே. மறந்தாயோ மறுபடியும் இதேபோல நினைவூட்ட வருவோம்" என்று புலை நாற்றம் வீசும் வாயொன்று அவன் காதருகே கடுமையாகக் கூறியது. கற்பாறை உடையும் ஒலிபோல் விகாரமான முரட்டுத் தன்மை வாய்ந்து தோன்றியது அந்தக் குரல். இயல்பாகவே பேசாமல் வேண்டுமென்றே மாற்றிக் கொண்டு தமிழ் ஒலி முறைகள் அக்குரலில் நாகர்கள் பேசுவது போல் வன்மை மிகுந்து தொனித்தன.

மறுகணம் வேண்டா வெறுப்பாக அவனை விட்டுச் செல்வது போல் கிழே அலட்ச்சியமாக தள்ளிவிட்டுப் புதரில் பாய்ந்து மறைந்தனர் அந்த முரட்டு மனிதர்கள். தோள்களில் அவர்கள் பிடித்திருந்த இடம் இரத்தம் கட்டி உறைந்து போனாற்போல் வலித்தது. திகைப்படங்காமல் நின்றான் அவன்.

"என்னப்பா, இளங்குமரனா? இந்த அர்த்தராத்திரியில் நகரத்தின் இந்திர விழாக் கோலாகலங்களையெல்லாம் விட்டு விட்டு இங்கே யாரோடு இரகசியம் பேசிக் கொண்டு நிற்கிறாய்?" என்று கையில் தீப்பந்தத்துடனும் இளங்குமரனை நோக்கி மலர்ந்த முகத்துடனும் குதிரையிலிருந்து கீழே இறங்கிய கதக்கண்ணனையும் அவன் தோழனான மற்றொரு காவலனையும் பார்த்துக் கெட்ட கனவு கண்டு விழிப்பவன் போல் பரக்கப் பரக்க விழித்தான் இளங்குமரன்.

அவன் திகைப்பு நீங்கித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவர்களோடு கலகலப்பாகப் பேசத் தொடங்குவதற்கே சிறிது நேரமாயிற்று. அருட்செல்வ முனிவர் தாயை அன்றிரவு தனக்குக் காண்பிப்பதாக வாக்களித்திருந்தது, எதிரிகள் போகுமுன் இருதியாகத் தன் செவியில் பயங்கரமாக எச்சரிக்கை செய்துவிட்டு போனது ஆகியவற்றைக் கதக்கண்ணனிடம் கூறாமல் 'யாரோ இரண்டு முரட்டு நாகர்கள் தன்னை வழிமறித்துக் கொல்ல முயன்றார்கள்' என்று மட்டும் பொதுவாகச் சொன்னான் இளங்குமரன்.

"நண்பனே! கவலைப்படாதே. உன்னுடைய எதிரிகள் எனக்கும் எதிரிகளே. அவர்கள் எங்குச் சென்றாலும் தேடிப் பிடிக்கிறேன். இந்தச் சம்பாபதி வனத்திலிருந்து அவ்வளவு விரைவில் அவர்கள் தப்பிவிட முடியாது. நீ அதிகமாகக் களைத்துக் காணப்படுகிறாய். நேரே நம் இல்லத்திற்குச் சென்று படுத்து நன்றாக உறங்கு. இந்திர விழாவுக்காக நகரத்திற்குச் சென்றிருந்த என் தந்தையும் தங்கை முல்லையும் அநேகமாக இதற்குள் திரும்பி வந்திருப்பார்கள். அவர்கள் திரும்பி வந்து உறங்கிப் போயிருந்தால் எழுப்புவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் தயங்கி நிற்காதே" இவ்வாறு கூறிக் கொண்டே அன்போடு அருகில் நெருங்கி முதுகில் தட்டிக் கொடுத்த நண்பனுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று இளங்குமரனுக்கு அப்போது தோன்றவில்லை. தன்னுடைய எதிரிகளை அவனுடைய எதிரிகளாக பாவித்துக் கொண்டு கதக்கண்ணன் வஞ்சினம் கூறியபோது, 'நண்பன் என்றால் இப்படியன்றோ அமையவேண்டும்' என்று எண்ணி உள்ளூரப் பெருமை கொண்டான் இளங்குமரன்.

கதக்கண்ணனும் அவனுடன் வந்த இன்னோர் ஊர்க்காவலனும் தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டபோது இளங்குமரன் ஓய்வு கொள்வதற்காக வந்த வழியே திரும்பினான். பக்கத்துப் புதரிலிருந்து ஈனக்குரலில் யாரோ மெல்ல வலியோடு முனகுவது போல ஓலி வரவே விரைவாகச் சென்று சம்பாபதி கோவில் தீபத்தை எடுத்துவந்து அந்த இடத்துக்குப் போய்ப் புதரை விலக்கிப் பார்த்தான் இளங்குமரன். யாரோ கையும் காலும் கட்டுண்டு புதரில் விழுந்திருந்த வரை முகம் நிமிர்த்திப் பார்த்தபோது இளங்குமரனின் வாயிலிருந்து 'ஆ' வென்ற அலறல் கிளம்பியது. தன் ஊனுடம்பு முழுவது எவருக்கு இடைவிடாமல் பணிசெய்யக் கடன்பட்டிருக்கிறதென இளங்குமரன் நினைத்து வந்தானோ, அந்த அருட்செல்வ முனிவரைத் தாக்கிக் கையையும் காலையும் கட்டிப் போட்டிருந்தார்கள் பாவிகள். இளங்குமரனுக்கு இரத்தம் கொதித்தது. "கதக்கண்ணா! அந்தப் பாவிகளைத் தேடிக் கண்டு பிடிப்பதாகக் தான் நீ வஞ்சினம் கூறினாய். எனக்கோ அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து என் மதிப்பிற்குரியவரை இப்படிச் செய்ததற்காகச் செம்மையாய் அவர்களை அறைந்துவிட்டு அதன்பின் அவர்களுடைய வஞ்சகக் கொடுவாளுக்கு இரையாகி இறந்தாலும் கவலையில்லை என்று தோன்றுகிறது" என்று ஆவேசத்தோடு தன்க்குத் தானே சொல்லிக் கொண்டான் இளங்குமரன்.
----------

முதல் பருவம் : 4. முல்லைக்குப் புரியவில்லை!


சம்பாபதி வனத்திலிருந்து வெளியேறி அப்பாலுள்ள கோட்டங்களையும் தவச்சாலைகளையும் பலபல சமயத்தார் வழிபாட்டுக்கு மலர் கொய்யும் மலர் வனங்களையும் கடந்து வந்துவிட்டால் புறவீதி நிலா வொளியில் குளித்துக் கொண்டு நீண்டு தோன்றியது.

புறவீதியின் தொடக்கத்தில் மலர்வனங்களின எல்லை முடிவடைந்ததனால் மெல்லிய காற்றோடு அவ்வனங்களில் வைகறைக்காக அரும்பவிழ்த்துக் கொண்டிருந்த பல்வேறு பூக்களின் இதமான மணம் கண்ணுக்குப் புலனாகாத சுகந்த வெள்ளமாய் அலை பரப்பிக் கொண்டிருந்தது. எங்கும் பின்னிரவு தொடங்கி விட்டதற்கு அடையாளமான மென்குளிர்ச் சூழல், எங்கும் மலர் மணக்கொள்ளை, ஆகா! அந்த நேரத்தில் அந்தச் சூழ்நிலையில் புறவீதிதான் எத்தனை அழகாயிருந்தது!.

புறநகரின் இராக் காவலர்களும் சோழர் கோநகரான பூம்புகாரைச் சுற்றி இயற்கை அரண்களுள் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்த காவற் கோட்டை காக்கும் பொறுப்புள்ள வீரர்களும் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு வீதி அது. சில பெரிய திண்ணைகளில் வேல்களும், ஈட்டிகளும், சூலாயுதங்களும் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. சித்திர வேலைப்பாடமைந்த பெரிய மரக்கதவுகளில் சோழப்பேரரசின் புலிச்சின்னம் செதுக்கப்பெற்றிருந்தது. அந்த அமைதியான நேரத்தில் திண்ணை முரசங்களில் அடிக்கொருதரம் காற்று மோத்தியதனால் எழுந்த ஓசை வீதியே உறுமுவது போல் பிரமை உண்டாக்கியது. சிறு சிறு வெண்கல மணிகள் பொருந்திய கதவுகளில் காற்று மோதியது போல் வீதியே கலீரென்று சிரிப்பது போல் ஒரழகு புலப்பட்டுத் தோன்றி ஒடுங்கிக் கொண்டிருந்த்து.

அந்த நிலையில், சம்பாபதி வனத்துப் புதரில் தாக்கப்பட்டு மயங்கிக் கிடந்த முனிவரின் உடலைச் சுமந்தவாறு புறவீதியில் தனியாக் நடந்து வந்து கொண்டிருந்தான் இளங்குமரன். மாலையில் கடற்கரையில் கிடைத்த வெற்றி அனுபவமும் அதன்பின் நினைத்தாலே கதைபோல் தோன்றக்கூடிய சம்பாபதிவனத்து பயங்கர அனுபவங்களும், இப்போது மலர்மணமும் சீதமாருதமும் தவழூம் புறவீதியில் முனிவரின் மெலிந்த உடலைத் தாங்கி நடக்கும் இந்த அனுபவமும், எல்லாம் ஏதோ திட்டமிட்டுத் தொடர்பாக வரும் அபூர்வக் கனவுகள் போல் தோன்றின அவனுக்கு.

புறவீதியின் நடுப்பகுதியில் முரசமும் ஆயுதங்களும் மற்ற வீடுகளில் காணப்பட்டதைவிடச் சற்று மிகுதியாகவே வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில் படியேறி "முல்லை! முல்லை! கதவைத் திற" என்று இரைந்து கூப்பிட்டவாறே கதவைத் தட்டினான் இளங்குமரன். நிசப்தமான வீதியில் அவன் குரலும் கதவைத் தட்டியதனால் நாவசைத்து ஒலித்த மணிகளின் ஒலியும் தனியோசைகளாய் விட்டொலித்தன. சிறிதுநேரம் இவ்வாறு கதவைத் தட்டியும், குரல் கொடுத்தும் உள்ளே இருப்பவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்ற அவன் முயற்சி வெற்றி பெற்றது.

உள்ளிலிருந்து யாரோ ஒரு பெண் அளவாய்ப் பாதம் பெயர்த்து நடைபயின்று வருவதை அறிவிக்கும் சிலம்பொலி மெல்லக் கேட்டது. திறவுகோல் நுழைக்கும் துளை வழியே உள்ளிருந்து கதவருகே நெருங்கி வரும் தீப ஒளியும் தெரிந்தது. இளங்குமரன் கண்ணை அருகிற் கொண்டு போய்த் திறவுகோல் நுழைவின் வழியே பார்த்தான். பேதமைப்பருவத்துப் பெண்ணான முல்லை கையில் தீபத்துடன் சுரிகுழல் அசைவுற துயிலெழுமயிலெனப் பரிபுர ஒலி எழச் சித்திரம் நடந்து வருவதுபோல் வந்து கொண்டிருந்தாள். தூக்கம் கலைந்து அழகு செருகினாற்போல் அப்போது அற்புதமாய்க் காட்சியளித்தன முல்லையின் கண்களும், முகமும். துயில் நீங்கிய சோர்வு ஒடுங்கிய நீண்ட விழிகள்தாம் எத்தனை அழகு என்று வியந்தான் இளங்குமரன். விளக்கு ஒளியும், சிலம்பொலியும் நெருங்கி வந்தன. கதவின் தாழ் ஓசையோடு திறக்கப்பட்டது.

தன் கையிலிருந்த பிடிவிளக்கைத் தூக்கி, வந்திருப்பவரின் முகத்தை அதன் ஒளியில் பார்த்தாள் முல்லை. "நீங்களா?" என்ற இனிய வினாவுக்குப் பின் முல்லையின் இதழ்களில் முல்லை மலர்ந்தது.

"யாரையோ தூக்கிக்கொண்டு வந்திருக்கிறீர்களே! யார் அது?"

"ஏதேது? வாயிலிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டு நீ கேட்கிற கேள்விகளைப் பார்த்தால் உள்ளே வரவிடாமல் இங்கேயே பேசி விடைகொடுத்து அனுப்பிவிடுவாய் போலிருக்கிறதே?"

"ஐயையோ, அப்படியெல்லாம் ஒன்றும் இலலை. உள்ளே வாருங்கள். இந்திரவிழா பார்த்துவிட்டு நகருக்குள்ளிலிருந்து நானும் தந்தையும்கூடச் சிறிது நாழிகைக்கு முன் தான் இங்கே வீட்டுக்குத் திரும்பி வந்தோம்" என்று கூறியபோது முல்லையின் இதழ்களில் மீண்டும் முல்லை மலர்ந்தது. இளங்குமரன் உள்ளே நுழைந்து அங்கிருந்த கட்டில் ஒன்றில் அருட்செல்வ முனிவரின் உடலைக் கிடத்தினான். அவரை அங்கே கிடத்தியவுடனே இப்போது நன்றாகத் தெரியும் இளங்குமரனின் தோளிலும் மார்பிலும் சிறு சிறு காயங்கள் தென்படுவதையும் அவன் சோர்ந்திருப்பதையும் பார்த்து ஒன்றும் புரியாமல் மருண்டு நின்றாள் முல்லை.

"முல்லை! சம்பாபதி வனத்தில் காவலுக்காகச் சுற்றிக்கொண்டுருந்த உன் தமையனைச் சந்தித்தேன். அவன் தான் என்னை இங்கே போகச் சொல்லி அனுப்பினான். அவனை அந்தப் பக்கம் அனுப்பிவிட்டுத் திரும்பினால், இன்னொரு புதரில் இவரை யாரோ அடித்துப் போட்டிருப்பது தெரிந்தது. இவரையும் எடுத்துக் கொண்டு நேராக இங்கு வந்து சேர்ந்தேன்; இனிமேல் கவலையில்லை. நாளை விடிகிறவரை இரண்டு பேரும் முல்லைக்கு அடைக்கலம்தான்."

இதைக் கேட்டு முல்லை சிரித்தாள். "உங்கள் உடம்பைப் பார்த்தாலும், நீங்கள் கூட யாருடனோ பலமாகச் சண்டை போட்டுவிட்டு வந்திருப்பீர்கள் போலிருக்கிறதே?"

"ஒரு சண்டையென்ன? பொழுதுபோனால், பொழுது விடிந்தால் சண்டைகளாகத்தான் இருக்கிறது என் பாடு. அதைப் பற்றியெல்லாம் அப்புறம் விரிவாகப் பேசிக்கொள்ளலாம். முதலில் முனிவருடைய மயக்கத்தைப் போக்கி அவருக்குத் தெளிவுவரச் செய்யவேண்டும், அதற்கு உன்னுடைய உதவிகள் தேவை! உன் தந்தையாரை எழுப்பாதே. அவர் நன்றாக உறங்கட்டும். நீ மட்டும் உன்னால் முடிந்தவற்றைச் செய்தால் போதும்.."

"முனிவருக்கு மட்டுந்தானா? நீங்கள் கூடத்தான் ஊமைக் காயங்களாக மார்பிலும் தோளிலும் நிறைய வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவைகளுக்கும் மருந்து போட்டுத்தானே ஆகவேண்டும்?"

"மார்பிலும் தோளிலும் காயம் படுவது பெருமைதான் முல்லை! அவற்றை விழுப்புண்கள் என்று புகழின் முத்திரைகளாகக் கணக்கிடுகிறார்கள் இலக்கிய ஆசிரியர்கள்!"

"கணக்கிடுவார்கள் கணக்கிடுவார்கள்! ஏன் கணக்கிட மாட்டார்கள்? புண்ணைப் பெறுகிறவன் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால் அப்புறம் சோம்பல் இல்லாமல் புகழ்கிறவர்களுக்கு என்ன வலிக்கிறதாம்?" என்று சிரித்தவாறே கூறிவிட்டுப் பம்பரமாகச் சுழன்று காரியங்களை கவனிக்கத் தொடங்கினாள் முல்லை. சிலம்பும் வளைகளும் ஒலித்த விரைவிலிருந்து அவள் எவ்வளவு வேகமாக மருந்தரைக்கிறாள், எவ்வளவு வேகமாகச் சுடுநீர் வைக்கிறாள் என்பதை நினைத்து வியந்தவாறே முனிவரின் கட்டிலருகே இருந்தான் இளங்குமரன். நடுநடுவே முனிவர் முனகினார். கனவில் உளறுவது போல் சொற்கள் அரைகுரையாக வெளிவந்தன. அந்தச் சொற்களை திரட்டி, "பாவிகளே! என்னைக் கொல்லாதீர்கள். உங்கள் தீமைகளுக்கு உங்களை என்றாவது படைத்தவன் தண்டிக்காமல் விட மாட்டான்! பாவிகளே" என்று இளங்குமரன் ஒருவிதமாகக் கூட்டி உணர முயன்றான். முல்லையின் குறுகுறுப்பான இயல்புக்குமுன் எவ்வளவு கடுமையான சுபாவமுள்ளவர்களுக்கும் அவளிடம் சிரித்து விளையாடிப் பேசவேண்டுமென்று தோன்றுமே ஒழிய கடுமையாகவோ துயரமாகவோ இருந்தாலும் அவற்றுக்குரிய பேச்சு எழாது. அவளிடமிருந்த அற்புதக் கவர்ச்சி அது. அதனால்தானோ என்னவோ இளங்குமரனும் சிரிப்பும் கலகலப்புமாக அவளிடம் பேசினானே தவிர உண்மையில் கதக்கண்ணனுடைய வீட்டுக்கு நுழையும்போதும் சரி, நுழைந்த பின்னும் சரி, அவன் மனம் மிகவும் குழம்பிப்போயிருந்தது.

முல்லையும் இளங்குமரனும் செய்த உபசாரங்களை ஏற்றுக் கொண்டு முனிவர் தெளிவு பெற்றுக் கண்விழித்த போது, இரவு மூன்றாம் யாமத்துக்கு ஓடிக்கொண்டிருந்தது. "முல்லை முதலில் நீ போய் உறங்கு. மற்றவற்றைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம். உனக்கு நிறையத் தொல்லை கொடுத்துவிட்டேன்" என்று இளங்குமரன் அவளை அனுப்ப முயன்றும் அவள் விடுகிற வழியாயில்லை.

"உங்கள் காயங்களை மறந்துவிட்டீர்களே? ஆறினால்தானே விழுப்புண் என்று பெருமை கொண்டாடலாம். பச்சைக் காயமாகவே இருந்தால் அந்தப் பெருமையும் கொண்டாட முடியாதே!" என்று கூறி நகைத்தாள் முல்லை. அதன் பின் அவன் காயங்களுக்கு மருந்து கொடுத்துப் போட்டுக் கொள்வதையும் இருந்து பார்த்து விட்டுத்தான் அவள் படுக்கச் சென்றாள். படுத்தவுடன் அயர்ந்து நன்றாக உறங்கிவிட்டாள். இரண்டு மூன்று நாழிகைத் தூக்கத்துக்குப்பின். அவளுக்கு அரைகுறையாக ஒரு விழிப்பு வந்தபோது மிக அருகில் மெல்லிய குரலில் யாரோ விசும்பி அழுகிற ஒலி கேட்டுத் திகைத்தாள். திகைப்பில் நன்றாக விழிப்பு வந்தது அவளுக்கு. சிலம்பும் வளைகளும் ஒலிக்காமல் கவனமாக எழுந்து பார்த்தாள். இளங்குமரனும், அருட்செல்வ முனிவரும் படுத்திருந்த பகுதியிலிருந்து அந்த ஒலி வருவதாக அவளுக்குத் தோன்றியது. தீபச்சுடரைப் பெரிதாக்கி எடுத்துக் கொண்டு போய்ப் பார்க்கலாமா என்று அவள் உள்ளத்தில் ஆவல் எழுந்தது. அப்படிப் பார்ப்பது அநாகரிகமாகவோ, அசந்தர்ப்பமாகவோ முடிந்துவிட்டால் வீட்டில் வந்து தங்கியுள்ள விருந்தினர்கள் மனம் புண்பட நேருமோ என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள் முல்லை.

அவள் மேலும் உற்றுக் கேட்டதில் அழுகுரல் முனிவருடையதாக இருந்தது.

"இளங்குமரா! அதைச் சொல்லிவிட்டால் நான் உயிரோடு இருக்க முடியாது. உயிரோடு இருக்கவேண்டுமானால் அதைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இரகசியத்தைக் கேட்டுக் கேட்டு என் நிம்மதியும் மனத்தூய்மையும் கெட்டு வேதனைப்படச் செய்வதைவிட உன் கைகளாலேயே என்னைக் கொன்று விடு. வேறு வழியில்லை!"

"சுவாமீ! அப்படிக் கூறாதீர்கள். நான் தவறாக ஏதேனும் கேட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்."

"மன்னிப்பதிருக்கட்டும்! நீ நெடுங்காலம் உயிரோடு வாழவேண்டும் இளங்குமரா! அது என் இலட்சியம். உனக்கு அந்த உண்மையைச் சிறிது கூறிவிட்டாலும், நாலு புறமும் உன்னையும் என்னையும் பிணமாக்கி விடத்துடிக்கும் கைகள் கிளரும் என்பதில் சந்தேகமே இல்லை" இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர் சிறுபிள்ளை போல் குலுங்கிக் குலுங்கி அழும் ஒலி கேட்டது.

"சுவாமீ! கெட்ட கனவு கண்டது போல் நடந்ததையும் நான் உங்களிடம் கேட்டதையும் மறந்துவிடுங்கள். நிம்மதியாகச் சிறிது நேரமாவது உறங்குங்கள்."

"நிம்மதியான உறக்கமா? உன்னைச் சிறு குழந்தையாக எடுத்து வளர்க்க ஆரம்பித்த நாளிலிருந்து அதைப் பற்றி நான் மறந்து விட்டேன், இளங்குமரா?"

இருளில் எழுந்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த முல்லைக்கு, முதலும் தொடர்பும் முடிவும் இல்லாத இந்த உரையாடலிலிருந்து ஒன்றும் புரியவில்லை. ஆனால் பொதுவில் அவளுக்கு அதைக் கேட்டதிலிருந்து ஏதோ திகைப்பாகவும் பயமாகவுமிருந்தது.
---------

முதல் பருவம் : 5. பூதசதுக்கத்திலே ஒரு புதிர்!

எழிற்பூம்புகார் நகரத்தில் மீண்டும் காலம் அரும்பவிழ்த்துப் பூத்தது ஒரு நாள் மலர். திருவிழாக் கோலங்கொண்ட பேரூர்க்குச் செம்பொன் நிறை சுடர்க்குடம் எடுத்துச் சோதிக்கதிர் விரித்தாற் போல் கிழக்கு வானத்தில் பகல் செய்வோன் புறப்பட்டான். முதல்நாள் இரவில் சற்றே அடக்கமும் அமைதியும் பெற்று ஓய்ந்திருந்த இந்திர விழாவின் கலகலப்பும், ஆரவாரமும் அந்தப் பெருநகரின் ஒவ்வொரு பகுதியிலும் எழுந்தன. காலைப் போதுதானே இந்த ஆரவாரங்களை நகரின் எல்லா இடமும் அடைய முடியும்? மாலையானால்தான் எல்லா அழகுகளையும், எல்லாக் கலகலப்பையும் கடற்கரை கவர்ந்து கொண்டு விடுமே!.

மாபெரும் இந்திரவிழாவின் இரண்டாவது நாட்காலை நேரம் இவ்வளவு அழகாக மலர்ந்துகொண்டிருந்த போதுதான் முல்லையின் பொலிவு மிக்க சிரிப்பும் இளங்குமரனின் பார்வையில் மலர்ந்தது. சிரிப்பினால் முகத்துக்கும், முகத்தினால் சிரிப்புக்கும் மாறி மாறி வனப்பு வளரும் முல்லையின் வளைக்கரங்கள்தாம் அன்று காலை இளங்குமரனை உறக்கத்திலிருந்து எழுப்பின. கண்ணிலும், நகையிலும், நகை பிறக்குமிடத்திலுமாகக் கவர்ச்சிகள் பிறந்து எதிர் நின்று காண்பவர் மனத்துள் நிறையும் முல்லையின் முகத்தில் விழித்துக் கொண்டேதான் அவன் எழுந்தான். பெண்கள் பார்த்தாலும், நகைத்தாலும், தொட்டாலும் சில பூக்கள் மலர்ந்துவிடும் என்று கவிகள் பாடியிருப்பது நினைவு வந்தது இளங்குமரனுக்கு. 'மலர்ச்சி நிறைந்த பொருள்களினால் மற்றவற்றிலும் மலர்ச்சி உண்டாகும் என்ற விளக்கம் எவ்வளவு பொருத்தமானது! பெண்களின் பார்வைக்கும் புன்னகைக்கும் பூக்கள் மலர்வது மெய்யுரையோ புனைந்துரையோ? ஆனால் ஆறறிவு பெற்ற மனிதமனங்களே மலர்ந்து விடுகின்றனவே! எத்தனையோ குழப்பங்களுக்கிடையே இந்தப் பேதைப் பெண் முல்லை தன் நோக்கினாலும் நகைப்பினாலுமே என் மனத்தை மலர வைக்கிறாளே! இந்த அற்புத வித்தை இவளுக்கு எப்படிப் பழக்கமாயிற்று?’ என்று தனக்குள் எண்ணி வியந்தவாறே காலைக் கடன்களைத் தொடங்கினான் இளங்குமரன்.

அருட்செல்வ முனிவர் கட்டிலில் அயர்ந்து படுத்திருந்தார். இளங்குமரனும், முல்லையும் அவரை எழுந்திருக்க விடவில்லை. எவ்வளவு தளர்ந்த நிலையிலும் தம்முடைய நாட்கடன்களையும், தவ வழிபாடுகளையும் நிறுத்தியறியாத அந்த முனிவர் பெருந்தகையாளர், "என்னை எப்படியாவது எனது தவச்சாலையிலே கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள்" என்று அன்றும் பிடிவாதமாக மன்றாடிப் பார்த்தார். இளங்குமரனும், முல்லையும்தான் அவரை வற்புறுத்தி ஓய்வு கொள்ளச் செய்திருந்தனர். உடல் தேறி நலம் பெறுகிறவரை முனிவர் அந்த வீட்டிலிருந்து வெளியேறலாகாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டதுபோல் சொல்லிவிட்டார் முல்லையின் தந்தையாகிய வீரசோழிய வளநாடுடையார். அநுபவமும் வயதும் நிறைந்த மூத்த அந்தப் பெருங்கிழவரின் குரலில் இன்னும் கம்பீரமும் மிடுக்கும் இருந்தன. சோழநாட்டின் பெரிய போர்களில் எல்லாம் கலந்து தீர அநுபவமும் வீரப்பதவிகளும் பெற்று நிறை வாழ்வு வாழ்ந்து ஓய்ந்த உடல் அல்லவா அது? இன்று ஒடுங்கித் தளர்ந்திருந்தாலும் வெளுத்து நரைத்த வளமான மீசையும், குழிந்திருந்தாலும் ஒளி மின்னும் கண்களும், நெடிதுயர்ந்த தோற்றமும் அவருடைய பழைய வீரவாழ்வை நினைவிற் கொண்டு வருவதற்குத் தவறுவதில்லை. ஒருகாலத்தில் வீர சோழிய வளநாடுடையார் என்ற அந்தப் பெயர் ஆயிரம் வீரர்களுக்கு நடுவில் ஒலித்தாலே ஆயிரம் தலைகளும் பெருமிதத்தோடு வணங்கித் தாழ்ந்ததுண்டு. இன்று அவருடைய ஆசையெல்லாம் தாம் அடைந்த அத்தகைய பெருமைகளைத் தம் புதல்வன் கதக்கண்ணணும் அடைய வேண்டுமென்பதுதான்.

முல்லைக்கும் தன்னுடைய நண்பனுக்கும் தந்தை என்ற முறையினால் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் இளங்குமரன் வீரசோழிய வளநாடுடையர் மேல் பெருமதிப்பு வைத்திருந்தான். ஆனால் அவருக்கு மட்டும் அவனைப் ப்ற்றிய மனக்குறையொன்று உண்டு. வல்லமையும், தோற்றமும், கட்டழகும் வாய்ந்த இளங்குமரன் சோழப்பேரரசின் காவல் வீரர்களின் குழுவிலோ, படைமறவர் அணியிலோ சேர்ந்து முன்னுக்கு வரமுயலாமல் இப்படி ஊர் சுற்றியாக அலைந்து கொண்டிருக்கிறானே என்ற மனக்குறைதான் அது. அதை அவனிடமே இரண்டோரு முறை வாய் விட்டுச் சொல்லிக் கடிந்து கொண்டிருக்கிறார் அவர்.

"தம்பீ! உன்னுடைய வயதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூம்புகாரின் புறநகர்க் காவல் வீரர்களுக்குத் தலைவனாக இருந்தேன் நான். இந்த இரண்டு தோள்களின் வலிமையால் எத்தனை பெரிய காவல் பொறுப்புக்களைத் தாங்கி நல்ல பெயர் எடுத்திருக்கிறேன் தெரியுமா? நீ என்னடா வென்றால் அவிழ்த்து விடப்பட்ட இளங்காளைபோல் இந்த வயதில், மருவூர்ப் பாக்கத்து விடலைகளோடு நாளங்காடிச் சதுக்கத்தில் வம்பும் வாயரட்டையுமாகத் திரிகிறாய்! முனிவர் உன்னைச் செல்லமாக வளர்த்து ஆளாக்கி விட்ட பாசத்தை மீற முடியாமல் கண்டிக்கத் தயங்குகிறார்."

இவ்வாறு அவர் கூறுகிறபோதெல்லாம் சிரிப்போடு தலை குனிந்து கேட்டுக் கொண்டு மெல்ல அவருடைய முன்னிலையிலிருந்து நழுவிவிடுவது இளங்குமரனின் வழக்கம். ஆனால் இன்றென்னவோ வழக்கமாக அவனிடம் கேட்கும் அந்தக் கேள்வியைக்கூட அவர் கேட்கவில்லை. காரணம் முதல் நாளிரவு சம்பாபதி வனத்தில் முனிவருக்கும் தனக்கும் ஏற்பட்ட துன்பங்களை முற்றிலும் கூறாவிடினும் ஒரளவு சுருக்கமாகக் காலையில் அவருக்குச் சொல்லியிருந்தான் இளங்குமரன்.

"தம்பீ! நேற்றிரவு சம்பாபதி வனத்தில் கதக்கண்ணனும் அவன் தோழனும் காவலுக்காகச் சுற்றி வந்தபோது நீ சந்தித்ததாகக் கூறினாயே? விடிந்து இவ்வளவு நேரமாகியும் கதக்கண்ணன் வீடு வந்து சேரவில்லையே, அப்படி எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறான் அவன்?" என்று வீரசோழிய வளநாடுடையார் கேட்டபோது அவருக்கு என்ன மறுமொழி கூறுவதெனச் சிந்தித்தாற் போல் சில வினாடிகள் தயங்கினான் இளங்குமரன். ஏனென்றால் கதக்கண்ணன் தன்பொருட்டு வஞ்சினம் கூறித் தன்னுடைய எதிரிகளைத் துரத்திக் கொண்டுதான் போயிருக்கிறான் என்ற செய்தியை அவன் கிழவரிடம் கூறவில்லை. தன்னையும் முனிவரையும் சம்பாபதி வனத்தில் யாரோ சிலர் வழிமறித்துத் தாக்கியதாகவும், கதக்கண்ணனும் மற்றொரு காவல் வீரனும் அந்த வழியாக வந்த போது தாக்கியவர்கள் ஓடிவிட்டதாகவும் ம்ட்டும் ஒரு விதமாக அவரிடம் சொல்லி வைத்திருந்தான் இள்ங்குமரன்.

"ஐயா! இந்திர விழாக் காலத்தில் நேரத்தோடு வெளியேறி நேரத்தோடு வீடு திரும்ப வேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? நீங்களும் முல்லையும் நேற்று மாலை விழாக்கோலத்தை யெல்லாம் பார்த்து வந்து விட்டீர்கள். கதக்கண்ணனுக்கும் விழாக் காண ஆவல் இருக்கும் அல்லவா? நேற்றிரவே நகருக்குள் போயிருப்பான். அங்கே படைமறவர் பாடி வீடுகள் ஏதாவதொன்றில் தங்கியிருந்து விடிந்ததும் ஊர் சுற்றிப் பார்த்து விட்டுத் தானாக வந்து சேர்வான்" என்று அவருக்கு மறுமொழி கூறினான் இளங்குமரன். கிழவர் அவனுடைய அந்த மறுமொழியால் சமாதானம் அடைந்தவராகத் தெரியவில்லை.

"அண்ணன் ஊருக்கெல்லாம் பயமில்லாமல் காவல் புரிகிறேன் என்ற வேலேந்திய கையோடு இரவிலும் குதிரையில் சுற்றுகிறான். அப்பாவுக்கோ அவன் தன்னையே காத்துக் கொள்வானோ மாட்டானோ என்று பயமாயிருக்கிறது!" என்று கூறிச் சிரித்தாள் முல்லை.

"பயம் ஒன்றுமில்லையம்மா எனக்கு. நீ இன்று காலை நாளங்காடிப் பூதசதுக்கத்துக்குப் போய்ப் படையல் இட்டு வழிபாடு செய்யவேண்டு மென்றாயே! நான் இங்கே இந்த முனிவருக்குத் துணையாக இருந்து இவரை கவனித்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். கதக்கண்ணன் வந்திருந்தால் நீ அவனை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட வசதியாயிருக்குமே என்றுதான் பார்த்தேன்."

"அண்ணன் வராவிட்டால் என்ன, அப்பா? இதோ இவரை உடன் அழைத்துக்கொண்டு பூதசதுகத்துக்குப் புறப்படுகிறேனே. இவரைவிட நல்ல துணைவேறு யார் இருக்க முடியும்?" என்று இளங்குமரனைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் முல்லை.

இளங்குமரன் தனக்குள் மெல்ல நகைத்துக் கொண்டான்.

"இவனையா சொல்கிறாய் அம்மா? இவன் உனக்குத் துணையாக வருகிறான் என்பதைவிட வீரசோழிய வளநாடுடையார் மகள் இவனுக்குத் துணையாகச் செல்கிறாள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஊர்ச்சண்டையும் தெருவம்பும் இழுத்து, எவனோடாவது அடித்துக்கொண்டு நிற்பான். நீ இவனைச் சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு போக நேரிடும்."

"அப்படியே இருக்கட்டுமே அப்பா! இவருக்குத் துணையாக நான் போகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்" என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னாள் முல்லை.

"முல்லை! என்னைக் குறைகூறுவதென்றால் உன் தந்தைக்கு விருந்துச் சாப்பாடு சாப்பிடுகிற கொண்டாட்டம் வந்துவிடும். அவருடைய ஏளனத்தை எல்லாம் வாழ்த்துக்காளாக எடுத்துக் கொண்டு விடுவேன் நான்."

இளங்குமரன் புன்னகை புரிந்தவாறே இவ்வாறு கூறிவிட்டு, வீரசோழிய வளநாடுடையாரையும் அவருடைய செல்ல மகளையும் மாறி மாறிப் பார்த்தான்.

"அருட்செல்வ முனிவரே! உங்களுடைய வளர்ப்புப் பிள்ளையாண்டானுக்கு அறிவும் பொறுப்பும் வளர்ந்திருக்கிறதோ இல்லையோ வாய்ப்பேச்சு நன்றாக வளஎர்ந்திருக்கிறது" என்று அது வரை தாம் எதுவும் பேசாமல் அவர்களுடைய வம்பு உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த முனிவரை நோக்கிக் கூறினார் வீரசோழிய வளநாடுடையார். இதைக் கேட்டு முனிவர் பதிலேதும் கூற வில்லை. அவருடைய சாந்தம் தவழும் முகத்தில் சிரிப்பு மலர்ந்து அடங்கியது. அந்தச் சிரிப்பின் குறிப்பிலிருந்து கிழவர் கூறியதை அவர் அப்படியே மறுத்ததாகவும் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பொருளை உய்த்துணர இடமளித்தது அந்தச் சிரிப்பு.

இளங்குமரனுக்கு, 'குழந்தாய் நீ கவலைப்படாமல் முல்லையோடு நாளங்காடிக்குப் புறப்பட்டுப் போய்விட்டு வா. நேற்றிரவு சம்பாபதி வனத்தில் நடந்தவற்றிலுள்ள இரகசியத்தையோ, அல்லது வேறு இரகசியங்களையோ இந்தக் கிழவரிடம் வரம்பு மீறிச் சொல்லிவிடமாட்டேன்’ என்று அபயமளித்தது அந்தச் சிரிப்பு. முல்லைக்கோ 'பெண்ணே உன் இதயத்தில் இளங்குமரனைப் பற்றி வளரும் இனிய நினைவுகள் புரியாமல் உன் தந்தை அவனை இப்படி உன் முன்பே ஏளனம் செய்கிறாரே’ என்ற குறிப்பைக் கூறியது அந்தச் சிரிப்பு.

'உங்கள் முதுமைக்கும், அனுபவங்களுக்கும் பொருத்தமான வற்றைத் தான் இளங்குமரனுக்கு நீங்கள் சொல்லுகிறீர்கள்’ என்று கிழவரை ஆதரிப்பதுபோல் அந்தச் சிரிப்பு அவருக்குத் தோன்றியிருக்கும். எந்த மனவுணர்வோடு பிறருடைய சிரிப்பையும் பார்வையையும் அளவிட நேருகிறதோ, அந்த உணர்வுதானே அங்கும் தோன்றும்?

முல்லை தன்னை அலங்கரித்துக்கொண்டு புறப்படுவதற்குச் சித்தமானாள். கண்களிலும், முகத்திலும், உடலிலும் பிறக்கும் போதே உடன்பிறந்து அலங்கரிக்கும் அழகுகளைச் செயற்கையாகவும் அலங்கரித்த பின், வழிபாட்டுக்கும் படையலுக்கும் வேண்டிய பொருள்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் முல்லை. படையலுக்காக நெய்யில் செய்து அவள் எடுத்துக் கொண்டிருந்த பணியாரங்களின் நறுமணத்தை இளங்குமரன் நுகர்ந்தான். முனிவரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்ட பின் கிழவரைப் பார்த்தும், "ஐயா! நானும் முல்லையும் நண்பகலுக்குள் பூதசதுக்கத்திலிருந்து திரும்பி விடுவோம். அதற்குள் கதக்கண்ணன் வந்தால் இங்கேயே இருக்கச் சொல்லுங்கள். நான் அவனிடம் சில முக்கியமான செய்திகள் பேசவேண்டும்" என்று கூறினான் இளங்குமரன்.

"ஆகா! வேண்டிய மட்டும் பேசலாம். தம்பீ! கவனமாக அழைத்துக் கொண்டு போய்வா. முல்லையை பூதசதுக்கத்தில் விட்டுவிட்டு நீ உன் போக்கில் மருவூர்ப் பாக்கத்து விடலைகளோடு சுற்றக் கிளம்பிவிடாதே. அவளை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தபின் நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம்" எனக் கிழவர் எச்சரிக்கை செய்த போது முல்லையும் இளங்குமரனும் சிரித்துக்கொண்டே வெளியேறினார்கள்.

முதல் நாளிரவிலிருந்து தன்னுடைய மனத்தில் மிகுந்து வரும் துன்பங்களையும் தவிப்பையும் அந்தச் சமயத்தில் ஒரு வழியாக மறந்துவிட முயன்ற இளங்குமரன் முல்லையொடு உற்சாகமாகச் சிரித்துப் பேசிக்கொண்டே சென்றான்.

"முல்லை! உன் தந்தையார் என்னைப் பற்றிப் பேசுகிற பேச்செல்லாம் ஒரு விதத்தில் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஊராருக்கெல்லாம் இந்திர விழாவின் தொடக்க நாளில் உற்சாகம் தேடிக்கொண்டு வருகிறதென்றால் என்னைத் தேடிக்கொண்டு அடிபிடி போர் இப்படி ஏதாவது வம்புகள்தாம் வந்து சேருகின்றன. நேற்று மாலை கடற்கரையில் ஒரு யவன மல்லனோடு வலுச் சண்டைக்குப் போய் வெற்றி பெற்றேன். நேற்று இரவு சம்பாபதி வனத்தில் என்னிடம் யாரோ வலுச்சண்டைக்கு வந்தார்கள். வாங்கிக் கட்டிக் கொண்டேன். இந்திர விழாவின் இருபத்தெட்டு நாட்களும் என் பங்குக்கு நேரடியாகவோ, நண்பர்கள் மூலமாகவோ, இப்படி வம்புகள்தாம் எவையேனும் தேடிவரும் போலும்."

"ஒருவேளை நீங்களாகவே வம்புகளைத் தேடிக் கொண்டு போகிறீர்களோ, என்னவோ?"

"பார்த்தாயா? நீயே என்னிடம் வம்புக்கு வருகிறாயே முல்லை; வீரசோழிய வளநாடுடையார் தான் குறும்பாகவும் குத்தலாகவும் பேசுகிறாரென்று பார்த்தால் அவருடைய பெண் அவரையும் மீறிக்கொண்டு குறும்புப் பேச்சில் வளர்கிறாளே? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பெண்ணே, என் தலையெழுத்தே அப்படி. சில பேர்கள் நல்வாய்ப்புகளையே தேடிக்கொண்டு போகிறார்கள். இன்னும் சில பேர்களை நல்வாய்ப்புகளே எங்கே எங்கேயென்று தேடிக்கொண்டு வருகின்றன். என்னைப் பொறுத்தமட்டில் நானாகத் தேடிகொண்டு போனாலும் வம்புதான் வருகிறது. தானாக என்னைத் தேடிக்கொண்டு வந்தாலும் வம்புதான் வருகிறது."

"வம்பில் யோகக்காரராக இருக்கிறீர்கள் நீங்கள்! இல்லையா?"

"அதில் சந்தேகமென்ன பெண்ணே! இன்றைக்கு வாய்த்த முதல் வம்பு நீதான்"

"இரண்டாவது வம்பு?"

"இனிமேல்தான் எங்கிருந்தாவது புறப்பட்டு வரும்" இதைக் கேட்ட முல்லை கலீரெனச் சிரித்தாள். இப்படி விளையாட்டாகப் பேசிக்கொண்டே நாளங்காடியை நோக்கி விரைந்தார்கள் அவர்கள்.

பூம்புகாரின் செல்வவளம் மிக்க பட்டினப் பாக்கத்துக்கும் பலவகை மக்கள் வாழும் மருவூர் பாக்கத்துக்கும் இடையிலுள்ள பெருநிலப் பகுதியாகிய நாளங்காடியில் மக்கள் வெள்ளம்போல் கூடியிருந்தனர். அங்கே கோயில் கொண்டிருந்த சதுக்கப்பூதம், அங்காடிப்பூதம் என்னும் இரண்டு வானளாவிய தெய்வச் சிலைகள் வெகுதொலைவிலிருந்து பார்ப்போர்க்கும் பயங்கரமாகக் காட்சியளித்தன. பூதங்களுக்கு முன்னாலிருந்த பெரிய பெரிய பலிப் பீடிகைகளில் பூக்களும் பணியாரங்களும் குவித்து வழிபடுவோர் நெருக்கமாகக் குழுமியிருந்தனர். மடித்த வாயும் தொங்கும் நாவும் கடைவாய்ப் பற்களுமாக ஒருகையில் வச்சிராயுதமும், மற்றொரு கையில் பாசக் கயிறும் ஏந்திய மிகப் பெரும் பூதச் சிலைகள் செவ்வரளி மாலை அணிந்து எடுப்பாகத் தோன்றின. 'பசியும் பிணியும் நீங்கி நாட்டில் வளமும் வாழ்வும் பெருக வேண்டு'மென்று பூதங்களின் முன் வணங்கி வாழ்த்துரைப்போர் குரல் நாளங்காடியைச் சூழ்ந்திருந்த அடர்ந்த மரச்சோலையெங்கும் எதிரொலித்து கொண்டிருந்தது. துணங்கைக் கூத்து ஆடுகிறவர்களின் கொட்டோசை ஒருபுறம் முழங்கியது.

நாளங்காடிப் பூத சத்துக்கத்துக்கு முன்னால் நான்கு பெரிய வீதிகள் ஒன்றுகூடும் சந்தியில் வந்ததும், "முல்லை, நீ உள்ளே போய் வழிபாட்டைத் தொடங்கிப் படையலிடு. நான் இந்தப் பக்கத்தில் என் நண்பர்கள் யாராவது சுற்றிக்கொண்டுருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு உள்ளே வருகிறேன்" என்று இளங்குமரன் அவளை உள்ளே அனுப்பிவிட்டுத் தான் மட்டும் அங்கேயே நின்று கொண்டான்.

"விரைவில் வந்துவிடுங்கள். ஏதாவது வம்பு தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறது." சிரித்துக்கொண்டே அவன் பக்கம் திரும்பிப் பார்த்துச் சொல்லிவிட்டு பலிப்பீடிகையை நோக்கி நடந்தாள் முல்லை.

"படையல் முடிந்ததும் நீ தரப்போகிற நெய்யில் *பொரித்த எள்ளுருண்டையை (* இந்த எள்ளுருண்டைக்கு அக்காலத்தில் 'நோலை' என்று பெயர்) நினைத்தால் வராமலிருக்க முடியுமா, முல்லை?" என்று நடந்துபோகத் தொடங்கி விட்ட இளங்குமரன் அவள் செவிகளுக்கு எட்டும்படி இரைந்து சொன்னான். பின்பு தனக்குப் பழக்கமானவர்கள், நண்பர்கள் எவரேனும் அந்தப் பெருங்கூட்டத்தில் தென்படுகிறார்களா என்று தேடிச் சுழன்றன அவன் கண்கள்.

ஆனால் அவன் தேடாமலே அவனுக்குப் பழக்கமில்லாத புது மனிதன் ஒருவன் தயங்கித் தயங்கி நடந்து வந்து அருகில் நின்றான், "ஐயா!" என்று இளங்குமரனை மெல்ல அழைத்தான். "ஏன் உனக்கு என்ன வேண்டும்!" என்று அவன் புறமாகத் திரும்பிக் கேட்டான் இளங்குமரன்.

"உங்களைப் போல் ஓவியம் ஒன்று எழுதிக்கொள்ள வேண்டும். தயவு கூர்ந்து அப்படி அந்த மரத்தடிக்கு வருகிறீகளா?" என்று அந்தப் புது மனிதனிடமிருந்து பதில் வந்தபோது இளங்குமரனுக்கு வியப்பாயிருந்தது. 'இது என்ன புதுப் புதிர்?' என்று திகைத்தான் அவன்.
----------

முதல் பருவம் : 6. வம்பு வந்தது!

தன் அருகே வந்து நின்றவனை நன்றாக உற்றுப் பார்த்தான் இளங்குமரன். ஓவியம் எழுதுவதற்குரிய திரைச் சீலை தூரிகைகளும், வண்ணங்களடங்கிய சிறுமரப் பேழையும் அவனிடம் இருந்தன். அவன் இள வயதினன்தான். கலை அறிவுள்ளவர்களின் முகத்துக்கு அந்தப் பயிற்சியால் வரும் அழகுச் சாயல் தவிர இயல்பாகவேயும் அழகனாக இருந்தான் அவன். ஓவியம் எழுதுவதற்கு வந்ததாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த இளைஞனே ஓவியம் போல் கவர்ச்சியாக இருப்பதை எண்ணி வியந்தவனாக அவனை நோக்கிக் கேள்விகளைத் தொடுக்கலானான் இளங்குமரன்:

"உன் பெயர் என்னவென்று நான் அறியலாமா, தம்பி!"

"ஐயா! இந்த ஏழை ஓவியனை மணிமார்பன் என்று அழைப்பார்கள்."

"உன் மார்பில் அப்படி ஒன்றும் மணிகளைக் காணவில்லையே அப்பனே?" இளங்குமரன் குறும்பு நகையுடன் இப்படிக் கேட்ட போது, அந்த இளம் ஓவியன் சிறிது நாணமடைந்தது போல் தலைகுனிந்தான். பின்பு மெல்லச் சொல்லலானான்:

"ஐயா! நீங்கள் மனம் வைத்தால் இந்த ஏழையினுடைய மார்பிலும் மணிகள் ஒளிரச் செய்ய முடியும்." இதைக் கேட்டு இளங்குமரன் அலட்சியமாகச் சிரித்தான்.

"என்னைப் பற்றித் தப்புக் கணக்குப் போடுகிறாய், தம்பீ! பட்டினப் பாக்கத்தில் எவரோ பெருஞ்செல்வரின் மகன் என்றோ, வேறு விதமான பெரிய இடத்துப் பிள்ளை என்றோ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் இந்தக் கணமே அந்த நினைவை விட்டுவிடு மணிமார்பா. என் சித்திரத்தை நன்றாக எழுதிக் காண்பித்தால் அதை வாய் நிறையப் புகழ்வதைத் தவிர வேறு எந்தப் பரிசும் தரமுடியாதவன் நான்."

"நீங்கள் பரிசு ஒன்றும் எனக்குத் தரவேண்டியதில்லை, ஐயா! உங்கள் படத்தை நான் வரைந்து போய்க்கொடுத்தாலே எனக்கு உடனே கனகாபிஷேகம் செய்து விடக் காத்திருக்கிறவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்களே!"

இப்படிக் கூறிவிட்டு நளினமானதொரு மென்னகை இதழ்களில் இழையோட இளங்குமரன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் மணிமார்பன். இதைக் கேள்வியுற்ற இளங்குமரனுக்குத் திகைப்பும் வியப்பும் ஒருங்கே உண்டாயின.

"மணிமார்பா! இந்தப் பூம்புகார் நகரம் திடீரென்று என்னை அவ்வளவு பெரிய மனிதனாக மதிப்பிடத் தொடங்கி விட்டதா, என்ன? சரிதான் போ! எனக்கு ஏதோ போதாத காலம் ஆரபமாகிறது போலிருக்கிறது? அப்பனே! இந்த மாபெரும் கோநகரத்தில் எனக்கு எதிரிகளும், வேண்டாதவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் நேருக்கு நேர் என்னிடம் வந்து சண்டையிட பயம். என்னுடைய சித்திரத்தை எழுதி மகிழலாமென்று அந்த அப்பாவிகளில் யாராவது ஆசைப்பட்டிருக்கலாம். நான் முரடனாக இருக்கிறேனாம். அதனால் என்னிடம் நேரே போருக்கு வர அஞ்சுகிற ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்."

"ஐயா! இப்போது உங்களை ஓவியமாக்கிக் கொண்டு வரச் சொல்லி என்னை அனுப்பியவர் உங்களுக்கு எதிரியில்லை. தாக்கி மகிழ்வதற்காக உங்கள் ஓவியத்தை அவர் கேட்கவில்லை. நோக்கி மகிழ்வதற்குக் கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது."

"அடடா! வேடிக்கையாக அல்லாவா இருக்கிறது நீ சொல்லுகிற செய்தி. இந்திரவிழாவின் இரண்டாவது நாளாகிய இன்று போனால் போகிறதென்று கொஞ்சம் நல்ல வாய்ப்புகளும் என்னைத் தேடிக்கொண்டு வருகிறாற் போல் இருக்கிறது! என்னை இத்தனை பெரிய பாக்கியசாலியாக்குவதற்குத் துணிந்திருக்கும் அந்தப் புண்ணியவான் யார் அப்பனே?"

மணிமார்பன் பதில் கூறாமல் கண்களை மூடித்திறந்து குறும்பாகவும் எதையோ ஒளிக்கும் குறிப்புடனும் இளங்குமரனைப் பார்த்துச் சிரித்தான்.

"அப்பனே! நீ நன்றாகத்தான் சிரிகிறாய். சிரிப்பிலேயே சித்திர விசித்திர நுணுக்கங்களெல்லாம் காட்டிச் சொல்ல வந்ததை மறைக்காதே. யார் அந்தப் புண்ணியவான் என்பதை மட்டும் முதலில் சொல்!"

"புண்ணியவான் இல்லை ஐயா; புண்ணியவதி!" என்று கூறிக்கொண்டே கிழக்குப் பக்கமாகத் திரும்பி, "அதோ அந்தப் ப்ல்லக்கிலிருந்து இறங்குகிறாரே எட்டிக் குமரன் வீட்டுப் புதல்வியார் அவருக்கு உங்கள் சித்திரம் வேண்டுமாம்" என்று சுட்டிக் காட்டினான் ஒவியன். இளங்குமரன் அவன் காட்டிய திசையில் பார்த்தான். அவனுடைய முகத்திலிருந்து சிரிப்பும் மலர்ச்சியும் விடைபெற்றன. முதல்நாள் மாலை கடற்கரையில் மற்போர் வெற்றிக்காகத் தனக்கு மணிமாலை பரிசளிக்க முன்வந்த அதே அழகி பல்லக்கிலிருந்து இறங்கி ஒளி சிதறிக்கொண்டு நடைபயில்வது போல் தனது அணிமணிகள் சுடரிடக் தோழியோடு பூதசதுக்கத்து வாயிலுக்கு வருவதை அவன் கண்டான்.

"ஐயா! உங்கள் ஓவியத்தை எழுதி முடித்து அவர்கள் இங்கிருந்து திரும்புவதற்குள் கொண்டுவந்து கொடுத்தால் நூறு கழஞ்சு பொன் எனக்குப் பரிசு தருவ்தாகச் சொல்லியும் அடையாளம் காட்டி அனுப்பினார்கள். நீங்கள் என்மேல் கருணை கொண்டு..."

"உன் மேல் கருணை கொள்வதற்கு நான் மறுக்க வில்லை தம்பீ! ஆனால் உனக்கு உலகம் தெரியாது. நீ சிறு பிள்ளை. உன்னுடைய சித்திரங்களின் புனைவிலும் பூச்சிலும் விதம் விதமான வண்ணங்களைக் கண்டு மகிழ்வது போல் பேரின்ப நகரமான இந்தப் பூம்புகாரின் வாழ்விலும் ஒளிதரும் வண்ணங்களே நிறைந்திருப்பாதாக நீ நினைக்கிறாய். சூதும் வாதும் இகழ்ச்சியும் நிறைந்த பூம்புகாரின் வாழ்க்கைச் சித்திரம் உனக்குத் தெரிந்திராது. அங்கே வண்ணங்கள் வனப்புக் காட்டவில்லை. அழுதுவடிகின்றன. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடக்கூடாது. செல்வத் திமிர் பிடித்த பட்டினப் பாக்கத்தார் தாம் பூம்புகார் எனும் வாழ்க்கை ஓவியத்தின் மறுபுறம் மங்கியிருப்பதற்குக் காரணமானவர்கள். இவர்களைக் கண்டாலே எனக்கு அந்த நினைவு வந்து விடுகிறது. வெறுப்பும் வந்து விடுகிறது. சில சமயங்களில் இவர்கள் அழகையும் செழுமையையும் கண்டு கவர்ச்சி பெற்றாலும் ஆழ்ந்து சிந்திக்கும் போது என் மனம் கொதிக்கிறது, தம்பீ!"

அதைக் கேட்டபின் ஓவியனுடைய மனத்தில் அவ நம்பிக்கை இருள்தான் கவிந்தது. நம்பிக்கை ஒளி சிறிதும் படரவில்லை.

"ஐயா நீங்கள் கூறுகிற கருத்துக்கள் எல்லாம் மிகவும் நன்றாயிருக்கின்றன். ஆனால் என் போன்ற ஏழைக்கலைஞனுக்கு அவற்றால் ஒரு பயனும் இல்லை. அருள் கூர்ந்து உங்களைச் சித்திரமாக்கி அந்தப் பெண்மணியிடம் அளிக்க அனுமதி தந்தீர்களானால், ஏதோ எனக்கும் அதனால் நூறு கழ்ஞ்சு பொன் பெறுகிற வாய்ப்புக் கிடைக்கும். வெறும் உபதேசத்தினால் என்ன பயன் விளையப் போகிறது?" என்று நைந்து நம்பிக்கையிழந்த குரலில் மணிமார்பன் கூறியபோது இளங்குமரனுக்கு அவன்மேல் சிறிது ஆத்திரம் மூண்டது. என் முன்னால் நின்று கொண்டே என்னை நோக்கி, 'வெறும் உபதேசத்தால் என்ன பயன் விளையப் போகிறது? என்று கேட்கிறானே இந்த இளைஞன், கையாலாகாத ஆளுக்கு உபதேசம் எதற்கு? என்று என்னையே இடித்துக் காட்டுகிறானா இவன்?'

இளங்குமரன் தன் மனத்தின் ஆத்திரத்தை முகத்தில் காட்டாமல் அவனை உற்றுப் பார்த்தான். 'பாவம்! ஏழை ஓவியன். நாம் ஒப்புக் கொள்வதனால் நமக்கு இழப்பு ஒன்றுமில்லை. ஒப்புக் கொள்ளாவிட்டால் இவனுக்கு நூறு பொற் கழஞ்சு கிடைக்காமல் போகும். பிழைத்துப் போகிறான். செருக்கு மிகுந்த அந்தச் செல்வக் குமரிக்காக இல்லாவிட்டாலும் இவனுக்கு ஊதியம் கிடைக்கும் என்பதற்காக இதை நாம் எற்றுக்கொள்ளலாம்' என்று ஆத்திரம் மாறி இரக்கம் உண்டாயிற்று இளங்குமரன் மனத்தில். அடுத்த கணம் அவன் முகம் மலர்ந்தது. பாசத்தோடு அருகில் சென்று அந்த ஓவியன் முதுகில் தட்டிக்கொடுத்தான். "மணிமார்பா! தளராதே அப்பனே. எங்கே நான் கண்டிப்பாக மறுத்து விடுகிறேனோ என்ற பயத்தில் உன் அழகிய முகம் மங்கிய வண்ணம் போல் வாடிவிட்டதே. தம்பீ! வா, என்னை வரைந்து கொள். உனக்கு நான் பயன்படுகிறேன் என்பதுதான் என் இணக்கத்துக்குக் காரணம்."

"ஐயா தனக்காகவே நான் உங்களை வரைகிறேன் என்பதை உங்களிடம் சொல்லாமல் வரைந்து வருமாறுதான் அந்தப் பெண்மணி கூறியிருந்தார். நான் தான் உங்களிடம் மெய்யை மறைக்க முடியாமல் கூறிவிட்டேன். உங்கள் கண்களுக்கு எதிரே நின்று பேசுகிறபோது உண்மையை மறைத்துப் பேசவரவில்லை."

"பார்த்தாயா? அவளுக்காக என்பதை நீ என்னிடம் கூறினால் நான் இணங்க மாட்டேன் என்று அந்த அழகரசிக்கே நன்றாகத் தெரியும் தம்பி!"

"ஏன் ஐயா? உங்களுக்குள் ஏதாவது கோபமா?"

"தம்பீ! இந்தக் கேள்வியெல்லாம் கேட்டு நேரத்தை வீணாக்காதே. நீ வரையத் தொடங்கு!"

இளங்குமரன் மீண்டும் குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கண்டித்த பின்புதான் ஓவியன் மணிமார்பன் பேச்சைக் குறைத்து வேலையில் இறங்கினான். மரத்தைத் தழுவினாற் போல் படர்ந்திருந்த ஒரு முல்லைக் கொடியைப் பிடித்தவாறு மலர்ந்த முகத்தோடு சித்திரத்துக்கு வாய்ப்பான கோலத்தில் நின்றான் இளங்குமரன். திரைச்சீலையை விரித்து வண்ணப் பேழையைத் திறந்து வரையலானான் மணிமார்பன். நாளங்காடிச் சதுக்கப் பூதத்தின் பலிப் பீடிகையிலிருந்து முல்லை வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்புமுன் மணிமார்பனுடைய வரைவுவேலை முடிந்துவிட வேண்டுமென்று துரிதப்படுத்தினான் இளங்குமரன். முல்லை கொண்டு வரப்போகும் நெய் எள்ளுருண்டையை நினைக்கும்போது அவன் நாவில் சுவைநீர் சுரந்தது.

"ஐயா! உண்மையிலேயே நீங்கள் மிகவும் அழகாய்த்தான் இருக்கிறீர்கள்!"

"தம்பீ! அப்படியானால் என்னுடைய அழகைப்பற்றி இது வரையில் உனக்குச் சந்தேகம் இருந்ததா? நான் அழகாயிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பது இன்று இந்த நாளங்காடி நாற்சந்தியில் நீ என்னைத் தேடி வந்ததிலிருந்தே தெரிந்துவிட்டது. அழகாயிருப்பதைப் பற்றி நீயும் நானும் நினைத்துப் பார்க்க நேரமேது? பொன்னிலும், யானைத் தந்தத்திலும் யவனப்பாடியிலுள்ள சிற்பிகள் எவ்வளவோ அழகான சிலைகள் செய்கிறார்களே அவற்றையெல்லாம் விலைக்கு வாங்கிச் செல்கிறவர்கள் பட்டினப்பாக்கத்துச் செல்வர்கள்தாம். அதே போல் அழகாயிருக்கிற ஆட்களையும் அன்பு என்கிற விலைக்கு வாங்கிவிடத் துடிக்கிறார்கள் அவர்கள்."

"நீங்கள் அதைவிடப் பெரிய விலை ஏதேனும் எதிர் பார்க்கிறீர்களோ?"

"என் தன்மானமும் தன்னம்பிக்கையும் பட்டினப்பாக்கத்து ஏழு அடுக்குமாடங்களைவிட உயரமானவை தம்பீ!"

"என்ன காரணத்தாலோ பட்டினப்பாக்கத்து ஆடம்பர வாழ்வின் மேலும், செல்வச் சுகபோகங்கள் மேலும் உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பது தெரிகிறது, ஐயா."

இதற்கு இளங்குமரன் பதில் சொல்லவில்லை. மணிமார்பனும் குறிப்பறிந்து, பேசுவதை நிறுத்திக்கொண்டான். கரும்பு வில்லில் மலர்க்கணைதொடுத்த கோலத்தில் மன்மதன் நிற்பதுபோல் முல்லைக் கொடியைப் பிடித்தாற் போல் நிற்கும் இளங்குமரன் திரைச்சீலையில் உருவாகிக் கொண்டிருந்தான்.

அப்போது சிலம்பொலி கிளரச் சீறடி பெயர்ந்து நடந்து வந்தாள் முல்லை.

"உங்களை எங்கே எல்லாம் தேடுவது?" என்று கூறிக் கொண்டே நெய்மணம் கமழும் எள்ளுருண்டைப் ப்ணியாரத்தை முன் நீண்ட அவன் கையில் வைத்துவிட்டு ஒவியனுக்கும் தருவதற்காக் எதிர்ப்பக்கம் நடந்தாள் முல்லை.

பணியாரத்தை வாயிலிடுவதற்காக் மேலெழுந்த இளங்குமரனின் வலக்கரம் பின்னாலிருந்து வேறொரு முரட்டுக் க்ரத்தால் தட்டி விடப்பட்டது! எள்ளுருண்டைகள் அந்தரத்தில் பறந்தன. அடக்க முடியாத சினத்தோடு அழற்சி பொங்கும் விழிகளைப் பின்புறமாகத் திருப்பினான் இளங்குமரன். அங்கே அன்றைய கணக்குக்கு அவனைத் தேடி வர வேண்டிய வம்பு வந்திருந்தது! பயங்கரமாகக் கட்சி கட்டிக் கொண்டு வந்திருந்தது! அவனது புயங்களின் தசை திரண்டது.
---------

முதல் பருவம் : 7. வீரசோழிய வளநாடுடையார்

வாழ்க்கையில் ஒவ்வோருணர்வுக்கும் மறுபுறம் என்பதொன்றுண்டு. சிலருக்குப் பிறர் மேல் ஏற்படுகிற அன்பின் மறுபுறம் வெறுப்பாக இருக்கும். அல்லது வெறுப்பின் மறுபுறத்தைத் திரும்பிப் பார்த்தால் தவிர்க்க முடியாத பேரன்பாக இருக்கும். ஒன்றாக இருப்பினும் நிறமும் தோற்றமும் வேறுபடும். உள்ளங்கையும் புறங்கையும் போல இந்த உணர்வுகளும் உறவுகளும் அமையும். நேரிற் காணும் போது குத்தலாகவும் ஏளனமாகவும் பேசிவிட்டாலும் இளங்குமரனிடமிருந்து ஏதோ ஒரு கவர்ச்சி வீரசோழிய வளநாடுடையார் மனத்துனுள் அவனை நினைத்து ஏங்கும் பிணைப்பை உண்டாக்கியிருந்தது. இதனால் அந்த அநாதை இளைஞனை 'உறுதியாக வெறுக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டே அந்நினைவின் மறுபுறம் அவன் மேல் அவர் கவலையும் அக்கறையும் காட்டி வந்தார். அதற்குக் காரணமானதும், உணர்வு ஒருபுறம் விரும்பாமல் மனம் மறுபுறம் விரும்பியதுமான அன்புத்தூண்டுதல் அவருள் மிக அந்தரங்கமானதாக இருந்தது.


அன்று காலை முல்லையும் இளங்குமரனும் நாளங்காடிப் பூதசதுக்கத்துக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர் வீரசோழிய வளநாடுடையாருக்கும் அருட்செல்வ முனிவருக்கும் தங்களுக்குள் உரையாடுவதற்குத் தனிமை வாய்த்தது.

தாம் அறிவதற்கு ஆவல் கொண்டுள்ள பல செய்திகளைத் தூண்டிக் கேட்கும் விருப்பத்துடன் வந்து அமருகிறவர்போல் முனிவரின் கட்டுலுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தார் வீரசோழிய வளநாடுடையார். அவர் இவ்வாறு வந்து உட்காரும் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்போல் தமக்குள் மெல்லச் சிரித்துக்கொண்டார் முனிவர்.

"உங்களுடைய இல்லத்துக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டனவே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். உடையாரே! எப்படியோ சந்தர்ப்பம் நேற்றிரவு இங்கே வந்து தங்கும்படி செய்துவிட்டது. ஆனால் இப்படி அடி, உதை பட்டுக்கொண்டு வந்து தங்கியிருப்பதை நினைக்கும் போதுதான் என்னவோ போலிருக்கிறது."

"கவலைப்படாதீர்கள் முனிவரே! நானும் கிழவன், நீங்களும் கிழவர். நம் போன்றவர்களுக்கு இந்த வயதில் இப்படிச் சந்தித்து மனம்விட்டுப் பேசுவதைப் போலச் சுவையான அநுபவம் வேறு கிடைக்க முடியாது. எவ்வளவோ செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசலாம் அல்லவா?"

"ஆகா! நீங்கள் ஆசைப்படும்போது நான் பேசுவதற்கு மறுக்க இயலுமா? ஆனால் உங்களுடைய கருத்தில் ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நான் மறுக்க வேண்டியவனாக இருக்கிறேன். மூப்பு நெருங்கப் பேசாமைதான் சுவையான அநுபவமாகப் படுகிறது எனக்கு. மூப்புக் காலத்தில் மனத்தினுள் முன்பு வாழ்ந்த நாளெல்லாம் கட்டி வைத்த நினைவுச் சுமைகளையே அவிழ்த்துப் பார்த்து ஒழுங்கு செய்யக் காலம் காணாதபோது பேசிப் பேசிப் புதிய நினைவுச் சுமைகளையும் சேர்க்கலாமா?"

"முனிவர் பெருமானுக்குத் தெரியாத மெய்யில்லை. இன்பமும் துன்பமும் நிறைந்த நினைவுகளைச் சுமப்பதுதானே உயிர்ப் பயணம்? முடிவற்ற அந்தப் பயணத்தில் அவ்வாறு நினைவுகளைச் சுமப்போரைக் கண்டும் நாம் சுமையின்றி நடந்து போகலாமென எண்ணி ஒதுங்கலாமா, அடிகளே."

"ஒதுங்கவேண்டுமென்று நான் கூறவில்லை உடையாரே. இந்தப் பிறவிக்குப் போதும் போதுமென்று சொல்கிறாற் போல அவ்வளவு நினைவுச் சுமைகளை ஏற்கெனவே கனமாகச் சுமந்து கொண்டிருக்கிறேன் நான்."

இவ்வாறு கூறிவிட்டு முகத்தில் ஏக்கமும் ஆற்றாமையும் தோன்ற நெட்டுயிர்த்தார் முனிவர்.

"பிறரிடம் ஒருமுறை மனம் திறந்து பேசினாலாவது உங்கள் நினைவுச் சுமையின் கனம் குறையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது முனிவரே!"

"செய்யலாம் உடையாரே! ஆனால் எல்லாச் செய்திகளையும் எல்லாரிடமும் மனம் திறந்து பேசிவிட முடிவதில்லை. சில செய்திகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாகத் திறந்து எண்ணிப் பார்ப்பதற்கும் பயமாக இருக்கிறதே..."

இதைக் கேட்டு வீரசோழிய வளநாடுடையார் இரைந்து வாய்விட்டுச் சிரித்தார்.

"முனிவரே! இந்த மாபெரும் நகரத்தின் புறவீதியில் சாதாரணக் காவல் வீரனாகச் சுற்றிய நாள் தொடங்கிப் பின்பு காவற்படைத்தலைவனாகி இன்று ஓய்வு பெற்றிருக்கும் நாள் வரை உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்னும் நீங்கள் என்னிடம் சில செய்திகளை மறைத்தே பேசி வருகிறீர்கள். துறவிகளுக்கு ஒளிவு மறைவு கூடாதென்பார்கள். நீங்களோ மிக மிகப் பெரிய செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்துக் காப்பாற்றி வருகிறீர்கள். பலமுறை அவற்றை அறிய முயன்றும் தொடர்ந்து நான் ஏமாந்து கொண்டே வருகிறேன். இன்றும் அதேபோல் ஏமாற்றத்தைத் தவிர வேறு மறுமொழி உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்காது போலத் தோன்றுகிறதே?"

"இந்த வினாடிவரை ஒரு கேள்வியும் கேட்காமலே நான் மறுமொழி கூறவில்லையென்று நீங்களாகக் குற்றம் சுமத்துவது நியாயமாகுமா உடையாரே?"

"நான் எதைக் கேட்பதற்கு நினைக்கிறேன், என்ன கேட்கப் போகிறேன் என்பதொன்றும் உங்களுக்குத் தெரியாதது போல் மறைக்கிறீர்கள் அருட்செல்வரே!"

இதைக் கேட்ட உடனே முனிவர், வீரசோழிய வளநாடுடையார் முகத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். மெல்ல அவரை நோக்கி நகை புரிந்தார்.

"இந்தப் பார்வையையும், இந்தச் சிரிப்பையும் தவிர இத்தனை காலமாக என்னுடைய கேள்விக்கு நீங்கள் வேறு மறுமொழி எதுவும் கூறவில்லை, முனிவரே! இந்தப் பிள்ளையாண்டான் இளங்குமரனைப் பற்றி அவன் சிறு பிள்ளையாக இருந்த நாளிலிருந்து நானும்தான் உங்களைத் தூண்டித் தூண்டிக் கேட்டுக்கொண்டு வருகிறேன். இதுவரை என் கேள்விக்குப் பயன் விளையவில்லை."

"இளங்குமரனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமோ?"

"இதென்ன கேள்வி முனிவரே? என்னென்ன தெரியக்கூடுமோ அவ்வளவும் தெரிந்தால் நல்லதுதான். அந்தப் பிள்ளையை வளர்த்து ஆளாக்கிய உங்களைத் தவிர வேறு யாரிடம் போய் நான் இவற்றையெல்லாம் கேட்கமுடியும்?"

"உடையாரே! ஏதோ ஓர் அந்தரங்கமான எண்ணத்தை மனத்திற் கொண்டு நீங்கள் இளங்குமரனைப் பற்றி விசாரிகிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரிதானே?"


"ஆமாம் முனிவரே! உங்களுக்குத்தான் எதையும் ஒளித்து மறைத்துப் பேசி வழக்கம். என்னுடைய அந்தரங்கத்தை நீங்கள் இப்போதே தெரிந்து கொள்ளுவதிலும் எனக்கு மறுப்பில்லை. என்னுடைய பெண் முல்லைக்கு இந்தப் பிள்ளையாண்டான் பொருத்தமான கணவனாக இருப்பானென்று வெகு நாட்களாக எனக்கு ஒரு நினைப்பு இருக்கிறது. ஆனால் அந்த நினைப்பு ஒன்றை மட்டுமே தூண்டுதலாகக் கொண்டு அதை நான் செய்து விடுவதற்கில்லை. இளங்குமரனுடைய பிறப்பிலிருந்து எதிர்காலம் வரை ஓரளவு தீர்மானமாகத் தெரிந்துகொண்ட பிறகுதான் முல்லையை அவன் கையில் ஒப்படைக்க நான் துணிய முடியும். இப்படியே இப்போதிருப்பது போல் ஊர் சுற்றும் முரட்டுப் பிள்ளையாக அவன் எப்போதும் இருப்பதானால் முல்லையை இளங்குமரனோடு தொடர்பு படுத்தி நினைப்பதையே நான் விட்டுவிட வேண்டியது தான். செய்யலாமா கூடாதா என்று இந்த எண்ணத்தை மனத்தில் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதனால்தான் உங்களிடம் இளங்குமரனைப் பற்றி அடிக்கடி விசாரிக்க நேர்ந்தது" என்று இந்தச் செய்தியை முனிவரிடம் சொல்லி முடித்த போது மனத்திலிருந்து பாரத்தை இறக்கிவைத்தாற் போலிருந்தது வீரசோழிய வளநாடுடையார்க்கு. அவர் அதற்கு விளக்கமான பதிலை எதிபார்த்து முனிவருடைய முகத்தை நோக்கினார். சிறிது நேரம் முனிவரிடமிருந்து பதில் வரவில்லை. அவர் எதற்கோ சிந்தித்துத் தயங்குவது போலிருந்தது.

"உடையாரே! உங்கள் கேள்விக்கு மறுபடியும் பழைய பதிலைத்தான் கூற வேண்டியிருக்கிறது. சில செய்திகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்கும் பயமாக இருக்கிறது. ஒரு மனிதன் உலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுவது ஞானம். ஒரு மனிதனை உலகம் முழுமையாகப் புரிந்துகொள்வது அதிர்ஷ்டம். இளங்குமரன் ஒரு காலத்தில் இவ்விரண்டு பாக்கியங்களையுமே பெறப் போகிறான் என்றாலும் இன்றைக்கு அவன் வெறும் இளைஞன். சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையிலுள்ள முனிவர் ஒருவரால் வளர்த்து விடப்பட்ட முரட்டுப்பிள்ளை. இதுவரையில் அவனது உடம்பைத் தவிர உள்ளத்தை அதிகமாக வளர்க்க முயலாத நான் இப்போதுதான் சிறிது கலமாக அவன் உள்ளமும் வளர்வதற்கு உரியவைகளைக் கற்பித்துக் கொண்டு வருகிறேன். இவற்றைத்தான் அவனைப் பற்றி இப்போது நான் உங்களிடம் கூறமுடியும்."

"இவற்றில் புதிதாக எந்த உண்மையையும் எனக்கு நீங்கள் கூறவில்லையே, முனிவரே?"

"உண்மை வேறு, வாய்மை வேறு, மெய்ம்மை வேறு, உடையாரே! உள்ளத்துத் தூய்மை உண்மை. சொல்லில் தூய்மை வாய்மை. உடல் ஈடுபட்டு நிகழும் செயலில் தூய்மை மெய்ம்மை. இந்த மூன்றாலும் இளங்குமரனுக்கு ஒருபோதும் நான் தீங்கு நினைத்ததில்லை.

'வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்,'

என்றுதான் நம் முன்னோர்கள் வாய்மைக்கு வரையறை வகுத்திருக்கிறார்கள். பிறருக்குத் தீமை தரும் உண்மையைக் கூறுவதும் பொய். பிறருக்கு நன்மை தரும் பொய்யைக் கூறுவதும் வாய்மை! இளங்குமரனைப் பற்றிய சில உண்மைகளை நான் கூறாமல் மறைத்து வருகிறேனென்பதற்குக் காரணம் அந்த உண்மைகள் வெளியாகும்போது அவற்றால் இளங்குமரனுக்கு ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகள் அதிகமென்பது தான்."

"நான் ஏதோ அந்தப் பிள்ளையைப் பற்றி அவனுக்கு முன்னாலேயே ஏளனமாகப் பேசுகிறேனே என்பதனால் என்னை அவனுக்கு ஆகாதவன் என்று நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம் முனிவரே! அந்தரங்கமாக எனக்கு அவன்மேல் நிறைந்த அநுதாபம் உண்டு. இல்லாவிட்டால் என் மகளுக்கு அவனை மணமகனாக்கிக் கொள்ளும் ஆவலை உங்களிடம் கூறியிருப்பேனா, அடிகளே? இளங்குமரன் சோழர் படைக்குழுவிற் சேர்ந்து பெருவீரனாகப் புகழ்மாலை சூடவேண்டுமென்றெல்லாம் எனக்கு ஆசை உண்டு. அந்தப் பிள்ளையின் தோற்றமும் உடலின் வலிமையும் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதிக்கும் தகுதி வாய்ந்தவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் முனிவரே!"

"அப்படி நீங்கள் உணர்ந்திருப்பது உண்மையானால் அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலைச் சிறிது காலத்துக்கு அடக்கி வைத்துக் கொள்வதுதான் நல்லது."

"உங்களைப்போல் நிறையப் படுத்த ஞானிகளாயிருப்பவர்களுக்குப் பேசுவதில் ஒரு வசதி இருக்கிறது. எதையும் பிறருக்குப் புரியாமலும், பிறராகப் புரிந்துகொள்ள முடியாமலும் அழகாகப் பேசிவிட முடிகிறது." வீரசோழிய வளநாடுடையார் தம்மைக் குத்திக் காட்டுவது போல் பேசிய இந்தப் பேச்சைக் கேட்ட பின்பும் முனிவர் அமைதியாகவே சிரித்துக் கொண்டிருந்தார். எத்தகைய பேச்சுக்களையும் ஏற்றுத் தாங்கிப் பழகிய அவருக்கு இது பெரிதாக உறுத்தவில்லை. சாதாரணமானவற்றுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுப் பழக்கமில்லை அவருக்கு.

வீரசோழிய வளநாடுடையாருக்கும் அருட்செல்வ முனிவருக்கும் இன்று நேற்றுப் பழக்கமில்லை. ஆனாலும் அன்று அந்தக் காலை நேரத்துத் தனிமையில் ஒருவருக்கொருவர் ஆழம் பார்க்க முயன்றது இப்படி முடிந்தது. இந்தச் சமயத்தில் வீட்டு வாயிலில் குதிரைகள் வந்து நிற்கும் ஒலி கேட்கவே இருவருடைய பேச்சும் நிற்க நேர்ந்தது. வீரசோழிய வளநாடுடையார் வாயிற்புறம் வந்திருப்பது யாரென்று பார்ப்பதற்காக விரைவாய் எதிர்கொண்டு சென்றார்.

கதக்கண்ணனும் முதல் நாளிரவு அவனுடனே சம்பாபதி வனத்தில் சுற்றிய மற்றோர் ஊர்க்காவலனும் வேறு சில இளைஞர்களும் இல்லத்துக்குள் பரபரப்போடு நுழைந்தார்கள்.

"இராக் காவலை முடித்துக்கொண்டு பொழுதோடு வீட்டுக்குத் திரும்பகூடாதா குழந்தாய்? இப்படிச் சிறிது நேர உறக்கம்கூட இல்லாமல் பொழுது விடிகிறவரை கண் விழித்து ஊர்சுற்றுகிறாயே; உடல் நலம் என்ன ஆவது?" என்று புதல்வனை அன்போடு கடிந்துகொண்டு பேச்சைத் தொடங்கிய வீரசோழிய வளநாடுடையாரை மேலே பேச விடாமல் இடைமறித்து,


"அதெல்லாம் இருக்கட்டும் அப்பா, இப்போது இளங்குமரன் இங்கிருக்கிறானா, இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள்" எனப் பரபரப்போடு விசாரித்தான் அவருடைய அருமைப் புதல்வன் கதக்கண்ணன். அவனுடன் வந்து நின்றவர்களும் அவன் கேட்ட அந்தக் கேள்விக்குத் தம்மிடமிருந்து பதிலை எதிர்பார்த்துப் பரபரப்புக் காட்டுவதை அவர்களுடைய முகச் சாயலிலிருந்து வளநாடுடையார் புரிந்துகொள்ள முடிந்தது.

"உன்னுடைய தங்கை முல்லை அந்தப் பிள்ளையாண்டானைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பூதசதுக்கத்துக்குப் படையல் இடப் போயிருக்கிறாள். நீ திரும்பி வந்தால் உன்னை இங்கேயே இருக்கச் சொன்னான் இளங்குமரன். அவனுக்கு உன்னிடம் ஏதோ முக்கியமான செய்திகள் பேசவேண்டுமாமே?"

இந்த மறுமொழியை அவர் கூறிவிட்டு எதிரே பார்த்தபோது கதக்கண்ணன் உட்பட, நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர்கூட அங்கே இல்லை. வேகமாக ஓடிப்போய்க் குதிரைகளில் தாவி ஏறிக்கொண்டிருந்தார்கள். அடுத்த கணம் வாயிலில் நின்ற குதிரைகள் புறவீதியில் புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டு பறந்தன்.

"அப்படி என்ன அவசரம் குடிமுழுகிப் போகிறதோ?" என்று தமக்குள் முணுமுணுத்தபடி வாயிலில் இறங்கிக் குதிரைகள் விரைந்து செல்லும் திசையில் வெறித்து நோக்கினார் அவர்.
-----------

முதல் பருவம். 1.8. சுரமஞ்சரியின் செருக்கு

கண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. ஓவியன் மணிமார்பன் பயந்துபோய் ஒதுங்கி நின்றான். முல்லை திடுக்கிட்டு அலறினாள். நாலைந்து முரட்டு யவனர்களும் பூதாகாரமான மல்லன் ஒருவனும் இளங்குமரனைச் சூழ்ந்து கொண்டு அவனைத் தாக்குவதற்குத் தொடங்கியிருந்தார்கள்.

"நேற்று மாலை கடற்கரையில் வெற்றி கொண்ட சாமர்த்தியம் இப்போது எங்கே போயிற்று தம்பீ?" என்று கூறி எள்ளி நகையாடிக் கொண்டே இளங்குமரன் மேல் பாய்ந்தான் அந்த மல்லன். இளங்குமரன் கன்னத்தில் அறைந்ததுபோல் பதில் கூறினான், அந்த யவனத் தடியனுக்கு.

"சாமர்த்தியமெல்லாம் வேண்டிய மட்டும் பத்திரமாக இருக்கிறது, அப்பனே! என்னிடம் இருக்கிற சாமர்த்தியத்தை வைத்துக்கொண்டு உனக்கு பதில் சொல்லலாம்; உன்னுடைய அப்பன் பாட்டனுக்கும் பதில் சொல்லலாம். சந்தேகமிருந்தால், தனித் தனியாக என்னோடு மல்லுக்கு வந்து பாருங்கடா. இதோ எதிரே கோவில் கொண்டுருக்கும் சதுக்கப்பூதத்தின் மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கடைவாய்ப் பற்கள் என்று எண்ணி உதிர்த்துக் காட்டுவேன். ஆனால் ஐந்தாறு பேராகச் சேர்ந்து கட்சி கட்டிக்கொண்டு வந்து இப்படி முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு கையைத் தட்டி விடுகிற செயலைத் தமிழர்கள் வீரமென்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கோழைத்தனம் என்பதைவிடக் கேவலமான வார்த்தை வேறொன்று இருந்தால் அதைத்தான் உங்கள் செயலுக்கு உரியதாகச் சொல்ல வேண்டும்."

"சொல்! சொல்! நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிரு. உன் கை, கால்களை முறித்துப் போடாமல் இங்கிருந்து நாங்கள் கிளம்பப் போவதில்லை."

இப்படி அவர்கள் அறைகூவவும் பதிலுக்கு இளங்குமரன் அறைகூவவும் இருபுறமும் பேச்சு தடித்துக் கைகலப்பு நெருக்கமாகிக் கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றிக் கூட்டமும் கூடத் தொடங்கிவிட்டது. இடமோ கலகலப்பு மிகுந்த நாளங்காடிப் பகுதி. காலமோ இந்திர விழாக் காலம். கூட்டம் கூடுவதற்கு என்ன குறை? இந்நிலையில் கையில் படையலிட்டு வந்த பொருள்களடங்கிய பாத்திரத்துடனே இருந்த முல்லை மருட்சியோடு என்ன செய்வதென அறியாது திகைத்துப் போய் நின்றாள். தாக்குவதற்கு வந்தவர்கள் கொதிப்புடனும் அடக்க முடியாத ஆத்திரத்துடனும் வந்திருப்பதாகத் தெரிந்தது. அவர்களுடைய முரட்டுப் பேச்சுக்குச் சிறிதும் தணிந்து கொடுக்காமல் இளங்குமரனும் எடுத்தெறிந்து பேசுவதைக் கண்டபோது முல்லைக்கு இன்னும் பயமாக இருந்தது.

'புறப்படும்போது தந்தையார் எச்சரிக்கை செய்தது எவ்வளவு பொருத்தமாக முடிந்துவிட்டது. இவரைக் கூட்டிக்கொண்டு வந்தால் இப்படி ஏதாவது நேருமென்று நினைத்துத்தானே தந்தை அப்படிக்கூறினார்' என்று நினைத்துப் பார்த்தது அவள் பேதை மனம்.

வரைந்து கொண்டிருந்த ஓவியத் திரைச்சீலையை மெல்ல சுருட்டிக் கொண்டு பயந்தாங்கொள்ளியாக ஒதுங்கியிருந்த ஓவியன் மணிமார்பன் 'கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போகுமோ' என்பது போல நம்பிக்கை இழந்து நின்றான்.

'இந்த முரட்டு மனிதரின் பிடிவாதத்தை இளக்கி ஒரு விதமாகப் படம் எழுதிக்கொள்ளச் சம்மதம் பெற்றேன். நூறு பொற் கழஞ்சுகளை அந்தப் பெண்ணிடம் பெற்று விடலாம் என்று ஆசையோடு ஓவியத்தை வரைந்து நிறைவேற்றப் போகிற சமயம் பார்த்து இப்படி வம்பு வந்து சேர்ந்ததே' என்று நினைத்துத் தளர்ந்து கொண்டிருந்தான் மணிமார்பன். தனக்கு எட்டி குமரன் வீட்டு நங்கையிடமிருந்து கிடைக்கவிருக்கும் பெரிய பரிசை அவ்வளவு எளிதாக இழந்துவிட விரும்பவில்லை அந்த ஏழை ஓவியன். 'இந்த மாபெரும் கோநகரத்தில் எனக்கு எதிரிகளும் வேண்டாதவர்களும் நிறையப் பேர் இருக்கிறாரகள்' என்று தன்னால் ஓவியமாக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் அதற்குச் சிறிது நேரத்துக்கு முன் தன்னிடம் கூறியிருந்த வார்த்தைகளை மீண்டும் நினைத்துப் பார்த்தான் மணிமார்பன். அவரைக் காப்பாற்றவும், தனக்குப் பரிசு சிடைக்கும் சந்தர்ப்பம் நழுவிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளவும் ஏற்ற வழியொன்று அந்தக் குழப்பமான சூழ்நிலையில் மணிமார்பனுக்குத் தோன்றியது. பயந்து நிற்கும் இந்தப் பெண்ணோடுதான் அவர் நாளங்காடிக்கு வந்தார். வழிபாடு முடிந்ததும் இந்தப் பெண் அவருக்கும் எனக்கும் எள்ளுருண்டை கொண்டு வந்து கொடுத்தபோதுதான் இந்த வம்பே ஆரம்பமாயிற்று. ஆயினும் இப்போது இந்தச் சூழ்நிலையிலே என்னைப் போலவே இவளும் அவருக்கு ஓர் உதவியும் செய்ய இயலாமல் பயந்தாற்போல் நிற்கிறாள். ஆனால் அவருடைய ஓவியத்தை வரைந்துகொண்டு வந்து தந்தால் நூறு கழஞ்சு பொன் தருகிறேன் என்று சொன்னாலே, அந்தப் பேரழகியால் இப்போது அவரைக் காப்பாற்ற முடியும். பல்லக்குச் சுமக்கிறவர்களும் படையற் பொருள்களைச் சுமக்கிறவர்களுமாக அவளோடு நிறைய ஏவலாட்கள் வந்திருக்கிறார்கள். அவளிடம் சொல்லி அந்த ஏவலாட்களில் பத்துப் பன்னிரண்டு பேரை அழைத்து வந்தால் இங்கே நம் மனிதரை எதிர்க்கும் முரட்டு யவனர்களை ஒட ஓட விரட்டாலாமே?" என்று மனத்தில் ஓர் உபாயம் தோன்றியது அந்த ஓவியனுக்கு.

உடனே அந்த உபாயத்தைச் செயலாக்கும் நோக்குடன் கூட்டத்தை மெல்ல விலக்கிக்கொண்டு எட்டி குமரன் வீட்டுப் பேரழகியைத் தேடி விரைந்தான் அவன். அப்படி விரைந்து புறப்படுமுன் இளங்குமரனுடன் நாளங்காடிக்கு வந்திருந்த அந்தப் பெண்ணையும் உடனழைத்துச் செல்லலாம் என்று எண்ணி அவள் நின்ற இடத்தைப் பார்த்தான் மணிமார்பன். அவளைக் கூட்டத்தின் முன்புறம் காணவில்லை. கணத்துக்குக் கணம் நெருங்கிக் கொண்டு பெருகிய கூட்டம் அவளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதோ என்னவோ? தானே எட்டி குமரன் வீட்டுப் பேரழகியைக் காணப்புறப்பட வேண்டியது தான் என்ற முடிவுடன் புறப்பட்டான் ஓவியன். அவள் தன் வேண்டுகோளுக்கு இணங்கித் தன் ஆட்களை உதவிக்கு அனுப்புவாள் என்றே உறுதியாக நம்பினான் அவன். அவனுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவன் ஓவியம் கொண்டு வந்து தரப்போவதை எதிர்பார்த்துத் தன் ஏவலர்கள் புடைசூழப் பல்லக்கில் காத்திருந்தாள் அவள். ஓவியன் பதற்றத்துடனே அவசரமாக வந்து கூறிய செய்தியைக் கேட்ட போது அவளது அழகிய முகம் கோபத்தால் மேலும் சிவந்தது. உடனே ஏவலாட்களை அந்த இடத்துக்கு விரைந்து போய் அவருக்கு உதவச்சொன்னதோடு அல்லாமல் தன்னுடைய பல்லக்கையும் அந்த இடத்துக்குக் கொண்டு போகும்படி கட்டளையிட்டாள் அவள். தன் நினைவு பலித்தது என்ற பெருமிதத்துடன் உதவிக்கு வந்த ஏவலாட்களை அழைத்துக்கொண்டு வேகமாக முன்னேறினான் மணிமார்பன். இதற்கிடையில் அந்த ஓவியனுக்கு இன்னொரு சந்தேகம் ஏற்பட்டது, 'அந்த மனிதர் பிடிவாதக்காரர் ஆயிற்றே; 'பிறருடைய உதவி எனக்குத் தேவையில்லை' என்று முரண்டு பிடித்து மறுப்பாரோ’ என மணிமார்பன் சந்தேகமுற்றான்.

ஆனால் சிறிது பொறுத்துப் பார்த்தபோது தான் நினைத்திராத பேராச்சரியங்கள் எல்லாம் அங்கே நிகழ்வதை மணிமார்பன் கண்டான். செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் எவ்வளவு மதிப்பு உண்டு என்பது அன்று அங்கே அவனுக்குத் தெரிந்தது. அந்த எழிலரசியின் பல்லக்கு வந்து நின்றதைப் பார்த்ததுமே தாக்குவதற்கு வந்திருந்த யனவர்களில் மூவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள். அவள் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி வருவதைக் கண்ணுற்றதுமே இளங்குமரனைச் சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்த மற்ற நான்கு யவனர்களும் தாக்குவதை நிறுத்திவிட்டு அவளை நோக்கி பயபக்தியோடு ஓடி வந்தார்கள். வணங்கிவிட்டு அவளுக்கு முன் கைகட்டி வாய் பொத்தி நின்றார்கள்.

"அடடா இந்தத் தடியர்கள்தானா?" என்று ஓவியன் மணிமார்பனை நோக்கிக் கேட்டுவிட்டு அலட்சியமாகச் சிரித்தாள் அந்தப் பேரழகி. ஒரு கையை இடுப்பில் ஊன்றிக் கொண்டு வனப்பாக அவள் வந்து நின்ற நிலையும் தன்னைத் தாக்கிய முரடர்கள் அவளைப் பணிந்து நிற்பதும் கண்டபோது இளங்குமரனுக்கு முதலில் திகைப்பும் பின்பு எரிச்சலும் உண்டாயிற்று. 'ஒருவேளை அவளே அவர்களை ஏவித் தன்னைத் தாக்கச் சொல்லியிருக்கலாமோ' என்று ஒருகணம் விபரீதமானதொரு சந்தேகம் இளங்குமரனுக்கு ஏற்பட்டது. நிகழ்ந்தவற்றைக் கூட்டி நிதானமாக சிந்தித்துப் பார்த்த போது 'அவள் அப்படிச் செய்திருக்க முடியாது. முதல்நாள் மாலை கடற்கரையில் நடந்த மற்போரில் தன்னிடம் தோற்று அவமானமடைந்த யவன மல்லந்தான் தன்னை இப்படித் தாக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்' என்று தோன்றியது அவனுக்கு.

இளங்குமரனுக்குக் கேட்கவெண்டுமென்றே பேசுகிறவள் போல் இரைந்த குரலில் மணிமார்பனைப் பார்த்துக் கூறலானாள் அவள்: "ஓவியரே! நான் இங்கே வந்து நின்றதுமே இந்த ஆச்சரியங்கள் நிகழ்வதைப் பார்த்து எனக்கு ஏதேனும் மந்திரசக்தி உண்டோ என்று வியப்படையாதீர்கள். காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலிருந்து யவனம் முதலிய மேற்குத் திசை நாடுகளுக்குச் செல்லும் பெரிய பெரிய கப்பல்கள் எல்லாம் என் தந்தையாருக்குச் சொந்தமானவை. பட்டினப் பாக்கத்தில் எங்கள் மாளிகைக்கு முன்புறம் நடந்துபோகும் போதுகூட இந்த யவனர்களில் பலர் செருப்பணிந்த கால்களோடு செல்வதற்குக் கூசுவார்கள். எங்கள் குடும்பம் என்றால் இவர்களுக்கு மதிப்புக்குரிய தெய்வ நிலையம் போல் பணிவும் அன்பும் உண்டாகும். நான் சுட்டு விரலை அசைத்தால் அதன்படி ஆடுவார்கள் இந்த தடியர்கள். நீங்கள் அவருடைய ஓவியத்தை எங்கள் மாளிகையில் வந்து வரையலாம். அவரைத் தாக்க வந்த இதே ஆட்களை உங்களையும் அவரையும் பல்லக்கில் வைத்து எங்கள் மாளிகைவரை தோள் வலிக்க சுமந்துவரச் செய்கிறேன், பார்க்கிறீர்களா?" என்று ஓவியனிடம் கர்வமாகக் கூறிவிட்டு அந்த யவனர்களை இன்னும் அருகில் அழைத்து ஏதோ கட்டளையிட்டாள் அவள்.

உடனே அவர்கள் ஓடிப்போய் எங்கிருந்தோ இன்னொரு பல்லக்கைக் கொண்டு வந்து வைத்தார்கள். "நீங்களும் உங்கள் நண்பரும் ஏறிக் கொள்ளலாம்" என்று சிரித்துக்கொண்டே பல்லக்கைச் சுட்டிக் காட்டினாள் அவள். முதல்நாள் மாலை கடற்கரையில் மணிமாலை பரிசளிக்க வந்ததிலிருந்து தொடர்ந்து தன் வாழ்வில் குறுக்கிடும் அந்த அழகியைச் சற்றே வெறுப்போடு பார்த்தான் இளங்குமரன். அவள் வந்து நின்றதும் சுற்றியிருந்தவர்கள் பரபரப்படைந்து பேசிக் கொண்டதிலிருந்து அவளுடைய பெயர் 'சுரமஞ்சரி' என்பதை அவன் தெரிந்து கொண்டிருந்தான். அவ்வளவு பெரியகூட்டத்தில் தன்னுடைய ஆற்றலால் தான் எதிரிகளை வெல்ல முடியாத போது அவளே வந்து அபயமளித்துக் காத்ததுபோல் மற்றவர்கள் நினைக்க இடம் கொடுத்தது அவனுக்கு வருத்தமாக இருந்தது. தான் பெருமையடித்துக் கொண்ட மாபெரும் தன்மானம் அந்த நாளங்காடி நாற்சந்தியில் அவளால் சூறையாடப்பட்டதை அவன் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தான்.

ஆத்திரம் தீர அந்தப் பெண்ணை அலட்சியமாகப் பேசி விட்டுப் பக்கத்திலிருக்கும் ஓவியன் கையிலுள்ள அரைகுறை ஓவியத்தையும் கிழித்தெறிந்து விடவேண்டும் போல் இளங்குமரனுக்குச் சினம் மூண்டது. ஆனால் அந்த ஏழை ஓவியனுக்கு நூறு பொற் கழஞ்சுகள் கிடைக்கச் செய்வதாகத் தான் வாக்களித்திருந்ததை நினைத்துத் தன் சினத்தை அவன் அடக்கிக்கொள்ளவேண்டியதாயிற்று. எனவே பொறுமையாக ஓவியனோடு பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான் அவன். அவளுடைய பல்லக்கைத் தொடர்ந்து அவன் பல்லக்கும் பட்டினப் பாக்கத்துக்குள் இருக்கும் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரின் மாளிகைக்கு விரைந்தது.

ஆனால் அப்படிப் பல்லக்கில் ஏறிப் புறப்படுமுன் முக்கியமான செயல் ஒன்றை அவன் நினைவுகூரவே இல்லை. திடீரென்று அங்கு நடந்த குழப்பங்களால் தான் முல்லையை உடனழைத்து வந்ததையே இளங்குமரன் மறந்து போயிருந்தான்.
------------

முதல் பருவம். 1.9. முறுவல் மறைந்த முகம்

நாளங்காடி பூத சதுக்கத்தில் இளங்குமரனுக்கும் அவனைத் தாக்க வந்தவர்களுக்கும் போர் நடந்தபோது பெருகிவந்த கூட்டத்தினால் நெருக்குண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த முல்லை, கூட்டம் கலைந்ததும் அருகில் வந்து பார்த்தாள். இளங்குமரனுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று பதறித் துடித்துக் கொண்டிருநதது அவள் மனம். ஓவியன் ஓடிப்போய் இளங்குமரனுக்கு உதவும் நோக்கத்துடன் யாரோ ஆட்களை அழைத்து வந்ததும் பல்லக்குகள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உட்புகுந்ததும் அவளுக்குத் தெரியாது. அதனால் அதன் பின் என்ன நிகழ்ந்ததென்பதை அவள் தெரிந்துகொள்ள முடியாமல் கூட்டத்தினர் அவளைப் பின்புறம் தள்ளி விலக்கியிருந்தனர்.

கூட்டம் ஒருவாறு கலையத் தொடங்கியபோது தான் முன்னுக்குப் போய் அவர்களுக்குள் தாக்குதல் நடந்த பகுதியில் இளங்குமரனைக் காணலாமென்றதவிப்பு அவளுக்கு உண்டயிற்று. ஆனால் உரிய இடத்துக்கு வேகமாகச் சென்று பார்த்தபோது தன் தவிப்புக்கும் ஆவலுக்கும் பயன் இல்லை என்று அவள் தெரிந்து கொண்டாள்.

அங்கே இளங்குமரனைக் காணவில்லை. அவனைப் படம் வரைந்து கொண்டிருந்த ஓவியனையும் காணவில்லை. 'அதற்குள் எங்கே போயிருப்பார்கள் இவர்கள்?' என்ற திகைப்புடன் அவள் நின்றபோது அந்த இடத்திலிருந்து பல்லக்குகள் இரண்டு புறப்படுவதைக் கண்டாள். பல்லக்குகளைச் சுற்றி வெண்சாமரங்கள், பட்டுக்குடைகள், ஆலவட்டங்கள், மயிற்கண் பீலி பதித்த தோரணம் இவற்றைத் தாங்கிய ஏவலாட்கள் பணிவாக நின்று கொண்டிருந்தனர். முதற் பல்லக்கைப் பின்தொடர்கிறாற்போல் சென்ற இரண்டாவது பல்லக்கைக் கண்டதும் முல்லைக்கு வியப்பு ஏற்பட்டது. அந்தப் பல்லக்கைச் சுமந்து கொண்டிருந்தவர்கள்தாம் சற்றுமுன் இளங்குமரனோடு சண்டைக்கு வந்த யவனர்கள் என்பதை மிக எளிதாக அடையாளம் கண்டுகொண்டாள் அவள். அதைப் பார்த்ததும் முதலில் அவள் மனம் வீணாக பயங்கரங்களை நினைத்தது. 'இளங்குமரனை அடித்துத் தாக்கி இந்தப் பல்லக்கில் தூக்கிப் போட்டுக் கொண்டு இவர்கள் போகிறார்களோ' என்று நினைத்து மனம் கொதித்தாள் அவள். ஆனால் அப்படி இல்லை என்பது பக்கத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அவளுக்குத் தெரிந்தது. அடுத்த சில விநாடிகளில் பல்லக்கைச் சூழ்ந்திருந்தவர்கள் சிறிது விலகியதால் இளங்குமரனே அதற்குள் உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்துவிட்டாள். ஆனால் இளங்குமரனுடைய பார்வை அவள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை. அவ்வளவில் பல்லக்குகள் விரைந்து செல்லத் தொடங்கியதால் முல்லையின் பார்வையிலிருந்து இளங்குமரன் மறைந்தான். அவளுடைய இதழ்களிலிருந்து முறுவல் மறைந்தது. முகத்திலிருந்து மலர்ச்சி மறைந்தது. நெஞ்சிலிருந்து உற்சாகம் மறைந்தது. எதற்காகவோ இளங்குமரன் மேல் பெரிதாகக் கோவித்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது அவளுக்கு. அதே சமயத்தில் அப்படிக் கோபித்துக்கொள்வது எதற்காக என்றும் அவளாலேயே மனத்தில் காரணகாரியத்தை இணைத்துப் பார்க்க முடியவில்லை.

பல்லக்குகள் வெகுதூரம் முன்னுக்குப் போய்விட்டன். பல்லக்குச் சுமப்பவர்கள் சுமை உறுத்துவது தெரியாமலிருப்பதற்காகப் பாடிக்கொண்டு சென்ற ஒருவகைப் பாடல் ஒலி மெல்ல மெல்லக் குரல் நைந்து அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுதே நாளங்காடியின் இந்திரவிழா ஆரவாரங்களும் அழகும் திடீரென்று இருந்தாற் போலிருந்து குறைபட்டுப் போனது போலிருந்தது முல்லைக்கு. 'இளங்குமரனின் ஓவியத்தை வரைந்து கொள்வதற்காக எட்டி குமரன் வீட்டுப் பேரழகி சுரமஞ்சரி இளங்குமரனையும் ஓவியனையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றிப் பல்லக்கில் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறாளாம்’ என்று பக்கத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் தன்னிடம் கூறிய செய்தியைச் செவிகள் வழியே வாங்கி நெஞ்சில் ஏற்றுக்கொண்டு தாங்குவதற்கு வேதனையாயிருந்தது அவளுக்கு.

வீட்டிலிருந்து புறப்படும்போது 'இந்தப் பிள்ளையாண்டானைத் துணைக்குக் கூப்பிடுகிறாயே முல்லை! இவன் ஊர் சுற்றும் முரடனாயிற்றே! இல்லாத வம்புகளையெல்லாம் இழுத்துக் கொண்டு வருவானே!' என்பதைத் தந்தையார் எவ்வளவு குறிப்பாகச் சொன்னார். நான் அப்போதே தந்தையார் சொல்லிய குறிப்பைப் புரிந்து கொள்ளாமல் போனேனே! இந்த நாளங்காடி நாற்சந்தியில் திருவிழாக் கூட்டத்தில் நான் ஒருத்தி கூட வந்திருப்பது நினைவில்லாமல் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டாவது போகவேண்டுமே என்றும் எண்ணாமல் யாரோ ஒருத்தி கூப்பிட்டாளென்று பல்லக்கில் ஏறிக்கொண்டு போயிருக்கிறாரே! எவ்வளவு இறுகிப் போயிருக்க வேண்டும் இவர் மனம்?' என்று நினைந்து வருந்தினாள் முல்லை. இளங்குமரன் என்னும் எழில் வெள்ளம் தனக்கே சொந்தம்போல் தன்னோடு பாய்ந்து வந்த ஒரே காரணத்தால் நாளங்காடிக்கு வருகிறபோது கர்வப்பட்டுக் கொண்டிருந்தாள் முல்லை. இப்போது அந்த கர்வத்தை அவள் படுவதற்கில்லை. படவும் முடியாது. அவளுக்குக் கிடைத்த அந்த கர்வத்தில் பெருமையடையும் உரிமைக்குப் போட்டியிடப் பெருநிதிச் செல்வர் வீட்டுப் பெண்ணொருத்தியும் வந்து விட்டாள் போலும்! இளங்குமரனின் முகமும், கண்களும், தோற்றமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தவை. அவன் எவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாலும், எவரோடு பேசிக் கொண்டிருந்தாலும், எவரோடு நடந்து கொண்டிருந்தாலும் அப்படி நிற்கப் பெற்றவர்களுக்கும், பேசப்பெற்றவருக்கும், நடக்கப் பெற்றவர்க்கும் தான் உடனிருக்கிறோம் என்பதையே ஒரு பெருமையாக நினைத்து மகிழும் கர்வத்தை அளிக்கும் பேரெழில் தோற்றம் இளங்குமரனுக்கு இருந்தது. அதனாலேயே காவிரிப்பூம்பட்டினத்தில் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அதனாலேயே நண்பர்களைக் காட்டிலும் நிறைய விரோதிகளும் இருந்தார்கள். ஒரு மனிதனுடைய இணையற்ற அழகு இந்த இரண்டையுமே விளைவித்துக் கொண்டிருந்தது. இதைத் தவிரத் தானே தெரிந்துகொள்ள முடியாத பல காரணங்களாலும் தன்னை அழித்துவிடத் துடிக்கும் எதிரிகளும் இருக்கிறார்கள் என்பதை முன்னாள் இரவு சம்பாபதி வனத்தில் நடந்தவற்றால் அவன் தெரிந்து கொள்ள முடிந்திருந்தது. தன்னுடைய வாழ்க்கை சில சமயங்களில் தனக்கே பெரும்புதிராக இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.

காலைப்போது தளர்ந்து பகல் வளர்ந்துகொண்டிருந்தது. தனக்குப் புதியதும் அடர்த்தி நிறைந்ததுமான காட்டுப் பகுதிக்கு வழி தப்பி வந்துவிட்ட மான்குட்டியைப்போல் நாளங்காடிக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தாள் முல்லை. துணைக்குத் தன்னோடு வந்தவன் இன்னொருத்தியோடு துணையாகப் போய் விட்டான் என்பதை நினைக்கும் போது அவளுக்கு ஏக்கமும் ஆற்றாமையும் இணைந்து உண்டாயின. புறவீதியையும் அதனோடு சார்ந்த புறநகரப் பகுதிகளையும் தவிரப் பட்டினப்பாக்கம், நாளங்காடி போன்ற கலகப்புமிக்க அந்நகர்ப் பகுதிகளுக்கு அவள் துணயின்றித் தனியாக வருவதற்கு நேர்ந்ததில்லை. தந்தையோ தமையனோ துணையாக வரும்போதுதான் பூம்புகாரின் ஆரவார மயமான அகநகர்ப்பகுதிகளுக்குள் அவள் வந்து போயிருக்கிறாள். சாதாரண நாட்களிலேயே கூட்டத்துக்குக் குறைவிருக்காது. தனியாக வந்தால் வழி மயங்குவதற்கும், வழி தவறுவதற்கும், வேறு தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுமோ என்று அஞ்ச வேண்டிய அகநகரிலும் நாளங்காடியிலும் கோலாகலமாக இந்திர விழாக் காலத்தில் கேட்கவா வேண்டும்? முல்லை சோர்ந்த விழிகளால் நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தாள்.

கண்ணுக்கெட்டியதூரம் கடைகளும் மக்கள் நெருங்கிய கூட்டமும், பாட்டும், கூத்தும், யானைகள், குதிரைகள், தேர்கள், சிவிகைகள் போன்ற ஊர்திகளும், அவற்றின் தோற்றம் முடிகிற இடத்தில் ஆரம்பமாகும் நெடுமரச் சோலைகளும் பரந்து விரிந்து தோன்றின. செவிகளிற் கலக்கும் விதவிதமான ஒலிகள். செவிகளைக் கலக்கும் வேறு வேறு பேச்சுக் குரல்கள். கண்ணிற் கலக்கும் பலவிதக் காட்சிகள். கண்ணைக் கலக்கும் அளவிலடங்காத காட்சிக் குவியல்கள். எதையும் தனியாகப் பிரித்துக் காணமுடியாத காட்சி வெள்ளம்! எதையும் தனியாகப் பிரித்த உணர முடியாத ஒலிவெள்ளம்! எதையும் தனியாகப் பிரித்து உணர முடியாத பரபரப்பான நிலை!

தனக்கு எதிர்ப்பக்கத்தே அருகிலிருந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த யானைகளுக்குக் கரும்பு ஒடித்துக் கொடுக்கும் பாகர்களைப் பார்த்தாள் முல்லை. துதிக்கையை நீட்டிப் பாகர்களிடமிருந்து கரும்புக் கழிகளை வாங்கி வாய்க்குக் கொண்டுபோய் அரைத்துச் சாறு பருகும் அந்தப் பெரிய பெரிய யானைகளை வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்தாள் அவள். அவளுக்கு அந்தக் காட்சியைத் தன் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு நாளங்காடிக்கு வருகிறபோது கரும்பின் இனிய சாற்றைப் பருகுவது போல நெஞ்சில் மெல்லிய நினனவுகளைச் சுவைத்துக் கொண்டுவந்தாள் அவள். இப்போதோ சுவைத்து முடித்த பின் எஞ்சும் சக்கையைப் போல் சாரமற்ற நினைவுகள் அவள் மனத்தில் எழுகின்றன. யானைவாய்க் கரும்புபோல தனது இனிய நினைவுகளுக்குக் காரணமானதை எட்டி குமரன் வீட்டு நங்கை கொள்ளை கொண்டு செல்வதை அவள் உணர்ந்தாள்.

பார்வைக்கு இலக்கு ஏதுமின்றிப் பராக்குப் பார்ப்பது போல நாளங்காடியின் ஒருபுறத்தில் நின்று நோக்கிக் கொண்டிருந்த முல்லைக்கு முன்னால் குதிரைகள் வந்து நின்றன. அவளண்ணன் கதக்கண்ணனும் அவனோடு வந்த மற்றவர்களும் தத்தம் குதிரைகள் மேலிருந்து கீழே இறங்கினார்கள்.

"முல்லை! இதென்ன? இப்படிப் பராக்குப் பார்த்துக் கொண்டு இங்கே நிற்கிறாய்! உன்னோடு துணைக்கு வந்த இளங்குமரன் எங்கே போனான்? படையல் வழிபாடு எல்லாம் முடிந்ததோ இல்லையோ?" என்று ஆவலுடனும் அவசரமாகவும் விசாரித்துக் கொண்டே முல்லைக்கு அருகே வந்து நின்றான் கதக்கண்ணன். அவனுடன் குதிரைகளில் வந்த மற்றவர்களும் அடக்க ஒடுக்கமாகப் பக்கத்தில் நின்றார்கள்.

அந்த நேரத்தில் தன் அண்ணனை அங்கே கண்ட பின்பும் முல்லையின் முகத்தில் மலர்ச்சி பிறக்கவில்லை. இதழ்களில் நகை பிறக்கவில்லை. நாவிலிருந்து 'வாருங்கள் அண்ணா' என்பது போலத் தமையனை வரவேற்கும் மகிழ்ச்சி தழுவிய வார்த்தைகளும் பிறக்கவில்லை.

மறுபடியும் அவள் தமையன் அவளைக் கேட்கலானான்:

"இளங்குமரன் எங்கே முல்லை? உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு ஊர் சுற்றப் போய் விட்டானா?"

"நான் அவரை எனக்குத் துணையாகக் கூட்டிக் கொண்டு வந்ததே தப்பு அண்ணா! புறப்படும் போது அவரைக் கூட்டிக் கொண்டு போக வேண்டாமென்று அப்பா சொன்னார். நான் அதையும் மீறி அவரைக் கூட்டிக்கொண்டு வந்ததற்கு எனக்கு நன்றாகப் பாடம் கற்பித்துவிட்டார். அவர் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார் அண்ணா!"

"என்ன நடந்தது முல்லை? நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல். நாங்கள் மிக அவசரமான முக்கிய காரியத்துக்காக இளங்குமரனைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறோம். உடனே அவனைப் பார்க்க வேண்டும். இந்தச் சமயத்தில் பார்த்து நீயும் அவன்மேல் உன்னுடைய கோபதாபங்களைக் காட்டிக் கொண்டிருந்தால் என்ன செய்வது?"

இப்படித் தன்னை நோக்கிக் கூறிய தமையன் கத்க்கண்ணனின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள் முல்லை.

வீரக்களை சுடர் பரப்பும் அந்த முகத்திலும், கண்களிலும், பார்வையிலும், பேச்சிலும் 'அவசரம் அவசரம்' என்று தவித்துப் பறக்கும் ஓருணர்வு முந்திக்கொண்டு நின்றது.
-----------

முதல் பருவம். 1.10. பெருமாளிகை நிகழ்ச்சிகள்

இன்பங்களும், வசதிகளும், கோநகரப் பெருவாழ்வின் சுகபோகங்களும் ஒன்றுகூடி நிறைவு பெற்ற பட்டினப்பாக்கத்து வீதிகளின் வழியே இளங்குமரன் அமர்ந்திருந்த ப்ல்லக்கைச் சுமந்து சென்றார்கள். கரையகன்ற ஆறுபோல் வழியகன்ற பெரு வீதிகளின் இருபுறமும் உயர்ந்த மாடங்களோடு கூடிய மாளிகைகள் தோன்றின. பொதிய மலைக்கும் இமயமலைக்கும், பழைமையான பூம்புகார் நகரத்துக்கும் அடுக்கடுக்காக வளங்கள் பெருகுவ தல்லது ஒடுக்கமோ நடுக்கமோ நிகழ்வதில்லை என்று சான்றோர்கள் புகழ்ந்து பாடியிருப்பதை உறுதிப்படுத்துவது போல் காட்சியளித்தன பட்டினப்பாக்கம் என்னும் அகநகரத்து அழகுகள். போகங்கள் பெருகிப் புகழ் நிலைபெறும் பூம்புகாரின் வளங்களெல்லாம் சேர்ந்து திகழும் செல்வம் மலிந்த பாக்கம் இது. திருமகள் விரும்பி உறையும் பொன்னான பகுதியும் இதுதான்.

அரசி, அமைச்சர்கள், ஐம்பெருங்குழுவினர், எண்பேராயத்தார் அளவிலடங்காத செல்வம் படைத்த வணிகர்கள், மறையோர்கள் முதலியோரெல்லாம் இந்தப் பட்டினப்பாக்கத்து வீதிகளில்தான் வசித்து வந்தார்கள். பெரு நிலக்கிழாராகிய வேளாளர்கள், மருத்துவர்கள், சோதிடர்கள் போன்றோரும் பட்டினப்பாக்கத்து வாசிகளேயாவர். பெருவீதிகளின் திருப்பங்களில் எல்லாம் வண்ண வண்ணக் கொடிகள் பறக்கும். தேர்கள் அங்கங்கே அழகுற அலங்கரிக்கப் பெற்று நின்றன. தங்கள் இல்லங்களில் நிகழவிருக்கும் மண விழாக்களுக்கோ, வேறு பல மங்கல நிகழ்ச்சிகளுக்கோ பிறரை அழைக்கச் செல்லும் பெருஞ் செல்வ நங்கையர்கள் யானைகள் மேல் அம்பாரிகளில் அமர்ந்து மணிகள் ஒலிக்குமாறு சென்று கொண்டிருந்தனர். வீரர்களும், வேறு பலரும் அலங்கரிக்கப் பெற்ற குதிரகளில் ஏறி வீதிகள் நிறையச் சென்று கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். எல்லா இடங்களிலும் அகன்றும், ஒரே அளவாயும் இருந்த வீதிகளில் விண்தொட நிமிர்ந்த வியன்பெரு மாளிகைகளின் மேல் மாடங்களிலிருந்து கிளிகளும், மணிப் புறாக்களும் பறந்து செல்வதும், வந்து அமர்வதுமாகக் காட்சியளித்தன. பட்டினப்பாக்கத்து வீதிகளுக்கு இயற்கையாகவே பொருந்தியிருந்த இந்த அழகுகளை இந்திர விழாவும் வந்து சேர்ந்து இருமடங்காக்கியிருந்தது. வீதிகளில் எல்லாம் விழாவுக்காகப் பழைய மணல் மாற்றிப் புதுமணல் பரப்பியிருந்தார்கள். வாழையும் கமுகும் கரும்பும் நாட்டி வஞ்சிக் கொடிகளையும் மற்றும் பல பூங்கொடிகளையும் தோரணமாகக் கட்டியிருந்தார்கள். மங்கல நிறை குடங்களும் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு முன்புறத் தூண்களில் ஒளிக்கதிர் விரித்துக் குளிர் சுடர் பரப்பும் முத்துமாலைச் சரங்களைத் தோரணங்களாகக் கட்டியிருந்தார்கள். சில இடங்களில் சித்திரப் பந்தல்களும் போட்டிருந்தார்கள்.

மாரிக்காலத்தே புதுவெள்ளம் வந்த ஆறுபோல் வீதிகள் நிறைவாகவும், கலகலப்பாகவும் இருந்தன். ஆனால் பல்லக்கில் அமர்ந்திருந்த இளங்குமரன் உள்ளத்தில் இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்கத் தாழ்வுணர்ச்சிதான் அதிகமாயிற்று. அவனுக்கு எதிரே வீற்றிருந்த ஓவியனோ அரும்பெரும் புதையலைக் கண்டெடுத்த ஏழைபோல் பல்லக்குக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்து மகிழும் தாகத்தோடு வீதிகளை கவனித்துக் கொண்டிருந்தான். முன்னால் சுரமஞ்சரி என்னும் அந்தப் பெண்ணின் பல்லக்கும் அதைத் தொடர்ந்து இரண்டாவதாக இளங்குமரனும் ஓவியனும் இருந்த பல்லக்குமாகச் சென்று கொண்டிருந்தன. இரண்டு பல்லக்குகளின் முன்புறமும் ஆலவட்டம், சித்திரப் ப்ட்டுக் குடை, தோரணம் முதலிய சிறப்புப் பரிவாரங்கள் சென்றதனால் இவர்கள் வீதியையும் வீடுகளையும் பார்த்தது போக, வீதியிலும் வீடுகளிலுமிருந்து இவர்களைப் பலர் வியப்போடு பார்த்தனர். அரச குடும்பத்துக்கு ஒப்பான பெருஞ் செல்வக் குடியினர் யாரோ பல்லக்கில் போகிறார்கள் போலும் என்ற வியப்பு அவர்களுக்கு.

பல்லக்கில் போகும்போது இளங்குமரனும், ஓவியன் மணிமார்பனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கு அதிகமாக வாய்ப்பு நேரவில்லை. நாளங்காடியிலிருந்து புறப்பட்டுச் சிறிது தொலைவு வந்ததும், "பூதசதுக்கத்தில் படையலிட்ட பின் உங்களுக்கும் எனக்கும் எள்ளுருண்டை கொண்டுவந்து கொடுத்தாளே, அந்தப் பெண் யார் ஐயா?" - ஓவியன் தற்செயலாகக் கேள்வியெழுப்பின போதுதான் இளங்குமரனுக்கு முல்லையின் நினைவு வந்தது. அதுவரை முல்லைக்குத் துணையாகவே தான் அங்கு வந்திருந்தோம் என்ற நினைவு அவனுக்கு இல்லை. அவன் அதை முற்றிலும் மறந்தே போயிருந்தான்.

'ஆகா! என்ன தவறு செய்துவிட்டேன்! முல்லை உடன் வந்தது எனக்கு எப்படி மறந்து போயிற்று? புறப்படும் போதே அந்தக் கிழவர் வீரசோழிய வளநாடுடையார் என்மேல் சந்தேகப்பட்டது சரிதான் என்பது போலல்லவா நடந்துகொண்டு விட்டேன்! முல்லை யார் துணையோடு இனிமேல் வீட்டுக்குப் போவாள்? நாளங்காடிச் சந்தியில் தனியாக நின்று திண்டாடப் போகிறாளே' என்று எண்ணி இளங்குமரன் தன்னை நொந்து கொண்டாலும், அவனால் உடனடியாகப் பல்லக்கிலிருந்து இறங்கி நாளங்காடிக்கு ஓடிப்போய்விடத் துணிய முடியவில்லை. எதிரே உட்கார்ந்திருக்கும் ஓவியனுக்கு வாக்களித்த உதவியைச் செய்யாமல் இறங்கிப் போவது பாவம் என்று எண்ணினான் அவன். 'முல்லை எப்படியாவது தானாகவே வீட்டுக்குப் போய் விடுவாள்' என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேரொன்றும் செய்ய அப்போது அவனுக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்த மனக் குழப்பத்தால் 'முல்லை யார்?' என்று ஓவியன் கேட்ட கேள்விக்கு பதிலும் கூறவில்லை அவன். அந்த நிலையிலும் மேலும் தூண்டித் தூண்டிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் இளங்குமரனுக்குக் கோபம் உண்டாகுமோ என்று பயந்து தான் கேட்ட கேள்விக்கு அவனிடமிருந்து பதில் வராமலிருந்தும் மேலே ஒன்றும் கேளாமல் மௌனமாக இருந்து விட்டான் மணிமார்பன்.

இதன் பின்பு இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் பட்டினப்பாக்கத்து வீதிகளைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். பட்டினப்பாக்கத்தின் சிறப்பான வீதி ஒன்றில் புகுந்து அதன் தொடக்கத்தில் வானளாவிக் காட்சியளித்த ஏழடுக்கு மாளிகையின் பிரதான வாயிலில் நுழைந்து, பல்லக்குகளும் பரிவாரங்களும் நின்றன. சுரமஞ்சரியின் தோழி வசந்த மாலை மாளிகைக்குள்ளே போய் இரண்டு இரத்தினக் கம்பள விரிப்புக்களை எடுத்துக்கொண்டு ஓடோடி வந்தாள். மிக நீளமான அந்த விரிப்புக்களைப் பல்லக்குகள் நின்ற இடத்திலிருந்து மாளிகையின் உட்புறத்துக்கு ஏறிச் செல்லும் முதற்படிக்கட்டுவரை நடைபாவாடையாக இழுத்து விரித்தாள் வசந்தமாலை. அந்தப் பெருமாளிகையின் நடைமுறைகளும், உபசார வழக்குகளும் இளங்குமரனையும் ஓவியனையும் வியப்படையச் செய்தன. இரத்தினக் கம்பள விரிப்புகளில் கால் வைத்து நடப்பதற்கு வசதியாகப் பல்லக்குகள் இறக்கி வைக்கப்பட்டன. இளங்குமரனும் ஓவியனும் அந்த விரிப்பின் அழகையும் மென்மையையும் பார்த்து அதில் கால் வைத்து இறங்கலாமா கூடாதா என்று கூச்சத்தோடு பல்லக்கிலேயே இருந்து விட்டனர். அந்த மாளிகையைக் கண்டதும் தாழ்வு மனப்பான்மையும் அதனோடு தோன்றும் ஆற்றாமையின் சினமும் இளங்குமரனுக்கு உண்டாயிற்று.

தன் அன்ன மென்னடைக்குப் பொன் அனைய கால் சிலம்பு தாளமிடப் பூங்கரத்து வளைகளெல்லாம் ஒலி பொங்கச் சுரமஞ்சரி பல்லக்கினுள்ளேயிருந்து இறங்கி விரிப்பின் மேல் கால் வைத்து நடந்தாள். நடந்து வரும் போதே பிறழ்ந்து பிறழ்ந்து சுழலும் கொண்டை மீன் விழிகளால் இளங்குமரனும் ஓவியனும் இன்னும் பல்லக்கிலுள்ளேயே தங்கி வீற்றிருப்பதை அவள் பார்த்துக் கொண்டாள்.

"வசந்தமாலை! அவர்கள் இன்னும் பல்லக்கிலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், பார். நீ போய் இறக்கி அழைத்துக் கொண்டு வா" என்று தோழியை நோக்கிக் கட்டளை பிறந்தது.

வசந்தமாலை அவர்கள் பல்லக்கின் அருகில் சென்று விநயமான குரலில் பணிவோடு அழைத்தாள்.

"ஐயா, இறங்கி வாருங்கள். உள்ளே போகலாம்."

இளங்குமரன் இறங்கி வந்தான். ஆனால் வேண்டுமென்றே விரிப்பிலிருந்து விலகித் தரையில் நடந்தான். அவர் அப்படிச் செய்யும்போது தான் மட்டும் விரிப்பில் நடந்து போவது நன்றாயிராது என்று எண்ணி இரண்டாவதாகப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கிய மணிமார்பனும் இளங்குமரனைப் பின்பற்றித் தரையில் நடந்தான்.

இளங்குமரனின் தோற்றத்தையும் கம்பீரமான நடையும் பார்த்தால் பேசுவதற்கு அச்சமும் தயக்கமும் ஏற்பட்டது வசந்தமாலைக்கு. ஆனாலும் அவற்றை நீக்கிக் கொண்டு, "ஐயா, விரிப்பின் மேல் நடந்து வாருங்கள், விரிப்பு உங்களுக்காகத்தான் விரித்திருக்கிறது" என்று மெல்லக் கூறினாள் அவள். எடுத்தெறிந்து பேசுவது போல் இளங்குமரனிடமிருந்து பதில் வந்தது அவளுக்கு, தனக்கே பன்மை மரியாதை கொடுத்துப் பேசினான் அவன்.

"பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும்..."

இளங்குமரனின் இந்த மறுமொழியைக் கேட்டு முன்னால் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்த சுரமஞ்சரி திரும்பினாள், சிரித்தாள், சற்றே நின்று தலையை அழகுறச் சாய்த்து இளங்குமரனைப் பார்த்தாள். அந்த மயக்கும் நகையும் மகிழ்ச்சிப் பார்வையும் இளங்குமரன் முகத்தில் ஒரு மாறுதலையும் விளைவிக்கவில்லை. உடனே தான் வந்த வழியே திரும்பி நடந்து இளங்குமரனுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டு "உங்களை யாருடைய வழியிலும் நாங்கள் அடங்கி நடக்கச் சொல்லவில்லை. எங்கள் வேண்டுகோளை மறுக்காமல் இரத்தினக் கம்பளத்தில் மிதித்து நடந்து வாருங்கள். கால்களுக்கு மென்மையாகப் பூப் போலிருக்கும்!" என்று கூறி முறுவல் பூத்தாள் சுரமஞ்சரி. அவள் சிரிக்கும்போது அவளுடைய மூக்குத்தியின் ஒளி மிகுந்த வைரக் கற்களும் சேர்ந்து சிரிப்பது போலிருந்தது. அப்போது அந்த மூக்குத்தியில் நுண்ணியதோர் அழகும் பிறந்தது.

அவள் அருகில் வந்து தன்னிடம் இவ்வாறு கூறியதும் நடந்து கொண்டிருந்த இளங்குமரன் நின்றான்.

"அம்மணீ! என்னுடைய பாதங்களைப் பற்றி நீங்கள் அதிகக் கவலை கொள்ள வேணடாம். காவிரிப்பூம்பட்டினத்துக் கரடுமுரடான பகுதியெல்லாம் சுற்றிச் சுற்றி வைரம் பாய்ந்த கால்கள் இவை. இந்தக் கால்களுக்கும் இவற்றிற்கு உரியவனின் மனத்துக்கும் எப்போதும் விரிந்த நிலத்தில் விரும்பியபடி நடந்துதான் பழக்கம். முழங்கையகல நடைபாவாடையில் முன்பின் நகரவோ, விலகவோ இடமின்றி நடந்து பழக்கமில்லை! பழக்கப்படுத்திக் கொள்ளவும் இனிமேல் விருப்பமில்லை. அதற்கு அவசியமுமில்லை."

"அழகுக்காகவும் சுகபோக அலங்காரங்களுக்காகவும் சில மென்மையான பழக்கவழக்கங்களை நீங்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்."

"இருக்கலாம்! ஆனால் எனக்குத் தெரியாது. அழகைப் போற்றத்தான் எனக்குத் தெரியும். அழகைக் காலடியில் மிதித்துச் சுகம் காண முயல்வதும் எனக்குப் பிடிக்காது. அழகு நம்மைக் காலடியில் போட்டு மிதித்து அடிமையாக்க முயல்வதற்கும் நான் இடங் கொடுப்பதில்லை, அம்மணீ! அழகையே அடிமையாக்கவும் கூடாது. அழகுக்கே அடிமையாகவும் கூடாது. தேவையா, தேவையில்லையா, அவசியமா, அவசியமில்லையா என்று சிந்தித்துப் பாராமலே பொருத்தமின்றி எத்துணையோ சுகபோக அலங்காரங்களைப் பட்டினப்பாக்கத்துப் பெருஞ்செல்வர்கள் அநுபவிக்கிறார்கள். அவற்றை மதித்து வரவேற்க ஒருபோதும் என் மனம் துணிவதில்லை."

"இந்த மாளிகையைச் சேர்ந்த மதிப்புக்குரியவர்களையும் புதிதாக வருபவர்களையும் வரவேற்பதற்கென்றே இங்கே சில உபசார முறைகள் இருக்கின்றன. அவற்றைப் புறக்கணிக்கலாகாது!"

"உங்கள் உபசாரங்களை ஏற்றுக் கொள்வதற்கு நான் இந்த மாளிகையின் விருந்தினனாக வரவில்லை, அம்மணீ! இதோ என் பக்கத்தில் நிற்கிறானே, இந்த ஏழை ஓவியனுக்கு நூறு பொற் கழஞ்சுகள் கிடைக்க வேண்டுமென்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். ஓவியம் வரைந்து நிறைவேறியதும் நான் போக வேண்டும்."

"அவ்வளவு அவசரமா உங்களுக்கு?"

"அவசரமில்லாத எதுவுமே என் வழ்க்கையில் இருப்பதாகத் தெரியவில்லை அம்மணீ! என் வாழ்க்கையே ஒரு பெரிய அவசரம். என்னைத் தேடிவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவசரம். நான் தேடிக்கொண்டு போகும் செயல்களும் அவசரம். என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு விநாடியும் எனக்கு அவசரம்தான். நானே ஒர் அவசரம்தான். தயைகூர்ந்து விரைவாகப் படத்தை வரைந்து கொண்டு என்னை அனுப்பும்படி செய்தால் நல்லது."

"உங்களிடம் நிதானம் குறைவாயிருக்கிறது. பொறுமை சிறிதுமில்லை. பதற்றம் அதிகமாக இருக்கிறது."

"தெரிந்து சொல்லியதற்கு நன்றி! ஆனால் இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லித் திருத்தத் தகுதிவாய்ந்த பெரியவர்கள் எனக்கு இருக்கிறார்கள். நீங்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் காரியத்தைப் பார்க்கலாம்."

அவளுக்கு இளங்குமரன் சுடச் சுடப் பதில் கூறினான். எத்துணை முறை சிரித்துச் சிரித்துப் பேசினாலும் தன்னைப் பற்றிய நளினமான நினைவுகளை அவன் மனத்தில் பயிர்செய்ய முடியுமென்று தோன்றவில்லை சுரமஞ்சரிக்கு. இளங்குமரன் அழகுச் செல்வனாக இருந்தான். ஆனால் அந்த அழகு நிலத்தில் அவள் இறைக்க முயன்றும் குன்றாமல் அகம்பாவம் ஊறிக்கொண்டிருந்தது. அது வற்றினால் அல்லவா அங்கே அவள் பயிர் செய்யத் துடிக்கும் இனிய உறவுகளைப் பயிர் செய்ய முயலலாம்? சுரமஞ்சரி அவனிடம் தனக்கு ஏற்பட்ட ஆற்றாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "வசந்த மாலை! இவரை வற்புறுத்தாதே. எப்படி விரும்புகிறாரோ அப்படியே நடந்து வரட்டும்" என்று சொல்லி விட்டு வேகமாக முன்னே நடந்தாள். இளங்குமரன் தன் போக்கில், மணிமார்பன் பின் தொடர கம்பீரமாக வீர நடை நடந்து சென்றான். மாளிகையைச் சூழ்ந்திருந்த பூம்பொழிலில் மயில்கள் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தன. புள்ளி மான்கள் துள்ளித் திரிந்து கொண்டிருந்தன. சிறு சிறு பொய்கைகளில் அல்லியும், கமலமும், குவளையும் நிறையப் பூத்திருந்தன. அழகுக்காக மரஞ் செடி கொடி வைத்துச் செயற்கையாகக் கட்டப்பட்டிருந்த செய்குன்றுகள் அங்கங்கே பூம்பொழிலினிடையே இருந்தன. மணிமார்பனோடு பூம்பொழிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த இளங்குமரன், "மணிமார்பா! இங்கேயே ஓரிடத்தில் நான் நின்று கொள்கிறேன். நீ ஒவியத்தை நிறைவு செய்யத் தொடங்கு. நமக்கு மாளிகைக்குள் என்ன வேலை? இங்கே வைத்தே படத்தை முடித்துக் கொடுத்து விட்டுப் புறப்படலாம்" என்றான்.

மணிமார்பனும் அதற்கு இணங்கி நாளங்காடியில் இருந்தது போலவே, இங்கே இந்தச் சோலையிலும் ஒரு கொடி முல்லைப் புதரைத் தேடி அதனருகே இளங்குமரனை நிறுத்தி வரையலானான்.

அவன் வரையத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் சுரமஞ்சரி அங்கு வந்தாள். 'அடடா! செல்வம் இருந்தால் எவ்வளவு வசதியிருக்கிறது. அதற்குள் உடைகளையும் அலங்காரங்களையும் மாற்றிக்கொண்டு புதுமைக் கோலத்தில் காட்சியளிக்கிறாளே' என்று அவளைப் பார்த்ததும் இளங்குமரன் நினைத்தான். 'முல்லைக்கு இப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொள்ள வாய்ப்பிருந்தால் அவள் இன்னும் எவ்வளவு அழகாக இருப்பாள்?' என்றும் கற்பனை செய்து பார்க்க முயன்றது அவன் மனம்.

ஆனால் அடுத்த கணம் சுரமஞ்சரி அவனை நோக்கிக் கேட்ட கேள்வி திடுக்கிட்டுத் தூக்கிவாரிப் போடச் செய்தது. ஓவியனும் திடுக்கிட்டான். இருவரும் அளவற்ற திகைப்பு அடைந்தார்கள். அவள் கேட்டது இதுதான்: "ஐயா! நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்? உங்களை யார் உள்ளே வரவிட்டது? படம் எழுதிக் கொள்ள இவ்வளவு பெரிய பட்டினத்தில் வேறு இடமா கிடைக்கவில்லை?" என்று சினத்தோடு கேட்டாள் அவள்.

'ஒருவேளை அவள் சித்த சுவாதீனமில்லாத பெண்ணோ?' என்று சந்தேகங்கொண்டு இளங்குமரனும் மணிமார்பனும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தனர். முகத்தையும் பேச்சையும் பார்த்தால் அப்படியில்லை என்று உறுதியாகத் தெரிந்தது. வேண்டுமென்றே தன்னைப் பழிவாங்கும் நோக்குடன் வம்பு செய்கிறாளோ என்றெண்ணிக் கொதிப்படைந்த இளங்குமரன், 'செல்வர்களுக்கு உடை மாறினால் குணமும் மாறிவிடுமோ அம்மணீ?' என்று சூடாகக் கேட்க வாய் திறந்தான். ஆனால் அப்போது அவனை அதைக் கேட்க விடாதபடி எதிர்ப் பக்கத்தில் இன்னொரு பெரிய அதிசயம் நிகழ்ந்தது.
--------------

முதல் பருவம். 1.11. அருட்செல்வர் எங்கே!

கதக்கண்ணன் என்ற பெயருக்குச் 'சினம் கொண்டு விரைந்து நோக்கும் ஆண்மையழகு பொருந்திய கண்களையுடையவன்' என்று பொருள். இந்தப் பொருட் பொருத்தத்தையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் வீரசோழிய வளநாடுடையார் தம் புதல்வனுக்கு அப்பெயரைச் சூட்டியிருந்தார் என்று சொல்ல முடியாதாயினும் பெயருக்குப் பொருத்தமாகவே அவன் கண்கள் வாய்த்திருந்தன. தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் துன்பம் நேரும்போது அதைக் களைவதற்கும். அதிலிருந்து காப்பதற்கும் சினந்து விரையும் கதக் கண்ணனின் நெஞ்சுரத்தை அவனுடைய முகத்திலும் மலர்ந்த கண்களிலும் காணலாம்.

இந்திர விழாவின் இரண்டாம் நாளான அன்று நாளங்கடிச் சந்தியில், 'இளங்குமரன் எங்கே போனான் முல்லை?' என்று தன்னை விசாரித்துக் கொண்டு நின்ற தமையனின் முகத்திலும் கண்களிலும் இதே அவசரத்தைத் தான் முல்லை கண்டாள். "அண்ணா! யாரோ பட்டினப்பாக்கத்தில் எட்டிப் பட்டம் பெற்ற பெருஞ்செல்வர் வீட்டுப் பெண்ணாம். பெயர் சுரமஞ்சரி என்று சொல்கிறார்கள். அவள் அவரைப் பல்லக்கில் ஏற்றித் தன் மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போகிறாள்" என்று தொடங்கி நாள்ங்காடியில் நடந்திருந்த குழப்பங்களையெல்லாம் அண்ணனுக்குச் சொன்னாள் முல்லை. அவள் கூறியவற்றைக் கேட்டதும் கதக்கண்ணனும் அவனோடு வந்திருந்தவர்களும் ஏதோ ஒரு குறிப்புப்பொருள் தோன்றும்படி தங்களுக்குள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் யாவருடைய விழிகளிலும் அவசரமும் பரபரப்பும் அதிகமாவதை முல்லை கவனித்துக் கொண்டாள்.

"என்ன அண்ணா? நீங்கள் அவசரமும் பதற்றமும் அடைவதைப் பார்த்தால் அவருக்கு ஏதோ பெருந்துன்பம் நேரப் போகிறதுபோல் தோன்றுகிறதே! நீங்கள் அவசரப்படுவதையும், அவரைப் பற்றி விசாரிப்பதையும் பார்த்தால் என்க்கு பயமாயிருக்கிறது, அண்ணா!"

"முல்லை! இவையெல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாதவை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்துகொள். நாங்களெல்லாம் துணையிருக்கும்போது இளங்குமரனை ஒரு துன்பமும் அணுகிவிட முடியாது. இளங்குமரன் செல்வம் சேர்க்கவில்லை. ஞானமும் புகழும் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் பெரிய நகரத்தில் எங்களைப் போல் எண்ணற்ற நண்பர்களைச் சேர்த்திருக்கிறான். அவனுக்கு உதவி செய்வதைப் பெருமையாக நினைக்கும் இளைஞர்கள் அவனைச் சுற்றிலும் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாது."

"தெரியும் அண்ணா! ஆனால் நண்பர்களைக் காட்டிலும் பகைவர்கள்தான் அவருக்கு அதிகமாயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது."

"இருக்கட்டுமே! பகைகள் யாவும் ஒரு மனிதனுடைய வலிமையைப் பெருக்குவதற்குத்தான் வருகின்றன. பகைகளை எதிரே காணும் போதுதான் மனிதனுடைய பலம் பெருகுகிறது, முல்லை!" என்று தங்கையோடு வாதிடத் தொடங்கியிருந்த கதக்கண்ணன் தன் அவசரத்தை நினைத்து அந்தப் பேச்சை அவ்வளவில் முடித்தான்.

"முல்லை! நாங்கள் இப்போது அவசரமாக இளங்குமரனைத் தேடிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் உன்னை வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக எங்களில் யாரும் உன்னோடு துணை வருவதற்கில்லை. ஆனால் நீ வழி மயங்காமல் வீடு போய்ச் சேருவதற்காக உன்னை இந்த நாளங்காடியிலிருந்து அழைத்துப் போய்ப் புறவீதிக்குச் செல்லும் நேரான சாலையில் விட்டுவிடுகிறேன். அங்கிருந்து இந்திர விழாவுக்காக வந்து திரும்புகிறவர்கள் பலர் புறவீதிக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து நீ வீட்டுக்குப் போய்விடலாம்" என்று தமயன் கூறியதை முல்லை மறுக்காமல் ஒப்புக் கொண்டாள். தமையனுடைய அவசரத்துக்காக அவள் வீட்டுக்குப் போக இணங்கினாளே தவிர உள்ளூரத் தானும் அவர்களோடு செல்ல வேண்டும் என்றும், சென்று இளங்குமரனுக்கு என்னென்ன நேருகிறதென்று அறியவேண்டும் என்றும் ஆசையிருந்தது அவளுக்கு. வேறு வழியில்லாமற் போகவே அந்த ஆசைகளை மனத்துக்குள்ளேயே தேக்கிக் கொண்டாள் அவள்.

"நண்பர்களே! நீங்கள் சிறிது நேரம் இங்கே நின்று கொண்டிருந்தால் அதற்குள் இவளைப் புறவீதிக்குப் போகும் சாலையில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வந்துவிடுவேன். அப்புறம் நாம் இளங்குமரனைத் தேடிக்கொண்டு பட்டினப் பாக்கத்துக்குச் செல்லலாம்" என்று சொல்லி உடன் வந்தவர்களை அங்கே நிற்கச் செய்து விட்டு முல்லையை அழைத்துக் கொண்டு கதக்கண்ணன் புறப்பட்டான். எள் விழ இடமின்றிக் கூட்டாமாயிருந்த பூதசதுக்கத்தில் வழி உண்டாக்கிக்கொண்டு போவது கடினமாக இருந்தது.

போகும்போது இளங்குமரனைப் பற்றி மீண்டும் மீண்டும் சில கேள்விகளைத் தன் அண்ணனிடம் தூண்டிக் கேட்டாள் முல்லை. அந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் கதக்கண்ணன் விவரமாக மறுமொழி கூறவில்லை. சுருக்கமாக ஒரே ஒரு செய்தியை மட்டும் முல்லையிடம் கூறினான் அவன்.

"முல்லை! அதிகமாக உன்னிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை. பலவிதத்திலும் இளங்குமரனுக்குப் போதாத காலம் இது. சிறிது காலத்துக்கு வெளியே நடமாடாமல் அவன் எங்கேயாவது தலைமறைவாக இருந்தால் கூட நல்லதுதான். ஆனால் நம்மைப் போன்றவர்களின் வார்த்தையைக் கேட்டு அடங்கி நடக்கிறவனா அவன்?"

"நீங்கள் சொன்னால் அதன்படி கேட்பார் அண்ணா! இல்லா விட்டால் நம் தந்தையாரோ, அருட்செல்வ முனிவரோ எடுத்துக் கூறினால் மறுப்பின்றி அதன்படி செய்வார். சிறிது காலத்துக்கு அவரை நம் வீட்டிலேயே வேண்டுமானாலும் மறைந்து இருக்கச் செய்யலாம்!"

"செய்யலாம் முல்லை! ஆனால் நம் இல்லத்தையும் விடப் பாதுகாப்பான இடம் அவன் தங்குவதற்கு வாய்க்குமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான். அவனைப் பற்றிய பல செய்திகள் எனக்கே மர்மமாகவும் கூடமாகவும் விளங்காமலிருக்கின்றன. முரட்டுக் குணத்தாலும் எடுத்தெறிந்து பேசும் இயல்பாலும் அவனுக்கு இந்த நகரில் சாதாரணமான பகைவர்கள் மட்டுமே உண்டு என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதோ இவற்றையெல்லாம் விடப் பெரியதும் என்னால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியாததுமான வேறொரு பகையும் அவனுக்கு இருக்கிறதெனத் தெரிகிறது முல்லை! எது எப்படி இருந்தாலும் இதைப்பற்றி நீ அதிகமாகத் தெரிந்து கொள்ளவோ, கவலை கொள்ளவோ அவசியமில்லை. ஆண்பிள்ளைகள் காரியமென்று விட்டுவிடு"

தமயன் இவ்வாறு கூறியதும், முதல்நாள் நள்ளிரவுக்கு மேல் அருட்செல்வ முனிவர், இளங்குமரன் இருவருக்கும் நிகழ்ந்த உரையாடலைத் தான் அரைகுறையாகக் கேட்க நேர்ந்ததையும், முனிவர் இளங்குமரனுக்கு முன் உணர்ச்சி வசப்பட்டு அழுத்தையும் அவனிடம் சொல்லிவிடலாமா என்று எண்ணினாள் முல்லை. சொல்லுவதற்கு அவள் நாவும்கூட முந்தியது. ஆனால் ஏனோ சொற்கள் எழவில்லை. கடைசி விநாடியில் 'ஆண்பிள்ளைகள் காரியம் ஆண் பிள்ளைகளோடு போகட்டும்' என்று அண்ணனே கூறியதை நினைத்தோ என்னவோ தன் நாவை அடக்கிக் கொண்டாள் முல்லை. ஆயினும் அவள் மனத்தில் காரணமும் தொடர்பும் தோன்றாத கலக்கமும் பயமும் உண்டாயின. தன் நெஞ்சுக்கு இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும் இளங்குமரன் என்னும் அழகைப் பயங்கரமான பகைகள் தெரிந்தும் தெரியாமலும் சூழ்ந்திருக்கின்றன என்பதை உணரும் போது சற்றுமுன் நாளங்காடியில் அவன் மேற்கோண்ட கோபம்கூட மறந்துவிட்டது அவளுக்கு. நீர் பாயும்போது சாய்ந்து போவதுபோல் அவள் உள்ளத்தில் எழுந்திருந்த சினம் அவனைப் பற்றிய அநுதாப நினைவுகள் பாயும்போது சாய்ந்து படிந்தது; தணிந்து தாழ்ந்தது.

பூதச் சதுக்கத்து இந்திர விழாவின் கூட்டமும் ஆரவாரமும் குறைந்த - நடந்து செல்ல வசதியான கிழக்குப் பக்கத்துச் சாலைக்கு வந்திருந்தார்கள் முல்லையும் கதக்கண்ணனும். விண்ணுக்கும் மண்ணுக்கும் உறவு கற்பிக்க எழுந்தவைபோல் இருபுறமும் அடர்ந்தெழுந்த நெடுமரச் சோலைக்கு நடுவே அகன்று நேராக நீண்டு செல்லும் சாலை தெரிந்தது. விழாக் கொண்டாட்டத்துக்காக நாளங்காடிக்கும், அப்பாலுள்ள அகநகர்ப் பகுதிகளுக்கும் வந்துவிட்டு புறநகர்ப் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்வோர் சிலரும் பலருமாகக் கூட்டமாயும், தனித் தனியாயும் அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்தார்கள்.

"முல்லை! நீ இனிமேல் இங்கிருந்து தனியாகப் போகலாம். நேரே போனால் புறவீதிதான். நிறைய மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு பயமுமில்லை" என்று கூறித் தங்கையிடம் விடைபெற்றுக்கொண்டு வந்த வழியே திரும்பி விரைந்தான் கதக்கண்ணன். முல்லை தயங்கித் தயங்கி நின்று அண்ணனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கீழ்ப்புறச் சாலையில் நடந்தாள். அண்ணன் இந்திர விழாக் கூட்டத்தில் கலந்து மறைந்த பின்பு திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போயிற்று. அவள்தான் மெல்ல நடந்தாள். அவளுடைய நெஞ்சத்திலோ பலவித நினைவுகள் ஓடின. 'பட்டினப்பாக்கத்தில் அந்தப் பெண்ணரசி சுரமஞ்சரியின் மாளிகையில் இளங்குமரனுக்கு என்னென்ன அநுபவங்கள் ஏற்படும்? அந்த ஓவியன் எதற்காக அவரை வரைகிறான்? அந்தப் பெண்ணரசிக்காக வரைந்ததாகக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பேசிக்கொண்டார்களே! அப்படியானால் அவருடைய ஓவியம் அவளுக்கு எதற்கு?' - இதற்குமேல் இந்த நினைவை வளர்க்க மறுத்தது அவள் உள்ளம். ஏக்கமும், அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண் மேல் பொறாமையும் ஏற்பட்டது முல்லைக்கு. அத்தோடு 'தன் தமையனும் மற்ற நண்பர்களும் எதற்காக இவ்வளவு அவசரமாய் இளங்குமரனைத் தேடிக்கொண்டு போகிறார்கள்?' என்ற வினாவும் அவளுள்ளத்தே தோன்றிற்று. இப்படி நினைவுகளில் ஓட்டமும் கால்களில் நடையுமாகப் புறவீதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் முல்லை. நுண்ணுணர்வு மயமான அகம் விரைவாக இயங்கும் போது புற உணர்வுகள் மந்தமாக இயங்குவதும் புற உணர்வு விரைவாக இயங்கும்போது அக உணர்வுகள் மெல்லச் செல்வதும் அப்போது அவள் நடையின் தயக்கத்திலிருந்தும், நினைவுகளின் வேகத்திலிருந்தும் தெரிந்து கொள்ளக்கூடிய மெய்யாயிருந்தது. நினைவுகளின் வேகம் குறைந்ததும் அவள் நடையில் வேகம் பிறந்தது.

தான் வீட்டை அடையும்போது தன் தந்தை வீட்டிற்குள்ளே அருட்செல்வ முனிவரின் கட்டிலருகே அமர்ந்து அவரோடு உரையாடிக் கொண்டிருப்பார் என்று முல்லை எதிர்பார்த்துக்கொண்டு சென்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக வீட்டு வாயில் திண்ணையில் முரசமும் படைக்கலங்களும் வைக்கப்பட்டுருந்த மேடைக்கருகிலே கன்னத்தில் கையூன்றி வீற்றிருந்தார் வீரசோழிய வள நாடுடையார்.

"என்ன அப்பா இது? உள்ளே முனிவரோடு உட்கார்ந்து சுவையாக உரையாடிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு வருகிறேன் நான். நீங்கள் என்னவோ கப்பல் கவிழ்ந்து போனதுபோல் கன்னத்தில் கையூன்றிக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருக்கிறீர்களே? முனிவர் சோர்ந்து உறங்கிப் போய் விட்டாரா என்ன?" என்று கேட்டுக் கொண்டே வாயிற்படிகளில் ஏறி வந்தாள் முல்லை.

முல்லை அருகில் நெருங்கி வந்ததும், "உறங்கிப்போகவில்லை அம்மா! சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டார். நீயும் இளங்குமரனும் நாளங்காடிக்குப் புறப்பட்டுப்போன சில நாழிகைக்குப் பின் உன் தமையன் கதக்கண்ணனும், வேறு சிலரும் இளங்குமரனைத் தேடிக்கொண்டு இங்கு வந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதற்காக வாயிற்பக்கம் எழுந்து வந்தேன். வந்தவன் அவர்களுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டுச் சிறிது நேரங்கழித்து உள்ளே போய்ப் பார்த்தால் முனிவரைப் படுக்கையில் காணவில்லை. பின்புறத்துக் கதவு திறந்து கிடந்தது. பின்புறம் தோட்டத்துக்குள் சிறிது தொலைவு அலைந்து தேடியும் பார்த்தாகி விட்டது. ஆளைக் காணவில்லை" என்று கன்னத்தில் ஊன்றியிருந்த கையை எடுத்துவிட்டு நிதானமாக அவளுக்குப் பதில் கூறினார் வளநாடுடையார்.

அதைக் கேட்டு முல்லை ஒன்றும் பேசத் தோன்றாமல் அதிர்ந்து போய் நின்றாள்.
--------------

முதல் பருவம். 1.12. ஒற்றைக்கண் மனிதன்

பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையில் பூம்பொழில் நடுவே அப்படி ஓர் அதிசயத்தைச் சிறிதும் எதிர்பார்த்திராதவனான இளங்குமரன் தன் அருகில் நின்று கொண்டிருந்தவளையும் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தவளையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் மனத்தில் தாங்கமுடியாத வியப்பு ஏற்பட்டது. ஓவியன் மணிமார்பனும் வரைவதை நிறுத்திவிட்டு விழிகள் அகல அந்த அதிசயத்தைக் கண்டான்.

'அவர்கள் உயிரும் உணர்வும் உடைய பெண்களா அல்லது ஒரே அச்சில் வார்த்து அணிந்தும், புனைந்தும், உடுத்தும் அலங்கரிக்கப் பெற்ற இரண்டு பொற்பாவைகளா? அந்த இருவரில் யார் சுரமஞ்சரி? யார் மற்றொருத்தி?' என்று அறிய மாட்டாமல் இளங்குமரனும் ஓவியனும் திகைத்து மயங்கிய போது எதிர்ப்பக்கத்திலிருந்து வந்தவள் அவர்களுடைய திகைப்பைத் தீர்த்து வைத்தாள்! “இவளும் நானும் இரட்டைப் பிறவிகள். இவளுடைய பெயர் வானவல்லி. என்னுடைய பெயர் சுரமஞ்சரி. பெயரளவில்தான் எங்களுக்குள் வேற்றுமை. தோற்றத்தில் வேற்றுமை கண்டுபிடிக்க முயல்கிறவர்கள் பெரும்பாலும் ஏமாந்துதான் போவார்கள்" என்று கூறியவாறே இளங்குமரனுக்கும் ஓவியனுக்கும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் சகோதரி வானவல்லிக்கு அருகில் வந்து அவளுடைய தோளைத் தழுவினாற் போல் நின்று கொண்டாள் சுரமஞ்சரி. அதன் பின்பு தான் இளங்குமரனுக்கும் ஓவியனுக்கும் மனத்தில் ஏற்பட்ட குழப்பம் ஒருவாறு நீங்கியது.

'வானவல்லி என்று மின்னல் கொடிக்குப் பெயர். வானில் படரும் ஒளிக்கொடி போல் மின்னல் இலங்குவதால் யாரோ கவியுள்ளம் படைத்தவர்கள் தமிழில் மின்னல் கொடிக்கு இந்தப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஆனால் விண் மண்டலத்து மின்னற் கொடியைக் காட்டிலும் இந்த மண் மண்டிலத்துப் பூம்புகார் மின்னற் கொடிக்கு எவ்வளவு இயைபாக இருக்கிறது இப்பெயர்!' என்று தனக்குள் நினைத்தவாறே வானவல்லி என்னும் எட்டி குமரன் வீட்டு மின்னல் கொடியை ஓவியனின் அழகு வேட்கை மிக்க தன் கண்களால் நன்றாகப் பார்த்தான் மணிமார்பன்.

"நல்லவேளையாக நீங்கள் வந்தீர்கள் அம்மா! உங்கள் சகோதரியார், 'நீங்கள் யார்? உங்களை யார் இந்த மாளிகைக்குள் வரவிட்டது?' என்று கேள்வி கேட்டு எங்களை வெளியே துரத்துவதற்கு இருந்தார். நீங்கள் வராவிட்டால் அந்தக் காரியத்தைச் செய்தே இருப்பார்" என்று ஓவியன் சுரமஞ்சரியைப் பார்த்துக் கொண்டே கூறிய போது, 'பேச்சும் சிரிப்பும் இப்போது வேண்டாதவை! காரியம் நடக்கட்டும்' என்று குறிப்பும் கடுமையும் தோன்ற அவனை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன். அந்த வலிய பார்வையே மணிமார்பனை அடக்கியாண்டது. அவன் மௌனமாக மேலே வரையலானான்.

"வானவல்லி! நேற்று கடற்கரையில் அற்புதமாக மற்போர் செய்ததாகக் கூறினேனே, அந்த வீரர் இவர்தான்" என்று தன் சகோதரிக்கு இளங்குமரனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. சிறிது நேரத்தில் ஓவியம் நிறைவேறியது. இன்னும் சில நுணுக்கமான வேலைப்பாடுகள் ஓவியத்தில் எஞ்சியிருந்தாலும் 'அவற்றைச் செய்வதற்கு இளங்குமரன் உடனிருக்க வேண்டியதில்லை' என்று மணிமார்பன் சொல்லிவிட்டான்.

ஓவியம் முடிந்ததும் வானவல்லி இளங்குமரனுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு, “என்னை மன்னிக்க வேண்டும்! என் சகோதரி சுரமஞ்சரி தான் உங்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரியாமல் அப்படிக் கேட்டு விட்டேன். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முன்பே விவரம் தெரிந்திருந்தால் அப்படிக் கேட்டிருக்க மாட்டேன்" என்று மன்னிப்புக் கேட்டாள்.

இளங்குமரன் வானவல்லியின் குயில் மொழிக்குரலைக் காது கொடுத்துக் கேட்காதவன் போல் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றான்.

"இதோ பாருங்கள் ஐயா! படம் அற்புதமாக வாய்த்திருக்கிறது" என்று ஓவியம் வரையப் பெற்ற திரைச்சீலையை உயரத் தூக்கி நிறுத்திக் காணுமாறு செய்தான் மணிமார்பன். இளங்குமரனிடமிருந்து இதற்குப் பதில் இல்லை.

சுரமஞ்சரி தான் வியந்து கூறினாள்: "படத்திலிருந்து அப்படியே நீங்கள் இறங்கி நடந்து வருவது போல் தத்ரூபமாக இருக்கிறது. ஓவியரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை."

"பாராட்டு இருக்கட்டும்! அது வாயிலே சொல்லாகப் பிறந்து செவியிலே ஒலியாக மடிவது. அதனால் வயிறும் நிரம்பாது! வாழ்வும் நிரம்பாது! ஓவியம் நன்றாக இருந்தால் நூறு பொற் கழஞ்சுக்கு பதில் நூற்றைம்பது பொற் கழஞ்சாகக் கொடுத்து மகிழுங்கள்" என்று அதுவரை பேசாமலிருந்த இளங்குமரன் அவளுக்குத் துணிவாக மறுமொழி கூறினான்.

"கொடுத்து மகிழ்வதைப் பற்றி எங்களுக்குப் பெருமைதான்! ஆனால் அன்போடும் மதிப்போடும் கொடுப்பதை வாங்கி மகிழ்கிற சுபாவம் சிலருக்கு இல்லாமற் போய்விடுகிறதே! அதற்கு என்ன செய்வது?"

முதல் நாள் கடற்கரை நிகழ்ச்சியைக் குறிப்பாகக் கூறிக் குத்திக் காட்டுவது போல் இளங்குமரனைச் சொற்களால் மடக்கினாள் சுரமஞ்சரி. இந்த வார்த்தைகளைக் கூறும்போது தன் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைத் தொட்டு விளையாடியது அவள் வலக்கரம். சகோதரியின் சாதுரியமான பேச்சைக் கேட்டு வானவல்லி புன்னகை புரிந்தாள்.

இளங்குமரன் அங்கிருந்து புறப்படச் சித்தமானான். "தம்பீ! ஓவியத்தை முடித்துக் கொடுத்துவிட்டு உனக்குச் சேரவேண்டிய பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு போய்ச் சேர். நான் வருகிறேன். வாய்ப்பிருந்தால் மறுபடியும் எங்காவது சந்திக்கலாம்" என்று மணிமார்பனிடம் கூறிவிட்டு அவன் தெரிவித்த வணங்கங்களையும் நன்றிகளையும் ஏற்றுக் கொண்டு இளங்குமரன் புறப்பட்ட போது,

"இது இந்திர விழாக்காலம்! இந்த மாளிகைக்கு வந்தவர்களை விருந்துண்ணச் செய்யாமல் அனுப்பும் வழக்கமில்லை. மாளிகைக்குள் வந்து உணவு முடித்துக் கொண்டு போகலாம்" என்று சுரமஞ்சரியும் வானவல்லியும் சேர்ந்து அவனை வற்புறுத்தினார்கள்.

"நான் தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே! இந்த மாளிகைக்கு விருந்தினனாக நான் வரவில்லை. ஓர் ஏழை ஓவியனுக்கு உதவ நேர்ந்ததற்காகவே வந்தேன்" என்று கூறி அதை மறுத்துவிட்டு, இளங்குமரன் மாளிகையின் பிரதான வாயிலை நோக்கி நடக்க முற்பட்ட போது, "தம்பி! நீ இப்படிக் கண்டிப்பாக மறுத்துச் சொல்லக் கூடாதப்பா. இருந்து ஒரு வேளை உண்டு விட்டுத்தான் போகவேண்டும்!" என்று பின்புறமிருந்து இன்னொரு முதிர்ந்த ஆண் குரல் மிடுக்காக ஒலித்தது.

அந்தக் குரலைக் கேட்டதும் இளங்குமரன் உள்பட எல்லோருமே வியப்போடு திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் ஓவியம் வரைந்த இடத்திற்குப் பின்பக்கத்து மரங்களின் அடர்த்தியிலிருந்து உயர்ந்த தோற்றமும் பருத்த உடலும் வலது காலைச் சாய்த்துச் சாய்த்து நடக்கும் நடையுமாக ஒரு முதியவர் வந்து கொண்டிருந்தார். அவர் கையில் ஊன்று கோல் ஒன்றும் நடைக்குத் துணையாக இருந்தது.

"அப்பா! நீங்கள் எப்போது இங்கே வந்தீர்கள்? எங்களுக்குத் தெரியவே தெரியாதே" என்று அவரைக் கண்டதும் சுரமஞ்சரியும் வானவல்லியும் எதிர்கொண்டு சென்றதிலிருந்து அவர்தான் அந்தப் பெருமாளிகையின் உரிமையாளரான எட்டிப் பட்டம் பெற்ற செல்வர் என்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று.

அவர் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் அங்கே தோன்றியதற்காகத் தன் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்று திடமான கருத்துடன் இளங்குமரன் மேலும் வாயிலை நோக்கி நடக்கலானான். ஆனால் அவர் அவனைச் செல்லவிடவில்லை.

"தம்பீ! இவ்வளவு அவசரம் எதற்கு? சற்றே நின்று போகலாமல்லவா?" என்று கூறிக்கொண்டே அவனருகில் வந்துவிட்டார் அவர். சுரமஞ்சரி இளங்குமரனின் மற்போர் வீரத்தைப் புகழ்ந்து சொல்லி அவனைத் தன் தந்தைக்கு அறிமுகம் செய்தாள்.

"நானே இந்தப் பிள்ளையை முன்பு எங்கோ பார்த்திருந்தாற் போல் நினைவிருக்கிறதம்மா!" என்று தான் நடந்து கொண்டிருந்த வழியையே மறிக்கிறாற் போல அவர் தனக்கு முன்னால் வந்து நின்ற போது இளங்குமரனால் மேலே நடக்க முடியவில்லை. நின்றான். அவனைத் தலையிலிருந்து கால் வரை நன்றாக உற்றுப் பார்த்தார் சுரமஞ்சரியின் தந்தை. அவனை எங்கோ பார்த்தாற் போல் நினைவிருப்பதாக அவர் கூறினாலும், அவரைத் தான் எங்குமே அதற்கு முன் சந்தித்ததாக இளங்குமரனுக்கு நினைவில்லை. அவருடைய பார்வையும் தோற்றமும் இளங்குமரனைத் தவிர வேறு சாதாரணமானவர்களுக்குப் பயமூட்டியிருக்கும்.

அவன் மேல் இடித்து விடுகிறாற்போல் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர், "கருநாவற்பழம் போல் உன் கழுத்து வலது பக்கத்துச் சரிவில் எத்தனை அழகான மச்சம் இருக்கிறது பார்த்தாயா? பிற்காலத்தில் நீ மகா யோகக்காரனாக விளங்கப் போகிறாய் தம்பீ? இது போல் வலது புறத்தில் இவ்வளவு பெரிய மச்சம் எல்லாருக்கும் அமைவது அரிது!" என்று வியந்து கூறியவாறே அவனுடைய கண்களையும் முகத்தையும் கூர்ந்து நோக்கினார்.

இளங்குமரன் அவர் கூறியதையும் பார்ப்பதையும் கவனித்தும் சலனமின்றி அமைதியாக நின்றான். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே, அடுத்தாற் போல் கேட்ட கேள்வி அவனுடைய சலனமின்மையைக் கலைத்தது. அவன் ஆச்சரியமடைந்தான்.

"தம்பி! அருட்செல்வ முனிவர் நலமாக இருக்கிறார் அல்லவா?" என்று இருந்தாற் போலிருந்து முன்பின் தொடர்பின்றி அவர் கேட்ட போது இளங்குமரன் திகைத்தான். 'முனிவரை இவருக்கு எப்படித் தெரியும்? அப்படியே எந்த வகையிலாவது தெரிந்திருந்தாலும் என்னைக் கண்டவுடனே அதை விசாரிக்கலாமலிருந்து விட்டு இவ்வளவு நேரம் கழித்து நிதானமாக விசாரிப்பது ஏன்?' என்று சிந்தித்துக் குழம்பியது அவன் மனம். முனிவரைப் பற்றி விசாரித்து விட்டு அவர் தன் முகத்தையும் உற்றுப் பார்ப்பதை அவன் காணத் தவறவில்லை.

"என்ன அப்படித் திகைக்கின்றாய் தம்பீ? என்னுடைய முதுமைக்குள் இந்தப் பெருநகரில் எத்தனை கார் காலங்களையும், வேனிற் காலங்களையும் பார்த்திருப்பேன் தெரியுமா? மனிதர்களைப் பார்த்திருக்கவும் பழகியிருக்கவும் முடியாமலா போயிருக்கும்?" என்று மேலும் சொன்னார் அவர்.

பின்னும் அவரிடம் பேச்சை வளர்க்க விரும்பாத இளங்குமரன், "முனிவர் நலமாக இருக்கிறார் ஐயா!" என்று கூறிவிட்டு மேலே நடந்தான். என்ன காரணமோ அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே விருப்பமாயில்லை அவனுக்கு.

"தம்பீ! இன்றைக்குத்தான் உனக்கு அவசரம். இன்னொரு நாள் ஓய்வாக இருக்கும்போது இங்கே வந்து ஒரு வேளை உண்டு போக வேண்டும்" என்று அவர் கூறியதையும், சுரமஞ்சரியும் வானவல்லியும் தன்னைப் பின் தொடர்ந்து வருவதையும் பொருட்படுத்தாமல் பிரதான வாயிலைக் கடந்து அகலமான வீதியில் இறங்கி நடந்து சென்றான் இளங்குமரன். வீதியில் இறங்கும் போது “பல்லக்கு வருகிறது. ஏறிக் கொண்டு போகலாம்" என்று சுரமஞ்சரி கூவிய குரலுக்காகவும் அவன் நிற்கவில்லை. மிகவும் வேகமாக நடந்தான்.

மிகப்பெரிய அந்த மாளிகையிலிருந்து விலகி வீதியில் வெகு தொலைவு வந்த பின்னும் தன்னை யாரோ கூர்ந்து நோக்கியவாறே பின் தொடர்வது போல் இளங்குமரனுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று. பின்புறம் யாரோ வந்து கொண்டிருப்பது போல் பிடரியிலும் ஓருணர்வு குறுகுறுத்தது. வீதி திரும்பியதும் திருப்பத்தில் நின்று கொண்டு பின் பக்கம் பார்வையைச் செலுத்தினான்! அவன் சந்தேகப்பட்டது சரியாயிருந்தது. கண்ணெடுத்துப் பார்ப்பதற்கு விகாரமான முகத்தையுடைய ஒற்றைக் கண்ணன் ஒருவன் தயங்கித் தயங்கிப் பின்னால் வந்து கொண்டிருந்தான். அந்த ஒற்றைக்கண்ணனுக்குப் பின்னால் தோழிப்பெண் வசந்தமாலையும் பதுங்கினாற் போல மெல்ல வந்து கொண்டிருந்தாள். அவர்கள் தன்னைத் தொடருகிறார்களா அல்லது தற்செயலாக வருகிறார்களா என்பதனைத் தெரிந்து கொள்வதற்காக நின்றும், வழி மாறிச் சென்றும் சோதனை செய்தான். சந்தேகமில்லாத வகையில் அவர்கள் அவனையே தொடர்வது தெரிந்தது. அவன் நின்றால் அவர்களும் நின்றார்கள். அவன் வழி மாறினால் அவர்களும் வழி மாறினார்கள். 'என்ன வந்தாலும் வரட்டும்! அடுத்து வருகிற வீதித் திருப்பத்தில் மறைந்து நின்று இந்த ஒற்றைக் கண் மனிதனை வழி மடக்கி விசாரிக்க வேண்டியதுதான்' என்றெண்ணிக் கொண்டான் இளங்குமரன். அவ்வாறே செய்வதற்கும் சித்தமானான்.

ஆனால் அவன் நினைத்தபடி செய்ய முடியவில்லை! ஏனென்றால் அந்த வீதி திரும்புமிடத்தில் ஏற்கெனவே நாளங்காடியிலிருந்து தன்னைத் தேடி வந்து கொண்டிருந்த கதக்கண்ணனையும், பிற நண்பர்களையும் அவன் சந்திக்கும்படி நேர்ந்து விட்டது.
-------------

முதல் பருவம். 1.13. இது என்ன அந்தரங்கம்?

கலியருள் அகலக் காவிரியணைந்த மாபெரும் நகர்க்குப் பொலிகதிர் பரப்பிப் பகல் செய்த கதிரவன் மெல்ல மெல்ல மேற்கே மறைந்து கொண்டிருந்தான். விரிநீல மணித்திரையில் விட்டெறிந்த ஒளி மலர்களென விண்மீன்கள் மின்னத் தொடங்கியிருந்தன. திசைமுகங்கள் பசந்து மயங்கி நிறம் பூசிக் கொள்ளலாயின. அகன்ற வான்வெளியில் சந்திரன் அணி நிலா விரித்தான். பொழுதும், பருவமும், காலம் கற்பிக்கும் இயற்கையெழில்களும் எல்லா இடத்திலும் அழகு தருவனவாக இருப்பினும் பூம்புகார் நகரைச் சார்ந்து வரும் போது பன்மடங்கு பேரழகு தருவனவாக இருந்தன. இயற்கை நிகழ்ச்சிகள் தாம் நிகழுமிடத்தைப் பொறுத்தே அழகு பெறுகின்றன. கதிரவன் உதயம் கடற்கரையிற் பேரழகு, தென்றல் சோலைகளின் நடுவே வீசும் போது பேரழகு, அருவி மலை முகடுகளில் இலங்கும் போது பேரழகு - என்று சார்ந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் அழகு பேரழகாவது போல் தன்னைச் சார்ந்து நிகழும் யாவற்றையும் பேரழகாக்கிக் காட்டும் பெரும் பேரழகை முதலீடாகக் கொண்டது பூம்புகார் நகரம்.

வளம் மலிந்த அந்நகரத்தில் காலையும் அழகு, மாலையும் அழகு, நண்பகலும் அழகு, இரவும் அழகுதான். நேரத்துக்கு நேரம் விதம் விதமாக அலங்கரித்துக் கொண்டு நிற்கும் வனப்பும் வசதிகளும் உள்ள அழகிபோல் ஒவ்வொரு பொழுதும் பருவமும் ஒவ்வொரு அழகு தோன்றித் துலங்கும் அரச கம்பீர வாழ்வுள்ள நகரமாயிருந்தது அது. நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் அழகைச் சுமந்து கொண்டு வந்த அந்தி மாலை நேரம் பட்டினப்பாக்கத்தில் அழகுக்கே அழகு செய்வது போலப் பரவியது. மாளிகையின் முன் புறங்களில் பசுமையழகுக்காகப் படர விட்டிருந்த முல்லையும் மல்லிகையும் அரும்பு நெகிழ்ந்து மணம் பரப்ப, அந்த மணம் அந்த நேரத்தில் வீசிக் கொண்டிருந்த மெல்லிளந் தென்றலிற் கலந்து பரவியது. அந்தி மாலைக்காக இல்லங்களில் முன் பக்கத்து மாடப் பிறைகளில் மங்கல விளக்கேற்றி வைக்கும் பெண்களின் வளையொலியும், சிரிப்பொலியும், கிண்கிணிச் சிலம்பொலியும் வீதியெல்லாம் நிறைந்து ஒலித்தன. முகமே ஒரு மங்கல விளக்காய் அதில் முத்து நகை சுடர் விரிக்க முறுவல் நிகழும் போது விழிகளில் நளினம் ஒளி பரப்பத் தீபம் ஏற்றி வைக்கும் பெண்களே தீபங்களைப் போல் வீதிகளில் தோன்றினர். வீதிகளிலிருந்து யாழிசையும், குழலிசையும், மத்தளம் - முரசங்களின் ஒலியும், பல்வேறு கோவில்களின் மணியோசையும், மறை முழக்கமும், பண்ணிசை ததும்பும் பாடல்களும் கலந்தெழுந்து ஒலிக்காவியம் படைத்தன.

அந்த அற்புதமான நேரத்தில் சுரமஞ்சரியும் அவளுடைய சகோதரி வானவல்லியும், வேறு பணிப்பெண்களும், தங்கள் பெருமாளிகைகளின் ஏழாவது மாடத்துக்கு மேலே நிலா முற்றத்தில் அமர்ந்திருந்தார்கள். மிகவும் உயரமான அந்த நிலா முற்றத்திலிருந்து நான்கு காதச் சுற்றளவுக்குப் பரந்திருந்த பூம்புகார் நகரத்தின் எல்லாப் பகுதிகளும் நன்றாகத் தெரிந்தன. ஒளி வெள்ளம் பாய்ச்சினாற் போல் இந்திர விழாவுக்கான தீபாலங்காரங்கள் நகரத்தை சுடர் மயமாக்கியிருந்தன. நாளங்காடிக்கும் அப்பால் கிழக்கே மருவூர்ப்பாக்கம் முடிகிற இடத்தில் நீல நெடுங்கடல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. துறைமுகத்திலும், காவிரியின் சங்கம வாயிலிலும் பெரிய கப்பல்களில் வைத்திருந்த விளக்குகள் பல நிறத்தினவாய்ப் பல விதத்தினவாய் நீர்ப்பரப்பில் ஒளிக்கோலம் காட்டிக் கொண்டிருந்தன. மேற்கிலிருந்து கிழக்கு முகமாகப் பாய்ந்து கடலோடு கலக்கும் காவிரி வாயில் சங்கம முகத்தில் கலங்கரை விளக்கத்துத் தீ செந்நாக்குகளை விரித்து எரிந்து கொண்டிருந்தது. தன் மாளிகை நிலா முற்றத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினத்தின் அந்திமாலைக் காட்சி வனப்பை எத்துணையோ முறை கண்டு வியந்திருக்கிறாள் சுரமஞ்சரி. ஆனால் இன்று மாலையில் காணும் போது அந்தக் காட்சி வனப்பில் புதிதாக வியப்பையும் அழகையும் உணரும் ஏதோ ஓர் உற்சாக உணர்வு அவள் உள்ளத்துள்ளே குறுகுறுத்தது. 'பிணியுற்றுக் கிடந்தவர்களுக்குப் பிறந்தநாள் வந்தது போல் அந்த உற்சாக உணர்வை முழுமையாக அநுபவிக்க முடியாத மனக்குறைவும் சிறிது இருந்தது அவளுக்கு. இளங்குமரனை நினைக்கும் போது அவள் மனம் களிப்படைந்து துள்ளியது. அவனுடைய திமிரையும், அவன் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தையும் நினைத்துப் பார்த்தால் அவள் மனம் வாடித் துவண்டது.

சுரமஞ்சரியின் சகோதரி வானவல்லிக்கு 'வங்கியம்' எனப்படும் புல்லாங்குழல் வாசிப்பதில் இணையற்ற திறமை உண்டு. அப்போதும் அவள் அதை வாசித்துக் கொண்டு தான் இருந்தாள். அந்த மாளிகையைச் சேர்ந்த மற்றோர் இசையணங்கு மகர யாழிலே இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தாள். வேறொருத்தி மத்தளம் வாசித்தாள். நிலா முற்றத்தில் தன்னருகே பரவிப் பாய்ந்து கொண்டிருந்த இந்த இசை வெள்ளத்தில் மூழ்காமல் இளங்குமரனைப் பற்றிய நினைவு வெள்ளத்தில் மூழ்கியிருந்தாள் சுரமஞ்சரி. தந்தத்தில் இழைத்து முத்துப் பதித்த சித்திரக் கட்டிலில் இரத்தினக் கம்பள விரிப்பின் மேல் அமர்ந்து இசை அரங்கு நிகழ்த்திக் கொண்டிருந்தவர்கள், சுரமஞ்சரி தங்கள் இன்னிசையில் ஆழ்ந்து மூழ்கி அனுபவித்துக் கொண்டு தான் எதிரே அமர்ந்திருக்கிறாளென நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுரமஞ்சரியின் இதயத்தை யாழாக்கி அதன் மெல்லிய உணர்வு நரம்புகளில் இளங்குமரன் என்னும் எழில் நினைவு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. 'வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவது போல்' தண்மதிக் கதிர் பரவும் நிலா முற்றத்தில், உடலை வருடிச் செல்லும் இதமான காற்றும் வீசும் நிலையில் சுரமஞ்சரி நினைக்கலானாள்:

'இந்திரவிழாக் காலத்தில் இந்த மாளிகைக்கு வந்தவர்களை விருந்துண்ணச் செய்யாமல் அனுப்பும் வழக்கமில்லை. மாளிகைக்கு வந்து உணவை முடித்துக் கொண்டு போகலாம் என்று எவ்வளவு அன்போடும் ஆர்வத்தோடும் அவரை அழைத்தேன்! 'நான் இந்த மாளிகைக்கு விருந்து உண்ண வரவில்லை' என்று சிறிதும் தயங்காமல் முகத்தில் அறைந்தாற் போல் பதில் கூறி விட்டாரே! அதுதான் போகட்டும், தந்தையார் ஏன் அப்படி மரங்களின் மறைவில் ஒளிந்தாற் போல் நின்று அவரையும் எங்களையும் கவனித்தார்? திடீரென்று மறைவிலிருந்து வெளிப்பட்டு, 'இந்தப் பிள்ளையை நான் இதற்கு முன்பு எங்கோ பார்த்தாற் போல் நினைவிருக்கிறதம்மா' என்று கூறி எங்களையும் அவரையும் திகைப்படையச் செய்ததுமல்லாமல் அவரருகில் சென்று அநாகரிகமாக அவரை உற்று உற்றுப் பார்த்தாரே தந்தையார், அதன் நோக்கமென்ன? எவ்வளவோ உலகியலறிவும் நாகரிகமும் தெரிந்த தந்தையார் இன்று தோட்டத்தில் ஏன் அப்படி நடந்து கொண்டார்? தந்தையாரின் எதிர்பாராத வருகையும், பேச்சும், உற்றுப் பார்த்த பார்வையும் அவருக்கு அநாகரிகமாகத்தான் தோன்றியிருக்கும். இல்லாவிட்டால், 'நடந்து போகாதீர்கள், பல்லக்கு வருகிறது, அதில் ஏறிக் கொண்டு போகலாம்' என்று நான் கூவிய போது திரும்பியும் பார்க்காமல் அலட்சியமாக வீதியில் இறங்கி நடந்திருப்பாரா அவர்? நல்ல வேளை! நான் அப்போது காட்டிய குறிப்பைப் புரிந்து கொண்டு என் பக்கத்தில் நின்ற வசந்தமாலை அவரைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறாள். என்னுடைய தோழிகளிலேயே வசந்தமாலைக்குத்தான் குறிப்பறியும் திறன் அதிகம். பின் தொடர்ந்து போய் அவரைப் பற்றிய விவரங்களையும், அவர் வசிக்கும் இடத்தையும் நன்றாகத் தெரிந்து கொண்டுதான் திரும்பி வருவாள் அவள்! வசந்தமாலை விரைவில் திரும்பி வந்து அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் கூறி விட மாட்டாளா என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. 'ஒருவேளை தனக்குத் தெரியாமலே வசந்தமாலை இதற்குள் திரும்பி வந்திருப்பாளோ?' என்று சுரமஞ்சரிக்கு ஐயம் ஏற்பட்டது. நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கிப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்றால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் வானவல்லியும், மற்றவர்களும் தான் இருந்தாற் போலிருந்தது நடுவில் எழுந்து போவதைத் தவறாகப் புரிந்து கொண்டு வருந்தலாகாதே என்று தயங்கினாள் சுரமஞ்சரி.

சிறிது நேரத்தில் நிலாமுற்றத்து இசையரங்கு தானாகவே முற்றுப் பெற்றது. வானவல்லியும் மற்றப் பெண்களும் வேறு பேச்சுக்களைப் பேசத் தொடங்கினார்கள். தான் நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கிப் போய் 'வசந்தமாலை வந்திருக்கிறாளா?' என்று பார்த்து விட்டுத் திரும்புவதற்கு இதுதான் ஏற்ற நேரம் என்று தீர்மானம் செய்து கொண்டவளாய் எழுந்தாள் சுரமஞ்சரி.

'வானவல்லி! நீ இவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிரு. நான் கீழே போய் வசந்தமாலை வந்திருக்கிறாளா என்று பார்த்து விட்டு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அவள் புறப்பட்ட போது வானவல்லி அவளைத் தடுக்கவில்லை. நிலா முற்றத்திலிருந்து கீழ்ப் பகுதிக்குச் செல்லும் படிகளில் வேகமாக இறங்கினாள் சுரமஞ்சரி.

சம நிலத்திலிருந்து ஓங்கி நின்ற அந்த ஏழடுக்கு மாளிகை அரண்மனை போன்ற ஒரே கட்டடமாக உயர்ந்து தோன்றினாலும் ஏழு மாடங்களும் ஏழு தனி மாளிகைகள் போல் வசதிகள் நிறைந்தவை. நோக்குமிடமெல்லாம் சித்திரங்கள், நுகருமிடமெல்லாம் நறுமணங்கள், அமர விரும்புமிடமெல்லாம் பட்டு விரித்த மஞ்சங்கள், பஞ்சணைகள், பாங்கான இருக்கைகள், எல்லாம் எல்லா இடங்களிலும் பொருந்திய பெருமாளிகை அது. அந்தி நேரங் கழித்து இரவு தொடங்கி விட்டதால் வண்ண வண்ண விளக்குகள் வேறு மாளிகைகளை ஒளிமயமாக்கியிருந்தன. ஏழு நிலை மாடங்களில் கீழிருந்து மூன்றாவதாக அமைந்த மாடமும் அதைச் சார்ந்த அறைகளும் சுரமஞ்சரியின் புழக்கத்துக்கென அவள் தந்தையாரால் விடப்பட்டிருந்தன. 'இளங்குமரனைப் பின் தொடர்ந்து சென்றிருந்த வசந்தமாலை திரும்பி வந்திருந்தால் இந்த மூன்றாவது மாடத்துக்குள் தான் எங்கேயாவது இருப்பாள்' என்பது சுரமஞ்சரிக்குத் தெரியும். அன்று பிற்பகலில் ஓவியனிடம் வரைந்து வாங்கிய இளங்குமரனின் ஓவியத்தை இந்த மூன்றாவது மாடத்துக்குள் அமைந்திருந்த சித்திரச் சாலையில் தான் சுரமஞ்சரி வைத்திருந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சிறந்த ஓவியர்களிடமிருந்தும், இந்திர விழாக் காலங்களில் பல தேசங்களிலிருந்து பூம்புகாருக்கு வந்து போகும் ஓவியர்களிடமிருந்தும் வகைவகையான அபூர்வ ஓவியங்களையெல்லாம் வாங்கித் தனது சித்திரச் சாலையில் சேர்த்து வைத்திருந்தாள் சுரமஞ்சரி. அவளுடைய சித்திரச்சாலையை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும், ஓவியங்களில் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு விடலாம்.

'தோழி வசந்தமாலை இன்னும் வந்து சேர்ந்திருக்க வில்லையானால் நமது சித்திரச் சாலையில் போய் அவருடைய ஓவியத்தின் அழகை ஆர்வம் தீரக் கண்டு கொண்டே சிறிது நேரத்தைக் கழிக்கலாம்' என்ற எண்ணத்தோடு மூன்றாவது மாடத்துக்குள் நுழைந்தாள் சுரமஞ்சரி. தனக்குச் சொந்தமான அந்த மூன்றாவது அடுக்கு மாளிகையை மிக அலங்காரமாக வைத்துக் கொண்டிருந்தாள் அவள். மாளிகையின் முன் கூடத்தில் யாரும் இல்லாததால் வசந்தமாலை இன்னும் வந்து சேரவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். முன் கூடத்தை அடுத்து அவளுடைய இசைக் கருவிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கீதமண்டபமும் அதையடுத்து நாட்டியமாடும் காலத்தில் பயன்படுத்தும் நிருத்திய மண்டபமும் அணிமணிகள் உடைகள் புனைந்து கொள்ளும் தனியான அலங்கார மண்டபமும், இறுதியாகச் சித்திரச்சாலையும் அமைந்திருந்தன. இவ்வளவு இடங்களையும் கடந்து செல்ல வேண்டிய இறுதிப் பகுதியாக அமைந்திருந்த காரணத்தால் சுரமஞ்சரியோ, அவள் தோழியோ உடன் அழைத்துச் சென்றாலன்றி அவளுடைய சித்திரச் சாலைக்குள் பிறர் நுழைவது வழக்கமில்லை. 'வசந்தமாலை திரும்பி வருகிறவரை சித்திரச் சாலையில் பொழுதைக் கழிக்கலாம்' என்ற நினைப்புடன் தனிமை தந்த உல்லாசத்தில் ஒரு பாடலை மெல்ல இசைத்துக் கொண்டே கீதமண்டபத்தைக் கடந்து சித்திரச் சாலைக்குச் செல்வதற்காக மேலே நடந்தாள் சுரமஞ்சரி.

இதழ்களில் மெல்லிசை இழைந்து ஒலிக்க நடந்து சென்றவள் அலங்கார மண்டபம் முடிந்து சித்திரச் சாலைக்குள் இறங்கும் படி அருகிலேயே திகைத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாவிலிருந்து எழுந்த மெல்லிசை நின்றது. அவள் முகத்தில் வியப்பும் பயமும் நிறைந்தன. காரணம்? சித்திரச் சாலைக்குள்ளிருந்து மெதுவாகவும் மர்மமாகவும் பேசிக் கொள்ளுகிற ஆடவர் பேச்சுக் குரல் அவள் செவிகளை எட்டியது. 'நான் பேணிப் பாதுகாத்து வரும் என்னுடைய சித்திரச்சாலையில் சொல்லி அனுமதி பெறாமல் என் தந்தையார் கூட நுழைய மாட்டாரே? இப்படி நான் இல்லாத வேளையில் துணிந்து இங்கே நுழைந்திருக்கும் இவர்கள் யாராயிருக்கலாம்?' என்ற பயம் கலந்த சந்தேகத்துடன் ஓசைப்படாமல் சித்திரச் சாலைக்குள் இறங்கும் இரண்டாவது படியில் காலை வைத்து மெல்லத் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள் அவள்.

அப்படிப் பார்த்த பின் சுரமஞ்சரியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. 'தன்னுடைய அனுமதியின்றி அவரும் நுழைய மாட்டாரே' என்று சற்று முன் யாரைப் பற்றி அவள் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தாளோ, அவரே தான் அங்கே இளங்குமரனின் ஓவியத்துக்கு முன் நின்று கொண்டிருந்தார்! ஆம், அவளுடைய தந்தையார்தாம் நின்று கொண்டிருந்தார். பிற்பகலில் இளங்குமரன் சென்ற சிறிது நேரத்தில் நூறு பொற் கழஞ்சுகளைப் பெற்றுக் கொண்டு போயிருந்த ஓவியன் மணிமார்பனும் தன் தந்தைக்கு அருகில் இப்போது சித்திரச் சாலைக்குள் நிற்பதைக் கண்டாள் சுரமஞ்சரி. தம் கை ஊன்று கோலால் இளங்குமரனுடைய ஓவியத்தைச் சுட்டிக் காட்டி 'ஏதோ செய்யுமாறு' எதிரே பயந்து நடுங்கி நிற்கும் ஓவியனைத் தன் தந்தை மிரட்டுவதையும் படியில் நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி கண்டாள். 'பொற் கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு ஓவியன் போய்விட்டதாக தான் நினைத்துக் கொண்டிருந்ததுதான் தவறு. தந்தையார் ஏதோ ஓர் அந்தரங்க நோக்கத்துக்காக ஓவியனைத் தடுத்துத் தங்க வைத்திருக்க வேண்டு'மென்று அவளுடைய உள்ளுணர்வு அவளுக்குக் கூறியது. ஆனால் அது என்ன அந்தரங்கம் என்பதை மட்டும் அப்போது அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. சித்திரச்சாலையில் மேலும் என்னென்ன நிகழ்கின்றன என்பதை மறைந்திருந்து கவனிக்கலானாள் சுரமஞ்சரி.
--------------

முதல் பருவம். 1.14. செல்வ முனிவர் தவச்சாலை

'அருட்செல்வ முனிவரைக் காணவில்லை' என்பதால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் கலக்கத்தை உண்டாக்கியிருந்தன. அந்தக் கலக்கத்தினால்தான் போகும் போது இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருந்த தன் மகள் முல்லை திரும்பி நாளங்காடியிலிருந்து எவர் துணையுமின்றித் தனியே வந்ததைக் கூட அவர் கவனித்துக் கோபம் கொள்ளவில்லை. இல்லாவிட்டால் அவளைத் தனியே அனுப்பிவிட்டு எங்கோ போனதற்காக இளங்குமரனைப் பற்றி வாய் ஓய்வடையும் வரை வசைபாடித் தீர்த்திருப்பார் அவர்.

நாளங்காடியிலிருந்து முல்லை திரும்பி வந்து வீட்டுப் படி ஏறிய போது அவருடைய சிந்தனையாற்றல் முழுவதும் 'முனிவர் எதற்காக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று இங்கிருந்து கிளம்பிப் போனார்? அதுவும் ஏதோ சிறைப்படுத்தப் பட்டிருந்தவன் தப்பி ஓடிப் போகிறது போல் பின்புறத்து வழியாகத் தப்பிப் போக வேண்டிய அவசியமென்ன?' என்னும் வினாக்களுக்கு விடை காண்பதில் ஈடுபட்டிருந்தது.

அருட்செலவ முனிவர் தம் இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்றதற்குக் காரணத்தை அவரால் உறுதியாகத் தீர்மானம் செய்ய முடியவில்லையே தவிர 'இன்ன காரணமாகத்தான் இருக்கலாம்' என்று ஒருவாறு அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஏதாவது தூண்டிக் கேட்க ஆரம்பித்தாலே அவர் பயப்படுகிறார். அதில் ஏதோ ஒரு பெரிய மர்மமும் இரகசியமும் இருக்கும் போல் தோன்றுகிறது. இன்றைக்கு நான் அவரிடம் இளங்குமரனைப் பற்றிய பேச்சைத் தொடங்கியிராவிட்டால் இப்படி நேர்ந்திருக்காது. அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர் முகம் தான் எப்படி மாறிற்று! 'சில நிகழ்ச்சிகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்குக் கூட அச்சமாக இருக்கிறதே, வெளியே எப்படி வாய்விட்டுக் கூறமுடியும்?' என்று பதில் கூறும் போது முனிவரின் குரலில் தான் எவ்வளவு பீதி, எவ்வளவு நடுக்கம்! என்று நிகழ்ந்தவற்றைக் கோவையாக மீண்டும் சிந்தித்துப் பார்த்தார் வளநாடுடையார். இளங்குமரனைப் பற்றி முனிவரிடம் விசாரிக்க நேர்ந்த போதெல்லாம் பல முறைகள் இது போன்ற அனுபவங்களையே அடைந்திருக்கிறார் அவர்.

"இப்படியே முனிவரைக் காணவில்லை என்று பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது அப்பா? தேடுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா? இன்னும் சிறிது நேரத்தில் அண்ணனும் முனிவருடைய வளர்ப்புப் பிள்ளையாகிய அவரும் இங்கே வந்து விடுவார்களே? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?" என்று முல்லை கேள்வி கேட்ட போது தான் வளநாடுடையாருக்கும் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தது.

முனிவரைப் பற்றி முல்லை தன் மனத்துக்கு மட்டும் தெரிந்த உண்மை ஒன்றைத் தந்தையிடம் சொல்ல விரும்பவில்லை. அது போலவே தனிமையில் முனிவரிடம் தாம் கேட்ட கேள்விகளைப் பற்றியும் முனிவர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல அந்தக் கேள்விகளும் ஓரளவு காரணமாயிருக்கலாம் என்பதைப் பற்றியும் தந்தை மகளிடம் சொல்லவில்லை. முதல் நாள் நள்ளிரவில் முனிவருக்கும் இளங்குமரனுக்கும் நிகழ்ந்த உருக்கமான உரையாடலையும், அந்த உரையாடலின் போது முனிவர் துயரம் தாங்காமல் அழுததையும் அறிந்திருந்த முல்லை தன் தந்தையாரிடம் அவற்றைக் கூறியிருப்பாளாயின் அவருக்கு அவற்றைக் கொண்டு முனிவர் மேல் இன்னும் சில சந்தேகங்கள் கொள்ள இடம் கிடைத்திருக்கும். அதே போல் முனிவரிடம் தாம் தனிமையில் பேசிய பேச்சுக்களை வளநாடுடையார் தம் மகளிடம் கூறியிருந்தால் அவளுக்கு முனிவர் ஏன் ஓடிப் போனார் என்ற சந்தேகம் தீர்ந்து போயிருக்கும். இரண்டு காரியங்களுமே அப்படி நிகழாததனால் சந்தேகங்களும் குழப்பங்களும் இன்னும் அதிகமாயின.

"நானும் துணைக்கு வருகிறேன் அப்பா! புறப்படுங்கள், முனிவரைத் தேடிப் பார்க்கலாம்," என்று உடன் புறப்படத் தொடங்கிய முல்லையை வரவேண்டாமென மறுத்துவிட்டார் அவர்.

"நீ வேண்டாம் முல்லை! நானே மறுபடியும் போய் நன்றாகத் தேடிவிட்டு வருகிறேன். நம் வீட்டுப் பின்புறம் ஆரம்பமாகிற நெடுமரச் சோலை, சம்பாபதி வனம், சக்கரவாளக் கோட்டம் ஆகிய இடங்கள் வரை நெடுந்தொலைவு இடைவெளியின்றிப் பரந்து கிடக்கிறதே, இதில் எங்கேயென்று குறிப்பிட்டு அவரைத் தேடுவது?" என்று கூறிக்கொண்டே திண்ணையில் அடுக்கியிருந்த வேல்களில் ஒன்றை உருவினார் வளநாடுடையார். அந்த வேலை ஊன்றுந் துணையாகக் கொண்டு வீட்டின் பின் பக்கத்துத் தோட்ட வழியாக அவர் புறப்பட்ட போது பிற்பகல் நேரம் முதிரத் தொடங்கியிருந்தது.

முடிந்தவரை எல்லா இடங்களிலும் தேடி விட்டு இறுதியாகச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள அருட்செல்வ முனிவரின் தவச் சாலைக்கும் போய்ப் பார்த்துவிடலாம் என்பது கிழவர் வீரசோழிய வளநாடுடையாரின் எண்ணமாக இருந்தது. இளமையிலும் நடுத்தர வயதிலும் காவல் வீரனாகவும், காவற்படைத் தலைவனாகவும் அந்தப் பெருவனத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வேலும் கையுமாகச் சுற்றிய நினைவு வந்தது அவருக்கு. அப்போது சுற்றியதற்கும், இப்போது சுற்றுவதற்கும் இடையில் தான் எத்துணை வேறுபாடுகள்! வீரமும், மிடுக்கும், வலிமையும் கொண்டு சுற்றிய அந்தக் காலம் எங்கே? தளர்ந்த உடலோடு வேலை ஊன்றிக் கொண்டு நடக்கும் இந்தக் காலம் எங்கே? முல்லையின் தாயார் காலமாகும் வரையில் அவருக்கு மனத்தளர்ச்சி இருந்ததில்லை. முல்லையின் குழந்தைப் பருவத்தில் 'அவள்' காலமான போது அவருக்கு மனமும் தளர்ந்தது. அந்தச் சமயத்தில் கட்டிளம் காளையாக வளர்ந்திருந்த புதல்வன் கதக்கண்ணனைக் காவற்படை வீரனாகச் சோழ சைன்யத்தில் சேர்த்துவிட்டுத் தாம் வீட்டோடு இருந்து கொண்டார் அவர். அந்த நாளிலிருந்தே அருட்செல்வ முனிவரை அவருக்கும், அவரை அருட்செல்வ முனிவருக்கும் நன்றாகத் தெரியும். அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளையாகிய இளங்குமரனும் வளநாடுடையாரின் மூத்த மகனாகிய கதக்கண்ணனும் போர் முறைகளும் படைக்கலப் பயிற்சிகளும் பெறுகிற இளமையிலேயே சேர்ந்து கற்றவர்கள், சேர்ந்து பயின்றவர்கள். மருவூர்ப்பாக்கத்தில் 'நீலநாகர் படைக் கலச்சாலை' என்று ஒன்று இருந்தது. அந்தப் படைக்கலச் சாலையின் தலைவரான நீல நாக மறவர் பூம்புகாரிலேயே பெரிய வீரராகப் போற்றுதல் பெற்றவர். இளங்குமரனும் கதக்கண்ணனும் தங்களுடைய உடல் வலிமையை வளர்த்துக் கொள்வதற்குக் காரணமானவர் அந்த மறவர்தான். அந்த மறவரிடம் இளங்குமரனையும் கதக்கண்ணனையும் கொண்டு போய்ச் சேர்த்தது வள்நாடுடையார்தாம். அருட்செல்வ முனிவரைத் தேடிக் கொண்டு அலைந்த போது வளநாடுடையாருக்கு இந்தப் பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. கந்திற்பாவை கோட்டம், உலக அறவி, சம்பாபதி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் தேடி அலைந்து விட்டு அவற்றைச் சார்ந்திருந்த சக்கரவாளக் கோட்டத்தின் மதிலருகே வந்து நின்றார் வளநாடுடையார். மாலைப் போது நெருங்கிக் கொண்டிருந்தது. சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைவதற்கு நான்கு புறமும் வாயில்கள் உண்டு. செழுங்கொடிவாயில், நலங்கிளர்வாயில், வெள்ளிடைவாயில், பூதம் நின்ற வாயில் என்னும் நான்கு மாபெரும் வாயில்கள் சக்கரவாளக் கோட்டத்து நாற்புற மதில்களில் அமைந்திருந்தன. அவற்றுள் பூதம் நின்ற வாயில் வழியாக நுழைந்து போனால் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையை எளிதாக அடையலாம். பூதம் நின்ற வாயில் என்பது விநோதமான அமைப்பை உடையது. பெரிய பூதம் ஒன்று சிலை வடிவில் தன் இரண்டு கால்களையும் அகற்றி நிற்பது போல் அவ்வாயில் கட்டப்பட்டிருந்தது. வானளாவி நிற்கும் அந்த பூதச் சிலையின் இரு கால்களுக்கும் இடையேதான் கோட்டத்துக்குள் போவதற்கான சாலை அமைந்திருந்தது. தைரியமில்லாத மனங் கொண்டவர்கள் பூதம் நின்ற வாயிலில் நடந்து உள்ளே போகும் போது கூட அந்தச் சிலை அப்படியே கைகளை நீட்டித் தங்களை அமுக்கி விடுமோ என்று வீணாகப் பிரமை கொள்ள நேரிடும். அவ்வளவு பிரும்மாண்டமான அமைப்புடையது அந்த வாயில். அதைப் பார்த்துக் கொண்டு நின்றால் கால்களிடையே வழி கொடுத்துக் கொண்டே பூதம் நகர்ந்து வருவது போலவே தொலைவில் தோன்றும். வீரசோழிய வளநாடுடையார் பூதம் நின்ற வாயிலின் வழியே சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைந்தார். அந்த மாலை நேரத்தில் அருட்செல்வ முனிவரின் தவச்சாலையும் அதைச் சூழ்ந்திருந்த மலர் வனமும், ஆளரவமற்ற தனிமையில் மூழ்கித் தோற்றமளித்தன. 'அருட்செல்வ முனிவரே' என்று இரைந்து கூவியழைத்தவாறே தவச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றிச் சுற்றி வந்தார் வளநாடுடையார். அவர் உரத்த குரலில் கூப்பிட்ட முனிவரின் பெயர்தான் அந்த வனத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திரும்பத் திரும்ப எதிரொலித்ததே தவிர, வேறு பதில் இல்லை. தவச்சாலையின் ஒரு பகுதியில் சுவடிகளை விரித்து வைத்து அருகில் தீபமும் ஏற்றி வைக்கப்பட்டிருந்ததால் மாலைப்போது நெருங்குகிற அந்த வேளையில் யாரோ அங்கு வந்திருக்கிறார்களென்பதை வளநாடுடையாரால் புரிந்து கொள்ள முடிந்தது. 'சுவடிகள் தாமாக விரிந்துக் கொண்டு கிடக்கப் போவதில்லை. தீபமும் தானாக ஏற்றிக் கொண்டு ஒளிதரப் போவதில்லை! யாரோ இப்போது இங்கே இருக்கிறார்கள்! ஆனால் என் முன்னால் வரத் தயங்குகிறார்கள்' என்று சந்தேகங் கொண்டார் வளநாடுடையார். 'சுவடிகளைப் படிக்க ஏற்ற முறையில் விரித்துத் தீபமும் ஏற்றி வைத்தவர், தாம் அங்கே வந்து நுழைவதைப் பார்த்து விட்டு வேண்டுமென்றே தமக்காகவே மறைந்திருக்கலாமோ?' என்று தோன்றியது வளநாடுடையாருக்கு. மறைந்திருக்கும் ஆளை வெளியே வரச் செய்வதற்காக மெல்ல ஒரு தந்திரம் செய்தார் வளநாடுடையார்.

"சரிதான் இங்கு எவரையும் காணவில்லை. நாம் வந்த வழியே திரும்பிப் போக வேண்டியதுதான். முனிவரை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" - என்று சற்று இரைந்த குரலில் தமக்குத் தாமே சொல்லிக் கொள்கிறாற் போல் சொல்லிக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடந்தார் என்பதை விட வேகமாகத் திரும்பிச் செல்வது போல் போக்குக் காட்டினார் என்பதே பொருந்தும்.

வளநாடுடையார் நினைத்தது நடந்தது. அவர் தவச்சாலையின் வாயில்வரை வேகமாக நடந்து போய்த் திடீரென்று நடையை நிறுத்தி மெல்லத் திரும்பவும் அந்தச் சுவடிக்கும் தீபத்துக்கும் அருகில் யாரோ வந்து உட்காரவும் சரியாக இருந்தது. திரும்பியும் திரும்பாமலும் அரைகுறையாக ஓரக்கண்ணால் பார்க்க முயன்ற அந்தப் பார்வையால் வந்து உட்கார்ந்த ஆளை அவரால் நன்றாகக் காண முடியவில்லை.
--------------

முதல் பருவம். 1.15. இளங்குமரன் ஆவேசம்

பட்டினப்பாக்கத்துப் பெருவீதியின் திருப்பத்தில் இளங்குமரனைக் கண்டதும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் குதிரைகளை நிறுத்திக் கீழே இறங்கிச் சூழ நின்று கொண்டார்கள். எதிர்பாராத நிலையில் அவர்களை அங்கே சந்தித்த வியப்பு அடங்கச் சில வினாடிகள் ஆயிற்று இளங்குமரனுக்கு.

"கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் என்று பழமொழி கூறுவார்கள். இளங்குமரா! நாங்கள் உன்னைத் தேடித்தான் வந்து கொண்டிருக்கிறோம். அதற்குள் நீயே எதிரே வந்துவிட்டாய். உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன" என்று பேச்சைத் தொடங்கினான் கதக்கண்ணன். அதைக் கேட்டு இளங்குமரன் சிரித்துச் சொல்லலானான்:

"நான் தெய்வமும் இல்லை; நீங்கள் என்னைக் கும்பிடுவதற்காகத் தேடி வரவும் இல்லை. நான் மட்டும் தெய்வமாயிருந்தால் இந்தப் பட்டினப்பாக்கம் என்னும் அகநகரத்தை இப்படியே அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்க் கிழக்கே கடலில் மூழ்கச் செய்துவிடுவேன். இங்கே பெரிய மாளிகைகளின் அகன்ற இடங்களில் சிறிய மனிதர்கள் குறுகிய மனங்களோடு வாழ்கிறார்கள். இவர்கள் பார்வை, பேச்சு, நினைவு, செயல் எல்லாவற்றிலும் சூழ்ச்சி கலந்திருக்கிறது; சூது நிறைந்திருக்கிறது."

ஆத்திரத்தோடு இவ்வாறு கூறிக் கொண்டே பின்புறம் திரும்பி யாருடைய வரவையோ எதிர்பார்க்கிறாற் போல் நோக்கினான் இளங்குமரன். ஆனால் பின்புறம் ஒன்றன் பின் ஒன்றாக வீதியைக் கடந்து சென்று கொண்டிருந்த இரண்டு மூன்று தேர்களின் தோற்றம் அவன் பார்வையை அப்பால் சென்று காண முடியாமல் தடுத்து விட்டது. கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் இளங்குமரனின் பார்வை யாரைத் தேடி ஆத்திரத்தோடு அவ்வாறு பின்புறம் திரும்புகின்றதென்று தெரியாமல் மயங்கினர். அப்போது "வா, அப்பனே! நன்றாகப் பின் தொடர்ந்து வா. ஒரு கண்ணோடு இன்னொரு கண்ணையும் பொட்டையாக்கி முழுக்குருடனாகத் திருப்பி அனுப்பி வைக்கிறேன்" என்று பின்புறம் திரும்பி நோக்கியவாறே இளங்குமரன் மெல்லக் கறுவிக் கொண்டு முணுமுணுத்த சொற்களை அவனுக்கு மிகவும் அருகில் நின்ற கதக்கண்ணன் கேட்க முடிந்தது. பட்டினப்பாக்கத்தில் இளங்குமரனுக்கு ஆத்திரமூட்டக்கூடிய அனுபவங்கள் எவையேனும் ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கதக்கண்ணன் நினைத்துக் கொண்டான். இளங்குமரனுக்கு அப்போது நல்ல பசி. பசியின் வேதனையும் ஆத்திரத்தோடு சேர்ந்து கொண்டிருந்தது. நாளங்காடியிலிருந்து தொடர்ந்து ஏற்பட்ட அநுபவங்களால் அவனுக்கு உண்டாகியிருந்த இனம் புரியாத மனக்கொதிப்பும் சேர்ந்து சினமாக மூண்டிருந்தது. பின் தொடர்ந்து வந்த ஒற்றைக் கண்ணன் அருகில் வந்திருந்தால் தனக்கு இப்போதிருந்த சினத்தில் அவனைப் பந்தாடியிருப்பான் இளங்குமரன். அருகில் தென்படாததால் அந்த ஒற்றைக்கண் மனிதன் பிழைத்தான். குதிரைகளையும் அருகில் நடத்திக் கொண்டு இளங்குமரனோடு மேலே தொடர்ந்து நடந்தார்கள் நண்பர்கள். சிறிது தொலைவு சென்றதும், "நேற்று இரவில்" என்று தொடங்கி எதையோ அவசரமாகச் சொல்ல முற்பட்டான் கதக்கண்ணன். ஆனால் இளங்குமரன், "அதைப் பற்றி இப்போது இங்கே சொல்ல வேண்டாம். பிறகு தனியே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்" என்று கூறி மேலே பேசவிடாமல் கதக்கண்ணனின் நாவை அடக்கி விட்டான். நெருங்கிய நண்பர்களாகிய தாங்கள் உடனிருக்கும் போது இளங்குமரன் இப்படி நடந்து கொண்டதைக் கண்டு நண்பர்கள் சிறிது திகைப்படைந்தனர்.

"இங்கே பட்டினப்பாக்கத்துக்கு நான் வந்திருக்கிறேனென்று உங்களுக்கு யார் கூறினார்கள்?" என்று இந்தக் கேள்வியை இளங்குமரன் கேட்கும் போது வேறு கவனங்களிலிருந்து நீங்கி முற்றிலும் நண்பர்கள் பக்கம் கவனித்தவனாகத் தோன்றினான். நாளங்காடிப் பூத சதுக்கத்தில் முல்லையைச் சந்தித்ததையும், அவளிடமிருந்து விவரமறிந்து கொண்டதையும் கதக்கண்ணன் இளங்குமரனுக்குச் சொன்னான்.

"கதக்கண்ணா! நானும் முல்லையும் நாளங்காடிக்குப் புறப்படும் போதே உன் தந்தையார் கவலை கொண்டார். நான் இறுதி வரையில் முல்லைக்குத் துணையாயிராமற் போய் விடுவேனோ என்று அவர் பயந்ததற்கு ஏற்றாற் போலவே நடந்துவிட்டது. பூத சதுக்கத்தில் நின்று கொண்டிருந்த போது யாரோ ஒரு கலைஞனுக்கு இரக்கம் காட்டப் போய் எப்படி எப்படியோ வம்புகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்து விட்டது. முல்லையைத் தனியே விட்டுவிட்டு அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே நான் பட்டினப்பாக்கம் போகும்படி ஆகிவிட்டது. பாவம்! முல்லைக்கு என் மேல் பெருங்கோபம் ஏற்பட்டிருக்கும்; உன் தந்தையாரிடத்தில் போய் நடந்ததையெல்லாம் சொல்லியிருக்கப் போகிறாள். அவர் முனிவரிடம் என்னைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருப்பார். என் மேல் ஆத்திரத்தோடு உன் தந்தையார் என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பார்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கதக்கண்ணனிடம் கூறினான் இளங்குமரன்.

"தந்தையார் உன் மேல் சினம் கொள்ளும்படியாக முல்லை ஒன்றும் சொல்லியிருக்க மாட்டாள். இளங்குமரா! உன்னை அவர் கோபித்துக் கொள்ளக் கூடாதென்பதில் உனக்கு எவ்வளவு கவலை உண்டோ, அதைக் காட்டிலும் அதிகமாக முல்லைக்கும் உண்டு என்பதை நான் அறிவேன்" என்று ஆறுதலாக மறுமொழி கூறினான் கதக்கண்ணன். மேலே அவனே கூறலானான்: "இளங்குமரா, இந்திர விழாவின் இரண்டாம் நாளாகிய இன்றைக்கு நானும் நம் நண்பர்களும் உன் நலனைக் கருதி உன்னிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கலாமென நினைக்கிறோம். நீ அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்."

"உங்கள் வேண்டுகோள் இருக்கட்டும்! அதை அப்புறம் பார்க்கலாம். இந்தக் கணமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசர வேண்டுகோள் ஒன்று எனக்கு இருக்கிறது. அது நிறைவேறா விட்டால் நடந்து கொண்டிருக்கும் போதே எங்கேயாவது மயங்கி விழுந்து விடுவேன் நான். ஒரே ஒரு முறை தான் சொல்வேன். ஒரு விநாடிதான் சொல்வேன். இதோ கேளுங்கள் நண்பர்களே! மறுமுறை கேட்டால் சொல்லமாட்டேன்" - என்று இரைந்து சொல்லிக் கொண்டே வந்த இளங்குமரன் குரலைச் சிறிதாக்கிக் கொண்டு இதழ்களில் குறுநகை இலங்க மெல்ல நண்பர்களைப் பார்த்துக் கூறினான்: "இப்போது அடியேனுக்கு நல்ல பசி. வயிறு பஞ்சாய்ப் பறக்கிறது."

இளங்குமரன் என்ன பெரிய வேண்டுகோள் விடுக்கப் போகிறானோ என்று திகைத்திருந்த நண்பர்கள் இதைக் கேட்டு உரக்கச் சிரித்தார்கள். இளங்குமரனுக்கு நண்பர்களும் உற்சாகமும் சேர்ந்து வந்து சந்தித்து விட்டால் இப்படித்தான் நகைச்சுவை பிறக்கும். புதுமையான பேச்சுக்களும் புறப்படும்.

"கதக்கண்ணா! இன்றைக்கு இந்த வம்பெல்லாம் வந்து சேராமல் நாளங்காடியிலிருந்து நேரே முல்லையோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தேனானால் மோர்க் குழம்பும், பொரியலுமாக அற்புதமான விருந்து கிடைத்திருக்கும். நான் மிகவும் துர்பாக்கியசாலியாகி விட்டேன் நண்பர்களே! முல்லை கையால் மோர்க் குழம்பும் உணவும் இன்றைக்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அடடா, முல்லையின் மோர்க் குழம்பு இன்றைக்கெல்லாம் கையில் மணந்து கொண்டிருக்குமே" என்று கூறிக் கொண்டே இளங்குமரன் நாக்கைச் சப்புக் கொட்டின போது நண்பர்களுக்கெல்லாம் நாவில் சுவை நீர் ஊறியது.

"என் தங்கை படைக்கும் மோர்க் குழம்பு நன்றாக இருக்குமோ இல்லையோ; நீ அதைப் பற்றிச் சொல்வது மிக நன்றாக இருக்கிறது. இப்போது இதைக் கேட்ட நண்பரெல்லாம் என் வீட்டுக்கு முல்லையின் மோர்க்குழம்பை நினைத்துக் கொண்டு முற்றுகையிட்டு விட்டால் என் கதி என்ன ஆவது?" என்று கூறிக்கொண்டே இளங்குமரன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்த கதக்கண்ணன் அவனுடைய பார்வையும் குறிப்பும் வீதியின் பின் பக்கம் சென்று திரும்புவதைக் கவனிக்கத் தவறவில்லை. வெளியில் மிகவும் சர்வ சாதாரணமாகச் சிரித்துப் பேசிக் கொண்டே உள்ளே தீவிரமாக எதையேனும் சிந்தித்துக் கொண்டிருக்கும் தன்மை இளங்குமரனுக்கு உண்டு என்பது கதக்கண்ணனுக்குத் தெரியும். எந்நேரமும் கண்களிலும், பார்வையிலும், இதழ்களிலும் நகை நயம் விளங்க மலர்ந்து தோன்றும் இளங்குமரன் முகத்தில் இப்போது பசி வாட்டமும், சோர்வும் தெரிவதையும் கதக்கண்ணன் கண்டான். சில சமயங்களில் தன்னுள்ளே ஓடும் நினைவுப் புயலின் வேகத்தை வெளியே தெரியவிடாமல் மறைக்கும் சாதனமாக இந்தச் சிரிப்பையும், கலகலப்பான பேச்சையும் பயன்படுத்தும் வழக்கமும் இளங்குமரனுக்கு உண்டு என்பதையும் கதக்கண்ணன் அறிவான்.

"என்னவோ வேண்டுகோள் விடுக்கப் போவதாகச் சிறிது நேரத்துக்கு முன் கூறினாயே, கதக்கண்ணா!"

தன்னுடைய நினைவுகளிலிருந்தும் வேறு கவனத்திலிருந்தும் விடுபட்டு வந்தவனாக உடன் வந்த கதக்கண்ணன் பக்கமாகத் திரும்பி இந்தக் கேள்வியைக் கேட்டான் இளங்குமரன். இதற்கு உடனே பதில் கூறாமலே தன்னுடன் வந்த மற்ற நண்பர்களின் முகங்களைப் பார்த்தான் கதக்கண்ணன். அப்படிப் பார்த்தவுடனே நண்பர்களில் சிலர் கதக்கண்ணனைச் சிறிது தொலைவு விலக்கி அழைத்துக் கொண்டு போனார்கள். பின்பு திரும்பி வந்து மீண்டும் எல்லாருடனும் கலந்து கொண்டார்கள். நண்பர்களின் அந்தச் செயல் இளங்குமரனுக்குப் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தது.

"இளங்குமரா! நம் ஆசிரியர்பிரானிடம் இன்று காலையில் நண்பர்கள் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர் உன்னை இன்று பிற்பகலுக்குள் சந்திக்க விரும்புகிறாராம்."

"யார்? நீலநாக மறவரா?"

"ஆம்! இப்போது நாம் நீலநாக மறவருடைய படைக்கலச் சாலைக்குத் தான் போய்க் கொண்டிருக்கிறோம்."

"நீலநாக மறவருடைய படைக்கலச்சாலைக்குப் போவதற்கும் நீ இப்போது என்னிடம் கூறுவதற்கிருந்த வேண்டுகோளுக்கும் என்ன தொடர்பு?"

"அந்த வேண்டுகோளை இப்போது இங்கே பொது இடமான நடுவீதியில் வைத்துக் கொண்டு உன்னிடம் கூறுவதை விடப் படைக்கலச்சாலைக்குச் சென்றபின், நீலநாக மறவரே உனக்குத் தெளிவாக எடுத்துக் கூறும்படி செய்யலாம் என்று நண்பர்கள் கருதுகிறார்கள்."

"நண்பர்கள் கருதுவதைப் பற்றி எனக்கு மகிழ்ச்சிதான். என்னிடம் சொல்லாமலே என்னென்னவோ திட்டமிட்டுக் கொண்டு செய்கிறீர்கள். எனக்குக் கெடுதலாக ஒன்றும் செய்து விட மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்பலாம். ஆனால் ஒன்றுமட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கவலைப்பட்டுப் பயந்து கொண்டிருப்பது போல் இந்தப் பெரிய நகரத்தின் இருண்ட வனங்களிலோ, ஆள் பழக்கமற்ற கடற்கரை ஒதுக்கங்களிலோ, 'இளங்குமரனை' யாரும் அவ்வளவு எளிதாகக் கொன்று போட்டு விட முடியாது..."

இப்படி இந்த வாக்கியத்தின் அமங்கலமான கடைசிப் பகுதியை இளங்குமரன் சொல்லி முடிப்பதற்குள் கதக்கண்ணன் அருகில் வந்து அவன் வாயைப் பொத்தி விட்டான்.

"பித்தனைப் போல இதென்ன பேச்சு, இளங்குமரா? உன் மேல் அன்பும் பற்றும் உள்ளவர்கள் உனக்காக அநுதாபப்படுவதற்குக் கூட உரிமையற்றவர்களா? அந்த அநுதாபத்தையும் அக்கறையையும் நீ ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறாய்?"

"சில சமயங்களில் என் மேல் அநுதாபப்படுகிறவர்களுக்காக நானே அனுதாபப்படும்படி நேர்ந்து விடுகிறது. என்னைக் கோழையாக்க முயல்கிற அனுதாபத்தை நான் ஒப்புக் கொள்ள முடிவதில்லை! என்னைப் பற்றி எனக்கு என் மனத்தில் எவ்வளவு தன்னம்பிக்கையும் உரமும் உண்டோ, அதில் அரைப் பகுதியாவது மற்றவர்களுக்கும் இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறவன் நான். அப்படி இருந்தால் தான் மற்றவர்கள் என்னைத் தைரியமுள்ள மனிதனாக நினைக்கிறார்களென்று நான் பெருமைப்படலாம். நீங்கள் எல்லோரும் என் அன்புக்குரியவர்கள். பெரு வீரராகிய நீலநாக மறவர் என் மதிப்புக்குரியவர். எனக்கும் உங்களுக்கும் படைக்கலப் பயிற்சியும், போர்த்துறைக் கலைகளும் கற்பித்த ஆசிரியர்பிரான் அவர். ஆனால் அதற்காக அவரும் நீங்களும் சேர்ந்து கொண்டு என்னைத் தெருவில் திரியும் சிறு பிள்ளையாக எண்ணி எனக்கு அனுதாபப்படுவதை நான் ஏற்பதற்கில்லை."

வலது கையை மேலே தூக்கி ஆட்டிக் கொண்டே ஆவேசத்தோடு பேசினான் இளங்குமரன். அப்போது அந்த நிலையில் அவனை எதிர்த்துப் பேசி மறுமொழி சொல்வதற்கே தயங்கி அஞ்சினார்கள் நண்பர்கள். இதன்பின் பட்டினப்பாக்கத்து எல்லை கடந்து மருவூர்ப்பாக்கத்துக்குள் நுழைகிற வரை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.

இப்போது அவர்கள் மருவூர்ப்பாக்கத்தில் நீலநாக மறவரின் மிகப்பெரிய படைக்கலச் சாலையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். மெல்ல மறுபடியும் இளங்குமரனிடம் பேச்சைத் தொடங்கினான் கதக்கண்ணன்.

"பசிக் கோபத்தில் ஏதேதோ பேசிவிட்டாய், இளங்குமரா! ஆசிரியர் பிரானிடமும் அப்படி ஏதாவது ஆத்திரப்பட்டுப் பேசிவிடாதே."

"பசிக் கோபமல்ல நண்பனே! கோபப்பசி என்றே வைத்துக் கொள்" என்று பழைய வேகம் குறையாமல் பதில் வந்தது இளங்குமரனிடமிருந்து.

"எதுவாயிருந்தாலும் இருக்கட்டும். ஆசிரியர்பிரானைச் சந்தித்ததும் உன்னுடைய வயிற்றுப் பசி, பசிக்கோபம், கோபப்பசி எல்லாமே நீங்கி விடுகின்றனவா இல்லையா பார்" என்று நகைத்தபடி சொன்னான் கதக்கண்ணன்.
--------------

முதல் பருவம். 1.16. திரை மறைவில் தெரிந்த பாதங்கள்

சித்திரச்சாலைக்குள் அந்த எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத தனிமை நிலையில் இளங்குமரனுடைய படத்துக்கு முன்னால் தன் தந்தைக்கும் ஓவியனுக்குமிடையே நிகழும் பேச்சு என்னவாயிருக்கும் என்பதை அறிந்து கொண்டு விடுவதற்குத் தன்னால் ஆனமட்டும் முயன்றாள், படியோரத்தில் மறைந்து நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி. தன் செவிகளின் கேட்கும் ஆற்றலை எவ்வளவுக்குக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முடியுமோ அவ்வளவுக்குக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முயன்றாள் அவள். சற்றுமுன் நிலா முற்றத்தில் இருந்த போது தென்றலையும், பால் மழை பொழிவது போல் வெண்மதி தவழும் வானத்தையும், தன் சகோதரியின் இன்னிசையையும் எண்ணி எண்ணி இன்பத்தில் மூழ்கினவளாய் அந்த இனிமை நினைவுகளின் எல்லையாய் இளங்குமரன் என்னும் பேரினிமை நினைவில் திளைத்து மகிழ்ந்த சுரமஞ்சரி இப்போது சித்திரச்சாலையின் படியருகே அச்சமும் திகைப்பும் கொண்டு நின்றாள். என்னென்னவோ நிகழக் கூடாதனவும் நிகழத்தகாதனவுமாகிய நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்கி விட்டாற் போல் அவள் மனத்துக்குள் ஒரு விதமான திகில் சூழ்ந்தது. வெள்ளை விழியும் கருவட்டமுமாகப் பிறழ்ந்து பிறழ்ந்து கொள்ளையழகோடு பார்க்கும் அவளுடைய மைதீட்டிய நளின நயனங்கள் இப்போது பயத்தால் மிரண்டு விரிந்தன.

பெருமுயற்சி செய்தும் தந்தையாரும் ஓவியனும் பேசிக் கொண்டதை அவள் முற்றிலும் அறிய இயலவில்லை. சில சில சொற்கள் தாம் இடையிடையே கேட்க முடிந்தன. ஆனால் அவள் நின்று கொண்டு பார்த்த இடத்திலிருந்து தந்தையின் விலாப்புறமும் ஓவியனின் முன் தோற்றமும் தெரிந்ததனால் தந்தை ஊன்றுகோலால் இளங்குமரனின் ஓவியத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ செய்யச் சொல்லித் தூண்டுவதாகவும் அப்படி அவர் எதைச் செய்யச் சொல்லுகிறாரோ அதைச் செய்வதற்கு ஓவியன் அஞ்சித் தயங்குவதாகவும் புரிந்து கொள்ள முடிந்தது. வாயிலோரத்துப் படி விளிம்பில் வலது காற்பெருவிரலை அழுத்தி ஊன்றி அதன் பலத்தில் நின்று கொண்டு தலையை நீட்டிப் பார்ப்பது சிறிது கால் இடறினாலும் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அப்போது அங்கு வந்து நின்று, தான் மறைந்து கவனித்துக் கொண்டிருப்பது தந்தையாருக்குத் தெரிந்தால் அதன் விளைவு எவ்வளவு விரும்பத்தகாததாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.

காற்பெருவிரல் வலிக்காமல் இருப்பதற்காகத் தலையைப் பின்னுக்குத் திரும்பி உட்புறம் எட்டிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு வாயிலுக்கு இப்பால் விலகி நன்றாக நின்று கொண்டாள் சுரமஞ்சரி. உட்பக்கம் நிகழ்வதைக் காணாமல் இப்படிச் சிறிது நேரம் விலகி நின்று விட்டுப் பின்பு மறுபடியும் அவள் உட்பக்கம் பார்த்த போது ஓவியனின் முகம் முன்னைக் காட்டிலும் பயந்து வெளிறிப் போயிருந்ததைக் கண்டாள். அவனுடைய முகம் அவ்வாறு பயந்து வெளிறிப் போவதற்குக் காரணமாக உட்பக்கத்தில் தான் பார்க்காத போது என்ன நடந்திருக்கக் கூடும் என்பதைச் சுரமஞ்சரியால் அப்போதிருந்த குழப்பமான மனநிலையில் அநுமானம் செய்ய முடியவில்லை. ஆனால், ‘ஏதோ நடந்திருக்கிறது, நடந்திருக்க வேண்டும்’ என்று தேற்றமாகத் தெரிந்தது. ஒன்றும் விளங்காமல் மேலும் குழம்பினாள் சுரமஞ்சரி.

இதற்குள் சித்திரச்சாலைக்குள் நிற்கும் தந்தையும் ஓவியனும் அங்கிருந்து வெளியே புறப்படுவதற்குச் சித்தமாகிவிட்டாற் போல் தெரிந்தது. ‘இனிமேல் தான் அங்கே படியோரமாக நின்று கொண்டிருப்பது கூடாது’ என்று முடிவு செய்து கொண்டவளாக அடிமேல் அடி வைத்து மெல்ல நடந்து தனது அலங்கார மண்டபத்தில் உடை மாற்றிக் கொள்வதற்கென அமைந்திருந்த தனிமையான பகுதிக்குள் புகுந்தாள் சுரமஞ்சரி. அங்கே புகுந்து மறைந்து கொள்வதனால் அப்போது அவளுக்கு இரண்டு விதமான நன்மைகள் இருந்தன. முதல் நன்மை தந்தையார் திரும்பிச் செல்லும் போது அந்தப் பகுதிக்கு வரமாட்டார். இரண்டாவது நன்மை அப்படியே நேரே போக வேண்டிய அவர் அந்தப் பகுதிக்கு வந்துவிட்டாலும் அவள் தனிமையாக அலங்காரம் செய்து கொள்வதற்குரிய பகுதியில் அவள் இருப்பதைப் பார்த்து, ‘இப்போது நீ இங்கே ஏன் வந்தாய்’ என்றோ வேறு விதமாகவோ கேட்டு அவர் அவளைச் சினந்து கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அணியறைக்குள் புகுவதிலுள்ள இரு நன்மைகளையும் நினைத்தவாறே புகுந்த சுரமஞ்சரிக்கு அங்கே இன்னும் ஒரு பேராச்சரியம் காத்திருந்தது.

அறைக்குள் தோழிப் பெண் வசந்தமாலை ஓசைப்படாமல் திரும்பி வந்து குத்துக்கல் போல் சிலையாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். அப்போது சுரமஞ்சரியைக் கண்டதில் வசந்தமாலைக்கு வியப்பு அதிகமா, வசந்தமாலையைக் கண்டதில் சுரமஞ்சரிக்கு வியப்பு அதிகமா என்று ஒப்பிட்டுச் சொல்ல முடியாமல் வியப்புக்களே எதிரெதிரில் சந்தித்துக் கொண்டது போல் அமைந்தது அந்தச் சந்திப்பு. தன் வாயிதழ்களின் மேல் ஆள் காட்டி விரலை வைத்துப் ‘பேசாமலிரு’ என்னும் பொருள் தோன்ற வசந்தமாலை சைகை செய்த அதே சமயத்தில் அதே போன்றதொரு சைகையைச் சுரமஞ்சரியும் வசந்தமாலைக்குக் காட்டிக் கொண்டே அருகில் வந்தாள்.

சித்திரச்சாலையிலிருந்து வெளியேறி தந்தையும் ஓவியனும் நடந்து செல்லும் காலடி ஓசை அறைக்குள் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. அந்தக் காலடியோசை வெளியே நடந்து சென்று ஒலி தேய்ந்து மங்கியது. “நீ எப்போதடி இங்கு வந்தாய்?” என்று வசந்தமாலையைக் கேட்டாள் சுரமஞ்சரி.

“நான் வந்து அரை நாழிகைக்கு மேலாகி விட்டதம்மா. நீங்கள் இருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்தேன். சித்திரச் சாலைக்குள் தந்தையாரையும் ஓவியனையும் பார்த்த பின் எனக்கு பயமாயிருந்தது. வெளியே போகலாமென்றால் அதற்குள் உங்கள் தந்தையார் வந்துவிடுவாரோ என்று அச்சமாயிருந்தது. நடுக்கத்தோடு பேசாமல் இந்த அறைக்குள் வந்து பதுங்கி விட்டேனம்மா” என்று இன்னும் அந்த நடுக்கம் குன்றாமலே பதில் கூறினாள் தோழிப் பெண் வசந்தமாலை.

“நீ போன காரியம் என்ன ஆயிற்று, வசந்தமாலை? அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே நீ!”

“அதையேன் கேட்கிறீர்கள், அம்மா! நீங்கள் குறிப்புக் காட்டினீர்களே என்று நான் அவரைப் பின் தொடர்வதற்குப் போனேன். ஆனால் எனக்கும் முன்பாகவே உங்கள் தந்தையார் அவரைப் பின் தொடரச் சொல்லி ஆள் நியமித்திருக்கிறாரேயம்மா!”

இதைக் கேட்டதும் சுரமஞ்சரியின் முகம் இருண்டது. ‘தந்தையார் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?’ என்ற கேள்வி அவள் நெஞ்சத்தில் பெரிதாக எழுந்தது.

“அவரைப் பின் தொடர்வதற்குத் தந்தையார் அனுப்பியிருந்த ஆள் யாரென்று உனக்குத் தெரியுமா வசந்தமாலை?”

“தெரியாமலென்ன? நன்றாகத் தெரியும் அம்மா! உங்கள் தந்தையார் வாணிகத்துக்காகச் சீனம், யவனம் முதலிய தொலை தூரத்து நாடுகளுக்குக் கடற்பயணம் செய்யும் போதெல்லாம் தவறாமல் உடன் அழைத்துக் கொண்டு போவாரே அந்த ஒற்றைக் கண் மனிதர்தான் அவரைப் பின் தொடர்ந்தார்.”

“யார்? நகைவேழம்பரையா சொல்லுகிறாய்? அவரை இப்படிப்பட்ட சிறிய வேலைகளுக்கெல்லாம் தந்தையார் அனுப்புவது வழக்கமில்லையே!”

“நானென்ன பொய்யா சொல்லுகிறேன்? என்னுடைய இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்த்ததைத் தானே சொல்லுகிறேனம்மா. அவருக்குப் பின்னால் நானும் தொடர்ந்து வருகிறேன் என்பதை திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு நகைவேழம்பருடைய ஒற்றைக்கண்ணால் முடிந்ததோ இல்லையோ, நான் அவரை நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொண்டு விட்டேன். அந்த ஒற்றைக்கண் முகத்தின் இலட்சணத்தைத்தான் ஆயிரம் பேர்கள் கூடிய கூட்டத்துக்கு நடுவில் பார்த்தாலும் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள முடியுமே!”

“அதிருக்கட்டும். நீ திரும்பி வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமாயிற்று? அவர் வசிக்குமிடம் இங்கிருந்து நெடுந்தொலைவில் இருக்கிறதோ?”

“அதைத்தான் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் பின் தொடர்ந்து சென்று பார்த்த மட்டில் சொல்லுகிறேன், மருவூர்ப்பாக்கத்திலுள்ள படைக்கலச் சாலைக்குள் அவரும், அவருடைய நண்பர்களும் நுழைந்தார்கள். அந்திப்போது வரை காத்திருந்தும் அவர்கள் அங்கிருந்து வெளியே வரவில்லை. அதற்குமேலும் காத்திருப்பதில் பயனில்லை என்று திரும்பி விட்டேன். ஒருவேளை அந்தப் படைக்கலச் சாலையில் தான் அவர் வசிக்கிறாரோ என்னவோ?”

“இருக்கலாம், ஆனால் யாரோ நண்பர்களோடு படைக்கலச் சாலைக்குள் நுழைந்தாரென்று சொல்லுகிறாயே! அவர் இந்த மாளிகையிலிருந்து வெளியேறிச் செல்லும் போது தனியாக அல்லவா சென்றார்?”

“நடுவழியில் அவருடைய நண்பர்கள் போலத் தோன்றிய சிலர் அவரோடு வந்து சேர்ந்து கொண்டார்கள், அம்மா! நண்பர்களில் சிலரை நேற்றுக் கடற்கரையில் மற்போரின் போது அவருடன் சேர்த்துப் பார்த்ததாக எனக்கு நினைவிருக்கிறது.”

“நகைவேழம்பரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றதாகக் கூறினாயே வசந்தமாலை! அவரும் நண்பர்களும் படைக்கலச் சாலைக்குள் நுழைந்த போது நகைவேழம்பர் என்ன செய்தார்? அவர்களைப் பின் தொடர்ந்து அவரும் உள்ளே சென்றாரா? அல்லது உன்னைப் போலவே அவரும் வெளியில் தங்கி விட்டாரா?”

“அதுதானம்மா எனக்குத் தெரியவில்லை! அவர்கள் படைக்கலச் சாலைக்குள் நுழைவதை நகைவேழம்பரும் கவனித்தார். அவர் கவனிப்பதை நானும் பார்த்தேன். ஒரு விநாடி எங்கோ கவனக்குறைவாகப் பராக்குப் பார்த்துவிட்டு மறுபடியும் திரும்பி நான் பார்த்த போது நகைவேழம்பரை அவர் முன்பு நின்று கொண்டிருந்த இடத்தில் காணவில்லை. அதற்குள் எப்படியோ மாயமாக மறைந்து போய்விட்டார் அந்த ஒற்றைக்கண் மனிதர். ஒரு கணப்போதில் அவர் எங்கே மறைந்தாரென்பது எனக்குப் பெரிதும் ஆச்சரியமாயிருக்கிறது அம்மா!”

“ஆச்சரியத்துக்குரியது அது ஒன்று மட்டுமில்லை வசந்தமாலை! எத்தனையோ பேராச்சரிய நிகழ்ச்சிகள் இன்று இந்த மாளிகையில் சர்வ சாதாரணமாக நடக்கத் தொடங்கியிருக்கின்றன. மாலையில் தோட்டத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது தந்தையார் பின்புறத்து மறைவிலிருந்து திடும் பிரவேசம் செய்து பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் அந்த இளைஞரை அநாகரிகமாக உற்றுப் பார்த்தாரே, அது அவருக்கு எவ்வளவு அவமானமாகத் தோன்றியிருக்கும் தெரியுமா? அதுதான் போகட்டும், ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டுப் போகிறவனைப் பின் தொடர்கிறாற் போல் நகைவேழம்பரை எதற்காக அந்த இளைஞரைப் பின் தொடர்ந்து போகச் செய்ய வேண்டும்? நான் உள்ளே இருக்கும் போதே என்னிடம் சொல்லி அனுமதி கேட்காமல் எனது சித்திரச்சாலைக்குள் நுழையத் தயங்குகிற தந்தையார் இன்று நான் இல்லாதபோதே என் சித்திரச் சாலைக்குள் நுழைந்திருக்கிறார். மாலையில் தனக்குச் சேர வேண்டிய பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டவுடனே அந்த ஓவியன் இங்கிருந்து வெளியேறிப் போய்விட்டானென்று நான் நினைத்திருந்தேன். இப்போது சித்திரச்சாலைக்குள் தந்தையாரோடு அவன் எப்படி வந்தானென்று தெரியவில்லை. இவையெல்லாமே பேராச்சரியங்கள் தான். ஒன்றா இரண்டா, திடீரென்று இந்த மாளிகையே பேராச்சரியமாகி விட்டது” என்று சொல்லிக் கொண்டே வந்த சுரமஞ்சரியின் பவழ மெல்லிதழ்களை முன்னால் நீண்ட வசந்தமாலையின் பூங்கமலக் கை மேலே பேசவிடாமல் மெல்லப் பொத்தியது. திடீரென்று இருந்தாற் போலிருந்து தோழிப்பெண் தன் வாயைப் பொத்தியதைக் கண்டு சுரமஞ்சரிக்கு அடக்க முடியாத சினம் மூண்டது.

“அம்மா! பேச்சை நிறுத்தி விடுங்கள், யாரோ மிக அருகிலிருந்து நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள்” என்று சுரமஞ்சரியின் காதருகில் ரகசியமாய் முணுமுணுத்தாள் தோழி வசந்தமாலை. இதை முணுமுணுக்கும் போது தோழியின் குரல் அதிர்ச்சியும் நடுக்கமும் விரவியதாயிருந்தது. தோழியின் இந்த எச்சரிக்கைக் குரல் காதில் ஒலித்திருக்கவில்லையானால் திடீரென்று அவள் மதிப்பின்றித் தன் வாயைப் பொத்தியதனால் தனக்கு மூண்டிருந்த கோபத்தில் அவளுடைய கன்னத்தில் பளீரென்று அறைந்திருப்பாள் சுரமஞ்சரி.

“அதோ அந்தப் பட்டுத்திரை காற்றில் அசைகிறதே அதன் கீழ் பாருங்கள் அம்மா!” என்று மறுபடியும் சுரமஞ்சரியின் காதருகில் முணுமுணுத்தாள் தோழி. அவள் சுட்டிக் காட்டிய திசையில் சுரமஞ்சரியின் பார்வை சென்றது. பார்த்தவுடன் அவள் கண்களில் பீதி நிழல் படிந்தது. அவள் திடுக்கிட்டாள்.

அலங்கார மண்டபத்தின் முகப்புத் திரைச்சீலை மேலே எழுந்து தணியும் நீரலை போல் அப்போது வீசிய காற்றில் ஏறி இறங்கியது. திரைச்சீலை மேலெழுந்த போது பூ வேலைப்பாடுகள் பொருந்திய அந்தப் பட்டுத் துணியின் மறுபுறம் யாரோ நின்று கொண்டிருப்பதற்கு அடையாளமாக இரண்டு பாதங்கள் தெரிந்தன. சுரமஞ்சரி பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தப் பாதங்கள் அங்கிருந்து நகர முற்பட்டன.

உடனே ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் இரவில் படுக்குமுன் தன் பாதங்களுக்கு இட்டுக் கொள்வதற்காக அங்கே அரைத்து வைத்திருந்த வாசனைச் செம்பஞ்சுக் குழம்பில் சிறிது வாரி, நகர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பாதங்களில் போய்த் தெறிக்குமாறு வீசினாள் சுரமஞ்சரி. அதனால் அப்போது அந்தப் பகுதி முழுவதும் செம்பஞ்சுக் குழம்பின் நறுமணம் கமகமவென எழுந்து பரவியது. தலைவி அப்படிச் செய்ததின் தந்திரக் குறிப்பென்ன என்று புரியாமல் திகைத்து நின்றாள் தோழி வசந்தமாலை.

------------

முதல் பருவம். 1.17. வேலியில் முளைத்த வேல்கள்

கையில் வேலையும் மனத்தில் துணிவையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு மெல்லப் பின்புறம் திரும்ப முயன்றார் வீர சோழிய வளநாடுடையார். புறநகரில் காவற்படைத் தலைவராகத் திரிந்த காலத்தில் இதைப் போலவும் இதைக் காட்டிலும் பயங்கர அனுபவங்கள் பலவற்றைச் சந்தித்திருக்கிறார் அவர். ‘பயம்’ என்ற உணர்வுக்காக அவர் பயந்த காலம் இருந்ததில்லை; ஒரு வேளை பயம் என்ற உணர்வு அவருக்காக பயந்திருந்தால்தான் உண்டு. அத்தகைய தீரர் முதுமைக் காலத்தில் ஓய்வு பெற்று ஒடுங்கிய பின் நீண்டகாலம் கழித்து வெளியேறிச் சந்திக்கிற முதல் பயங்கர அனுபவமாயிருந்தது இது.

கண்பார்வை சென்றவரை கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் வடக்கிலும் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் காடாகப் பரவிக் கிடக்கும் மரக்கூட்டம். ஓவென்று மரங்கள் காற்றில் ஓடும் ஓசையும் மெல்ல மெல்ல இருண்டு கொண்டு வரும் தனிமைச் சூழலும் தவச்சாலையில் இருப்பது தெரியாமல் யாரோ இருக்கும் மர்மமான நிலையும் சேர்ந்து வளநாடுடையாரைச் சற்றே திகைக்கச் செய்திருந்தன. எதிர்பாராத நிகழ்ச்சிகள் நிகழுவதற்கு முன் நிலவுகிறாற் போன்றதொரு மர்மமான சூழ்நிலையாகத் தோன்றியது அது.

தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து பின்புறம் நன்றாகத் திரும்பித் தவச்சாலைக்குள் சுவடிக்கும் தீபத்துக்கும் அருகில் வந்திருப்பது யார் என்று பார்க்குமுன் ‘அப்படிப் பார்க்க வேண்டாம்’ என்பது போல் தன் உள்ளுணர்வே தன்னை எச்சரிக்கை செய்து தயங்க வைப்பது அவருக்கு மேலும் திகைப்பளித்தது. செயலுணர்வுக்கு முன்னதாக உள்ளுணர்வு தயங்கும் காரியங்கள் நல்ல விளைவைத் தருவதில்லை என்பது அவர் அனுபவத்தில் கண்டிருந்த உண்மை. அப்போது அந்தத் தவச்சாலையில் அவருக்குத் தெரிய வேண்டியது தம் வீட்டிலிருந்து காணாமற் போன அருட்செல்வ முனிவர் அங்கே வந்திருக்கிறாரா, இல்லையா என்பதுதான். முனிவர் தவச்சாலைக்கு வரவில்லை என்றால் நிம்மதியாக அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறொன்றும் அவர் செய்ய வேண்டியதில்லை. முனிவர் அங்கே வந்திருக்கிறார் என்றால் தன் இல்லத்திலிருந்து அவர் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறியது ஏன் என்றும், தவச்சாலையில் தன்னைச் சந்திக்கத் தயங்கித் தனக்கு முன் வராமல் மறைந்தது என்ன காரணத்தினால் என்றும அவரையே கேட்டுத் தெரிந்து கொண்டு விட வேண்டும் என்றும் வளநாடுடையார் விரும்பினார். தவச்சாலையில் சுவடியையும் தீபத்தையும் வைத்து வாசித்துக் கொண்டிருந்த முனிவர் தாம் தம் வரவைக் கண்ணுற்றதும் அப்போது தம்மைக் காண விரும்பாமல் ஒளிந்து மறைந்து கொண்டிருக்க வேண்டும் என்று வளநாடுடையார் மனத்தில் சந்தேகப்பட்டார். தமது சந்தேகம் மெய்யாயிருந்து முனிவரும் அப்படி நடந்து கொண்டிருந்தால் தான் ‘என்னைக் கண்டு ஏன் ஒளிந்து கொண்டீர்?’ என்று முனிவரை அவர் கேட்க விரும்பினார். ஆனால் அவர் விரும்பியவாறு எதுவும் அங்கு நடைபெறவில்லை.

‘செயலுணர்வுக்கு முன்னதாக உள்ளுணர்வு தயங்கும் காரியங்கள் நல்ல விளைவைத் தருவதில்லை’ என்று அவர் பயந்ததற்கு ஏற்ப நிகழ்ச்சிகள் அங்கு வேறுவிதமாக நிகழலாயின. அவர் நின்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து தவச்சாலையின் உட்பக்கம் ஒன்றரைப் பனைதூரம் இருந்தது. எனவே தீபத்துக்கும் சுவடிக்கும் அருகில் குனிந்து அமர்வது போல் தெரிந்த ஆளை அவர் நன்றாகக் காண முடியவில்லை. ‘அந்த ஆள் அங்கே அமர்ந்து சுவடியைப் படிப்பதற்குத் தொடங்கக்கூடும்’ என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது.

உள்ளே தீபத்துக்கும் சுவடிக்கும் அருகே கீழ் நோக்கித் தாழ்ந்த கைகள் சுடர் அணைந்து விடாமல் தீபத்தை நிதானமாக மேலே தூக்கித் தவச்சாலையின் தென்னோலைக் கூரை இறப்பின் விளிம்பில் நெருப்புப் பற்றும்படி பிடித்தன. காய்ந்த ஓலைக் கீற்றுக்களின் நுனிப்பகுதியில் தீ நாக்குகள் எழுந்தன. வளநாடுடையார் திடுக்கிட்டார். உள்ளே இருப்பவர் முனிவராயிருக்கலாம் என்று தாம் நினைத்தது பிழையாகப் போனதுமின்றி உள்ளே மறைந்திருந்தவர் என்ன தீச்செயலைச் செய்வதற்காக மறைந்திருந்தார் என்பது இப்போது அவருக்கு விளங்கிவிட்டது. மறைந்திருந்தவர் வேற்றாள் என்பது புரிந்து விட்டது.

“அடே, பாவீ! இதென்ன காரியம் செய்கிறாய்? ஒரு பாவமுமறியாத முனிவர் தவச்சாலையில் நெருப்பு மூட்ட முன் வந்திருக்கிறாயே, உன் கையிலே கொள்ளிவைக்க...” என்று உரத்த குரலில் இரைந்து கொண்டே தீ மூட்டும் கையைக் குறிவைத்துத் தம்மிடமிருந்த வேலை வீசினார் அவர். குறியும் தப்பாமல் குறிவைக்கப்பட்ட இலக்கும் தப்பாமல் சாமர்த்தியமாக அவர் எறிந்திருந்தும், அந்த வேல் அவர் நினைத்த பயனை விளைவிக்கவில்லை.

தீபத்தைக் கீழே நழுவ விட்டுவிட்டு அதே கையினால் அவர் எறிந்த வேலைப் பாய்ந்து பிடித்து விட்டான் அவன். தன் கண்களைத் தீச்சுடர் கூசச் செய்யும் நிலையில் எதிர்ப்புறத்து இருளிலிருந்து துள்ளிவரும் வேலை எட்டிப் பிடிக்கத் தெரிந்தவன் சாதாரணமானவனாக இருக்க முடியுமென்று தோன்றவில்லை வளநாடுடையாருக்கு. ஆனால் அவர் அப்போது உடனடியாக நினைக்க வேண்டியது நெருப்பை அணைக்க ஏதாவது செய்ய முடியுமா என்று முயலும் முயற்சியாயிருந்ததனால் எதிராளி வேலை மறித்துப் பிடித்துவிட்ட திறமையை வியப்பதற்கு அவருக்கு அப்போது நேரமில்லை.

தவச்சாலையின் கூரை மேல் நெருப்பு நன்றாகப் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நெருப்பு மூட்டியவன் அங்கிருந்து எப்படியோ நழுவியிருந்தான். போகிற போக்கில் அவர் வீசிய வேலையும் பறித்துக் கொண்டு போயிருந்தான் அந்தப் பாவி. எனவே கைத்துணையாக இருந்த வேலையும் இழந்து வெறுங்கையோடு தீப்பற்றிய பகுதியில் புகுந்து தீயை அணைக்கத் தம்மால் ஏதேனும் செய்ய இயலுமா என முயல வேண்டிய நிலையிலிருந்தார் அவர்.

உறுதியும் மனத்திடமும் கொண்டு தீப்பற்றிய பகுதியில் நுழைந்தே தீருவதென்று முன்புறம் நோக்கி நடக்கப் பாதம் பெயர்த்து வைத்த வளநாடுடையார் மேலே நடக்காமல் திகைத்து நின்று கொண்டே தமக்கு இருபுறத்திலும் மாறி மாறிப் பார்த்தார். இருபுறமும் நெஞ்சை நடுக்குறச் செய்யும் அதிசயங்கள் தென்பட்டு அதிர்ச்சி தந்தன. உற்றுப் பார்த்தால், அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த இடத்தில் அவருக்கு பக்கங்களிலும் முன்னும் பின்னும் சிறிது தொலைவு வேலி போலப் படரவிடப்பட்டிருந்த மாதவிக் கொடிகளின் அடர்த்தியிலிருந்து கூரிய மூங்கில் இலைகள் சிலிர்த்துக் கொண்டெழுந்தாற் போல் பளபளவென்று மின்னும் வேல் நுனிகள் தெரிந்தன. அவசரப் பார்வைக்குச் சற்றுச் செழிப்பான மூங்கில் இலைகளைப் போலத் தோன்றிய அவை உற்றுப் பார்த்தால் தம்மை வேல்முனைகளென நன்கு காட்டின.

வளநாடுடையார், ஒருவேளை மாலையிருள் மயக்கத்தில் காணும் ஆற்றல் மங்கிய கண்கள் தம்மை ஏமாற்றுகின்றனவோ என்ற சந்தேகத்துடன் வலதுபுறம் மெல்லக் கை நீட்டி மாதவிக் கொடியின் இலைகளோடு இலைகளாகத் தெரிந்த அந்த வேல்களில் ஒன்றின் முனையைத் தொட்டுப் பார்த்தார். சந்தேகத்துக்கிடமின்றி இலைகளிடையே தெரிந்தவை வேல் முனைகள் தாம் என்பதை அவர் விளங்கிக் கொள்ள முடிந்தது. அந்த விளக்கமும் போதாமல் இன்னும் ஒரு படி அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர் தாம் தொட்டுப் பார்த்த அதே வேல்முனையைப் பிடித்துச் சற்றே அசைத்துப் பார்த்தார். அவ்வளவுதான்! புற்று வளையிலிருந்து சீறிக் கொண்டு மேலெழுந்து பாயும் நாகப்பாம்பு போல் அந்த வேல்முனை முன்னால் விரைந்து நீண்டது! அப்படி அந்த வேல் முனை பாய்ந்து நீளும் என்பதை எதிர்பார்த்தவராக முன்னெச்சரிக்கையுடன் விலகிக் கொண்டிருந்தார் வளநாடுடையார். இல்லாவிட்டால் கூர்மையான அந்த வேல் அவருடைய பரந்த மார்பின் ஒரு பகுதிக்குள் புகுந்து புறப்பட்டிருக்கும். தாம் எத்தகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குப் புரிந்தது.

எதிர்ப்பக்கம் பார்க்கிறாற் போல் நின்று கொண்டு விழிகள் காது வரையில் நீள, தமக்கு இருபுறங்களிலும் அடர்ந்து இருண்டு படர்ந்திருந்த மாதவிப் புதரை ஊடுருவி நோக்க முயன்றார் வளநாடுடையார். தரையிலிருந்து அவர் நிற்கும் உயரத்துக்கும் மேலாக ஒரு பாக உயரம் வரை கொடிகள் ஓங்கி வீசிப் படர்ந்திருந்ததனால் மாதவிப் புதருக்கு மறுபுறம் இருப்பவர்களை அவ்வளவு எளிதாகக் காண முடியவில்லை. எனினும் கண்கள், மூக்கு, கைகள் என்று தனித்தனியே இலைகளின் அடர்த்திக்கு அப்பால் சிறு சிறு இடைவெளிகள் மூலம் ஆட்கள் நிற்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. இருந்தாற் போலிருந்து மாதவிப் புதருக்கு இரும்புக் கரங்கள் முளைப்பது போல் வேல்கள் சிறிது சிறிதாக நீண்டன. இரண்டு பக்கத்திலும் முன்னும் பின்னும் சிறிது தொலைவு வரையில் அணிவகுத்து நீட்டினாற் போல் நீளும் வேல்களைக் கண்டு தீயை அணைக்கும் முயற்சிக்காகத் தாம் முன் செல்லலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றார் அவர். தீயை அணைப்பதற்காக அவர் முன்சென்றால் அப்படிச் செல்லவிடாமல் அவரைத் தடுப்பது அந்த வேல்களுக்கும், அவற்றுக்குரியவர்களுக்கும் நோக்கமாக இருக்கும் போல் தோன்றியது.

தீயும் இப்போது அவர் ஒருவரே தனியாக அணைத்து விட முடியும் என்ற நிலையில் இல்லை. அங்கு வீசிக் கொண்டிருந்த பெருங்காற்றின் துணையும் சேர்ந்து விட்டதனால் தீ கொண்டாட்டத்தோடு பரவியிருந்தது. அனல் பரவியதனால் அருகிலிருந்த மரங்களிலிருந்து பல்வேறு பறவைகள் விதம் விதமாகக் குரலெழுப்பிக் கொண்டு சிறகடித்துப் பறந்தன. ஓலைக் கீற்றுக்கள் எரியும் ஒலியும், இடையிடையே இணைக்கப் பெற்றிருந்த மூங்கில்கள் தீயில் வெடித்து முறியும் சடசடவென்ற ஓசையும் அவர் செவிகளில் உற்றன. அந்தக் கோரக் காட்சியைக் கண்டு கொண்டே ஒன்றும் செய்ய இயலாமல் நின்றிருப்பது அவருக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கு விடாமல் அந்த வேல்கள் வியூகம் வகுத்து அவரைத் தடுத்துக் கொண்டிருந்தன.

தீ மிகப் பெரிதாக எழுந்து தவச்சாலைக்கு மேலே வானம் செம்மையொளியும் புகையும் பரவிக் காட்டியதால் அந்த வனத்தின் பல பகுதிகளில் இருந்த வேறு மடங்களையும், மன்றங்களையும், தவச்சாலைகளையும் சேர்ந்தவர்கள் பதறி ஓடி வந்து கொண்டிருந்தனர். தீ வனம் முழுவதும் பரவிவிடக் கூடாதே என்ற கவலை அவர்களுக்கு. அன்றியும் தீப்பற்றியிருக்கும் இடத்தில் யாராவது சிக்கிக் கொண்டிருந்தால் முடிந்த வரையில் முயன்று காப்பாற்ற முனையலாம் என்று கருணை நினைவோடு ஓடி வந்து கொண்டிருந்தவர்களும் இருந்தனர்.

“ஐயோ! தீப்பற்றி எரிகிறதே!” என்று பதறி ஒலிக்கும் குரல்களும், “ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! தீயை அணைத்து யாரையாவது காப்பாற்ற வேண்டியிருந்தாலும் காப்பாற்றலாம்” என்று விரைந்து கேட்கும் சொற்களும், திமுதிமுவென்று ஆட்கள் ஓடிவரும் காலடி ஓசையும் தவச் சாலையை நெருங்கிக் கொண்டிருந்த போது தமக்கு இருபுறமும் நீண்டிருந்த வேல்கள் மெல்லப் பின்னுக்கு நகர்ந்து மறைந்த விந்தையை வளநாடுடையார் கண்டார். அதையடுத்து மாதவிப் புதரின் அப்பால் இருபுறமும் மறைவாக இருந்த ஆட்கள் மெல்ல அங்கிருந்து நழுவுவதையும் அவர் உணர முடிந்தது. அந்தச் சமயத்தில் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. மாதவிக் கொடிகளுக்கு மறுபக்கத்திலிருந்து ஒரு வேல் பாய்ந்து வந்து வளநாடுடையாருக்கு முன் ஈரமண்ணில் குத்திக் கொண்டு நின்றது. அந்த வேல் வந்து நின்ற அதே நேரத்தில், “பெரியவரே! உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் வீசி எறிந்த வேலை இதோ திருப்பித் தந்தாகிவிட்டது. எடுத்துக் கொண்டு பேசாமல் வந்த வழியோடு போய்ச் சேருங்கள்” என்று சொற்களை இரைந்து கூறிவிட்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே கொடி வேலிக்குப் பின்புறமிருந்து யாரோ ஓடிச்சென்று மறைவதையும் வளநாடுடையார் கவனித்தார். அப்போது அவருடைய நிலை தவிப்புக்குரிய இரண்டுங்கெட்டான் நிலையாக இருந்தது. இருதலைக் கொள்ளி எறும்புபோல் செய்வதறியாமல் வருந்தி நின்றார் அவர். அங்கே தீயின் நிலையோ அணைக்கலாம் என்று நினைக்கவும் இயலாதபடி பரவிப் பெருகிவிட்டது. இங்கே மறைந்திருந்த ஆட்களோ தப்பிவிட்டார்கள். அந்நிலையில் தீப்பற்றி எரியும் தவச்சாலைக்கு முன் தாம் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பது எப்படியெப்படியோ பிறர் தம்மேல் சந்தேகம் கொள்ள ஏதுவாகலாம் என்று தோன்றியது வளநாடுடையாருக்கு. ‘தவச்சாலைக்குத் தீ மூட்டியதே அவர்தான்’ என்று வருகிறவர்கள் நினைத்து விட்டாலும் வியப்படைவதற்கில்லை. அந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ‘நெருப்பு மூட்டியது தாமில்லை’ என்று மறுப்பதற்கும் அவரிடம் போதிய சான்றுகள் இல்லை. ஓடி வருகிற அக்கம் பக்கத்தார் காலடி ஓசை மிகவும் நெருங்கிக் கொண்டிருந்தது.

தீரச் சிந்தித்த பின் அப்போதுள்ள சூழ்நிலையில் தாம் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்று விடுவதுதான் என்ற முடிவுடன் கீழே குத்திக் கொண்டு நின்ற தம் வேலை எடுத்துக் கொண்டு மாஞ்செடி கொடிகளின் மறைவில் பதுங்கி நடந்தார் வளநாடுடையார். ஆனால் அங்கு நின்று கொண்டிருப்பது எப்படித் தவறான அனுமானத்துக்கு இடங்கொடுத்துத் தம்மேல் பழி சுமத்தப்படக் காரணமாகும் என்று அவர் பயந்தாரோ, அப்படி பயந்தது அவர் சென்று கொண்டிருக்கும் போதே நடந்து விட்டது. ஓடி வந்து கொண்டிருந்தவர்களில் யாரோ ஓரிருவர் மறைந்து பதுங்கிச் செல்லும் அவருடைய உருவத்தைப் பார்க்க நேர்ந்துவிட்டதனால், “தீ வைத்தவன் அதோ ஓடுகிறான்! விடாதீர்கள் பிடியுங்கள்” என்று பெருங்குரல் எழுந்தது. உடனே வந்த கூட்டத்தில் ஒரு பகுதி அவர் சென்று கொண்டிருந்த பக்கம் திரும்பிப் பாய்ந்து அவரைத் துரத்தத் தொடங்கிவிட்டது. எந்தப் பழிக்காக அவர் அங்கு நிற்க பயந்து சென்றாரோ, அந்தப் பழி தம்மைத் துரத்திக் கொண்டே வந்து விட்டதே என்று தெரிந்த போது துரத்துபவர்களிடம் அகப்படாமல் ஓடத் தொடங்குவதைத் தவிர வேறு வழி அவருக்கும் தோன்றவில்லை. கால்கள் சென்ற போக்கில் முதுமையின் ஏலாமையையும் பொருட்படுத்தாமல் ஓடலானார் அவர். பின்னால் துரத்திக் கொண்டு வந்தவர்கள் ஆத்திரத்தில் வீசி எறிந்த கற்களும் கட்டைகளும் அவர் மேல் விழுந்து சிராய்ந்து இரத்தம் கசியச் செய்தன. அவருக்கும் அவரைத் துரத்தியவர்களுக்கும் இடையே அந்த முன்னிரவு நேரத்தில் சக்கரவாளக் கோட்டத்தை ஒட்டிய காட்டுக்குள் ஒரு பெரிய ஓட்டப்பந்தயமே நடந்து கொண்டிருந்தது. எல்லாருமே துரத்தி வளைத்துக் கொண்டு விரட்டியிருந்தால் அவர் பாடு வேதனையாகப் போயிருக்கும். நல்ல வேளையாக வந்த கூட்டத்தில் ஒரு பகுதி தீயணைக்கும் முயற்சிக்காகத் தவச்சாலையருகிலேயே தங்கிவிட்டது.

ஓடி ஓடிக் களைத்துப் போன வளநாடுடையார் இனிமேல் ஓடினால் கீழே விழுந்துவிட நேரும் என்கிற அளவு தளர்ந்திருந்தார். துரத்துகிறவர்களும் விடாமல் துரத்திக் கொண்டு வந்தார்கள். அந்நிலையில் அவர் ஒரு காரியம் செய்தார். மேலே ஓடமுடியாமல் சுடுகாட்டுக் கோட்டத்தை ஒட்டியிருந்த பாழடைந்த காளிகோயில் ஒன்றின் இருண்ட பகுதியில் புகுந்து மூச்சு இரைக்க நின்றார்.

“வாருங்கள்!” என்று மெல்லிய அழைப்புக் குரலோடு பின்புறத்து இருளிலிருந்து இரண்டு கைகள் அவருடைய தோளைத் தீண்டின. வளநாடுடையார் இருண்டு பயங்கரமாயிருந்த அந்த இடத்தில் பின்புறத்திலிருந்து ஒலித்த குரல் தமக்குப் பழக்கமாகயிருந்ததை உணர்ந்தாலும் தற்காப்புக்காகத் தோள்மேல் விழுந்த கைகளை உதறிவிட்டு விரைந்து திரும்பி வேலை ஓங்கினார். ஓங்கிய வேலை அந்தக் கைகள் எதிரே மறுத்துப் பிடித்தன.

“வேலை ஓங்குவதற்கு அவசியமில்லை. நான் தான் அருட் செல்வர்! என்னை இவ்வளவு சுலபமாக வேலாலே குத்திக் கொன்று விட ஆசைப்படாதீர்கள். நான் இன்னும் சிறிது காலம் இந்த உலகத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டிய அவசியமிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே குரல் அடையாளம் தெரியும்படி தெளிவாகக் கூறிவிட்டு வளநாடுடையாருக்கு அருகில் வந்து நின்று கொண்டார் அருட்செல்வ முனிவர். வளநாடுடையாருக்கு வியப்பு அடங்கச் சில கணங்கள் ஆயின.
--------------

முதல் பருவம். 1. 18. உலகத்துக்கு ஒரு பொய்!

ஆத்திரமடைந்து துரத்திக் கொண்டு வந்த கூட்டத்தினரிடமிருந்து வீரசோழிய வளநாடுடையார் தப்பி விட்டார். துரத்தி வந்தவர்கள் சிறிது நேரம் காளிகோவில் சுற்றுப்புறங்களில் தேடிப் பார்த்துவிட்டு, அப்பாலுள்ளவை மயானப் பகுதிகளாதலால் அங்கே நுழைந்து போக அருவருப்பும் கூச்சமும் கொண்டு வந்த வழியே திரும்பி விட்டார்கள். அவர்கள் திரும்பிச் செல்கிற வரை மௌனமாய், மூச்சுவிடுகிற ஒலி கூட இரைந்து கேட்டுவிடாமல் இருளில் மறைந்திருந்த முனிவரும் வளநாடுடையாரும் சற்றே வெளிப் பக்கமாக நகர்ந்து வந்து காளிகோவில் குறட்டில் எதிரெதிராக உட்காரந்து கொண்டார்கள். சோகம் மிகுந்து நாத்தழுதழுத்து துக்கம் விசாரிக்கிற குரலில் பேச்சை ஆரம்பித்தார் வளநாடுடையார்:

“முனிவரே உங்களுடைய தவச்சாலை முழுதும்...”

“நெருப்பு வைக்கப் பெற்று அழிந்து போய்க் கொண்டிருக்கிறதென்பதைத் தெரிந்து கொண்டு தான் இந்தக் காளி கோவிலில் இருட்டில் உட்கார்ந்திருக்கிறேன். தவச்சாலை எரிந்ததனால், எனக்கு ஒன்றும் இழப்பே இல்லை. அங்கிருந்து என்னென்ன பொருள்களை நெருப்புக்கிரையாகாமல் காத்துக் கொண்டு வர வேண்டுமோ அவற்றை நான் கொண்டு வந்து விட்டேன். உடையாரே, இதோ பாருங்கள், தவச்சாலையில் எரி மூள்வதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பே நானும் இந்தப் பொருள்களும் அங்கிருந்து சுகமாகத் தப்பி இந்த இடத்துக்கு வந்தாயிற்று.”

இவ்வாறு கூறிக் கொண்டே அந்தக் கோயிலின் இருண்ட மூலையிலிருந்து சுவடிகள், மான்தோலாசனம், கமண்டலம், யோகதண்டம் முதலிய பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்தார் முனிவர்.

“தவச்சாலைக்கு யாரோ தீ வைக்கப் போகிறார்களென்று உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும் போலிருக்கிறதே, முனிவரே?”

“ஆகா! தெரியாமலென்ன? நன்றாகத் தெரியும். யார் எதற்காக என்ன நோக்கத்துடன் தீ வைக்கப் போகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியும் உடையாரே. எந்த நாழிகையில் நெருப்பு வைக்க வருவார்களென்பதும் தெரியும். அதனால் தானே உங்கள் இல்லத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டு வந்தேன்.”

“முனிவரே! நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். முன்பே தெரிந்திருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்து விட்டீர்களே! என்னிடம் சொல்லியிருந்தால் எப்படியாவது முன்னேற்பாடு செய்து இது நடக்காமல் காத்திருக்கலாமே?”

“இருக்கலாம்! ஆனால் இது தான் நடக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருக்கும் போது நீங்கள் எப்படி இதைத் தடுக்க முடியும்? இன்று என்னுடைய தவச்சாலை தீப்பற்றி எரியாமற் போயிருந்தால் தான் நான் வருத்தப்பட நேர்ந்திருக்கும். அப்படியில்லாமல் அது அடியோடு எரிந்து போனதில்தான் எனக்குப் பெருமகிழ்ச்சி.”

இதைக் கேட்டு, முனிவர் தம் நினைவோடுதான் பேசுகிறாரா அல்லது மனம் வெறுத்துப் போய் இப்படிப் பிதற்றுகிறாரா என்று புரியாமல் திகைத்துப் போய்விட்டார் வளநாடுடையார்.

“உங்களைத் தேடிக் கொண்டு தான் நானும் தவச்சாலைக்கு வந்தேன். அங்கே சுவடி விரித்தபடியிருந்தது, தீபமும் எரிந்து கொண்டிருந்தது. ஆகையால் நீங்கள் உள்ளே தான் இருப்பீர்களென நினைத்தேன்” என்று தொடங்கித் தவச்சாலையில் நிகழ்ந்தவற்றையும் தாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஆட்களால் துரத்தப்பட்டதையும் முனிவருக்கு விரிவாகச் சொன்னார் வளநாடுடையார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு முனிவர் சிரித்தார்.

“துடைத்து வைத்தாற் போல் எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டு வந்துவிட்டால் தவச்சாலையில் யாருமே இல்லை என்று நெருப்பு மூட்ட வந்தவர்கள் நினைத்துக் கொண்டு பேசாமல் திரும்பிப் போயிருப்பார்கள். உள்ளே நான் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு பாவனைக்காக அந்தச் சுவடியையும், தீபத்தையும் அப்படி வைத்துவிட்டு வந்தேன். தீ வைத்தவர்கள் நான் தவச்சாலைக்குள்ளேயிருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி மாண்டு போக வேண்டுமென்பதற்காகத்தான் இந்தச் செயலிலேயே இறங்கினார்கள். இப்போது அவர்கள் அப்படி நினைத்து நான் தீயில் மாண்டு விட்டதாக மகிழ்ந்து கொண்டுதான் போயிருப்பார்கள். அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டு போக வேண்டுமென்று தான் எனக்கும் ஆசை!”

“இது என்ன குரூரமான ஆசை? நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? நீங்கள் உயிருடன் இருக்கும் போது தீயில் சிக்கி இறந்ததாக எல்லாரும் எதற்காக நினைக்க வேண்டும்? அதனால் உங்களுக்கு என்ன ஆக்கம்?”

“நிறைய ஆக்கம் இருக்கிறது உடையாரே! இத்தகையதொரு பொய்யான செய்தி உடனே மிக அவசியமாக அவசரமாக ஊரெங்கும் பரவ வேண்டும். நான் உயிரோடிருப்பதாக வெளியுலகத்துக்குத் தெரிகிற வரையில் இளங்குமரனுடைய உயிருக்குப் பகைகள் நெருங்கிக் கொண்டேயிருக்கும். நான் உயிரோடில்லை என்று உலகம் ஒப்புக் கொள்ளும்படி செய்து விட்டால் இளங்குமரன் உயிரோடிருப்பதற்கு விட்டு விட அவனறியாமலே அவனுக்கு ஏற்பட்டிருக்கும் பகைவர்கள் முன் வரலாம்.”

“எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை! ஒரே குழப்பமாயிருக்கிறது. உங்கள் தவச்சாலைக்குத் தீ வைக்க வந்தவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமானால் எனக்கு ஏன் சொல்லக் கூடாது? நீங்கள் உயிருடனிருப்பது உலகத்துக்குத் தெரிகிற வரையில் இளங்குமரனுக்குப் பகைவர்கள் ஏற்படும் என்கிறீர்கள்? இதுவும் எனக்குத் தெளிவாக விளங்கவில்லை. மேலும் தவச்சாலையில் நெருப்புக்கு இரையாகாமல் நீங்கள் தப்பி வந்து இங்கே உயிரோடிருப்பதை நான் ஒருவன் பார்த்துத் தெரிந்து கொண்டு விட்ட பின்பு உங்களால் எப்படி உலகத்தை ஏமாற்ற முடியும்?”

“முடியும்! உங்களை என்னுடைய வேண்டுகோளுக்குக் கட்டுப்படச் செய்துவிடலாம் என்று நான் நம்புவது சரியானால் நிச்சயமாக உலகத்தை ஏமாற்றி விட முடியும். இன்று இரவு இரண்டாம் சாமத்தில் பூம்புகாரிலிருந்து மணிபல்லவத்துக்குப் புறப்படும் கப்பலில் ஏறி யாரும் அறியாமல் சென்று விடலாமென்று நினைக்கிறேன். நான் நேற்று முன் தினம் படைக்கலச் சாலையில் நீலநாக மறவரைச் சந்தித்து இளங்குமரனைப் பற்றிய சில பொறுப்புகளை அவர் ஏற்றுக் கொள்ளும்படி செய்திருக்கிறேன். ஆயினும் நாளைக் காலையில் நான் தீயில் மாண்டுபோனதாகச் செய்தி பரவும் போது நீலநாக மறவரும் அதை மெய்யெனவே நம்புவார். எவரும் மெய்யென்று நம்புவதற்கு ஏற்றாற்போலத்தான் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறேன். உண்மையில் நான் சாகவில்லை என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். விண்மகள் மண்மகள் சாட்சியாய்க் காலம் வருகிறவரை இந்த உண்மையை இளங்குமரன் உட்பட எவருக்கும் சொல்வதில்லை என்று இப்போது நீங்கள் எனக்குச் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.”

“இந்தச் சத்தியத்தை நான் செய்து கொடுக்க மாட்டேனென்று மறுத்தால்...?”

“மறுத்தால் வேறு வழியில்லை, மெய்யாகவே நான் இறந்து போக வேண்டியதுதான். சக்கரவாளக் கோட்டத்து பூதம் நின்ற வாயிலின் மேலே ஏறி பூதச் சிலையின் உச்சியிலிருந்து கீழே ஊரறிய உயிரை விடுவேன். ஏனென்றால் எனக்கு என் உயிரை விட இளங்குமரன் உயிர் பெரிது” என்றார் அருட்செல்வ முனிவர்.

இந்தக் குரலின் உறுதியைக் கேட்டபின் முனிவர் இப்படிச் செய்யத் தயங்கமாட்டார் என்று வளநாடுடையாருக்கு நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

“முனிவரே! இளங்குமரனுக்குக் கூட நீங்கள் உயிரோடிருப்பது தெரியக் கூடாதென்கிறீர்களே?” என்றார் வீரசோழிய வளநாடுடையார் வியப்புடன்.

“அப்படியல்ல, ஒரு குறிப்பிட்ட காலம் வருகிற வரை அவனுக்கு இது தெரிய வேண்டாம். அப்புறம் நானே தக்க சமயத்தில் தக்க ஆள் மூலம் உங்களையும் அவனையும் நான் இருக்குமிடத்துக்கு வரவழைத்து உங்கள் இருவரிடமும் இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளத் தவிக்கும் சில உண்மைகளைச் சொல்வதற்கு நேரிடும். அந்தச் சமயத்தில் ‘நான் இறக்கவில்லை’ என்று இளங்குமரன் தெரிந்து கொள்ளலாம். அது வரையில் அவனுக்கும் இது தெரியாமலிருப்பதே நல்லது.”

“அந்தச் சமயம் எப்போது வருமோ, முனிவரே?”

“அநேகமாக அடுத்த ஆண்டு வைகாசி மாதம் புத்த பௌர்ணமிக்குள் அந்த நல்ல சமயம் வாய்க்கலாம்.”

“இத்தனை வயதுக்கு மேல் இந்த முதுமைக் காலத்தில் என்னை ஒரு பொய்யைக் காப்பாற்றுவதற்காகச் சத்தியம் செய்யச் சொல்லுவது உங்களுக்கு நன்றாயிருக்கிறதா? இது அடுக்குமா முனிவரே...?”

“பொய் மெய் என்பதற்கு நான் இன்று காலை உங்களிடம் கூறிய விளக்கத்தை நினைத்துக் கொள்ளுங்கள், உடையாரே! பின்பு நன்மை பயப்பதற்குக் காரணமான பொய்யும் மெய்தான்! நீங்கள் செய்யப் போகும் இந்தச் சத்தியத்தினால் இரண்டு உயிர்களைக் காப்பாற்றும் புண்ணியத்தை அடைகிறீர்கள்...”

மறுபேச்சுப் பேசாமல் முனிவருடைய வலது கையில் தமது வலது கையை வைத்து “மண்மகள் விண்மகள் சாட்சியாக முனிவர் உயிரோடிருக்கும் மெய்யைக் கூறுவதில்லை” என்று சத்தியம் செய்து கொடுத்தார் வீரசோழிய வளநாடுடையார். அதைக் கேட்டு முனிவர் முகம் மலர்ந்தது.
-------------

முதல் பருவம். 1.19. நீலநாகமறவர்

இளங்குமரனும், நண்பர்களும் மருவூர்ப்பாக்கத்தின் ஒரு புறத்தே அமைந்திருந்த நீலநாகமறவரின் படைக்கலச் சாலைக்குள் நுழைந்த போது அங்கே ஆரவாரமும், சுறுசுறுப்பும் நிறைந்த சூழ்நிலை நிலவியது. பல இளைஞர்கள் தனித்தனிக் குழுக்களாகவும் வேறு வேறு பகுதிகளாகவும் பிரிந்து வாட்போர்ப் பயிற்சியும், விற்போர்-மற்போர்ப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டிருந்தார்கள். வாளோடு வாள் மோதும் ஒலியும், வேல்கள் சுழலும் ஓசையும், வில்லிலிருந்து அம்புகள் பாயும் விரைந்த ஒலியும், இளைஞர்களின் ஆரவாரக் குரல்களும் நிறைந்த படைக்கலச் சாலையின் பயிற்சிக் களமே சிறியதொரு போர்க்களம் போல் காட்சியளித்தது. இடையிடையே படைக்கலச் சாலைத் தலைவராகிய நீலநாக மறவரின் கம்பீரமான சிங்கக் குரல் முழங்கி, வீரர்களை ஏவுதல் செய்தும் ஆணையிட்டும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. முழங்கி முடிந்த பின்பும் நெடுநேரம் ஒலித்துக் கொண்டேயிருப்பது போலக் கட்டளையிடும் கம்பீரத் தொனியுள்ள குரல் அது!

பிரும்மாண்டமான அந்தப் படைக்கலச் சாலை, கட்டடங்களும், மாளிகைகளும், யானைகள் குதிரைகளைக் கட்டும் சிறு சிறு கூடங்களும் உள்ளடங்கிய மிகப் பெரிய சோலையில் நான்குபுறமும் சுற்று மதில்களோடு அமைந்திருந்தது. வேல், வாள் போன்ற படைக்கலங்களை உருக்கி வார்க்கும் உலைக் கூடங்களும் அதற்குள் அமைந்திருந்தன. அதனால் உலைக் கூடங்களில் வேல்களையும் வாள்களையும் வடித்து உருவாக்கும் ஒலியும் அங்கிருந்து எழுந்து பரவிக் கொண்டிருந்தது. படைக்கலச் சாலையின் எல்லையாகிய மதிற்சுவருக்கு அப்பால் காவிரிப்பூம்பட்டினத்திலேயே வயது முதிர்ந்ததும் எண்ணற்ற விழுதுகளை ஊன்றி மண்ணின் மேல் உரிமை கொண்டாடுவதுமான பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.

ஒரு பேரரசன் கோட்டை கொத்தளங்களோடு அரண்மனை அமைப்பதற்குத் தேவையான நிலப்பரப்பைக் காட்டிலும் சற்று மிகுதியான நிலப் பரப்பில் தன் நிழல் பரப்பி வீழ்தூன்றிப் படர்ந்து பரந்திருந்த அந்த ஆலமரத்தை அணுகினாற் போல் சிவன் கோயில் ஒன்றும் இருந்தது. பூம்புகார் மக்களுக்கு பேரருட் செல்வனான முக்கண் இறைவன் கோவில் கொண்டிருந்த அந்த இடத்துக்கு ஆலமுற்றம்* (* ஆலமுற்றத்து இறைவன் கோவில் அந்தக் காலத்துப் பூம்புகாரில் அமைந்திருந்ததை அகநானூறு 181-ஆவது பரணர் பாட்டால் அறிய முடிகிறது) என்ற பெயர் வாய்த்திருந்தது. ‘ஆல முற்றத்து அண்ணலார்’ என்று அந்தப் பகுதி மக்கள் கொண்டாடும் இந்த இறைவனுக்கு அடுத்தபடியாக அங்கே பெருமை வாய்ந்தவர் நீலநாக மறவர்தாம். அவருடைய படைக்கலச் சாலைக்கும், ஆல முற்றத்துக்குக் கோவிலுக்கும் அப்பால் வெண்பட்டு விரித்தாற் போல் கடற்கரை மணல்வெளி நீண்டு அகன்று நோக்கு வரம்பு முடியும் வரை தெரிந்தது. நீலநாக மறவரின் படைக்கலச் சாலையிலும் அதைச் சூழ்ந்திருந்த பகுதிகளிலும் வீரத்திருமகள் கொலு வீற்றிருப்பதைப் போன்றதொரு கம்பீரக்களை எப்போதும் நிலவிக் கொண்டிருந்தது. எப்போதும் கண்ணுக்கு நிறைவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

இளங்குமரனும், மற்ற நண்பர்களும் நேராகப் படைக்கலச் சாலையில் மடைப்பள்ளிக்குச் சென்று வயிறு நிறைய உணவருந்தினார்கள். எப்போது வந்தாலும் எத்தனை பேரோடு வந்தாலும், தங்கள் சொந்த இல்லத்தைப் போல் கருதித் தங்கிக் கொள்ளவும், பழகவும் தம்முடைய பழைய மாணவர்களுக்கு உரிமையளித்திருந்தார் நீலநாக மறவர். இளங்குமரன், கதக்கண்ணன் போன்ற சிறப்பும் நெருக்கமும் உள்ள மாணவர்களுக்கு அந்த உரிமை சற்று மிகையாகவே உண்டு. நீலநாக மறவரின் பெருமைக்கும் வீரத்துக்கும் முன்னால் எப்போதும் எல்லோரும் மாணவர்கள் தாம். வீரம் விளைகின்ற வளமான நிலம் அது. அந்த நிலத்தில் அதன் வீர விளைவுக்குக் காரணமான பெருமகனுக்கு முன்னால் இளைஞர்கள் வணங்கியபடி வருவதும், பணிந்து கற்பதும், வணங்கியபடி செல்வதும் பழமையான வழக்கங்கள். ஆலமுற்றத்தின் மாபெரும் ஆலமரத்தைப் போலவே நிறைய வீழ்து ஊன்றிப் படர்ந்த புகழ் பெற்றவர் நீலநாக மறவர். அவருடைய பெருநிழலில் தங்கிப் படைக்கலப் பயிற்சி பெற்றுச் சென்றவர்க்கும் இப்போது பயிற்சி பெறுகிறவர்களுக்கும், இனிமேல் பயிற்சி பெறப் போகிறவர்களுக்கும் ஆல நிழல் போல் பரந்து காத்திருந்தது அவருடைய படைக்கலச் சாலை.

உணவு முடிந்ததும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் பின் தொடர நீலநாக மறவர் நின்று கொண்டிருந்த பகுதிக்கு விரைந்து சென்றான் இளங்குமரன். எதிரே அவனைக் கண்ட ஊழியர்களும், பயிற்சி பெற வந்திருந்த மாணவர்களும், வேறு பல வீரர்களும் மலர்ந்த முகத்தோடு வணக்கம் செலுத்தி வரவேற்றார்கள். பெரு மதிப்போடு வழி விலகி நின்று கொண்டார்கள். இளங்குமரனை வளர்த்தவர் அருட்செல்வ முனிவர் என்றாலும் நீலநாக மறவருக்கும் அவன் செல்லப் பிள்ளை. எவருக்கும் நெகிழ்ந்து கொடுக்காத இரும்பு மனிதரான நீலநாக மறவர் இளங்குமரனிடம் மட்டும் அன்பு மயமாக நெகிழ்ந்து விடுவதும், சிரித்துப் பேசுவதும் வழக்கம். அதனால் அவனுக்கு அந்தப் படைக்கலச் சாலையின் எந்தப் பகுதியிலும் எவரிடத்திலும் தனிமதிப்பும், அளவற்ற பேரன்பும் அளிக்கப்பட்டு வந்தன.

பெரு வீரராகிய நீலநாக மறவர் இளங்குமரனிடம் சிரித்துப் பேசிப் பழகுவதும் வெளிப்படையாக அன்பு செலுத்துவதும் மற்றவர்களுக்கு வியப்பாயிருந்ததற்குக் காரணம் உண்டு. அவர் வியப்பதற்கும் வணங்குவதற்கும் உரியவரே ஒழிய நெருங்கிப் பழகுவதற்கு உரியவரல்லர். அவராகவே முன்வந்து யாரிடமாவது பழகுகிறார் என்றால் அவ்வாறு பழக்கத்துக்கு ஆளானவனுடைய எதிர்காலத்தை அவர் இப்போதே கணித்தறிந்து உறுதியாக நம்பி மதிக்கத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்து கொண்டு விடலாம். அருட்செல்வ முனிவர், வீரசோழிய வளநாடுடையார் போன்ற வயது முதிர்ந்த சான்றோர்களிடம் நீலநாக மறவர் நெருங்கிப் பழகிய காரணம் அவ்விருவரும் இணையற்று விளங்கினார்கள் என்னும் மதிப்பீடு பற்றி வந்த பழக்கம் அது.

சிறப்புக்குரிய சோழ அரச குடும்பத்துப் பிள்ளைகளும், புனல் நாட்டில் அங்கங்கே பெருமையோடிருந்த வேளிர்கள் எனப்படும் குறுநில மன்னர் குடியில் வந்த இளைஞர்களும், நீலநாக மறவரிடம் மாணவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கூடத் தமது கடுமையும் கம்பீரமும் குன்றாமல் அளவோடு பழகிய நீலநாகர் இளங்குமரனைச் செல்லப் பிள்ளையாகக் கருதியது வெளியே தெரியாமல் பலர் மனத்துக்குள் பொறாமை கொள்ளவும் இடமளித்திருந்தது.

எல்லா மாணவர்களுக்கும் உண்ணவும் தங்கவும், படைக்கலச் சாலையில் உள்ள பிற வசதிகளை அனுபவித்துக் கொள்ளவும் பரந்த மனத்தோடு இடம் கொடுத்திருந்தாலும் நீலநாக மறவர் தாமே அருகில் வந்து அன்போடு தோளைத் தழுவி நின்று சிரித்து உரையாடுகிற உரிமையை இளங்குமரனுக்கே கொடுத்திருக்கிறார்.

‘இவரை அடிமை கொண்டு ஆளலாமே’ என்று பெரும் பேரரசனும் அருகில் நின்று நினைக்க முடியாத அரும் பெருந் தோற்றம் நீலநாக மறவருடையது. அவரைக் காட்டிலும் உயரமாக வளர்ந்தவர்கள் காவிரிப்பூம்பட்டினத்து எல்லைக்குள் இருப்பார்களா என்பதே ஐயத்துக்குரியது தான். நல்ல வளர்ச்சியும் கொழுப்பும் உள்ள முதிய ஆண் யானை ஒன்று மதங்கொண்டு வந்து நிமிர்ந்து நிற்பது போல் தோற்றம் வாய்த்திருந்தது அவருக்கு. வாள்நுனிகளைப் போல் இருபுறமும் நீண்டு வளர்ந்திருந்த வளமான மீசை, படர்ந்த முகத்துக்கு எடுப்பாக அமைந்திருந்தது. அடர்ந்த புருவங்களின் கீழே கனமான இமைகளோடு சுழன்று வீழுவனபோல் மேலெழுந்து தோன்றும் சிவந்த பெரிய கண்கள். இரண்டு பக்கத்துக் கன்னங்களிலும் சூட்டுக்கோல் கொண்டு காய்ச்சி இருந்தது போல் பெரிய கறுப்புத் தழும்புகள் வேறு அந்த முகத்தின் கடுமையைப் பெருகச் செய்து காட்டின. அவர் அங்கியைக் கழற்றி விட்டு நிற்கும் போது பார்த்தால் இப்படி எத்தனையோ தழும்புகளையும் புண்பட்ட சுவடுகளையும் அவரது மார்பிலும் தோள்களிலும் காண முடியும். புண்களால் வளர்ந்த புகழ்ச் செல்வர் அவர். பிறரைப் புண்படுத்தி அடைந்த புகழன்று அது; தாமே புண்பட்டு அடைந்த புகழ் அவருடையது. இரும்பில் உருக்கி வார்த்தது போன்ற அந்த உடல் எத்தனையோ போர் முனைகளுக்கும் ஈடுகொடுத்துப் பாடுபட்ட சிறப்புடையது. ஆனால் அதே உடல் தன்னுடைய சொந்தப் புலன்களின் போர் முனைக்கும் இன்று வரையில் தோற்றதில்லை. கடந்த ஐம்பத்தெட்டாண்டுகளாக பிரமசரியம் காத்து மனமும் உடம்பும் இறுகிப் போன மனிதர் அவர். இன்றுவரை வெற்றி கொண்ட புலன்களின் போர்முனையை இறுதிவரை வென்றுவிடும் வீரமும் அவருக்கு இருந்தது. அவர் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் இடம் ஒன்று உண்டு. அதுதான் ஆலமுற்றத்து அண்ணல் கோவில். வீரத்தையே ஒரு தவமாகப் போற்றி நோற்றுக் கொண்டிருந்தார் அவர். தம்முடைய வீரத் தவத்தையும் அதன் மரபையும் வளர்க்கும் ஆவலினால் தான் அந்தப் படைக்கலச்சாலையில் பல இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வந்தார். அவர் தம்மிடம் வரும் இளைஞர்களைத் தெரிந்து தெளியும் முறையே தனியானது.

படைக்கலப் பயிற்சி பெறத் தம்மை நாடி வரும் இளைஞனை முன்னால் நிறுத்திப் பேசிக் கொண்டிருப்பார். பேசிக் கொண்டிருக்கும் போதே எதிரே இருக்கும் இளைஞன் முற்றிலும் எதிர்பாராதபடி பக்கத்திலுள்ள ஒரு வேலை உருவிக் குத்திவிடுவது போல் அவன் முகத்தைக் குறிவைத்து வேகமாக ஓங்கிக் கொண்டு போவார். அப்போது அவன் கண்களை இமைத்து முகத்தில் பயக்குறிப்புத் தோன்றப் பின்னுக்கு நகருவானானால், “சுகமில்லை தம்பீ! உனக்கும் வீரத்துக்கும் காத தூரம். நீ ஒரு காரியம் செய்யலாம். நாளங்காடியில் போய் ஏதாவது ஒரு மூலையில் பூக்கடை வைக்கலாம். உன்னைப் போன்ற ஆட்கள் வீரத்தை நம்புவதை விடப் பூச்சூடிக் கொள்ளும் பெண்களின் கூந்தலை நம்பினால் நன்றாகப் பிழைக்கலாம். எதிரிலிருப்பவன் உன்னை நோக்கி வேலை ஓங்கும் போது பயத்தினால் உன் கண்கள் இமைத்தாலும் உனக்குத் தோல்விதான். தூய வீரன் அப்படி இமைக்கலாகாது.

    ‘விழித்தகண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின்
    ஒட்டன்றோ வன்கணவர்க்கு!’

என்று நம்முடைய தமிழ்ப் பெரியவர்கள் வீரருக்கு அமைதி கூறியிருக்கிறார்கள். உன்னிடம் அந்தப் பொருத்தம் அமையவில்லை போய்வா” என்று சொல்லித் துரத்திவிடுவார். அக்காலத்தில் மிகவும் அருமையானவையாக இருந்த சில போர் நுணுக்கங்களைக் கற்பிக்க முடிந்தவராக அவர் ஒருவர்தான் இருந்தார். பயங்கரமானதும், பெருந்துணிவுடன் பொறுத்துக் கொண்டு செய்ய வேண்டியதுமான போர்த்துறை ஒன்றுக்கு ‘நூழிலாட்டு’ என்று பெயர். தன்னிடம் போர்க்கருவிகளே இல்லாத போதும் எதிரி தன்னை நோக்கி எறிகிற வேலையே தன் ஆயுதமாகப் பறித்துக் கொண்டு அதனால் தன்னைச் சூழ்கிற பல பகைவர்களைத் தாக்கி அழிக்க வேண்டும். எதிரியின் வேல் தன் மார்பிலே தைத்துள்ளதாயினும் தனக்கு வலியுண்டாகுமே என்று தயங்காமல் அதை உருவியேனும் எதிரிகளைச் சாடி அழிப்பதுதான் நூழிலாட்டு. பல போர்க்களங்களில் நூழிலாட்டுப் புரிந்து அந்த அருங்கலை விநோதத்தையே விளையாட்டாகப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் நீலநாக மறவர்! ‘வல்வில் வேட்டம்’ என்று வில்லில் அம்பெய்வதில் நுணுக்கமான நிலை ஒன்று உண்டு. ஒரே முறையில் விரைந்து எய்த அம்பு ஒன்று பல பொருள்களிற் பாய்ந்து எல்லாவற்றையும் துளைத்துச் செல்லுமாறு எய்துவதற்குத்தான் ‘வல்வில் வேட்டம்’ என்று பெயர். இப்படி அரியனவும், பெரியனவுமாக இருந்த போர்க்கலை நுணுக்கங்கள் யாவும் பழகிப் பயின்று வைரம் பாய்ந்த கரங்கள் நீலநாக மறவருடையவை.

இல்லற வாழ்வின் மென்மையான அனுபவங்களும், உலகியற் பழக்கங்களும் இல்லாத முரட்டு வீரராக வளர்ந்திருந்ததனால் உணவிலும், நடைமுறைகளிலும், உடம்பைப் பேணுதலிலும் பொதுவான மனித இயல்பை மீறியவராக இருந்தார் அவர். ஐம்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்து தளர்ந்ததென்று சொல்ல முடியாத கட்டுடல், செம்பினை உருக்கி வார்த்து நிறுத்தி சிலையெனத் தோன்றியது. எட்டிப்பால், எட்டிக்காய் போன்றவற்றை உண்டு வழக்கப்படுத்திக் கொண்டிருந்ததால் உடம்பில் நச்சுத் தன்மை ஏறி இறுகியிருந்தது. எனவே நஞ்சு தோய்ந்த ஆயுதங்களோ, நச்சுப் பிராணிகளோ எந்தவிதமான கெடுதலும் செய்ய முடியாதபடி உறுதிப்படுத்தப் பட்டிருந்தது அந்த உடம்பு. ‘புலன் அழுக்கற்ற அந்தணாளர்’ என்று வெறுந் துறவிகளைப் புகழ்வார்கள். நீலநாக மறவரோ புலன் அழுக்கற்ற வன்கணாளராக இருந்தார். மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் ‘துரோணர், வீட்டுமர் போன்ற தீரர்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று பூம்புகார் மக்கள் நினைத்துக் கொள்ளவும், பேசிக் கொள்ளவும் தக்கபடி நீலநாக மறவர் ஒப்பற்ற தவவீரராக இருந்தார். மெல்லிய சங்கிலிகளால் பின்னிய இரும்புக் கவசமும் அங்கியும் அணிந்து இளைஞர்க்கு வாளும் வேலும் பயிற்றும் களத்தில் அவர் வந்து நின்று விட்டால் வீரமெனும் பேருணர்வே கம்பீர வடிவெடுத்து வந்து நிற்பது போலத் தோன்றும். பயிற்சிக் காலங்களில் இரும்பு அங்கி அணியாமல் அவரைக் காண்பது அரிது.

அன்று இளங்குமரனும் நண்பர்களும் தேடிக் கொண்டு சென்ற போது படைக்கலச் சாலையின் மரங்களடர்ந்த உட்பகுதியில் சில இளைஞர்களுக்கு விற்பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் நீலநாகமறவர். அப்போது கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது மிகவும் நுண்மையானதொரு விற்கலைப் பயிற்சி. பயிற்சி நடந்து கொண்டிருந்த அந்த இடத்தைச் சுற்றிலும் மாமரங்கள் நிறைந்திருந்தன. நடுவில் தெளிந்த நீரையுடைய சிறு பொய்கை ஒன்றும் இருந்தது. மாமரங்களின் கிளைகளில் கொத்துக் கொத்தாகக் காய்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. காம்புகளின் ஓரமாக இளஞ் சிவப்பும் மஞ்சளுமாக நிறங்கொள்ளத் தொடங்கியிருந்த அந்தக் காய்கள் முதிர்ச்சியைக் காட்டின.

மாமரங்களின் கீழே பொய்கையின் பளிங்கு நீர்ப்பரப்பில் காய்கள் தெரிவதைக் கண்களால் பார்த்துக் கொண்டே வில்லை வளைத்துக் குறி வைத்து மேலே அம்பு எய்து குறிப்பிட்ட ஒரு கொத்துக் காய்களை வீழ்த்த வேண்டும். அங்கே தம்மைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு இப்படி அம்பு எய்யும் விதத்தை முதலில் தாமே ஓரிரு முறை செய்து காட்டிவிட்டுப் பின்பு அவர்களைச் செய்யச் சொல்லி அவர்களால் முடிகிறதா, இல்லையா என்று சோதனை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நீலநாகமறவர். அத்தகைய சூழ்நிலையில் நடுவே புகுந்து குறுக்கிட்டுத் தன் வரவைத் தெரிவித்துக் கொள்ள வேண்டாம் என்று கருதிய இளங்குமரன் உடன் வந்த நண்பர்களோடு ஒருபுறமாக ஒதுங்கி நின்றான்.

பொய்கை நீரிலே வடிவு பார்த்துக் குறி வைத்து மேலே மரத்திலே உள்ள காய்களை எய்யும் முயற்சியில் அங்கிருந்த இளைஞர்கள் எவருக்குமே வெற்றி இல்லை. அதைக் கண்டு நீலநாகமறவருடைய கண்கள் மேலும் சிவந்து சினக்குறிப்புக் காட்டின. மீசை நுனிகள் துடித்தன. ஆத்திரத்தோடு கூறலானார்: “இளைஞர்களே! ஒரு பொருளைக் குறி வைத்து எய்வதற்கு உடலின் பலமும் கைகளின் வலிமையும் மட்டுமே போதாது. மனம் குவிந்து கூர்மையாக வேண்டும். நோக்கும் நினைவும் ஒன்றில் இலயிக்க வேண்டும். எண்ணங்கள் ஒரே புள்ளியில் இணைய வேண்டும். தியானம் செய்வதற்கு மனம் ஒரு நிலைப்படுவது போல் பொருளைக் குறிவைத்து எய்யும் விற்கலை முயற்சிக்கும் ஒருமைப்பாடு வேண்டும். நாளுக்கு நாள், எண்ணங்களை ஒன்றில் குவியவைத்து முயலும் ஆற்றல் குறைந்து கொண்டே வருகிறது. உங்கள் நிலையைப் பார்த்தால் வருகிற தலைமுறைகளில் வில்வித்தை போன்ற அரிய கலைகளே இல்லாமற் போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். மனம் வசப்படாமல் கைகள் மட்டும் வசப்பட்டு ஒரு பயனுமில்லை. என் போன்றவர்கள் கற்பிப்பதற்கு விற்குறிகள் வேண்டும். ஆனால் எங்கு நோக்கினும் உங்களைப் போன்ற தற்குறிகளைத் தான் நான் காண்கிறேன்” என்று இடிக்குரலில் முழங்கிக் கொண்டே சுற்றி நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்க்கத் தொடங்கிய நீலநாக மறவர் ஒரு மூலையில் அடக்க ஒடுக்கமாய் வந்து நின்றிருந்த இளங்குமரனையும் மற்றவர்களையும் கண்டு கொண்டார். ஒலி ஓய்ந்தும் தொனி ஓயாத அவருடைய கம்பீரக் கட்டளைக் குரலில் சுற்றி நின்ற இளைஞர்கள் எல்லாம் பேச்சடங்கிப் புலனடங்கி நின்ற போது அவர் தம் கையிலிருந்த வில்லைக் கீழே எறிந்து விட்டு முகமலர்ச்சியோடு இளங்குமரனை நோக்கி நடந்து வந்தார்.
------------

முதல் பருவம். 1.20. விளங்காத வேண்டுகோள்

“அடடா, நீ எப்பொழுது வந்தாய் தம்பீ? நான் உன்னை கவனிக்கவே யில்லையே! காலையிலிருந்து உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்று பின்னிரவில் இந்திர விழாவைக் காண்பதற்காக ஊரெல்லாம் சுற்றிவிட்டு இதோ உன்னுடன் நிற்கும் இந்த இளைஞர்களிற் சிலர் இங்கு வந்து தங்கினார்கள். இன்று காலையில் இவர்களிடம் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிற்பகலுக்குள் நான் உன்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினேன். உன்னிடம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது, தம்பீ! நேற்று முன் தினம் அருட்செல்வ முனிவர் இங்கு வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். உன்னைப் பற்றி எவ்வளவோ செய்திகளைச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார் அவர்.”

அன்பு நெகிழும் குரலில் இவ்வாறு கூறிக் கொண்டே இரும்புக் கவசம் அழுத்துமாறு அவனை மார்புறத் தழுவிக் கொண்டார் நீலநாக மறவர்.

“முகம் வாடியிருக்கிறதே தம்பீ! எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறாய்? உன்னுடைய அழகும், ஆற்றலும், அறிவும் பெரிய காரியங்களுக்குப் பயன்பட வேண்டும். அவற்றை இப்போதே மிகச் சிறிய காரியங்களுக்காகச் செலவழித்துவிடாதே! இன்றைக்கு இந்தப் பூம்புகாரின் அரச கம்பீர வாழ்வுக்கு முன்னால், இருக்குமிடம் தெரியாத மிகச் சிறிய இளைஞனாக நீ இருக்கிறாய். இனி ஒரு காலத்தில் உன்னுடைய கம்பீரத்துக்கு முன்னால் இந்தப் பெரிய நகரமே இருக்குமிடம் தெரியாமல் மிகச் சிறியதாகப் போய் விடலாம். உலகமே அப்படித்தான் தம்பீ! பொருள்கள் பெரியவைகளாகத் தோன்றும் போது வியந்து நிற்கிற மனமும் மனிதனும் குறுகியிருப்பதைப் போல் சிறுமையாய்த் தோன்றுவார்கள். மனத்தையும் தன்னையும் பெரியதாகச் செய்து கொண்டு பார்த்தால் இந்த உலகத்தில் மிகப் பெரும் பொருள்களும் சிறியவையாகக் குறுகித் தோன்றும். இதோ, என்னைச் சுற்றிக் கட்டிளம் காளைகளாக நிற்கும் இந்தப் பிள்ளைகள் எல்லோரும் வில்லுக்கும் அம்புக்கும் தோற்றுக் கல்லைப் போல் அசைவின்றிப் பயந்து நிற்கிறார்களே, ஏன் தெரியுமா? இவர்கள் அந்தக் குறி தங்களுடைய ஆற்றலிலும் பெரிது என்று எண்ணி எண்ணித் தங்களுக்குத் தாங்களே சிறுமை கற்பித்துக் கொண்டு விட்டார்கள். அதனால் அம்பு குறியைத் தீண்டவே இல்லை. வீரம் தனக்குப் பயந்த நெஞ்சில் விளைவதில்லை. தன்னை நம்பும் நெஞ்சில் தான் விளைகிறது. எங்கே பார்க்கலாம், நீ இந்த வில்லை எடுத்து இவர்கள் செய்யத் தவறியதைச் செய்து காட்டு. அதன் பின்பாவது இவர்கள் மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகிறதா இல்லையா என்று காணலாம்!” என்றிவ்வாறு கூறியபடியே இளங்குமரனை முன்னுக்கு இழுத்துக் கொண்டு வந்து வில்லையும் அம்புக் கூட்டையும் அவன் கைகளில் எடுத்துத் தந்து அன்புடன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் நீலநாக மறவர். எல்லாருடைய கண்களும் அவனையே பார்த்தன. வந்ததும் வராததுமாக இளங்குமரனை இப்படி வம்பில் இழுத்து விட்டாரே நீலநாக மறவர் என்று கதக்கண்ணன் நினைத்தான். அப்போது இளங்குமரன் மனநிலை தெளிவாயில்லை என்பதை அறிந்திருந்த காரணத்தால் தான் கதக்கண்ணன் பயந்து தயங்கினான். ‘மனக்கவலைகளால் எல்லோரையும் போல இளங்குமரனும் குறி தவறி அவமானப்பட நேரிட்டு விடுவோ’ என்பதே கதக்கண்ணனின் பயத்துக்குக் காரணமாயிருந்தது.

ஆனால் கதக்கண்ணன் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. எப்படிப்பட்ட கவலைக்கிடமான நேரத்திலும் தன் மனத்தையும் கண்களையும் ஒருமை நிலையில் ஈடுபடுத்த முடியும் என்பதை இளங்குமரன் நிரூபித்துக் காட்டி விட்டான். ஒரே ஒரு விநாடி தான்! அந்த ஒரு விநாடியில் வில்லை வளைப்பதற்காகப் பயன்பட்ட நேரம் எவ்வளவு, நீர்ப்பரப்பில் தெரிந்த காய்களின் பிரதிபிம்பத்தைக் கவனித்துக் குறிபார்த்த நேரம் எவ்வளவு, அம்பை எய்த நேரம் எவ்வளவு என்று தனித்தனியே பிரித்துச் சொல்லவே முடியாது. அவனுடைய வில் வளைந்ததையும் மாங்காயின் கொத்து அறுந்து தனித் தனிக் காய்களாய் நீரிலும் தரையிலுமாக வீழ்ந்ததையும் தான் எல்லோரும் கண்டார்கள்.

“வில்லாதி வில்லன் என்பது உனக்குத்தான் பொருத்தமான பெயர் தம்பீ! உன்னுடைய அம்புகள் மட்டுமல்ல, நினைவுகளும், நோக்கமும், பேச்சும் எதுவுமே குறி தவறாது” என்று கூறியவாறு இளங்குமரனைச் சிறு குழந்தை போல் விலாவில் கை கொடுத்துத் தழுவி, அப்படியே மேலே தூக்கிவிட்டார் நீலநாக மறவர். கூடியிருந்த இளைஞர்களிடமிருந்து வியப்பு ஒலிகளும் ஆரவாரமும் எழுந்தன.

இளங்குமரன் அவருடைய அன்புப் பிடியிலிருந்து விடுபட்டுக் கீழே இறங்கியவுடனே, “எல்லாம் நீங்கள் இட்ட பிச்சை ஆசிரியரே” என்று அவர் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றி வணங்கினான். அவர் கூறினார்:

“பிச்சையாகவே இருந்தாலும் அதைப் பாத்திரமறிந்து இட்டதற்காக நான் பெருமைப்படலாம் அல்லவா? நல்ல கொழுநனை அடைந்து கற்பும் பொற்பும் பெறுகிற அழகிய பெண் போல், ஒவ்வொரு கலையும் தன்னை நன்றாக ஆளும் நல்ல நாயகனைப் பெற்றால்தான் சிறப்படைகிறது தம்பீ!”

அவ்வளவு பெரிய வீராதி வீரர் தன்னை முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு புகழும் போது தான் என்ன மறுமொழி பகர்வதென்று தோன்றாமல் சற்றே நாணினாற் போல் தலை குனிந்து நின்றான் இளங்குமரன்.

“வா போகலாம், உன்னிடம் தனிமையில் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன” என்று கூறி அவனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். குலத்துக்கொரு பிள்ளையாய் வந்த குமரனைத் தந்தை பாசத்தோடும் பரிவோடும் அழைத்துச் செல்வது போல இருந்தது அந்தக் காட்சி. ‘மகாமேருமலை போன்ற இந்த வீரவேந்தர் இப்படித் தோள் மேல் கையிட்டுத் தழுவி அழைத்துக் கொண்டு செல்லும் பாக்கியம் தங்களுக்கு ஒரு முறையாவது வாய்க்காதா?” என்று ஏங்கும் இளைஞர்கள் பலர் அப்போது அங்கே இருந்தனர். அப்படி ஏங்கிய பலரில் அரச குடும்பத்துப் பிள்ளைகளும், வேளிர்குலச் செல்வர்களும், பட்டினப் பாக்கத்துப் பெருவணிகர் வீட்டு இளைஞர்களும் இருந்தனர்.

“நண்பர்களே வாருங்கள்! ஆசிரியர்பிரானிடம் பேசிவிட்டு இளங்குமரன் திரும்பி வருகிறவரை நாம் இப்படி இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம்” என்று கதக்கண்ணன் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு மாமரத்தடியில் போய் அமர்ந்தான். மற்ற இளைஞர்களும் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சென்றார்கள். அவ்வாறு பிரிந்து செல்லும் போது சற்றே திமிர் கொண்டவன் போல் தோன்றிய வேளிர்குலத்து இளைஞன் ஒருவன், “பெற்றவர் பெயர் தெரியாத பிள்ளைகளெல்லாம் வில்லாதி வில்லர்களாகி விடுகிறார்கள். ஒருவேளை வில்லாதி வில்லனாகப் பெருமை பெற வேண்டுமானால் பெற்றவர் பெயர் தெரியாத பிள்ளையாயிருக்க வேண்டும் என்பதுதான் தகுதியோ என்னவோ?” என்று சொல்லி ஏளனமாகச் சிரித்ததையும் அவனுடன் சென்ற மற்றவர்களும் இளங்குமரனைப் பற்றித் துச்சமாகச் சொல்லி நகை புரிந்ததையும் மரத்தடியில் உட்கார்ந்திருந்த கதக்கண்ணன் கேட்டுப் புரிந்து கொண்டு விட்டான். உடனே மனங்கொதித்துத் துள்ளி எழுந்தான் அவன். நேராக அந்த இளைஞர் குழுவுக்கு முன் போய் நின்று கொண்டு இளங்குமரனை இகழ்ந்து பேசிய வேளிர் குலத்து விடலையைத் தடுத்து நிறுத்தி ஒரு கேள்வி கேட்டான் கதக்கண்ணன்.

“வேளிர் குலத்து வீரரே! தயை கூர்ந்து சற்றுமுன் கூறிய சொற்களை இன்னும் ஒரு முறை என் காது கேட்கும்படி கூறுவீர்கள் அல்லவா?”

கதக்கண்ணன் தன் முன்னால் பாய்ந்து வந்து தடுத்து நிறுத்திய விதத்தையும் கேள்வி கேட்ட வேகத்தையும் பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டு விட்டான் வேளிர் குலத்து வீரன்.

“நானா? நான் சற்று முன்பு தவறாக ஒன்றும் சொல்லவில்லையே. இளங்குமரனாரின் வீரதீரப் பெருமைகளைத் தானே உடன் வருகிறவர்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தேன்!” என்று பேச்சை மாற்றி மழுப்பிவிட முயன்றான் அவன். ஆனால் கதக்கண்ணன் அவனை விடவில்லை.

“அப்படியா? மிகவும் மகிழ்ச்சி. வஞ்சகமில்லாமல் பிறருடைய வீர தீரப் பெருமைகளை அவர்கள் இல்லாத இடத்திலும் சொல்லிப் புகழுகிற உங்களைப் போன்றவர்களுக்கு நான் ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.”

“ஆகா! நீங்கள் கொடுக்க ஆசைப்படும் பரிசை அவசியம் வாங்கிக் கொள்கிறேன். எனக்கு என்ன பரிசு தரப் போகிறீர்கள் நீங்கள்?”

“என்ன பரிசு என்றா கேட்கிறீர்கள்? சற்று முன் அப்படிப் பேசிய உங்கள் நாவை ஒட்ட இழுத்து அறுக்கலாமென நினைக்கிறேன். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் பரிசு. புறம் பேசுகிற நாவை வளரவிடக் கூடாது. புறம் பேசுகிற நாவுடையவர்களைப் படைத்ததைக் காட்டிலும் கைதவறின காரியம் ஒன்றைப் படைப்புக் கடவுள் செய்திருக்கவே முடியாது. உலகத்திலுள்ள நஞ்செல்லாம் புறம் பேசுகிறவர்களின் நாவிலிருந்து பிறந்தது. வேறு எல்லாக் கெட்ட மனிதர்களும் சோற்றிலும் தண்ணீரிலும் நஞ்சு தூவுவார்கள். புறம் பேசுகிறவர்களோ காற்றிலும் நஞ்சைத் தூவுவார்கள். காண்பவர், கேட்பவர் நெஞ்சிலும் நஞ்சைக் கலந்து விடுவார்கள்.”

இப்படிக் கொதிப்போடு பேசிய கதக்கண்ணனை உறுத்துப் பார்த்தான் அந்த வேளிர் குலத்து இளைஞன்.

“பார்வையால் மருட்டாதீர். உங்கள் முன்னோர்கள் எல்லாம் சோழப் பேரரசருக்கு வீர உதவிகள் புரிந்து பெருமைப் பட்டிருக்கிறார்கள். அத்தகைய வேளிர் குடியில் புறம் பேசுவதை வீரமாக எண்ணும் கோழைகள் பிறந்திருக்கிறார்கள் என்பதை நினைப்பதற்கு வெட்கமாயிருக்கிறது எனக்கு” என்று கூறிவிட்டு மாமரத்தடிக்குத் திரும்பிச் சென்று நண்பர்களோடு அமர்ந்து கொண்டான் கதக்கண்ணன். தாங்கள் இளங்குமரனைத் துச்சமாகப் பேசி இகழ்ந்த செய்தி நீலநாக மறவர் காதுவரையில் எட்டி விடக்கூடாதே என்று பயந்து கொண்டே அந்த இளைஞர்களும் கூசியபடி மேலே நடந்து சென்றார்கள்.

தனியாக நீலநாக மறவரோடு சென்றிருந்த இளங்குமரன் சில நாழிகைக்குப் பின் மரத்தடிக்குத் திரும்பி வந்தான். கூட்டாக உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கிடையே அமராமல் கதக் கண்ணனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்ற இளங்குமரன், “பட்டினப் பாக்கத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது நேற்று இரவில் நடந்த நிகழ்ச்சி பற்றி ஏதோ பேச்சுத் தொடங்கினாயே, அது என்ன? அதை இப்போது சொல்...” என்று அவனை வினவினான்.

“ஓ! அதுவா? சம்பாவதி வனத்து இருளில் உன்னைத் தாக்கி விட்டு ஓடிய மனிதர்களை ஆன மட்டும் தேடிப் பார்த்தோம். அவர்கள் அகப்படவில்லை. விடிகிற மட்டும் தேடிவிட்டு நானும் எனது தோழனும் இந்தப் பக்கமாக வந்த போது பிற்பகலுக்குள் உன்னை இங்கே அழைத்து வருமாறு நீலநாக மறவர் அனுப்பிய ஆட்களைச் சந்தித்தோம். உடனே எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு உன்னைத் தேடிப் புறப்பட்டோம்” என்று கதக்கண்ணனிடமிருந்து இளங்குமரன் எதிர்பார்த்ததை விட மிகச் சாதாரணமான பதில் கிடைத்தது.

“ஏதோ வேண்டுகோள் விடுக்கப் போவதாக நீயும் நண்பர்களும் கூறினீர்களே! அது என்ன வேண்டுகோள்?” என்று தன் நண்பன் கதக்கண்ணனைப் பார்த்து மறுபடியும் கேட்டான் இளங்குமரன்.

அதைக் கேட்டுக் கதக்கண்ணன் நகைத்தான். “வேண்டுமென்றே எங்களை ஆழம் பார்க்கிறாயா, இளங்குமரா! அந்த வேண்டுகோளைத்தான் இவ்வளவு நேரம் ஆசிரியர்பிரான் உன்னிடம் விவரித்துக் கூறியிருப்பாரே? ‘இன்னும் சிறிது காலத்துக்கு நீ இந்தப் படைக்கலச் சாலையிலேயே இருக்க வேண்டும். தனியாக நகருக்குள் எங்கும் போக வேண்டாம். என் கண்காணிப்பில் நீ இருப்பது நல்லது’ என்று ஆசிரியர்பிரான் உன்னிடம் சொன்னாரா இல்லையா?”

இதுகேட்டு இளங்குமரன் வியந்தான். ஏனென்றால் இதே வேண்டுகோளைத் தான் மறுக்க முடியாத கட்டளையாக ஆசிரியர் அவனுக்கு இட்டிருந்தார். ‘இது எப்படிக் கதக்கண்ணனுக்குத் தெரிந்தது? இவர்களெல்லோரும் சேர்ந்து தூண்டி ஆசிரியர் மூலம் செய்த ஏற்பாடா இது? அல்லது அருட்செல்வ முனிவர் ஆசிரியரைச் சந்தித்துத் தனியே செய்த ஏற்பாடா? இதன் பொருள் என்ன? இவர்கள் எல்லாரும் என்னைக் கோழையாக்க முயல்கிறார்களா?’ என்று நினைத்த போது ‘சற்று முன் ஆசிரியரிடம், இந்த வேண்டுகோளுக்கு ஏன் ஒப்புக்கொண்டோம்’ என்று தனக்குத்தானே வருந்தி மனங்குமுறினான் இளங்குமரன்.
-----------

முதல் பருவம். 1.21. மணிமார்பனுக்குப் பதவி

சுரமஞ்சரியும் வசந்தமாலையும் சில கணங்கள் ஒன்றும் பேசிக் கொள்ளத் தோன்றாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றார்கள். ஊசி கீழே விழுந்தாலும் ஓசை பெரிதாகக் கேட்கும் படியானதொரு நிசப்தம், அப்போது அந்த அலங்கார மண்டபத்தில் நிலவியது. மோனத்தைக் கலைத்து முதலில் பேச்சைத் தொடங்கியவள் வசந்தமாலைதான். மெல்லிய குரலில் தலைவியை நோக்கிக் கேட்கலானாள் அவள்:

“அது ஏனம்மா அப்படி செம்பஞ்சுக் குழம்பையெல்லாம் வாரி இறைத்து வீணாக்கினீர்கள்? திரைக்கு அப்பால் நின்று ஒட்டுக் கேட்டது யாரென்று தெரிந்து கொண்டிருக்க வேண்டுமானால் மெல்ல நடந்து போய்த் திரையையே விலக்கிப் பார்த்திருக்கலாமே! அப்படிப் பார்த்திருந்தால் ஒட்டுக் கேட்டவர்களுக்கும் ஒரு பாடம் கற்பித்திருக்கலாமே?”

“போடி அசட்டுப் பெண்ணே! பிறர் நாகரிகமாக நமக்குச் செய்கிற பிழைகளைக் கண்டு பிடித்துத் தீர்வு காண முயலும் போது நாமும் நாகரிகமாகவே நடந்து கொள்ளவேண்டும். முன் யோசனை இல்லாமல் திடீரென்று போய்த் திரையைத் திறந்து விட்டு நாம் முற்றிலும் எதிர்பாராத ஆள் அங்கு நிற்பதைக் காண நேர்ந்து விட்டால் நமக்கு வேதனை, அவருக்கும் வேதனை. ஒரு வேளை திரைக்கு அந்தப் பக்கம் நின்றவர் நீயும் நானும் பாடம் கற்பிக்க முடியாதவராக இருக்கலாம். பார்த்த பின், ‘ஐயோ! இவராயிருக்குமென்று தெரிந்திருந்தால் இப்படி அநாகரிகமாகத் திறந்து பார்த்திருக்க வேண்டாமே’ என்று தவிக்கவும் நேரிடுமல்லவா?”

“அதெல்லாம் சரிதான் அம்மா. ஆனால் செம்பஞ்சுக் குழம்பை வீணாக்கி வீட்டீர்களே” என்றாள் வசந்தமாலை.

“ஆ! அப்படிக் கேள் வசந்தமாலை, அதில்தான் இரகசியமே அடங்கியிருக்கிறது. இந்தச் செம்பஞ்சுக் குழம்பு இரண்டு நாட்களுக்குச் சிவப்புக் கறை அழியாதென்று உனக்குத் தெரியுமோ இல்லையோ?” என்று சுரமஞ்சரி இதழ்களில் இளநகை அரும்பக் கேட்டவுடன் தான் வசந்த மாலைக்குத் தன் தலைவியின் தந்திரம் புரிந்தது. சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற விதத்தில் புத்திக் கூர்மையுடனும் தந்திரமாகவும் சுரமஞ்சரி அந்தச் செயலைச் செய்திருக்கிறாள் என்பதை விளங்கிக் கொண்டபோது தன் தலைவியின் நுண்ணுணர்வை வசந்தமாலையால் வியந்து போற்றாமல் இருக்க முடியவில்லை.

“வசந்தமாலை! வா, சித்திரசாலைக்குள் போய்ப் பார்க்கலாம். சற்று முன் தந்தையாரும் ஓவியனும் அங்கே நின்று கொண்டிருந்தார்களே, அந்த ஓவியத்தில் அவர்கள் ஏதாவது மாறுதல் செய்திருக்கிறார்களா என்று பார்க்கலாம்” என்று கூறித் தன் தோழியையும் உடன் அழைத்துக் கொண்டு சித்திரச்சாலைக்குள் புகுந்தாள் சுரமஞ்சரி. வண்ணங்குழைத்து வனப்பு வனப்பாய், வகை வகையாத் தீட்டி வைக்கப்பட்டிருந்த உயிரோவியங்கள் நிறைந்த அந்தச் சாலையில் நடை ஓசையும் கேட்காமல் மெத்தென்ற பட்டுக் கம்பள விரிப்பின் மேல் நடந்து போய் இளங்குமரனின் படத்துக்கு முன் ஆவலுடன் நின்றார்கள் அவர்கள். என்ன மாறுதல் நேர்ந்திருக்கிறதென விரைந்து அறியும் விருப்பத்துடன் தன் கூரிய நோக்கால் அந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியாக உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தாள் சுரமஞ்சரி. ஆனால் அவளையும் முந்திக் கொண்டு வந்தாள் சுரமஞ்சரி. ஆனால் அவளையும் முந்திக் கொண்டு தோழிப் பெண் அந்த மாறுதலைக் கண்டு பிடித்து விட்டாள்.

“அம்மா! படத்தை வரைந்து வாங்கி, இங்கே கொண்டு வந்து வைத்த போது இதோ இந்த கறுப்புப் புள்ளி இல்லை. இது புதிதாகத் தீட்டப்பட்டதாகத் தோன்றுகிறது” என்று படத்தில் இளங்குமரனுடைய கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் மச்சம் போல் கழிக்கப்பட்டிருந்த கறுப்புப் புள்ளியைத் தொட்டுக் காட்டினாள் வசந்தமாலை. சுரமஞ்சரியும் அதைப் பார்த்தாள். அந்த மாறுதல் புதிதாகத்தான் செய்யப்பட்டிருக்கிறதென்பதை அவள் உணர்ந்தாள். ஓவியன் மணிமார்பன் படத்தை முடித்துக் கொடுத்த போது அந்தக் கறுப்பு மச்சம் இளங்குமரனின் கழுத்தில் வரையப் பெறவில்லை என்பது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. ‘கருநாவற் பழம் போல் உன் கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் எத்தனை அழகான மச்சம் இருக்கிறது பார்த்தாயா’ என்று தந்தையார் பிற்பகலின் போது மாளிகைத் தோட்டத்தில் இளங்குமரனுக்கு அருகில் போய் உற்று நோக்கிக் கொண்டே கேட்ட கேள்வியை இப்போது மீண்டும் நினைவிற் கொண்டு வந்து சிந்திக்கலானாள் சுரமஞ்சரி. ‘படத்தின் அழகை இந்தக் கரும்புள்ளி ஓரளவு குறைத்துக் காட்டும் என்பது தந்தையாருக்கும் ஓவியனுக்கும் தெரியாமலா போயிற்று? தெரிந்து கொண்டே இந்த மாறுதலைச் செய்திருந்தார்களானால் இதன் அந்தரங்க நோக்கம் என்ன? தொழில் நயம் தெரிந்த ஓவியன் இப்படிச் செய்து ஓவியத்தைக் கவர்ச்சியற்றதாக்கத் துணிந்தது ஏன்? அவர் கழுத்திலிருக்கிற மச்சம் ஓவியத்திலும் இருந்துதானாக வேண்டுமென்கிற அவசியம் என்ன?’ என்று சுரமஞ்சரி ஆழ்ந்த சிந்தனைகளால் மனம் குழம்பினாள். இன்னதென்று தெளிவாய் விளங்காவிட்டாலும் இதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்பது போல் அவள் உள்ளுணர்வே அவளுக்குக் கூறியது. தன் தந்தையார் மேலும், அவருக்கும் மிகவும் வேண்டியவரான நகைவேழம்பர் என்ற ஒற்றைக் கண் மனிதர் மேலும் பலவிதமான சந்தேகங்கள் அவள் மனத்தில் எழுந்தன.

அந்த இரண்டு நாள் பழக்கத்தில் இளங்குமரனிடம் அவ்வளவு அன்பும் பரிவும் தன் மனத்துக்கு எப்படி உண்டாயிற்று என்பதை நினைத்தால் அவளுக்கே விந்தையாயிருந்தது. இளங்குமரன் அவளைப் போல் ஒரு பெண்ணின் மனத்தில் எழும் மென்மையான உணர்வுகளுக்கு உரிய மதிப்போ நெகிழ்ச்சியோ அளிக்கத் தெரியாத முரடனாயிருந்தான். எடுத்தெறிந்து அலட்சியமாகப் பேசினான். தன்னுடைய விழிகளிலும், இதழ்களிலும், உள்ளத்திலும் அவனுக்காக நெகிழும் குறிப்புக்களோடு அவள் அருகே நெருங்கி நின்ற போதெல்லாம் அவன் அதைப் புரிந்து கொண்டு குழையும் மென்மைத் தன்மையில்லாமலே விலகி விலகிச் சென்றிருக்கிறான். ஆயினும் விலக விலக அவனைப் பற்றி நெருக்கமாக நினைக்கத்தான் அவளால் முடிந்தது. அவனை விலக்கி நினைக்கும் ஆற்றல் அவள் மனத்துக்கு வரவில்லை. தான் பேரார்வத்தோடு அளித்த மணிமாலையை மறுத்ததிலிருந்து ஒவ்வொன்றாகத் தனக்கு அவன் செய்த அலட்சியங்களை நினைத்துப் பார்த்தும் அவளால் அவனை வெறுக்க முடியவில்லை. அந்த அலட்சியங்களின் கம்பீரத்தினாலேயே அவன் மீது பரிவும் கவர்ச்சியும் அதிகமாயிற்று அவளுக்கு. நிமிர்ந்து நிற்கும் அவனது திமிர் நிறைந்த தோற்றமும், பரந்து விரிந்த மார்பும், செம்பொன் நிறம் கிளரும் சுந்தரமணித் தோள்களும், கண் நிறைந்து தோன்றும் அழகு முகமும் நினைவில் தோன்றித் தோன்றி, ‘இவற்றையும் இவற்றுக்குரியவனையும் நீ இழக்கலாகாது பெண்ணே! இவனைப் பற்றி நினைப்பதே இன்பம், இவனைப்பற்றித் தவிப்பதே பெருமை, இவனால் அலட்சியப்படுத்தப் பெறுவதை ஏற்பதிலும் கூட இன்பம் இருக்கிறது’ - என்று சுரமஞ்சரியை ஏங்கச் செய்திருந்தன. ஆசைகளுக்கு ஆசைப்படாமல் ஆசைகளை ஆசைப்பட வைக்கும் ஏதோ ஒரு தனித்தன்மை அவனிடமிருந்து அவளைக் கவர்ந்து ஆட்சி புரிந்தது. எதற்கும் அசைந்து கொடுக்காத அந்தத் தனித்தன்மையைத் தன் சிரிப்புக்கும், சிங்கார விழிப் பார்வைக்கும் அசைத்துப் பார்க்க வேண்டுமென்று உள்ளூர உறுதி கொண்டிருந்தது அவள் மனம். இந்தக் கவர்ச்சி காரணமாகத்தான் இளங்குமரன் மேல் அவளுக்கும் பெரும் பரிவு ஏற்பட்டிருந்தது.

‘இதை எனக்கு கொடுத்து விடுவதனால் நீங்கள் பெருமைப்பட இடமிருக்கிறது. ஆனால் இதை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வதனால் நான் பெருமைப்பட்டுக் கொள்ளச் சிறிதாவது இடமிருக்கிறதா என்பதுதான் என் சந்தேகம்’ என்று கடற்கரையில் அன்று முனை மழுங்கித் தணியாத முரட்டுத் திமிரோடு பேசிய அதே வாயிலிருந்து ‘சுரமஞ்சரி! உன்னிடமிருந்து எதை வாங்கிக் கொண்டாலும் எனக்குப் பெருமைதான். கற்பனை பிறக்கும் உன் கவிதை நயனங்களின் ஒரு பார்வை கிடைத்தாலும் அதைப் பெருமையாக ஏற்றுக் கொள்வேன். மோகம் பிறக்கும் உனது செவ்விதழ்களின் ஒரு மென்முறுவல் கிடைத்தாலும் பெருமையோடு ஏற்றுக் கொள்வேன்’ என்ற வார்த்தைகளை என்றாவது ஒரு நாள் வரவழைத்துப் பார்த்துவிட வேண்டும் என்ற வேட்கையோடு கூடியதொரு வைராக்கியம் அவள் மனத்தில் முளைத்திருந்தது.

இளங்குமரனின் ஓவியத்தில் செய்யப்பட்டிருந்த அந்தச் சிறு மாறுதலைக் கண்டு சிந்தனையிலாழ்ந்திருந்த தன் தலைவியை நோக்கி வசந்தமாலை கூறலானாள்: “இந்த மாறுதல் ஏன் செய்யப்பட்டது என்பதைப் பற்றி உங்கள் தந்தையாரிடம் நேருக்கு நேர் நின்று கேட்டுத் தெரிந்து கொள்வது முடியாத காரியம். ஆனால் அந்த ஓவியனைக் கண்டு பிடித்துக் கேட்டுப் பார்த்தால் ஒரு வேளை காரணம் தெரியலாம்!”

“வசந்தமாலை இதைப் பற்றி எப்படி முயன்று யாரிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அப்படித் தெரிந்து கொள்ள என்னால் முடியும். நீ பேசாமலிரு. உனக்கு ஒன்றும் தெரிந்தது போல் பிறரிடம் காட்டிக் கொள்ளவே வேண்டாம். இவையெல்லாம் உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த செய்திகளாக இருக்கவேண்டும்” என்று தோழிக்கு வற்புறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் சுரமஞ்சரி.

அப்படி வசந்தமாலையும், சுரமஞ்சரியும் சித்திரச் சாலையிலிருந்து வெளியேறிய அதே நேரத்தில் நிலா முற்றத்திலிருந்து கீழிறங்கி வானவல்லியும் உடனிருந்த பெண்களும் எதிரே வந்து சேர்ந்தார்கள். ‘இவர்கள் யாரிடமும் இங்கு நடந்தது பற்றிப் பேச்சு மூச்சுக் காட்டாதே’ - என்பதை மறுபடியும் கண்களின் பார்வைக் குறிப்பாலேயே தோழிக்கு வற்புறுத்தினாள் சுரமஞ்சரி.

“நீ உடனே திரும்பி வந்துவிடப் போகிறாய் என்று நாங்களெல்லாம் நிலா முற்றத்தில் காத்திருந்தோம் சுரமஞ்சரி! நீ வருகிற வழியாயில்லை. நேரமும் ஆகிவிட்டது. உன்னையும் அழைத்துக் கொண்டு உண்பதற்குப் போகலாம் என்று கீழே இறங்கி வந்துவிட்டோம். தந்தையார் நம்மை எதிர்பார்த்து உண்ணாமல் காத்துக் கொண்டிருப்பார். வா போகலாம்” என்று சுரமஞ்சரியை உணவுக்கு அழைத்தாள் வானவல்லி. உடனே எல்லாரும் மாளிகையின் கீழ்ப்பகுதியை நோக்கி உண்பதற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அந்தப் பெருமாளிகையின் உணவுக் கூடத்தில் பணியாரங்களின் நறுமணமும், அறுசுவை உண்டிகளின் மணமும் கலந்து பரவிக் கொண்டிருந்தன. நெய்யின் கமகமப்பும், பால் நன்றாக வற்றக் காயும் முறுகிய வாசனையும் அந்தப் பக்கமாக வேறு காரியமாய் வர நேர்ந்தவர்களுக்குக் கூட உண்ணும் ஆசையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

சுரமஞ்சரியும் வானவல்லியும் வசந்தமாலை முதலிய மற்றப் பெண்களும் உணவுக் கூடத்துக்குள் நுழைந்த போது அங்கே ஏற்கெனவே தந்தையாரும், நகைவேழம்பரும், ஓவியன் மணிமார்பனும் உண்பதற்குச் சித்தமாக வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு பக்கமாகப் பெண்கள் உட்காரும் வரிசையில் சுரமஞ்சரியின் அன்னையும் மாளிகையைச் சேர்ந்த நற்றாய், செவிலித் தாய் முதலிய முது பெண்டிர்களும் அமர்ந்திருந்தார்கள். இந்த இளம் பெண்களின் கூட்டம் உள்ளே நுழைந்தவுடன் நெய்யும், பாலும், பணியாரமும், பல்சுவை மணம் பரப்பிக் கொண்டிருந்த உணவுக் கூட்டத்தில் மல்லிகை மணமும், கூந்தலில் பூசிய தைலமணமும், வேறு பல மென்மணங்களும் புதிதாக எழுந்து உணவு மணங்களோடு கூடிக் கலந்தன. தந்தையார், சுரமஞ்சரி முதலியவர்களை முகமலர்ச்சியோடு உற்சாகமாக வரவேற்றார்.

“வாருங்கள், பெண்களே! இன்று நமது மாளிகையில் நள பாகமே செய்திருக்கிறார்கள். இந்திரவிழா உற்சாகத்தில் சமையற்காரர்கள் தங்கள் அற்புதத் திறமையைக் காட்டியிருக்கிறார்கள். இனிமேல் நாம் நமது உண்ணும் திறமையைக் காண்பிக்க வேண்டியதுதான்.”

“ஆகா! நமது மாளிகை உணவைப் பற்றியா இப்படிச் சொல்கிறீர்கள், அப்பா? என்ன அதிசயம்! என்னால் நம்பவே முடியவில்லையே! ஏதாவது கைதவறிச் செய்திருப்பார்கள். அது நன்றாக வாய்த்துத் தொலைத்திருக்கும். நம் மாளிகைச் சமையற்காரர்கள் அற்புதத் திறமையையும் உற்சாகத்தையும் எப்படி அப்பா காட்டுவார்கள்? அவர்கள் தாம் இந்த மாளிகைக்குள் நுழையு முன்பே அத்தகைய திறமையையும் உற்சாகத்தையும் எங்கோ தொலைத்துவிட்டு வந்து சேர்ந்திருக்கிறார்களே அப்பா!” என்று வானவல்லி வம்புப் பேச்சைத் தொடங்கினாள். அவள் கூறி முடித்ததும் பெண்களின் கிண்கிணிச் சிரிப்புகள் அந்தக் கூடத்தில் அலைஅலையாய் ஒலி பரப்பி அடங்கின. சுரமஞ்சரியையும் வசந்த மாலையையும் தவிர மற்றவர்கள் யாவரும் இந்த நகைச்சுவை மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சுரமஞ்சரி வானவல்லி ஆகியோரின் அன்னையும் இந்த மகிழ்ச்சியில் கலந்து கொண்டாள்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பெண்ணே! நம் மாளிகைச் சமையற்காரர்களைப் பற்றி நீ வேண்டுமென்றே மிகைப்படுத்திக் குற்றம் சொல்கிறாய். எப்போதாவது கொஞ்சம் உப்பைக் கூடப் போட்டிருப்பார்கள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற பழமொழி இருக்கிறதல்லவா? நமது மாளிகையில் உண்டு சென்றவர்கள் நீண்ட காலம் நம்மை நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அப்படி நம்மை நினைப்பதற்காகவே அவர்கள் நீண்டகாலம் இருக்க வேண்டுமென்றும் தான் நமது சமையற்காரர்கள் இப்படி உப்பை அதிகமாகப் போடுகிறார்கள் போலிருக்கிறது” என்று அன்னை கூறியபோது சிரிப்பொலி முன்னைக் காட்டிலும் பெரிதாக எழுந்தது. நகைவேழம்பரும் சேர்ந்து கொண்டு சிரித்தார். அந்த மனிதரின் ஒற்றைக் கண்ணோடு கூடிய முகத்துக்குச் சிரிப்பு நன்றாயில்லை. பேய் சிரிக்கிறாற் போல் விகாரமாக இருந்தது. செம்மையில்லாத கெட்ட கண்ணாடியில் முகம் பார்த்தது போல் சிரிக்கும் போது பூத பயங்கரம் காட்டியது நகைவேழம்பரின் முகம். குறும்புக்காரியான வானவல்லி விடாமல் மேலும் அந்த வம்புப் பேச்சை வளர்த்தாள்.

“நீ சொல்வதை நான் அப்படியே ஒப்புக்கொள்ள முடியாதம்மா! ஏனென்றால் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் உப்புக் காய்ச்சும் உப்பளங்கள் நிறைய இருக்கின்றன என்ற செய்தியையே நம் மாளிகை உணவு மூலமாகத்தான் மிகப் பலர் தெரிந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. அப்பாவைத் தேடி எத்தனையோ கடல் கடந்த தேசங்களிலிருந்து பெரிய வணிகர்கள், சிற்றரசர்கள் எல்லாம் நம் மாளிகைக்கு வந்து தங்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இங்கு முதன் முறையாக உணவு உண்டு முடிந்தவுடன் அப்பாவைக் கேட்டிருக்கிற முதல் கேள்வி என்ன தெரியுமா? ‘உங்கள் நகரத்தில் நிறைய உப்பளங்கள் இருக்கின்றனவோ?’ என்பதுதான். நான்கு நாட்களுக்கு முன் இரத்தினத் தீவிலிருந்து வந்திருந்த வைர வணிகர் கூட இதே கேள்வியைத் தானே கேட்டார்?” என்று தன் அன்னையிடம் வேடிக்கையாகக் கூறினாள் வானவல்லி. இப்படியே சிரிப்பும் கலகலப்புமாக, உற்சாகமும் உரையாடல்களுமாக உண்ணும் நேரம் கழிந்து கொண்டிருந்தது. சுரமஞ்சரியும், வசந்த மாலையும் மட்டும் சிரிப்போ பேச்சோ இல்லாமல் எதையோ ஆழ்ந்து சிந்திப்பது போல் அமைதியாக அமர்ந்து உண்பதைத் தந்தையார் கவனித்து விட்டார். அந்த மௌனத்தின் காரணத்தைச் சுரமஞ்சரியிடமே நேரில் கேட்காமல் வானவல்லியிடம் கேட்டார் அவர்.

“வானவல்லீ! இன்றைக்கு உன் சகோதரி சுரமஞ்சரி மௌன விரதம் பூண்டிருக்கிறாளா என்ன? பேச்சுமில்லை, சிரிப்புமில்லை. பதுமை போல் அமர்ந்து உண்கிறாளே!” தந்தையார் இப்படித் தூண்டிக் கேட்ட பின்பும், சுரமஞ்சரி ஒன்றும் பேசவில்லை. தன் சகோதரி சுரமஞ்சரியும் அவளுடைய தோழி வசந்தமாலையும் உற்சாகமாயில்லை என்பதை வானவல்லியும் கவனித்தாள். சகோதரி அப்படி அமைதியாயிருக்கும் போது தான் மட்டும் அதிகப் பிரசங்கியாக வம்பு பேசுவது நாகரிகமில்லை என்று உணர்ந்தவளாய் வானவல்லியும் பேச்சை நிறுத்திக் கொண்டு அமைதியாய் உண்ணத் தொடங்கினாள்.

“என்னடி, பெண்ணே! உனக்கு உடல் நலமில்லையா? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று தாய் சுரமஞ்சரியை விசாரித்தாள். “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா!” என்று பெண்ணிடமிருந்து சுருக்கமாகப் பதில் கிடைத்தது தாயாருக்கு.

ஆனால் தந்தையார் சுரமஞ்சரியை அவ்வளவு எளிதில் விடவில்லை. எப்படியாவது அவளைப் பேச வைத்துவிட வேண்டுமென்று முனைந்தவர் போல் மீண்டும் அவளிடம் நேரிலேயே பேசலானார்:

“சுரமஞ்சரீ! இன்று உனக்குச் சொல்ல வேண்டுமென்பதற்காக மிகவும் நல்ல செய்தி ஒன்று வைத்திருக்கிறேன். இதோ இந்த ஓவியனை நமது மாளிகையிலேயே பணிபுரிவதற்கு நியமித்திருக்கிறேன். எல்லாம் உனக்காகத்தான் பெண்ணே! ஓவியக் கலையில் உனக்கு இருக்கும் பற்று எனக்குத் தெரியும். இவனைப் பயன்படுத்திக் கொண்டு உனது சித்திரச் சாலையின் எஞ்சிய இடங்களையெல்லாம் சித்திரங்களால் நிரப்பி விடலாம்” என்று அவள் முகத்தில் மலர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டே கூறிய அவர் அங்கே மலர்ச்சி தோன்றாததைக் கண்டு திகைத்தார். ஒவியன் முகத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி. அவன் முகத்தில் பதவிபெற்ற பெருமிதம் இல்லை, ஏதோ பயம் தான் இருந்தது. தந்தையார் நல்ல செய்தி என்று தொடங்கிக் கூறிய இந்தப் பதவி நியமனம் அவள் மனத்தில் பல சந்தேகங்களை உண்டாக்கியது.
--------------

முதல் பருவம். 1.22. நகைவேழம்பர் நடுக்கம்

மணிமார்பன் என்னும் அந்த ஓவியனைத் திரும்பிப் போகவிடாமல் தன் தந்தையார் மாளிகையிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருப்பதன் மெய்யான நோக்கம் என்னவாக இருக்கும் என்று சுரமஞ்சரி சிந்தித்தாள். தன்னுடைய சித்திரச்சாலைக்குப் படங்கள் வரைந்து நிரப்புவதற்காகவே அவனை மாளிகையின் ஓவியக் கலைஞனாகப் பதவி தந்து நியமித்திருப்பதாகத் தந்தையார் கூறியதை அவள் அப்படியே நம்பி ஒப்புக் கொள்வதற்கு இயலவில்லை. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட அந்தரங்க நோக்கம் ஒன்று தந்தையாருக்கு இருக்குமென்று அவள் சந்தேகப்பட்டாள். ஓவியனுக்கு பதவியளித்திருக்கும் செய்தியைத் தந்தையார்தாம் மகிழ்ச்சியோடு கூறினாரே தவிர அதைக் கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த ஓவியன் முகத்தில் மலர்ச்சியோ மகிழ்ச்சியோ தோன்றவில்லை என்பதையும் அவள் கவனித்திருந்தாள். அது வேறு அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது.

“அம்மா இந்த ஒற்றைக் கண் மனிதருக்கு நகைவேழம்பர் என்று யார் பேர் வைத்தார்கள்? இவர் சிரிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லையே?” என்று சுரமஞ்சரியின் காதருகில் மெல்லக் கேட்டாள் வசந்தமாலை. சுரமஞ்சரி உடனே தோழிக்கு மட்டும் கேட்கும்படி, “அது இவருடைய சொந்தப் பெயர் இல்லையடி வசந்தமாலை! கூத்தரங்குகளிலும் நாடக மேடைகளிலும் கூத்து, நாடகம் முதலியன தொடங்குமுன் கோமாளி வேடத்தோடு விதூடகன் ஒருவன் வருவது உண்டல்லவா? எதையாவது சொல்லி அவையிலிருப்பவர்களுக்கு நகைப்பு உண்டாக்கும் கலைஞர்களுக்கு நகைவேழம்பர் என்று தமிழில் பெயர் உண்டு. எங்கள் தந்தையாரோடு வந்து சேர்ந்து கொள்வதற்கு முன்னால் இந்த மனிதர் நம் காவிரிப்பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு நாடக அரங்கில் நகைவேழம்பராக நடித்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தாராம். அதனால் அந்தத் தொழில் பெயர் இன்னும் இவரை விடாமல் பற்றிக் கொண்டு நிற்கிறது” என்று மறுமொழி கூறினாள்.

“இந்த மனிதருடைய குரூர முகத்தைப் பார்த்தால் வந்த சிரிப்புக் கூடப் போய்விடுமேயம்மா! இவரை எப்படி நாடக அரங்கில் நகைவேழம்பராக வைத்துக் கொண்டு பொறுமையாக நாடகம் நடத்தினார்கள்? பார்த்தவர்களும் தான் எப்படிப் பொறுமையோடு பார்த்தார்கள்? சிரிப்பு மூட்டுகிற முகமா இது? எரிந்த கொள்ளிக் கட்டையைப் போல் விகாரமாக இருக்கிறதே!” என்று மேலும் கேட்ட வசந்தமாலைக்கு, “இவர் நகைவேழம்பராக நடிப்பதைப் பொறுமையாகப் பார்க்க முடியாததனால் தானோ என்னவோ இவருடைய முகத்தைக் கண்டு சிரிப்பு மூள்வதற்குப் பதில் சீற்றம் மூண்டு யாரோ ஒற்றைக்கண்ணைப் பொட்டையாக்கி அனுப்பி விட்டார்கள் போலிருக்கிறது” என்று வயிற்றெரிச்சல் தீர மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி.

“நாடக மேடையில் ஆடிய கூத்துக்களை விட இவர் வாழ்க்கையில் ஆடும் கூத்துக்கள் அதிகம் போலிருக்கிறதம்மா...”

“தந்தையாரிடம் வந்து சேர்ந்த பின் இவருடைய கூத்துக்கள் மிகவும் அதிகமடி வசந்தமாலை...”

உணவுக்கூடத்தில் எல்லாருக்கும் நடுவே சுரமஞ்சரியும் வசந்தமாலையும் இப்படித் தங்களுக்குள் இரகசியம் பேசுவது போல் பேசிக் கொண்ட பேச்சினால் எல்லாருடைய கவனமும் அவர்கள் பக்கம் திரும்பவே பேச்சை அவ்வளவில் நிறுத்திக் கொண்டனர்.

“என்னவோ நீயும் உன் தோழியுமாக உங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறீர்களே சுரமஞ்சரி! எங்களோடு திடீரென்று உனக்கு என்ன கோபம் வந்துவிட்டதம்மா?” என்று தந்தையார் மறுபடியும் அவளுக்கு உற்சாகமூட்டிப் பேசவைக்கும் முயற்சியைத் தொடங்கினார். அவர் இவ்வளவு தூண்டிக் கேட்ட பின்னும் பேசாமலிருந்தால் நன்றாயிராதென்று பட்டும் படாமலும் ஏதோ பேசினாள் சுரமஞ்சரி.

“சுரமஞ்சரி தேவிக்கு இன்று ஏதோ சில காரணங்களால் மனம் குழப்பமடைந்துள்ளது போல் தோன்றுகிறது, ஐயா!” என்று அதுவரை பேசாமலிருந்த நகைவேழம்பர் முதல் முறையாக வாய் திறந்தார். அந்த நேரத்தில் அங்கே அவரைப் போன்று தன்னால் விரும்பத்தகாத ஒருவர் தன் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதே சுரமஞ்சரிக்குப் பிடிக்கவில்லை. அழுக்கும் சேறும் படிந்த தரையில் கால் அழுந்தி நிற்க அருவருப்படைந்து கூசுகிறாற்போலச் சிலருடைய பேச்சில் செவிகளும் மனமும் அழுந்தித் தோய்வதற்கு விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்கள் பேசும் போது கேட்கிறவர்களுக்கு அருவருப்பும் கூச்சமுமே ஏற்படுகின்றன. நகைவேழம்பரின் பேச்சும் சுரமஞ்சரிக்கு இத்தகைய அருவருப்பைத்தான் உண்டாக்கிற்று. அத்தனைய மனிதர் ஒருவரின் நாவிலிருந்து தன் பெயர் ஒலிக்கும் போது அந்த நாவின் அழுக்கு தனது அழகிய பெயரிலும் தோய்வது போன்று மிகவும் கூச்சத்தோடு கூடியதொரு வெறுப்பைச் சுரமஞ்சரி அடைந்தாள்.

“நகைவேழம்பரே! புதிதாக நம் மாளிகைக்கு வந்துள்ள இந்த ஓவியனை உங்கள் பொறுப்பில் ஒப்படைக்க எண்ணியுள்ளேன். வெளியில் அநாவசியமாக அலைந்து திரியாமல் இவன் மாளிகையிலேயே தங்கிப் பணிகளைச் செய்யுமாறு கண்காணித்துக் கொள்ள வேண்டியது உங்கள் வேலை. இதற்கு மேல் விவரமாக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்குக் குறிப்பறியத் தெரியும்” என்று உணவு முடிகிற நேரத்தில் தந்தையார் நகைவேழம்பருக்கு இருபொருள் தொனிக்கும் குறிப்புடன் உத்தரவிட்டதையும் சுரமஞ்சரி கவனித்துக் கொண்டாள். ‘இந்த மாளிகையை விட்டு ஆள் வெளியேறிவிடாமல் ஓவியனைச் சிறை செய்து பாதுகாத்துக் கொள்’ என்று சொல்ல வேண்டியதற்குப் பதில் அதையே கௌரவமான வார்த்தைகளில் கௌரவமான தொனியோடு தந்தையார் நகைவேழம்பருக்குச் சொல்லியிருக்கிறார் என்பதை அவள் உய்த்துணர்ந்து புரிந்து கொள்ள முடிந்தது. தந்தையாருக்கு என்னதான் வயதும் தகுதியும், செல்வமும் இருந்த போதிலும் அந்த ஓவியக் கலைஞனை அவர் ஏக வசனத்தில் குறிப்பிட்டுப் பேசியது சுரமஞ்சரிக்கு என்னவோ போலிருந்தது. நுண்கலைகளை மதிக்கும் நளினமான மணமுள்ளவள் அவள். அவளுடைய கோமளமான சுபாவத்துக்குக் கலைகள் பிறக்குமிடத்தைச் சுலபமாக நினைப்பவர்களைப் பொறுத்துப் பழக்கமில்லை. அதுவும் ஓவியம் இளமையிலிருந்து அவள் மனத்தில் பித்து ஏறிப் பதிந்த கலை. அந்தக் கலைக்கு உரியவர்களைப் பற்றி எளிதாக நினைப்பவர்களையோ பேசுபவர்களையோ அவளால் ஏற்க முடிவதில்லை.

உண்டு முடித்தபின் உணவுக் கூடத்திலிருந்து எல்லாரும் வெளியேறிய போது, “வசந்தமாலை! விரைவாக நடந்து வா. சிறிது முன்னால் சென்று உணவுக் கூடத்தின் வாயிலுக்கு அருகே நின்று கவனிக்கலாம். உள்ளிருந்து ஒவ்வொருவராக வெளியேறிப் படிகளில் இறங்கும் போது நீயும் நானுமாக அவர்கள் பாதங்களை நாம் கவனிப்பதை அவர்கள் அறிந்து கொள்ளாதபடி கவனிக்க வேண்டும்” என்று காதருகில் மெல்லச் சொல்லி அவளை வேகமாக நடக்கச் செய்து அவளுடன் வாயிற் பக்கம் வந்து நின்று கொண்டாள் சுரமஞ்சரி. முதலில் தந்தையாரும், தாயும், வானவல்லியும் பிற பெண்களும் படியிறங்கி வந்தார்கள்.

“என்னம்மா? இங்கே எதற்கு நின்று கொண்டிருக்கிறாய்? போகலாம், வா” என்று தந்தையார் அவளைக் கூப்பிட்டார்.

“வருகிறேன் அப்பா, நீங்கள் முன்னால் செல்லுங்கள்” என்று அவரை முன்னால் அனுப்பிவிட்டு மேலும் படியிறங்கி வருகிற பாதங்களை கவனிக்கத் தொடங்கினாள் சுரமஞ்சரி. ஒவ்வொருவராக எல்லாரும் போய்விட்டார்கள். மணிமார்பனும், நகைவேழம்பரும் தான் வரவில்லை. உள்ளே சமையல்காரர்களோடு ஏதோ பேசிக் கொண்டு நின்றார் நகைவேழம்பர்.

சிறிது நேரத்தில் மணிமார்பனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு நகைவேழம்பர் படியிறங்கி வந்த போது சுரமஞ்சரி தோழியோடு அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் அங்கே நின்று கொண்டிருப்பாளென்று அந்த ஒற்றைக் கண் மனிதர் எதிர்பார்க்கவில்லை. அப்போது அங்கே அவள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட போது சிறிது அதிர்ச்சி கூட அவருக்கு உண்டாயிற்று. சாமர்த்தியமாக அந்த அதிர்ச்சி வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றார். தற்செயலாக நடந்து உடன் வருபவர்களைப் போல் சுரமஞ்சரியும் தோழியும் நகைவேழம்பரோடு கூட நடந்தார்கள். அவர்களும் உடன் வருவதைக் கண்ட நகைவேழம்பரின் நடை இன்னும் துரிதமாயிற்று. ஓவியனும் அதற்கு ஏற்பத் துரிதமாக நடந்தான். விரைவாய்த் தங்களைக் கடந்து அடுத்த கூடத்துக்குள் நுழைந்து முன்னால் போய் விடுவதற்காக அவர் முந்துகிறார் என்பது சுரமஞ்சரிக்கும், தோழிக்கும் புரிந்தது. உடனே அவர்களும் விட்டுக் கொடுக்காமல் தங்கள் நடையையும் வேகமாக்கினார்கள்.

ஆயினும் அவர்களைக் கடந்து பாய்ந்து முந்திச் செல்வது போல் ஓவியனை இழுத்துக் கொண்டு அடுத்த கூடத்துக்குள் காலெடுத்து வைத்துவிட்டார் நகைவேழம்பர். மேலே அவரைத் தொடர்ந்து நடப்பது சாத்தியமில்லை என்றுணர்ந்த சுரமஞ்சரி வார்த்தைகளால் அவரைத் தடுத்து நிறுத்தினாள்!

“ஐயா! ஒரு விநாடி நின்று போகலாமல்லவா? உங்களிடம் சிறிது பேச வேண்டும்.”

முன்புறம் விரைந்து கொண்டிருந்த நகைவேழம்பர் திரும்பி நின்றார். “என்ன பேசவேண்டும் சுரமஞ்சரி தேவீ? சொல்லுங்கள், கேட்கிறேன். எனக்கு அவசரமாகப் போக வேண்டும். நேரமாகிறது.”

“போகலாம்! ஆனால் இவ்வளவு தலைபோகிற அவசரம் வேண்டியதில்லை. ஐயா! நீங்கள் நெடுங்காலத்துக்கு முன் கூத்தரங்குகளில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் முகத்துக்கு அரிதாரமும், கண்ணுக்கு மையும், கால்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பும் இட்டுக் கொண்டு அழகாக இருந்ததாகச் சொல்வார்கள். கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இத்தனை காலத்துக்குப் பின் காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசிக் கொள்ளும் ஆசை உங்களுக்குத் திடீரென்று எப்படி ஐயா உண்டாயிற்று? அதுவும் இவ்வளவு நன்றாகச் சிவப்பு நிறம் பற்றும் செம்பஞ்சுக் குழம்பு உங்களுக்கு எங்கேதான் கிடைத்ததோ?” என்று அவருடைய பாதத்தைச் சுட்டிக் காட்டிச் சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள்.

அதைக் கேட்டு நகைவேழம்பர் மெய் விதிர்விதிர்த்து நடுங்கினாற்போல் நின்றார். அவருடைய ஒற்றைக்கண் மிரண்டு பார்த்தது.
---------------

முதல் பருவம். 1. 23. நாளைக்குப் பொழுது விடியட்டும்!

அந்தப் பின்னிரவு நேரத்தில் பூம்புகாரின் துறைமுகம் ஆரவாரமும் ஆள் புழக்கமும் குறைந்து அமைதியாய்க் காட்சியளித்தது. துறைமுகத்தின் அழகுகள் அமைதியில் தோய்ந்து தோன்றும் காரணத்தினால் பகற்போதில் இருந்ததைக் காட்டிலும் புதிய கவர்ச்சி ஏதோ இப்பொழுது சேர்ந்திருப்பது போல் விநோதமாக விளங்கின. நீலவானத்தின் நெடிய பெருவீதியில் மங்கிய நிலவு உலாச் சென்று கொண்டிருந்தது. அந்தரத்தில் சுடர்விரிக்கும் செந்தழல் மண்டிலம் போல் கலங்கரை விளக்கத்துத் தீ எரிந்தது. அந்த ஒளியில், நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த பெரிய பெரிய கப்பல்கள் கடற்பரப்பெங்கும் தெரிந்தன. மிகப் பெரிய வெண்ணிறப் பறவை ஒற்றைச் சிறகை மட்டும் சாய்த்து விரித்தாற் போல் கப்பல்களின் பாய்மரங்கள் எடுப்பாக இலங்கின.

வேறு ஒலிகளற்ற அமைதியில் கடற்காற்று சுகமாக வீசும் சூழ்நிலையில் துறைமுகப் பகுதியெங்கும் பல்வேறு பொருள்களும், பொருள்களின் மணங்களும் கலந்து நிறைந்திருந்தன. பொதிய மலையிலிருந்து வந்து இறங்கியிருந்த சந்தனக்கட்டைகளும், சீன தேசத்திலிருந்து வந்திருந்த பச்சைக் கற்பூரமும் கடற்கரையைத் திருமணம் நிகழும் வீடு போல் மணக்கச் செய்து கொண்டிருந்தன. எங்கும் அமைதி தங்கி நிற்கும் நேரம். எங்கும் அழகு பொங்கி நிற்கும் தோற்றம். எங்கும் ஒளியடங்கின நேரத்துக்கு உரிமையான ஒலியடங்கின அடக்கம்.

அப்போது அந்தத் துறைமுகத்தின் ஒதுக்கமான பகுதி ஒன்றில் மணிபல்லவத்துக்குப் புறப்படும் சிறிய பாய்மரக் கப்பலின் அருகே அருட்செல்வ முனிவரும், வீரசோழிய வளநாடுடையாரும் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் கப்பல் புறப்படுவதற்கிருந்தது. புத்தர் பெருமானின் பாத பீடிகைகளை தரிசனம் செய்வதற்குச் செல்லும் பௌத்த சமயத் துறவிகள் சிலரும் கப்பலுக்கு அண்மையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்று அந்தக் கப்பல் புறப்படும் நேரத்தில் அங்கே வழக்கமான கூட்டம் இல்லை. கப்பலில் பயணம் செய்வதற்கு இருந்தவர்களும் மிகக் குறைந்த தொகையினர்தாம். நகரத்தில் வாராது வந்த பேரழகுக் கொண்டாட்டமாக இந்திரவிழா நடந்து கொண்டிருக்கும் போது எவராவது வெளியூர்களுக்குப் போக ஆசைப்படுவார்களா? வெளியூர்களிலிருந்தெல்லாம் காவிரிப்பூம்பட்டினத்துக்கு மனிதர்களை வரவழைக்கும் சிறப்பு வாய்ந்த திருவிழா அல்லவா அது? அதனால் தான் துறவிகள் சிலரையும், இன்றியமையாத கப்பல் ஊழியர்களையும் தவிர பயணத்துக்காகக் கூடும் வேறு கூட்டம் அங்கே இல்லை.

கப்பல் புறப்படப் போகிறது என்பதற்கு அறிகுறியாக மேல் தளத்தில் கட்டப்பெற்றிருந்த மணியை ஒலிக்கச் செய்தான் மீகாமன். கண்களில் நீர் பனிக்க நின்ற வீரசோழிய வளநாடுடையாரை அன்போடு தழுவிக் கொண்டார் அருட்செல்வ முனிவர். உணர்வு மிகுந்து பேசுவதற்கு அதிகம் சொற்களின்றி இருந்தனர் இருவரும்.

“நல்லவர்களோடு நட்பு செய்து பழகிக் கொள்வதில் எவ்வளவு துன்பமிருக்கிறது பார்த்தீர்களா? பேதையர்களோடு பழகுவதே ஒரு வகையில் நல்லது. பேதையர்களுடன் நமது நட்பு அறுந்து போனால் அந்தப் பிரிவினால் நமக்குத் துன்பமே இல்லை முனிவரே!”

“பேயோடாயினும் பழகிவிட்டால் பிரிவது வேதனைதான் வளநாடுடையாரே!”

“ஆனால் உங்களுக்கு இந்தப் பழமொழி பொருந்தாது முனிவரே! நானும் பேயில்லை! நீங்களும் பேயில்லை!”

“தவறு! நான் மனிதனாகவா இப்போது இந்தக் கப்பலில் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போகிறேன்? இல்லவே இல்லை. உயிரோடு இருந்து கொண்டே செத்துப் போய்விட்டதாக உலகத்துக்குப் பொய் சொல்லிவிட்டு அந்தப் பொய்யைப் பாதுகாக்க உங்களையும் நியமித்துவிட்டுப் பேயாகப் பறந்து கொண்டு தான் ஓடுகிறேன். உயிர் இருந்தும் அதற்குரிய தோற்றமின்றி மறைந்து நடமாடுவதுதானே பேய்! அப்படியானால் நான் முதல் தரமான பேய்தான் வளநாடுடையாரே!”

மீண்டும் கப்பல் மணி ஒலித்தது. அமைதியில் பிறந்து அமைதியில் வளர்ந்து அமைதியோடு கலக்கும் அந்த மணி ஓசை அப்போது அங்கிருந்த சூழ்நிலையில் தனி ஒலியாய் விரிந்து பரவியது.

“இளங்குமரனை கவனித்துக் கொள்ளுங்கள். அன்பையும், அதைப் போற்றும் பண்புள்ளவர்களையும் நம்பி அவனை விட்டுப் பிரிந்து செல்கிறேன். அன்பும் அன்புள்ளவர்களும் கைவிட்டு விட்டாலும் அந்தப் பிள்ளையின் தன்னம்பிக்கை அவனைக் காப்பாற்றும். தன்னைப் பிறர் வெற்றி கொள்ளவிடாமல் தான் பிறரை வெற்றி கொள்ளும் மனம் அவனுக்கு இருக்கிறது. உலகத்தில் மிகப் பெரிய செல்வம் இப்படிப்பட்ட மனம் தான். இந்த மனம் உள்ளவர்கள் உடம்பினால் தோற்றுப் போனாலும் உள்ளத்தினால் வெற்றி பெறுவார்கள். உயரிய நூல்களைக் கற்று உலக ஞானமும் பெறும்போது இப்போது பெற்றிருக்கிற சில முரட்டுக் குணங்களும் தணிந்து பண்புகள் வளர்ந்து இளங்குமரனின் மனம் பக்குவமடைந்து விடும்...”

இவ்வாறு கூறிக்கொண்டே கப்பலின் மரப்படிகளில் ஏறினார் அருட்செல்வ முனிவர். வளநாடுடையார் முனிவரையே பார்த்துக் கொண்டு கீழே கரையில் நின்றார். உரிய நேரத்துக்கு ஏதோ நினைவு வந்தவர்போல், “அடுத்த ஆண்டு வைகாசி விசாகம் - புத்த பௌர்ணமி நாள் எப்போது வரப்போகிறதென்று காத்துக் கொண்டே இருப்பேன். மறந்து விடாதீர்கள்” என்று கப்பலில் ஏறிக் கொண்டிருக்கும் முனிவருக்குக் கேட்கும்படி இரைந்து கூறினார் அவர். ‘இந்த மனம் இன்றிலிருந்து தாங்க வேண்டிய நினைவுச் சுமையை எப்படித் தாங்கி ஆற்றப் போகிறது’ என்பது போல் பெருமூச்சு வந்தது அவருக்கு. அருட்செல்வ முனிவர் தம்முடைய தவச் சாலையிலிருந்து நெருப்புக்கு இரையாகாமல் காப்பாற்றிக் கொண்டு வந்த சுவடிகளையும் பிற பொருள்களையும் தவிர மனத்தில் இளங்குமரனைப் பற்றிய பேருண்மைகளையும் காப்பாற்றிச் சுமந்து கொண்டு தான் மணிபல்லவத்துக்குக் கப்பல் ஏறியிருக்கிறார் என்பதை வளநாடுடையார் அறிந்திருந்தார். ஆயினும் அந்தப் பேருண்மைகள் புரிவதற்கு அடுத்த புத்த பௌர்ணிமை வரையில் காத்திருக்க வேண்டுமே!

கடற்பரப்பில் கப்பல் சிறிது தொலைவு நகர்கிற வரை கரையில் நின்றுவிட்டு வீடு திரும்பினார் வளநாடுடையார். வீட்டில் கதக்கண்ணன், இளங்குமரன் எல்லோருமே இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றிருந்தார் அவர். முனிவருடைய தவச்சாலை தீப்பற்றி முனிவரும் தீயுண்டு இறந்து போனாரென்று செய்தியை யாவரும் நம்பத்தக்க விதத்தில் எப்படி விவரிப்பதென்று கூட முன்னேற்பாடாகச் சிந்தித்து வைத்துக் கொண்டே வீட்டை அடைந்திருந்தார் அவர்.

‘உங்கள் கண்காணிப்பில் உங்களுடைய இல்லத்தில் இருக்கச் செய்துவிட்டுப் போன முனிவரை நீங்கள் எப்படித் தப்பிச் செல்ல விட்டீர்கள்? நீங்கள் கவனமாக இருந்தால் அவர் தவச்சாலைக்குத் தப்பிச் சென்று அங்கே தீக்கிரையாக நேர்ந்திருக்காதே!’ என்று இளங்குமரன் தன்னையும், முல்லையையும் கேட்பான் என்றும் அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று கூட அவர் நினைத்து வைத்திருந்தார். ஆனால் அவற்றுக்கெல்லாம் அவசியமில்லாமல் போயிற்று. வீட்டில் முல்லையைத் தவிர வேறு யாருமே அப்போது இல்லை. அவர் வீட்டை அடைந்த போது விடிவதற்குச் சில நாழிகைகளே இருந்தன.

“என்னப்பா, முனிவர் அகப்படவில்லையா? நீங்கள் மட்டும் தனியாக வந்திருக்கிறீர்களே...?” என்று தூக்கக் கலக்கத்திலும் நினைவாகக் கேட்டாள் முல்லை. சக்கரவாளக் கோட்டத்தில் தம்மைத் துரத்தியவர்கள் கல் எறிந்தால் தமது உடலில் உண்டாகியிருந்த சிறு சிறு காயங்களை அந்த இருளில் தம் மகள் கண்டு விடாமல் மறைத்துக் கொள்வதற்கு முயன்றார் அவர்.

“உறக்கம் கெடாமல் நீ தூங்கம்மா. எல்லாம் பொழுது விடிந்ததும் சொல்கிறேன். இப்பொழுது என் மனமே சரியாயில்லை” என்று பெண்ணின் கேள்விக்குப் பிடி கொடுக்காமல் மறுமொழி கூறித் தப்பித்துக் கொண்டார் வளநாடுடையார்.

“முல்லை! இளங்குமரனும், உன் தமையனும் காலையிலிருந்து இதுவரை எங்கேதான் சுற்றுகிறார்களோ? விடிகிற நேரம் ஆகப் போகிறது. இந்திர விழா வந்தாலும் வந்தது, இவர்களுக்கு ஊர் சுற்ற நேரமும் காலமும் இல்லாமலே போய்விட்டது. பாவம்! நீ இவ்வளவு நேரம் தனியாக வீட்டில் இருந்திருக்கிறாயே!” - என்று மகளிடம் வருந்திக் கூறிவிட்டுப் படுக்கச் சென்றார் வளநாடுடையார். ‘தூங்குகிறோம்!’ என்று பேருக்குப் படுக்கையில் புரண்டாரே ஒழிய மனத்தைக் குடையும் நினைவுகளை மீறி உறக்கம் அவரை அணுக மறுத்தது. பொழுது புலர்ந்ததும் இளங்குமரன் முகத்தில் விழித்துச் சிறிதும் தடுமாறாமல் அந்தப் பொய்யை மெய்போல் உறுதியாக எப்படிக் கூறலாம் என்று சொற்களை மனத்தில் வரிசைப்படுத்தும் முயற்சியில் தான் மீண்டும் அவரால் ஈடுபட முடிந்தது. அதோடு அடுத்த புத்த பௌர்ணிமை வரையுள்ள கால வெளியின் நீண்ட தொலைவையும் அவர் தம் நினைவுகளால் அளக்க முற்பட்டார். முடிவும், விடையும் கிடைக்காது மேலும் மேலும் நீளும் அளவாக இருந்தது அது. மனம் அறியத் தவிக்கும் உண்மைகளுக்கும் தமக்கும் நடுவிலிருந்த காலவெளி பெரிதாகவும் மலைப்பாகவும் தோன்றியது அவருக்கு.

முல்லை தனக்குக் கதவைத் திறந்து விடுவதற்காக எழுந்திருந்து விட்டு இப்போது நன்றாக உறங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர். முல்லை படுத்திருந்த இடத்திலிருந்து தெளிவான குரலில், “நாளைக்குக் காலையில் அவர் இங்கு வந்து விடுவாரா, அப்பா?” என்று கேள்வி புறப்பட்ட போதுதான் தனக்குக் கதவு திறந்துவிட்டதனால் கலைந்த தூக்கத்தை அவள் இன்னும் திரும்பப் பெறவில்லை என்று அவருக்குப் புரிந்தது. தான் தூங்கிப் போய்விட்டதாக அவள் நினைத்துக் கொள்ளட்டுமென்று முதலில் அவளுக்குப் பதில் பேசாமலிருந்து விட எண்ணினார் அவர். ஆனால் மகள் விடவில்லை. மீண்டும் அவரைக் கேட்டாள்.

“உங்களைத்தான் கேட்கிறேனப்பா! நாளைக் காலையில் அவர் இங்கு வந்துவிடுவாரா?”

கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பெண்ணை ஏமாற்றும் துணிவு இரண்டாம் முறையும் அவளிடமிருந்து கேள்வியெழுந்த போது தளர்ந்து விட்டது. மௌனத்தைக் கலைத்துவிட்டு வாய் திறந்தார் அவர்.

“எவரைச் சொல்கிறாய் முல்லை?”

”அவரைத்தான் அப்பா, அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் புதல்வர். நாளைக் காலையில் இங்கு வருவாரா?”

“ஓகோ, இளங்குமரனைப் பற்றிக் கேட்கிறாயா? நாளைக்கு அவசியம் இங்கே வருவான் அம்மா. வராவிட்டாலும் நானே அவனைத் தேடிச் சென்று பார்க்க வேண்டிய காரியம் இருக்கிறது.”

“அப்படித் தேடிச் சென்று பார்த்தால் அவரை மறவாமல் இங்கே அழைத்து வர வேண்டும் அப்பா! இன்றைக்குத்தான் அண்ணனுக்கும் அவருக்கும் செய்து வைத்திருந்த விருந்துணவெல்லாம் வீணாகி விட்டது. நாளைக்காவது அவரை இங்கே விருந்துண்ணச் செய்ய வேண்டும்.”

பெண்ணின் ஆவலைக் கேட்டு வளநாடுடையார் தமக்குள் சிரித்துக் கொண்டார்.

மறுநாள் காலை இளங்குமரன் தங்கள் இல்லத்துக்கு வந்தால் துணிவோடு அவனை வாயிலிலே எதிர்கொண்டு சென்று ‘நீங்கள் இந்த வீட்டுக்கெல்லாம் வந்து விருந்து உண்ணுவீர்களா? பட்டினப் பாக்கத்துச் செல்வக் குடும்பத்து நங்கையர் எவரேனும் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு பகட்டாக அழைத்துப் போனால் போவீர்கள். இந்த முல்லைக்கு மனத்தைத் தவிர வேறு செல்வம் கிடையாது ஐயா! அவள் இந்தச் செல்வத்தைத்தான் உங்களுக்குத் தரமுடியும். பல்லக்கும் பரிவாரமும் வைத்துப் பாங்காக அழைத்து விருந்தளிக்க இந்த ஏழை மறவர் குடும்பத்துப் பெண்ணுக்கு இயலாது. உடன் வந்தவளை மறந்து ஊர் சுற்றப் போன பின்பும் உங்களை என்னால் மறக்க முடியவில்லையே?’ என்று குத்தலாகப் பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டு, அப்படி அவரிடம் இடுப்பில் கையூன்றி எதிர் நின்று தான் பேசுவது போன்ற காட்சியையும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் முல்லை. அவ்விதமாகக் கற்பனை செய்வது வெப்பமும் தட்பமும் கலக்கும் அந்தப் பின்னிரவுப் போதில் மனத்துக்கும் உடம்புக்கும் சுகமான அநுபவமாக இருந்தது அவளுக்கு.
-------------

முதல் பருவம். 1. 24. வானவல்லி சீறினாள்!

உணவுக் கூடத்திலிருந்து வெளியேறிய நகைவேழம்பர் ஓவியனையும் இழுத்துக் கொண்டு விரைவாக முன்னால் சென்றுவிட முயன்றபோது சுரமஞ்சரி அவரைத் தடுத்து நிறுத்திக் கேட்ட கேள்வி அவருடைய தோற்றத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிற்று. அந்த அதிர்ச்சி நிலையை சுரமஞ்சரியும் வசந்தமாலையும் நன்றாக உற்றுக் கவனித்துக் கொண்டார்கள்.

அருகில் வந்து சுரமஞ்சரி அவருடைய பாதத்திலிருந்த செம்பஞ்சுக் குழம்பின் கறையைச் சுட்டிக் காட்டி அந்தக் கேள்வியைக் கேட்ட போது அவர் உடல் பாதாதிகேச பரியந்தம் ஒருதரம் குலுங்கி அதிர்ந்து ஓய்ந்தது. அப்பப்பா! அந்தச் சமயத்தில் அவர் முகம் அடைந்த விகாரமும், குரூரரும், பயமும் வேறெந்தச் சமயத்திலும் அடைந்திராதவையாயிருந்தன. அதைக் கவனித்துக் கொண்டும், கவனிக்காதவள் போன்ற நடிப்புடனே சுபாவமாகச் சிரித்துக் கொண்டே, “இதைத் தெரிந்து கொள்ளத்தான் கூப்பிட்டேன். வேறொன்றுமில்லை. இனி நீங்கள் போகலாம்” என்று கூறிவிட்டுத் தன் தோழியோடு திரும்பிச் சென்று விட்டாள் சுரமஞ்சரி. திரும்பிச் சென்றவள் நேராகத் தன்னுடைய அலங்கார மண்டபத்தை அடைந்தாள். அங்கே ஒரு பக்கத்தில் மறுநாள் அதிகாலையில் அவள் சூடிக் கொள்வதற்கான பூக்கள் வாடாமல் ஈரத்தோடு பதமாக வைக்கப்பட்டிருந்த பூக்குடலை இருந்தது. அதை எடுத்துப் பிரித்து வெண் தாழம்பூவிலிருந்து மிகத் தெளிவான உள்மடல் ஒன்றை உதிர்த்துத் தனியாக்கினாள். தாழம்பூவின் நறுமணம் மற்றெல்லாப் பூக்களின் மணத்தையும் விஞ்சிக் கொண்டு எழுந்து அலங்கார மண்டபத்தில் பரவியது. காம்பு மழுங்காமல் கூரியதாய் இருந்த பிச்சியரும்பு ஒன்றில் செம்பஞ்சுக் குழம்பைத் தேய்த்துக் கொண்டு வெள்ளியில் வார்த்துத் தீட்டினாற் போன்ற தாழை மடலில் முத்து முத்தாக எழுதத் தொடங்கினாள் சுரமஞ்சரி. எழுதுவதற்காகவும் எழுதப்படுகிறவருக்காகவும் அவளுடைய நெஞ்சுக்குள் மணந்து கொண்டிருந்த நினைவுகளைப் போலவே பிச்சியும், தாழையும், செம்பஞ்சுக் குழம்பும் கலந்து உருவான கையெழுத்துக்களும் கம்மென்று மணம் கிளர்ந்தன. அப்போது சுரமஞ்சரியின் நெஞ்சமே ஒரு பூக்குடலையாகத்தான் இருந்தது. நறுமண நினைவுகள் என்னும் தேன்சுமைப் பூக்கள் அவளது நெஞ்சு நிறையப் பூத்திருந்தன. மண்டபத்துப் பூக்குடலையிலிருந்து மலரும் மடலும் எடுத்து நெஞ்சுப் பூக்குடலையிலிருந்து நினைவுகளைத் தொடுத்து அவள் எழுதலானாள். பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்த மாலை தனது அறிந்து கொள்ளும் ஆவலை அடக்க முடியாமல், “என்னம்மா எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“மடல் எழுதுகிறேன்.”

“மடல் எழுதுவது தெரிகிறது! ஆனால் யாருக்கு?”

“இதென்ன கேள்வி! உன்னைப் போல் எதையும் குறிப்பாக அறிந்து கொள்ளத் தெரியாத பெண் எனக்குத் தோழியாக வாய்த்திருக்கக் கூடாது வசந்தமாலை!” என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. வசந்தமாலைக்குப் புரிந்தது. தலைவியின் குறிப்பு மட்டுமல்லாமல் குதூகலமும் சேர்த்துப் புரிந்தது. “நெஞ்சுளம் கொண்ட அன்பருக்கு” என்று சுரமஞ்சரி தன் மடலைத் தொடங்கியிருப்பதையும் வசந்தமாலை பார்த்தாள். மடல் தீட்டும் அந்த நிலையில் தன் தலைவியின் கையும் விரல்களும் குவிந்து குழைந்து நளினமாகத் தோன்றின தோழிக்கு. நிலவில் முளைத்த தளிர்கள் போல் அழகிய விரல்கள் அவை. நிலவிலிருந்து தளிர்ந்த கொழுந்து போன்ற முன் கை விரல்களில் சுடர் விரியும் மோதிரங்கள். அந்த மடலைத் தீட்டும் போது சுரமஞ்சரி மணப்பெண் போல் அழகு கொண்டு தோன்றினாள் வசந்தமாலைக்கு. அந்த மடலில் எழுதுவதற்காக அவளுள்ளத்தே எழும் இங்கிதமான நினைவுகளின் சாயல் முகத்திலும் தோன்றியதினால் வட்டப் பொற்பேழையில் வண்ணநிலாக் கதிர்களின் ஒளி படிந்தது போல் அவள் முகம் புதுமையழகு காட்டியது. கண்கள், பார்வை, இதழ்கள், சிரிப்பு, பளிங்குத் தரையில் தோகை விரித்துச் சாய்ந்த மயில்போல் அவள் சாய்ந்து அமர்ந்து மடல் தீட்டும் கோலம் எல்லாம் புதுமைதான்; எல்லாம் அழகுதான். வசந்தமாலை தன் தலைவியையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு செயலை மனம் நெகிழ்ந்து விரும்பிச் செய்யும் போது அப்படிச் செய்வதனாலேயே மனிதர்களின் முகத்துக்குத் தனிமையானதொரு மலர்ச்சியும் அழகும் உண்டாகும். பருவ காலத்துப் பூவைப்போல் தோற்றமும் மணமும் செழித்துக் கிளரும் நிலை அது. அந்த வெண் தாழை மடலில் முத்து முத்தாய்ச் சித்திரம் போல் எழுத்துக்களை எழுதும் போது சுரமஞ்சரி அதற்கு முன்னில்லாததொரு தனி அழகுடன் காட்சியளித்தாள். இணையற்ற உற்சாகத்தை அவள் முகமும் கண்களும் காட்டின. தலைவியின் அந்தப் பேரழகு நிலையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது வசந்தமாலைக்கு. கார்காலத்து முல்லைப் புதர்போல் தலைவியிடம் ஏதோ பூத்துக் குலுங்கி மணப்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.

கீழே குனிந்து எழுதிக் கொண்டிருந்த சுரமஞ்சரி எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்து, “வசந்தமாலை! நீ போய் நகைவேழம்பரோடு தங்கியிருக்கும் அந்த ஓவியனை அழைத்துக் கொண்டு வா. இந்த மடலை ‘அவரு’க்குக் கொடுத்தனுப்புவதற்கு அவன் தான் தகுதியான மனிதன்” என்றாள்.

“அது எப்படியம்மா முடியும்? உங்கள் தந்தையார்தான் ஓவியனை நகைவேழம்பருடைய பொறுப்பில் விட்டிருக்கிறாரே. அவரிடம் நீங்கள் எப்படி மடல் கொடுத்து அனுப்ப முடியும்? சற்று முன்புதான் நகை வேழம்பரை அலட்சியமாகப் பேசி அனுப்பியிருக்கிறீர்கள். உங்கள் மேல் அவருக்குச் சினம் மூண்டிருக்குமே? உங்கள் வார்த்தையை அவர் எப்படிக் கேட்பார்?”

“மடல் எழுதுகிறேன் என்றோ, மடலைக் கொடுத்து ஓவியனை வெளியே அனுப்பப் போகிறேன் என்றோ நகைவேழம்பரிடம் சொல்லாதே. ஓவியனை நான் அழைத்து வரச் சொன்னதாக மட்டும் சொல்லு, அவர் அனுப்ப மறுக்க மாட்டார். மறுத்தால் நானே நேரில் வருகிறேன்.”

“என்னவோ, அம்மா! நீங்கள் சொல்வதற்காகத்தான் போகிறேன். எனக்கு அவருடைய ஒற்றைக்கண் முகத்தைப் பார்க்கவே பயமாயிருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஓவியனை அழைத்து வருவதற்காக நகைவேழம்பர் இருந்த பகுதிக்குள் சென்றாள் வசந்தமாலை. நகைவேழம்பர் அந்த மாளிகையின் கீழ்ப்புறத்தில் தோட்டத்துக்குள் அமைந்திருந்த தனிப்பகுதி ஒன்றில் வசித்து வந்தார். தந்தையாருடைய கப்பல் வணிகத்தோடு தொடர்புடைய அலுவல்களைக் கவனிப்பதற்காக அந்தப் பகுதி அமைந்திருந்தது. அந்தப் பகுதியின் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் நகைவேழம்பருடைய ஆதிக்கத்துக்கு மட்டுமே உட்பட்டவை.

தான் கூப்பிட்டனுப்பியதற்கு இணங்கி நகைவேழம்பர் ஓவியனை அனுப்புகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு விடுவதற்காகவே சுரமஞ்சரி வசந்த மாலையை அனுப்பினாள். தான் சந்தேகப்படுவது போல் ஓவியன் கௌரவமான முறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறானா என்பதையும் சுரமஞ்சரி இந்த அழைப்பின் மூலமாகத் தெரிந்து கொண்டுவிட எண்ணியிருந்தாள். தவிர, அந்த இரவு நேரத்தில் மருவூர்ப்பாக்கத்திலுள்ள நீலநாக மறவர் படைக்கலச் சாலைக்குப் போய் இளங்குமரனைச் சந்தித்துத் தனது மடலைக் கொடுப்பதற்கு ஓவியன் மணிமார்பன் தான் தகுதியான ஆள் என்று நினைத்தாள் அவள்.

அவள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வசந்தமாலை திரும்பி வந்தாள்.

“அம்மா! ஓவியனைச் சிறிது நேரத்தில் அனுப்பி வைப்பதாக நகை வேழம்பர் ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால் இந்த மாளிகைக்கு வெளியே எங்கும் அவனை அனுப்பிவிடக் கூடாதென்று உங்களிடம் சொல்லி விடுமாறு என்னிடம் தனியாகக் கூறியனுப்பினார். ஓவியர் இப்போது வந்துவிடுவார்” என்று வசந்தமாலை வந்து கூறியதிலிருந்து சுரமஞ்சரிக்கு ஓர் உண்மை மிகத் தெளிவாகப் புரிந்தது. தந்தையாரும் நகைவேழம்பரும் ஓவியனை எதற்காகவோ மாளிகைக்குள்ளேயே பாதுகாக்க நினைக்கிறார்கள் என்பதுதான் அந்த உண்மை.

சிறிது நேரத்தில் ஓவியன் தயங்கித் தயங்கி நடந்து வந்தான். சுரமஞ்சரி, “வாருங்கள் ஓவியரே” என்று முகம் மலர வரவேற்றாள். ஆனால் அவன் அவளுடைய வரவேற்பையும் பொருட்படுத்தாமல் அணையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளம் போல் சொற்களைக் குமுறலோடு வெளியிட்டான்:

“அம்மணீ! உங்களுக்குக் கோடி முறை வேண்டுமானால் வணக்கம் செலுத்துகிறேன். உலகத்தில் என்னென்ன நன்மைகள் உண்டோ அத்தனையும் கடவுள் உங்களுக்கு அருளட்டும். நூறு பொற்கழஞ்சுகளுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் ஆசைப்பட்டுத் தெரியாத்தனமாய் இந்த மாளிகையில் வந்து மாட்டிக் கொண்டு விட்டேன். இங்கே தோற்றத்தினால் தான் மனிதர்களாயிருக்கிறார்கள். மனத்தினால் மனிதர்களாயிருப்பவர்களைக் காண முடியவில்லை. நான் ஏழை. வயிறு வளர்க்கவும் கலை வளர்க்கவும் சேர்த்து ஒரே சமயத்தில் ஆசைப்படுகிறவன். இங்கே என் மனம் காரணமின்றிப் பயப்படுகிறது. தயவு கூர்ந்து என்னை விட்டு விடுங்கள்! என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி செலுத்திக் கொண்டேயிருப்பேன்.”

சுரமஞ்சரியை எப்போது சந்திக்கப் போகிறோம் என்றே காத்துக் கொண்டிருந்தது போல மனம் விட்டுக் கதறினான் அந்த இளம் ஓவியன். நெஞ்சிலிருந்து குமுறிக் கொண்டு வந்தன அவன் சொற்கள். சூதுவாது, கள்ளங்கபடறியாத, இனி அறியவும் விரும்பாத அப்பாவி என்பது அவனுடைய பால் வடியும் முகத்திலேயே தெரிந்தது.

சுரமஞ்சரி அவனுக்கு ஆறுதலாகச் சொல்லலானாள்: “பயப்படாதீர்கள், ஓவியரே! உங்களுக்கு ஒரு கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“கெடுதல் என்று தனியாக ஏதாவது வெளியிலிருந்து இங்கே வர வேண்டுமா, அம்மணீ! போதுமான கெடுதல்கள் இங்கேயே இருக்கின்றன. இந்த ஒற்றைக் கண்ணர் ஒருவர் போதுமே!”

கடைசியில் நெடுநேரம் பேசி ஓவியனை அமைதி கொள்ளச் செய்த பின் இளங்குமரனுக்குத் தான் எழுதிய மடலை அவனிடம் கொடுத்து யாரும் கண்டுவிடாமல் பரம இரகசியமாக அவனை அங்கிருந்து வெளியே அனுப்பினாள் சுரமஞ்சரி.

“நகைவேழம்பர் இவரை வெளியே அனுப்பலாகாதென்று நிபந்தனை சொல்லியிருந்தாரே, அம்மா! நீங்களாக இப்படிச் செய்து விட்டீர்களே!” என்று பதறிய தோழிக்கு, “நிபந்தனை இருக்கட்டும், அதை மீறியதற்காக என்னை அவர் என்ன செய்கிறார் என்று தான் பார்க்கலாமே!” என்று பரபரப்பில்லாமல் பதில் சொன்னாள் சுரமஞ்சரி.

சுரமஞ்சரியிடம் சென்ற ஓவியன் நெடுநேரமாகியும் திரும்பாததைக் கண்ட நகைவேழம்பருக்குச் சந்தேகம் மூண்டது. அவர் ஓவியன் திரும்பி வருவதை எதிர்பார்த்துத் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். நாழிகைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வளர்ந்தன. அவருடைய கோபமும் வளர்ந்தது. சுரமஞ்சரியிடமே நேரில் போய்க் கேட்டுவிடலாம் என்று புறப்பட்ட அவர் எதிர்ப்புறமிருந்து வந்த அவள் தோட்டத்துப் புல்வெளியில் அமர்ந்தாள். நகைவேழம்பர் கோபத்தோடு அவளருகில் சென்று, “சுரமஞ்சரி தேவி, இது சிறிதும் நன்றாயில்லை. உணவுக்கூடத்திலிருந்து வெளியே வரும்போது எவனோ ஒரு நாடோடி ஓவியனையும் வைத்துக் கொண்டு என்னை அவமானப்படுத்திப் பேசினீர்கள். அதையும் பொருட்படுத்தாமல் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த ஓவியனை அனுப்பி வைத்தேன். நீங்கள் என் நிபந்தனையை மீறி அவனை எங்காவது வெளியே அனுப்பியிருக்கலாமோ என்று இப்போது எனக்குச் சந்தேகம் உண்டாகிறது. அப்படி அவனை வெளியே அனுப்பியிருந்தால் அது உங்கள் தந்தையாருக்கே பிடிக்காத காரியமாயிருக்கும். நீங்கள் தொடர்ந்து நெருப்புடன் விளையாடிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதன் விளைவு உங்களுக்கு நிச்சயமாக நல்ல முடிவைத் தராது. என்றாவது ஒருநாள் நெருப்பு சுடாமல் விடாது” என்று ஆத்திரத்தோடு கூறவும்,

“விளையாடுவது நானா? நீங்களா? ஐயா நகைவேழம்பரே! உங்களுக்கு ஒரு கண்ணாவது நன்றாகத் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைப்புக் கூடத் தப்புப் போலிருக்கிறது. இப்போது நீங்கள் சுரமஞ்சரியிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு வானவல்லியிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! ஒருவரிடம் பேச வேண்டியதை இன்னொருவரிடம் பேசுவது கூட நகைவேழம்பரின் திறமையோ?” என்று வானவல்லியிடமிருந்து சீற்றத்தோடு பதில் கிடைத்தது. அன்று இரண்டாம் முறையாக அதிர்ந்து போய் நின்றார் நகைவேழம்பர் என்னும் அந்தத் திறமையாளர்.
------------

முதல் பருவம். 1.25. முரட்டுப் பிள்ளை

இளங்குமரன் சிந்தித்தான். நீலநாகமறவரின் அந்த வேண்டுகோளுக்குத் தான் எப்படி இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. மறுத்துச் சொல்ல முடியாமல் தன்னை அந்த வேண்டுகோளுக்கு ஒப்புக் கொள்ளச் செய்த நீலநாகமறவரின் திறமையை வியந்தான் அவன். அவருடைய பேருருவம் நினைவுக்கு வந்தபோதே அவனுக்குப் பணிவும் அடக்கமும் உண்டாயிற்று.

‘இதனால் சிறிது காலத்துக்கு நீ இந்தப் படைக்கலச் சாலைக்குள்ளேயே எனது கண்காணிப்பில் இருக்க வேண்டும். தனியாக நகருக்குள் எங்கும் போக வேண்டாம்’ என்று அவர் கட்டளையிடுவது போல் வேண்டிக் கொண்டபோது தன்னால் அதை மறுத்துச் சொல்ல முடியாமற் போன காரணம் என்ன என்பது நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின்பே அவனுக்குப் புரிந்தது.

‘தூய்மையான மனமும் தோற்றமும் உடைய சில பெரியவர்கள் நமக்கு முன்னால் உட்கார்ந்து பேசுகிற போது நம்முடைய மனம் அகங்கார வெம்மை அழியப்பெற்று மழை பெய்த நிலம் போலக் குளிர்ந்து குழைந்து விடுகிறது. அப்போது நம்முடைய மனத்தில் பயங்களும், குழப்பங்களும், வாழ்க்கை ஆற்றாமைகளும் இருந்தால் கூட அவை நீங்கிவிடுகின்றன. அந்தத் தூய்மைக்கு நமது மனம் தோற்றுப் போகிறது! நீலநாகமறவரை எதிர்த்துப் பேச முடியாமல், தான் அடங்கி நின்றதும் இப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்’ என்று இளங்குமரன் உணர்ந்தான். தனக்கு ஏதோ பயங்கரத் துன்பங்கள் வரப்போவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்கள் அஞ்சி முன்னேற்பாடாகத் தன்னைப் பாதுகாப்பதை அவன் விரும்பவில்லை. ‘பிறருடைய இரக்கத்தையும் அனுதாபத்தையும் எதிர்பார்த்துத் தவித்து அவற்றுக்காகவே ஏங்கிக் கொண்டிருப்பவன் கோழை! பிறர் மேல் அனுதாபமும் இரக்கமும் செலுத்துவதற்குத் துணிந்து நிற்பவன் தான் ஆண்மையுள்ள வீரன். அநுதாபத்தையும் இரக்கத்தையும் தன்னிடமிருந்து பிறருக்கு வழங்குவதுதான் வீரம்! அவற்றைத் தான் பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வது வீரமன்று’ என்பதுபோல் ஒரு முரட்டுப் பிடிவாதம் சிறு வயதில் இருந்தே இளங்குமரனுக்குப் பொருந்தியிருந்தது.

அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவன் வாய் திறந்து கேட்காமலிருக்கும் போதே அவனது மனத்தில் இருந்த சில கேள்விகளைத் தாமாகவே புரிந்து கொண்டு கூறுகிறவர் போல் குறிப்பாகச் சில கருத்துக்களைக் கூறியிருந்தார் நீலநாக மறவர். அவற்றையெல்லாம் இப்போது இரண்டாம் முறையாக நினைவின் விளிம்புக்குக் கொண்டு வந்து எண்ணிப் பார்த்தான் இளங்குமரன். அவ்வாறு எண்ணிப் பார்த்த போது அவர் சொல்லியிருந்த ஒவ்வொரு கருத்தும் விடையறியாக் கேள்விகளாகத் தன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த ஒவ்வொரு வினாவுக்கும் விடைபோல் அமைவதும் அவனுக்கு விளங்கிற்று.

“தம்பீ! மனத்தை வீணாகக் குழப்பிக் கொள்ளாதே. மனமும் நினைவுகளும் வளர்ந்து வளம் கொள்ளுகிற வயதில் கவலைகள் புகுந்து அழிக்க விடக் கூடாது. கவலைகளுக்கு அழிந்து போய் விடாமல் கவலைகளை அழித்து விட வேண்டிய வயது இது! கடலும், மலையும், வானமும், சூரியனும், சந்திரனும், தங்களுக்குத் தாயும் தந்தையும் யாரென்று தேடித் துயர் கொள்வதில்லை. பூமிக்குத் தாய் வானம்; வானத்துக்குத் தாய் பூமி. பிரகிருதியே ஒரு தாய்தான் தம்பீ! ஆகாயத்தை உடம்பாகவும், திசைகளைக் கைகளாகவும், சூரிய சந்திரர்களைக் கண்களாகவும், மலைகளை மார்பாகவும், தரையைத் திருவடிகளாகவும் கொண்ட விசுவ ரூபமே தாயின் வடிவம் தான். அதையே நீயும் தாயாக நினைத்து வணங்கி விடு” என்று அவர் சொல்லியதற்குப் பொருள் ‘தாயை நினைத்து வீணாகக் கலங்காதே’ என்று தனக்கு அறிவுறுத்துவதுதான் என்பதை அவன் தெளிந்தான்.

“நீ செய்வதற்கு இருக்கும் செயலைக் காட்டிலும் உன்னுடைய நோக்கம் பெரிதாக இருக்க வேண்டும். அதைத்தான் இலட்சியம் என்கிறோம். நினைப்பதையெல்லாம் பெரிதாக நினைப்பதற்குப் பழகிக் கொள். நினைவின் எல்லை விரிவாக இருக்கட்டும்” என்று இப்படிப் பல அறிவுரைகள் கூறிய பின்னே அந்த வேண்டுகோளையும் கூறியிருந்தார் நீலநாகமறவர். நினைக்கும் போதெல்லாம் புதிதாகவும் நினைப்புக்கேற்ற விதமாகவும் மணக்கும் மனோரஞ்சிதப் பூவைப் போல் அவருடைய அறிவுரையில் குறிப்பாகப் பலவற்றை அவன் புரிந்து கொண்டான். எண்ணிப் பார்த்தால், திட்டமிட்டுத் தேவையறிந்து வேண்டிய அறிவுரையை வேண்டிய அளவு வேண்டிய காலத்தில் அவர் தனக்குத் தந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. மறுபடியும் அவருடைய முன்னேற்பாட்டை வியந்தான் அவன்.

கதக்கண்ணன் முதலிய நண்பர்களோடு அன்று மாலையில் ஆலமுற்றத்துச் சிவன் கோயிலுக்குப் போனான் இளங்குமரன். வானத்தை மறைத்து வீழ்துகளைக் காலூன்றிப் பசுமைப் பந்தல் வேய்ந்தது போல் பெரிய ஆலமரமும் அதனருகே கோவிலும் மாலை நேரத்தில் மிக அழகாயிருந்தன. மணற் பரப்பைக் கடந்து கடல் என்னும் நீலமேனி நீர்ச்செல்வி நித்திய யௌவனத்தோடு அலைக் கைகளை அசைத்துக் கொண்டிருந்தாள். மேலைத்திசை வானத்தில் குங்கும வெள்ளம் பாய்ந்திருந்தது. இளங்குமரனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். ஆலமுற்றத்துக் கோவில் படைக்கலச் சாலையைச் சேர்ந்த பகுதியாய் அதற்கு மிகவும் அருகில் இருந்ததால் தான் நண்பர்களின் துணையோடு இளங்குமரனைப் போக விட்டிருந்தார் நீலநாகமறவர். கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு கடற்கரை மணற்பரப்பில் நண்பர்களுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இளங்குமரன் மீண்டும் படைக்கலச் சாலைக்குத் திரும்பிய போது அங்கே அவனை எதிர்பார்த்து ஓவியன் மணிமார்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். தான் அப்போது நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் வந்து தங்கியிருப்பதை அந்த ஓவியன் எப்படித் தெரிந்து கொண்டான் என்பது இளங்குமரனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

“நீ மறுபடியும் என்னைத் தேடிக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்தால் இன்னும் யாராவது என்னுடைய ஓவியத்தை வரைந்து கொண்டு வரச் சொல்லி உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார்களோ என்று சந்தேகமாயிருக்கிறது, அப்பனே! என்ன காரியமாக இப்போது என்னிடம் வந்தாய்?” என்று இளங்குமரன் அவனை விசாரித்தான்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஐயா! ஒருமுறை உங்கள் ஓவியத்தை வரைந்து கொடுத்துவிட்டு நான் படுகிறபாடு போதும். ஏழேழு பிறவிக்கும் இப்படி அநுபவங்கள் இனிமேல் எனக்கு ஏற்படவே வேண்டாம்.”

விளையாட்டாகப் பேசுவது போல் சிரித்துப் பேசத் தொடங்கியிருந்த இளங்குமரன், ஓவியன் கூறிய மறுமொழியில் வேதனையும் துயரமும் இருந்ததைக் கேட்டுத் திகைத்தான். ஓவியன் அச்சம் கொள்ளும்படியான நிகழ்ச்சிகள் எவையேனும் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஓவியனைக் கேட்டான்:

“பதற்றப்படாமல் நிதானமாகச் சொல், மணிமார்பா! என்னுடைய ஓவியத்தை வரைந்து கொடுத்ததனால் இப்படி என்னிடமே வந்து அலுத்துக் கொள்கிறாற் போல் உனக்கு என்ன துன்பங்கள் நேர்ந்து விட்டன?”

இதற்கு மணிமார்பன் மறுமொழி கூறவில்லை. இளங்குமரனைச் சூழ்ந்து நிற்கும் நண்பர்களைப் பார்த்துத் தயங்கினான். அந்தக் குறிப்பு இளங்குமரனுக்குப் புரிந்தது. ஓவியன் தன்னிடம் தனியாகப் பேசுவதற்கு விரும்புகிறான் என்று உணர்ந்தவனாக அவனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு படைக்கலச் சாலையின் வேறு பகுதிக்குச் சென்றான் இளங்குமரன்.

“பிறருக்காக நான் துன்பப்படும்படி நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன் மணிமார்பா! ஆனால் என்னால் பிறர் துன்பப்பட நேருவதை நான் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. விவரமாக நடந்ததைச் சொல். நான் வெளியேறி வந்த பின் பட்டினப்பாக்கத்தில் அந்த மாளிகையில் என்ன நடந்தது? உனக்கு அந்தப் பெண் தருவதாக ஒப்புக் கொண்டிருந்த நூறு பொற்கழஞ்சுகளைத் தந்தாளா இல்லையா?”

“அதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன். முதலில் இந்த மடலை வாங்கிக் கொள்ளுங்கள். இதைப் படித்து விட்டுப் பின்பு பேசலாம்” என்று சுரமஞ்சரியின் மடலை எடுத்து நீட்டினான் மணிமார்பன். அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த பகுதியெல்லாம் தன் மணத்தைப் பரப்பியது அந்த நறுமண மடல்.

“ஆயிரங் காலம் பழகி அன்பு கொண்டவளைப் போல் எனக்கு மடல் எழுத இவள் எப்படி உரிமை பெற்றாள்?” என்று அருகிலிருந்த தீபத்தில் மடலைப் படித்துவிட்டுக் கோபத்தோடு கேட்டான் இளங்குமரன். அதைக் கேட்டு மணிமார்பன் மெல்லச் சிரித்தான்.

“எதற்காகச் சிரிக்கிறாய்? சிரிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது?”

“ஒன்றுமில்லை! ஆனால் சற்றுமுன் நீங்கள் கூறியதை மறுபடியும் நினைத்துப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. உலகத்திலேயே கட்டுப்பாட்டுக்கும் கட்டளைக்கும் அடங்காமல் தன்னிச்சையாகப் பிறந்து வளரும் உணர்வு அன்பு ஒன்றுதான். அதற்குக் கூட உரிமை தர மறுக்கிறீர்களே நீங்கள்?”

“மறுக்கவில்லை மணிமார்பா! இரண்டு நாள் சந்தித்துப் பேசி விட்டோம் என்ற செருக்கில், ‘நெஞ்சுகளம் கொண்ட அன்பருக்கு, அநேக வணக்கங்களுடன் அடியாள் சுரமஞ்சரி எழுதும் மடல். நான் உங்களை மிக விரைவில் சந்திக்க விரும்புகிறேன். கூடுமானால் உடனே சந்திக்க விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் என் நலனை விட உங்கள் நலன் தான் அதிகம். உங்களிடம் சில செய்திகளை மனம் விட்டுப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கே எப்போது நாம் சந்திக்கலாமென்று இந்த மடல் கொண்டு வரும் ஓவியரிடம் அருள் கூர்ந்து சொல்லியனுப்புங்கள்’ என்று எழுதியிருக்கிறாளே அப்பனே! இவள் கூப்பிட்ட நேரத்துக்கு கூப்பிட்ட இடத்திலெல்லாம் வந்து சந்திக்க இளங்குமரன் இவளுடைய ஏவலாளனில்லையே!” என்று சொல்லிக்கொண்டே மணம் நிறைந்த அந்த வெண் தாழை மடலைக் கசக்கி எறியப் போனான் இளங்குமரன். அப்போது அவன் அப்படிச் செய்து விடாமல் ஓவியன் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு விட்டான்.

“பூக்களைக் கசக்கி எறிவது மங்கலமான செயல் அல்ல, ஐயா! மென்மையான மனம் படைத்தவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.”

“எனக்கு மென்மையான மனம் இல்லையென்றே வைத்துக் கொள்! அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். இந்தா, இதை அவளிடமே திருப்பிக் கொண்டு போய்க் கொடு” என்று தானே கசக்கி எறிவதற்கிருந்த அந்த மடலை மணிமார்பனுடைய கைகளில் திணித்தான் இளங்குமரன். மணிமார்பனின் நிலை தவிப்புக்குரியதாகி விட்டது. என்ன செய்தாலும், எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னாலும் இளங்குமரனின் மனத்தை நெகிழச் செய்வதற்கு இயலாதென்று தோன்றியது ஓவியனுக்கு. அதைப்பற்றி மறுபேச்சுப் பேசாமல் அவன் திருப்பிக் கொடுத்த மடலை வாங்கிக் கொண்டு பேச்சை வேறு திசையில் திருப்பினான் மணிமார்பன். இளங்குமரன் பட்டினப்பாக்கத்து மாளிகையிலிருந்து வெளியேறிய பின் தனக்கு அங்கு ஏற்பட்ட அச்சமூட்டும் அநுபவங்களை மணிமார்பன் அவனுக்கு விரிவாகச் சொன்னான். தன்னை அந்த மாளிகையிலேயே ஓவியனாக நியமித்திருப்பதையும் சொன்னான். சுரமஞ்சரியின் தந்தையும், நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும் பல வகையிலும் சந்தேகத்துக்கும் பயப்படுவதற்கும் உரியவர்களாயிருந்ததையும், அவர்கள் இருவரும் இளங்குமரன் மேல் என்ன காரணத்துக்காகவோ கவனம் செலுத்திக் கொண்டிருப்பதையும் விவரித்துக் கூறிவிட்டான் மணிமார்பன்.

இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் இளங்குமரனின் மனத்தில் மேலும் சந்தேகங்கள் உண்டாயின. அந்த மாளிகையிலிருந்து தான் வெளியேறிய போது அதே ஒற்றைக் கண் மனிதர் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததையும் அவன் நினைவு கூர்ந்தான். ஒற்றைக் கண்ணரைப் போலவே சுரமஞ்சரியின் தோழி வசந்தமாலையும் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததனால் தான் நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் தான் தங்கியிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இப்போது இளங்குமரனால் அனுமானம் செய்ய முடிந்தது. பட்டினப்பாக்கத்து எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரும், அவரிடம் இருக்கும் ஒற்றைக்கண் மனிதரும் எதற்காகவோ தன்னைப் பிடித்து அழிக்கக் கண்ணி விரிக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. ‘ஒருவேளை அவர்கள் விரிக்கும் அந்த வலையில் தன்னைச் சிக்க வைப்பதற்கு இந்தப் பெண் சுரமஞ்சரியும் உடந்தையாயிருக்கலாமோ?’ என்றும் சந்தேகமுண்டாயிற்று இளங்குமரனுக்கு. சுரமஞ்சரியைப் பற்றிய தன்னுடைய சந்தேகத்தை மணிமார்பனிடம் வெளியிட்டு, ‘அப்படியும் இருக்கலாமோ?’ என்று வினவினான் இளங்குமரன். ஆனால் மணிமார்பன் அதை மிகவும் வன்மையாக மறுத்துச் சொல்லிவிட்டான்.

“ஒரு போதும் அப்படி இருக்காது ஐயா! அந்தப் பெண் உங்கள் மேல் மெய்யாகவே அன்பு செலுத்துகிறாள். தன் தந்தையாரும் நகைவேழம்பரும் உங்களைப் பற்றி அப்படி நடந்து கொள்வது அவளுக்கே பிடிக்கவில்லை. அந்தப் பெண் நிச்சயம் உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டாள். எப்போதாவது அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்து உங்களுக்குப் பேராபத்து வருவதாயிருந்தால் அப்போது உங்களைக் காப்பாற்றுவதற்கு அவள் தான் முன் நிற்பாள். பெண்களின் உள்ளம் அன்பு மயமானது. தங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு வஞ்சகமிழைக்க அன்பு இடந்தராது, ஐயா!”

“அப்படி எல்லாப் பெண்களையும் நம்பி விட முடியாது, அப்பனே! பெண்களின் வஞ்சகத்தால் உலகத்தில் பிறந்த மகா காவியங்கள் பல.”

“ஆனால் பெண்களின் அன்பினால் பிறந்த மகா காவியங்கள் அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஐயா!”

“அப்படி மகாகாவியங்களைத் தோற்றுவிக்கிற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது, மணிமார்பா!”

“மாளிகை என்ன செய்யும், ஐயா? மனம் கொண்டதுதான் மாளிகை. அன்பின் சக்தி அளப்பரியது. அதற்கு முன் சாதாரண உணர்வுகள் தோற்று விடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு நீங்கள் தோற்றுப் போனால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்.”

ஓவியன் மேலே பேசுவதற்குள் பளீரென்று அவன் கன்னத்தில் ஒரு பேயறை விழுந்தது.

“நாவை அடக்கிப் பேசு, அப்பனே! இப்படி இன்னொருவர் பேசியிருந்தால் பல்லை உதிர்த்துக் கையில் கொடுத்திருப்பேன். போய்விடு... இனி ஒரு கணமும் இங்கே நிற்காதே” என்று கொதிப்போடு கூக்குரலிட்டுக் கொண்டே அந்தக் கணமே மணிமார்பனைப் பிடரியில் கைவைத்துத் தள்ளி வாயில் வரையில் சென்று துரத்தி விட்டு வந்தான் இளங்குமரன்.

‘பிறரால் எனக்குத் துன்பம் வந்தாலும் பொறுப்பேன். பிறர் என்னால் துன்புற விடமாட்டேன்’ என்று கூறிய அதே மனிதனின் கைகள்தாம் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளின என்பதை ஓவியனால் நம்பவே முடியவில்லை. இளங்குமரன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வான் என்று கனவிலும் மணிமார்பன் எதிர்பார்க்கவில்லை.

கசக்கித் திருப்பியளிக்கப்பட்ட தாழை மடலைப் போலவே அவனும் மன வேதனையுடன் கசங்கிய நினைவுகளோடு அந்த அகால நேரத்திலேயே தனியாகப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பினான்.

தான் சுரமஞ்சரியின் மடலைக் கொடுப்பதற்காக மாளிகையிலிருந்து வெளியேறி மருவூர்ப்பாக்கத்துக்கு இளங்குமரனைக் காணச் சென்று திரும்புவது ஒருவருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தான் ஓவியன். ஆனால் அதுவும் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. நினைத்திருந்ததற்கு நேர் மாறாகவே ஒரு விபரீதம் நடந்தது.

------------

முதல் பருவம். 1.26. கொலைத் தழும்பேறிய கைகள்

பயந்து கொண்டே திரும்பி வந்த ஓவியன் பிரதான வாயிலில் நுழையும் போது மாளிகை அமைதியாயிருந்தது. சுரமஞ்சரி முன்னேற்பாடாகச் சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ வாயிற் காவலர்கள் எவரும் அவனைத் தடுக்கவில்லை. அவன் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு அடையாளமாகச் சுரமஞ்சரியின் மாடத்தில் மட்டும் தீபங்களின் ஒளி தெரிந்தது.

‘நல்ல செய்தியாயிருந்தால் உடனே சுரமஞ்சரியின் மாடத்துக்கு ஓடிப்போய்த் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுத்தனுப்பிய மடலை அந்த முரட்டு இளைஞர் வாங்கிப் படித்துவிட்டு என்னிடமே திருப்பிக் கசக்கி எறிந்துவிட்டார் என்று தயங்காமல் அவளிடம் போய் எப்படிச் சொல்வது? அவ்வளவு நேரமாக இனிய கனவுகளோடு காத்திருக்கும் அந்தப் பெண் மனம் இதைக் கேட்டால் என்ன பாடுபடும்!’

மென்மையான மனம் படைத்த அந்த ஓவியன் தயங்கினான். ஒளி நிறைந்து தோன்றும் சுரமஞ்சரியின் மாடத்திலும் மனத்திலும் இருள் சேர்க்கும் சொற்களைத் தான் போய்ச் சொல்லலாமா, வேண்டாமா என்று தவித்தான். ‘கலைஞர்களுக்கு அவர்களிடம் அமைந்திருக்கும் மென்மையான கலைத்திறமையைப் போலவே, பிறர் கூசாமற் செய்யும் முரட்டுக் காரியங்களைத் தாங்கள் நினைக்கவும் கூசுகிற மென்மையான மனத்தையும் கடவுள் கொடுத்துத் தொலைத்திருக்கிறாரே’ என்று வருந்தினான் அவன்.

தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு இந்த மென்மைதான் பெரிய பலவீனமென்று தோன்றியது அவனுக்கு. இந்த ஒரு பலவீனம் மட்டும் இல்லாவிட்டால் தயக்கமின்றிச் சுரமஞ்சரியின் மாடத்துக்கு ஏறிச் சென்று, ‘உங்கள் மடலை அவர் கசக்கி எறிந்துவிட்டார் அம்மணீ’ என்று உடனே சொல்லி விடலாமே என்னும் இத்தகைய தயக்கத்தோடு சுரமஞ்சரியின் மாடத்துக்குச் செல்வதற்கான படிகளின் கீழே நின்றான் மணிமார்பன்.

மாளிகையே அமைதியில் ஆழ்ந்திருந்த அந்த அகால வேளையில் தான் மட்டும் தனியாய் அங்கே நிற்கிற சூழ்நிலையே ஓவியனுக்கு பயமூட்டுவதாயிருந்தது, மூச்சுவிட்டாலும் இரைந்து கேட்கக் கூடிய அந்த அமைதியில் ஓசையெழாமல் படிகளில் ஏறி மேலே மாடத்துக்குச் செல்வது எவ்வாறு என்று அவனுக்குப் புரியவில்லை.

கீழிருந்து மேலே போகும் படிகளில் முதல் பத்துப் பன்னிரண்டு படிகள் வரை ஒரே இருட்டாயிருந்தது. அப்பாலுள்ள படிகளின் மேல் மாடத்து விளக்கொளி இலேசாக மங்கிப் பரவியிருந்தது. தயங்கியபடியே சிறிது நேரம் நின்ற பின், ‘விளைவு என்ன ஆனாலும் சரி! நான் மேலே சென்று சுரமஞ்சரியைப் பார்த்து இளங்குமரன் மடலைத் திருப்பியளித்து அவமானப்படுத்திய விவரத்தைச் சொல்லிவிட வேண்டியதுதான்’ என்று உறுதி செய்து கொண்டு படிகளில் ஏறினான் மணிமார்பன்.

முதற்படியிலிருந்து இரண்டாவது படிக்கு அவன் ஏறிய போது படியோரத்து இருளிலிருந்து யாரோ அவன் வாயை இறுகப் பொத்தி மோதித் தரையில் தள்ளுவது போல் கீழ்ப்புறம் இறக்கி இழுத்துக் கொண்டு வரவே, அவன் உடலில் இரத்தம் உறைந்து உணர்வு மரத்துப் போகத் தொடங்கியது. அவன் திமிறிக் கொண்டு ஓடவோ கூச்சலிடவோ இடங்கொடுக்காத முரட்டுக் கைகளாக இருந்தன அவை.

சிறிது தொலைவு கொலைத் தழும்பேறினவை போன்ற அந்தக் கைகளின் பிடியில் இறுகிக் கொண்டே வந்தபின் சற்றே ஒளி பரவியிருந்த ஓரிடத்தில் கண்களை அகலத் திறந்து பார்த்த போது, நகைவேழம்பரின் முகம், “கூச்சலிட்டாயானால் அநாவசியமாக இப்போது இந்த இடத்தில் ஒரு கொலை விழ நேரிடும்” என்று அவன் காதருகே குனிந்து வாய் திறந்து கூறியது. வாயைப் பொத்தியிருந்த கையை எடுத்துவிட்டு இடுப்பிலிருந்து குறுவாள் ஒன்றை எடுத்து அவன் கழுத்தின் மிக அருகில் சொருகிவிடப் போவது போல் பிடித்துக் காட்டினார் அவர். பகலிலேயே பூத பயங்கரம் காட்டும் அந்த முகம் இப்போது இரவில் இன்னும் குரூரமாகத் தோற்றமளித்தது. மணிமார்பனுக்கு சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டன. ‘வெளியேறிச் சென்று விடுவதற்கு ஓர் அற்புதமான வாய்ப்புக் கிடைத்திருந்தும் பயன்படுத்திக் கொண்டு தப்பிப் போகாமல் மறுபடியும் திரும்பி இந்த மாளிகைக்கு ஏன் வந்து தொலைத்தோம்?’ என்று வருந்தினான் அவன். நகைவேழம்பருடைய பிடி இழுத்த இழுப்புக்கு மீறாமல் அவன் சவம் போல் இழுபட்டுக் கொண்டு போனான்.

மாளிகைத் தோட்டத்தின் அடர்த்தியான ஒரு பகுதிக்குச் சென்று அடித்துப் போடுவது போல பிடியை உதறி அவனைக் கீழே தள்ளினார் அவர். ஓவியன் நடுங்கினபடியே தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து நின்றான்.

“எங்கே போயிருந்தாய் இவ்வளவு நேரம்? உண்மையை மறைக்காமல் அப்படியே சொல்.”

“சொல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் ஓவியன்.

“புதிதாக ஒன்றும் செய்துவிட மாட்டேன். இதோ இந்த இரண்டு கைகளின் பிடியில் இவற்றுக்கு உரியவனை இதுவரை எதிர்த்திருக்கிறவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேருடைய உயிர்களும் எப்படித் துடிதுடித்துச் செத்திருக்கின்றன என்பது உனக்குத் தெரியாது. நீ விரும்பினால் அந்த அனுபவத்தை உனக்கும் அளிப்பதற்கு எனக்குச் சம்மதம்தான்!”

“கொலைகாரனுக்குத் தற்புகழ்ச்சி ஒரு கேடா?”

“போர்க்களங்களில் நிறைய கொலைகள் செய்தவர்களை வீரர் என்றுதானே சொல்கிறார்கள்? அப்படியானால் இன்று உன்னையும் சேர்த்து நான்...”

“போதும் உங்கள் கொலைப் பெருமை! தெரிந்துதானே கடவுள் உங்கள் முகத்தின் இலட்சணத்தைக் கொலை செய்து வைத்திருக்கிறார்!”

“சந்தேகமென்ன? என் கைகளில் அகப்பட்டிருந்தால் அந்தக் கடவுளையும்...” என்று குரூரமாகச் சிரித்தார் நகைவேழம்பர். அந்த விகார மனிதர் நாத்திகத் தழும்பேறிய மனத்தையுடையவர் என்று தோன்றியது மணிமார்பனுக்கு. எதையும் செய்யக் கூசாத கொடூர சித்தமுடையவர் என்பது அவரைப் பார்த்தாலே தெரிந்தது.

“மறுபடியும் கேட்கிறேன். எங்கே போயிருந்தாய்? யாரைக் கேட்டுப் போயிருந்தாய்?”

“பெரிதாகப் பயமுறுத்துகிறீர்களே! என்னை அடிமையாக விலைக்கு வாங்கியிருக்கிறீர்களா, என்ன? எல்லாம் கேட்க வேண்டியவர்களைக் கேட்டுக் கொண்டு, போக வேண்டிய இடத்துக்குத்தான் போயிருந்தேன். என்னைப் பாதுகாக்கச் சொல்லித்தான் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள்.”

“யார் அப்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்களோ?”

“வேறு யார்? இந்த மாளிகைக்கு உரியவர்தான்!”

“அடடா! அதைச் சொல்கிறாயா? உனக்கு இந்த மாளிகைக்கு உரியவரைத் தெரியாது. அவர் கட்டளையிட்டிருக்கும் சொற்களை மட்டும் தான் உனக்குத் தெரியும். எனக்கு அந்தச் சொற்களின் பொருளும் தெரியும், அவரையும் தெரியும். இந்த மாளிகையில் சொற்களுக்காக அர்த்தம் கிடையாது. அர்த்தத்துக்காகத்தான் சொற்கள் உண்டு.”

“இங்கேதான் எல்லாம் தலைகீழாக இருக்கிறதே...?”

“இன்னும் சிறிது நேரத்தில் நீ என் கைகளினால் துடிதுடித்துச் சாகப்போவது உள்பட! ஏனென்றால் இங்கே தலைகீழாகக் கட்டப்பட்ட பின்புதான் கொலையைக் கூடச் செய்வது வழக்கம். சந்தேகமாயிருந்தால் என்னோடு வா. உனக்குக் காட்டுகிறேன்” என்று மறுபடியும் அவனை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தார் அவர்.

ஒரு கையில் ஓவியனையும், இன்னொரு கையில் தீப்பந்தமொன்றையும் பிடித்துக் கொண்டு அந்த மாளிகையின் கீழே பாதாள அறையாக அமைக்கப்பட்டிருந்த பொதியறைக்குச் செல்லும் சுரங்க வழிப்படிகளில் இறங்கினார் நகைவேழம்பர். அந்தப் பாதாள அறையில் முடை நாற்றம் குடலைப் பிடுங்கியது. கொடிய வனவிலங்குகளான புலி சிங்கங்கள் இருக்கும் பகுதியில் அப்படி நாற்றம் வருவதுண்டு. கீழே பொதியறைக்குள் இறங்கிப் பார்த்தபோது மெய்யாகவே அவ்விடத்தில் பக்கத்துக்கு ஒன்றாக புலிகள் அடைக்கப்பெற்ற இரும்புக் கூண்டுகள் இருந்தன. கொள்ளி போல் மின்னும் செந்தழற் கண்களுடன் செவ்வரிக் கோலங் காட்டும் வாட்டசாட்டமான வேங்கைப் புலிகள் இரண்டு கூண்டிலும் பசியோடு உலாவிக் கொண்டிருந்தன. அந்த இருளில் அவை பயங்கரமாய்த் தோன்றின.

“பார்த்தாயா?” என்றார் நகைவேழம்பர். ஓவியனுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு விட்டது. பேச வரவில்லை. தீப்பந்தத்தைத் தூக்கிக் காட்டிக் கொண்டே கூறினார் அவர்: “அதோ இரண்டு புலிக்கூண்டுக்கும் நடுவே மேல்விட்டச் சுவரில் ஒரு பெரிய இரும்பு வளையம் தொங்குகிறது பார்த்தாயா? அதில் தண்டனைக்குரிய மனிதனைக் கயிற்றில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மேலே போய் நின்று கொண்டு இரண்டு புலிக் கூண்டுகளின் கதவிலும் இணைக்கப்பட்டிருக்கும் இரும்புச் சங்கிலியை இழுத்துக் கதவுகளைத் திறந்து விட்டுவிடுவோம். பின்பு புலிகளுக்கு விருந்து கொண்டாட்டம் தான். அதோ பார், சுற்றிலும் எத்தனையோ மனிதர்கள் இங்கு அழிந்திருக்கும் சுவடுகள் தெரிகின்றன” என்று தரையில் சுற்றிலும் சிதறிக் கிடந்த எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் காண்பித்தார் அந்தக் கொடிய மனிதர். மணிமார்பனுக்கு எலும்புக் குருத்துக்களில் நெருப்புக் குழம்பு ஊற்றினாற் போல் உடம்பெங்கும் பயம் சிலிர்த்தது. “உனக்குச் சந்தேகமாயிருந்தால் இதோ பார்! ஆட்களை எப்படித் தலைகீழாய்த் தொங்கவிடுவதென்று காண்பிக்கிறேன் என்று சொல்லித் தீப்பந்தத்தை அவன் கையில் கொடுத்து விட்டுக் கீழே இறங்கி ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு மேல் உள்ள இரும்பு வளையத்தில் பாதங்களை நுழைத்துக் கோத்தபடி இரண்டு கணம் தாமே தலைகீழாகத் தொங்கிக் காண்பித்தார் நகைவேழம்பர். அப்போது நரவாடை கண்ட அந்தப் புலிகள் உறுமியதையும் வாலைச் சுழற்றி அடித்துக் கொண்டு கூண்டிலிருந்து வெளியே பாய முயன்றதையும் பார்த்த போது ஓவியனுக்கு குடல் குலுங்கி நடுங்கியது.

ஒரே ஒரு விநாடி அந்த மென்மையான கலை உள்ளத்திலும் கொலை வெறி கன்றிய ஆசை ஒன்று உண்டாயிற்று. ‘அப்படியே தீப்பந்தத்தோடு மேலே ஓடிப்போய்ப் புலிக்கூண்டுக் கதவுகளை இழுக்கும் சங்கிலியைப் பிடித்திழுத்து நகைவேழம்பரைப் பழி வாங்கிவிட்டால் என்ன?’ என்று நினைத்தான் ஓவியன்.
-------------

முதல் பருவம் : 1. 27. தேர் திரும்பி வந்தது!

பாதாள அறையில் கூண்டினுள் இருந்த புலிகள் பயங்கரமாக உறுமின. நகைவேழம்பர் வளையத்தில் பாதங்களை நுழைத்துத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தார். ஓவியன் தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குச் சூழ்நிலையும் நேரமும் பொருத்தமாகவேயிருந்தன. கள்ளிச் செடியைப் பிடுங்கி எறியலாம் என்று கைகளால் தீண்டினாலும் அதன் நச்சுப்பால் கைகளில் படுவது போல் கெட்டவர்களோடு பழக நேரிடும் போதே கெட்ட காரியங்களைச் செய்ய விருப்பமில்லையாயினும் அவற்றைச் செய்வதற்குரிய வழிகள் மனத்தில் நெருங்கித் தோன்றுகின்றன. அப்பாவியான ஓவியன் மணிமார்பனுக்கும் நகைவேழம்பர் போன்ற கொடுமையே உருவான ஒருவர் அருகில் இருந்ததனாலோ என்னவோ தானும் கொடுமையாக ஏதாவது செய்து பார்க்கலாமா என்ற நினைப்பு உண்டாயிற்று.

ஆனால் அவன் இப்படி நினைத்துக் கொண்டிருந்த போதே, நகைவேழம்பர் வளையத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு கீழே இறங்கி வந்துவிட்டார். அவர் இறங்கி அருகில் வந்து அவன் கையிலிருந்த தீப்பந்தத்தைத் தாங்கிக் கொண்டதும், அவனைக் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப் போடச் செய்தது.

“சற்று முன் நான் வளையத்தில் தொங்கிக் கொண்டிருந்த போது மேலே ஓடிப்போய்ப் புலிக் கூண்டுகளின் கதவைத் திறந்து விடலாமென்று நினைத்தாய் அல்லவா?”

“அப்படி ஒரு போதும் நான் நினைக்கவில்லையே ஐயா!”

“புளுகாதே! நீ நினைத்தாய். எனக்குத் தெரியும். இன்னும் சிறிது நேரம் நான் வளையத்தில் தொங்கியிருந்தால் நீ நினைத்ததைச் செய்யும் துணிவு கூட உனக்கு உண்டாகியிருக்கும்.”

“இல்லவே இல்லை...” என்று சிரித்து மழுப்ப முயன்றான் ஓவியன். நகைவேழம்பர் ஒற்றை விழி அகன்று விரியக் குரூரமாகச் சிரித்தார்.

“நீ என்னை ஏமாற்ற முடியாது தம்பி. என் போன்றவர்களுக்குப் பிறருடைய மனத்தில் என்னென்ன நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை அநுமானம் செய்ய முடியாவிட்டாலும் என்னென்ன கெட்ட எண்ணங்கள் தோன்ற இயலும் என்பதை அநுமானம் செய்ய முடியும். நீ சோழ நாட்டுத் தண்ணீரை மட்டும் தான் குடித்திருக்கிறாய் தம்பீ! ஆனால் நான் எத்தனை எத்தனையோ தேசங்களின் தண்ணீரைக் குடித்திருக்கிறேன். நீ வண்ணங்களில் உருவாகும் அழகான சித்திரங்களோடு மட்டுமே பழகியிருக்கிறாய்; நானோ அழகும், அசிங்கமும், நல்லதும், கெட்டதும், சூழ்ச்சியும், சூதும் நிறைந்த எண்ணற்ற மனிதப் பயல்களோடு பழகியிருக்கிறேன். என்னைப் போல் பலருடைய வெறுப்புக்கு ஆளாகிய ஒருவன் இப்படிப் புலிக் கூண்டுகளின் இடையே உயிரையும் மரணத்தையும் அருகருகே வைத்துக் கொண்டு சோதனை செய்வது போல் தொங்கிய போது உன்னைப் போல் என்னைப் பிடிக்காத ஒருவனுடைய மனத்தில் என்ன நினைவு எழும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் மூடனில்லை.”

தன் மனத்தில் தோன்றியதை அவர் கண்டு பிடித்துச் சொல்லிவிட்டாரே என்று தலைகுனிந்தான் மணிமார்பன். “ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் நீயும் ஒருநாள் இங்கே தலைகீழாய்த் தொங்குவாய்; இந்தக் கொடும் புலிகளுக்கு இரையாவாய்” என்று கூறியவாறே ஓவியனை இழுத்துக் கொண்டு மேலே படியேறினார் நகைவேழம்பர்.

படிகளில் ஏறி மேலே வந்தவுடன் நகைவேழம்பர் அவனைத் திகைக்க வைக்கும் மற்றொரு கேள்வியையும் கேட்டார்:

“தம்பீ! நானும் நீ வந்ததிலிருந்து கவனிக்கிறேன், உன்னிடம் தாழம்பூ மணம் கமழ்கிறதே? இத்தனை வயது வந்த இளைஞனாகிய பின்பும் பூ வைத்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதா உனக்கு?” என்று கூறிச் சிரித்துக் கொண்டே மணிமார்பனின் இடுப்புக் கச்சையிலிருந்து வாள் நுனிபோல் சிறிதளவு வெளியே தெரிந்த வெண்தாழை மடலை உற்றுப் பார்த்தார் நகைவேழம்பர்.

‘ஐயோ! இதையும் இந்தப் பாவி மனிதர் பார்த்துவிட்டாரே’ என்று உள்ளம் பதறி நின்றான் மணிமார்பன்.

“ஒன்றுமில்லை, ஐயா... மணத்துக்காக எடுத்துச் சொருகிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறித் தப்ப முயன்றும் அவர் அவனை விடவில்லை.

“எங்கே பார்க்கலாம், அந்த நறுமணத்தை நானும்தான் சிறிது மோந்து பார்க்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தபடியே அவன் இடையிலிருந்து அந்த வெண்தாழை மடலை உருவி எடுத்துவிட்டார் அவர். என்ன செய்வதென்று தோன்றாமல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டான் மணிமார்பன். ‘ஐயா! இதை நீங்கள் பார்க்கக் கூடாது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இந்த மடலில் இல்லை’ என்று கடிந்து கூறி அவரை விரைந்து தடுக்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை.

நகைவேழம்பர் தீப்பந்தத்துக்கருகில் மடலை நீட்டி ஒற்றைக் கண்ணைப் பக்கத்தில் கொண்டு போய் உற்றுப் பார்க்கலானார். அந்த மடலைப் படிக்கும் போது, அவர் முகம் என்னென்ன உணர்ச்சிகளைக் காட்டுகிறது, எப்படிக் கடுமையடைகிறது என்பதையெல்லாம் கவனித்துக் கொண்டு நிற்பதைத் தவிர ஓவியனால் வேறொன்றும் செய்வதற்குத் துணிய முடியவில்லை. அதைப் படித்துவிட்டுத் தலைநிமிர்ந்தார் நகைவேழம்பர்.

“தாழை மடலில் வெறும் நறுமணம் மட்டும் கமழவில்லையே! காதல் மணமும் சேர்ந்தல்லவா கமழ்கிறது!” என்று கூறிக் கொண்டே தீப்பந்தத்தைக் கீழே எறிந்து விட்டு எலும்பு முறிகிறாற் போல் அவன் கையை அழுத்திப் பிடித்து இறுக்கினார் அவர். ஓவியனின் மெல்லிய கையில் இரத்தம் குழம்பிச் சிவந்தது. கைப்பிடியால் இறுக்குவது போதாதென்று கேள்வியாலும் அவனை இறுக்கினார் அவர்.

“இந்த மடலை ஏன் இதற்குரியவனிடம் சேர்க்கவில்லை?”

“உரியவருக்கு இதைப் பெற விருப்பமில்லை” என்று சுருக்கமாகப் பதில் கூறினான் ஓவியன். அதற்கு மேல் அவர் அவனை ஒன்றும் கேட்கவில்லை. அந்த மடலையும் அவனிடம் திரும்பித் தரவில்லை. அவனை இழுத்துக் கொண்டு போய் மாளிகைத் தோட்டத்தில் தாம் வசிக்கிற பகுதியில் இருண்ட அறை ஒன்றில் தள்ளிக் கதவுகளை வெளிப்புறம் தாழிட்டுக் கொண்டு போனார் நகைவேழம்பர். ஓவியனைச் சுற்றிலும் இருள் சூழ்ந்தது. அவன் மனத்திலும் தான்.

*****

தன்னுடைய மாடத்தில் தோழி வசந்தமாலையோடு ஓவியன் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்த சுரமஞ்சரிக்கு நேரம் ஆக ஆகக் கவலை பிறந்தது. ஓவியன் மேல் சந்தேகம் உண்டாயிற்று. அந்த மாளிகையிலிருந்து தப்பிப் போக வேண்டுமென்ற ஆசையில், தான் வெளியே அனுப்பிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்படியே ஓவியன் எங்கேயாவது ஓடிப்போய் விட்டானோ என்று நினைத்தாள் அவள். அப்படி அவள் சந்தேகப்படுவதற்கும் நியாயமிருக்கிறது.

அந்த மாளிகையில் தொடர்ந்து இருப்பதற்குத் தான் விரும்பவில்லை என்ற கருத்தை அவளிடம் மடலை வாங்கிக் கொண்டு புறப்படுமுன்பே அவன் தான் சொல்லியிருந்தானே!

சிறிது நேரத்துச் சிந்தனைக்குப் பின்பு ஏதோ தீர்மானமாக முடிவு செய்து கொண்டவள் போல் உட்கார்ந்தபடியே உறங்கிப் போயிருந்த தன் தோழி வசந்தமாலையை எழுப்பினாள் சுரமஞ்சரி.

“என்னம்மா? மடல் கொடுக்கப் போன ஓவியன் திரும்பி வந்தாயிற்றா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து நின்றாள் வசந்தமாலை. “ஓவியன் திரும்பி வரவில்லை வசந்தமாலை. இனிமேல் அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும் பயனில்லை. நீ புறப்படு, நாமே போக வேண்டியதுதான்!” என்று அந்த அகாலத்தில் தலைவியிடமிருந்து பதில் வந்த போது வசந்தமாலை திகைத்துப் போனாள்.

“ஓவியன் வராவிட்டால் நாளைக் காலை வரையில் அவனை எதிர் பார்க்கலாம். அதற்காக இந்த வேளையில் நாம் எப்படி அங்கே போக முடியும்? போவதுதான் நன்றாயிருக்குமா? ஏறக்குறைய பொழுது விடிவதற்கே சில நாழிகைகள் தான் இருக்கும். இப்போது அங்கே போக வேண்டுமானால் நடந்து போக முடியாது. பல்லக்கில் போகலாமென்றால் தூக்கி வருவதற்குப் பணியாட்களை எழுப்ப இயலாது. பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று வசந்தமாலை தடை செய்ததை சுரமஞ்சரி பொருட்படுத்தவில்லை.

“சொன்னால் சொன்னபடி கேள். இந்தக் காரியத்தை இப்போதே செய்து தீர வேண்டுமென்று என் மனத்தில் தோன்றுகிறது. நீ என்ன தடை சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை. பல்லக்கிலே போக வேண்டாம். கீழே வா, எப்படிப் போகலாமென்று தெரிவிக்கிறேன்” என்று வசந்தமாலையையும் இழுத்துக் கொண்டு வேகமாகக் கீழே இறங்கி வந்தாள் சுரமஞ்சரி.

கீழே தன் தலைவி விரைவாகச் செய்த ஏற்பாடுகளைப் பார்த்த போது வசந்தமாலைக்கே அதிசயமாக இருந்தது. குதிரைகள் கட்டியிருந்த கொட்டாரத்துக்குப் போய் வேகமாகச் செல்லவல்ல வெண்புரவிகள் இரண்டை அவிழ்த்து வந்து மாளிகையின் ஒரு புறத்தே நிறுத்தியிருந்த அழகிய அலங்காரத் தேரில் தன்னுடைய வளைகள் ஒலிக்கும் கைகளாலேயே பூட்டினாள் சுரமஞ்சரி. தேரைச் செலுத்தும் சாரதியின் இடத்தில் அவள் தானே ஏறி நின்று கடிவாளக் கயிறுகளைப் பற்றிக் கொண்டாள்.

“வசந்தமாலை! உள்ளே ஏறிக்கொள்” என்று அவள் கட்டளையிட்ட போது மறுத்துச் சொல்லத் தோன்றாமல் அப்படியே ஏறிக் கொள்வதைத் தவிரத் தோழியால் அப்போது வேறொன்றும் செய்ய முடியவில்லை.

வேளையில்லாத வேளையில் மாளிகையின் இளவரசி தானே தேரைச் செலுத்திக் கொண்டு வெளியேறுவதைப் பார்த்து வாயிற் காவலர்கள் வியந்து நின்றனர்.

இரவின் அமைதி கவிந்த பட்டினப்பாக்கத்து அகன்ற வீதிகளில் சுரமஞ்சரியின் தேர் ஓசையெழுப்பிக் கொண்டு விரைந்தது. நிசப்தமான தெருக்களில் மத்தளத்தை அளவாக வாசிப்பது போல் குதிரைக் குளம்பொலி எழுந்து ஒலித்தது. வேகமாக ஓடும் தேரும் அதை விட வேகமாக முந்திக் கொண்டு ஓடும் மனமுமாகச் சுரமஞ்சரி நீலநாகர் படைக்கலச் சாலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.

“அம்மா! தேரை நான் செலுத்துகிறேன். நீங்கள் உள்ளே உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று வசந்தமாலை நடுவழியில் கூறிய வார்த்தைகளுக்குச் சுரமஞ்சரி செவி சாய்க்கவே இல்லை.

நாளங்காடியின் அடர்ந்த மரக் கூட்டங்களுக்கிடையே உள்ளே சாலையைக் கடந்து தேர் மருவூர்ப்பாக்கத்துக்குள் புகுந்த போது, தேரை நிறுத்தாமலே பின்பக்கமாகத் திரும்பி, “அவர் தங்கியிருக்கிற படைக்கலச் சாலைக்குப் போகும் வழியைச் சொல்லிக் கொண்டு வா” என்று தோழிக்கு உத்தரவு பிறப்பித்தாள் சுரமஞ்சரி. தோழி வசந்தமாலை வழியைக் கூறினாள். தேர் அவள் கூறிய வழிகளின்படியே மாறியும் திரும்பியும் விரைந்து சென்றது.

விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே நீலநாக மறவருக்கு உறக்கம் நீங்கி விழிப்புக் கொடுத்து விடும். படைக்கலச் சாலையின் எல்லையில் முதன் முதலாகக் கண்விழிக்கிறவர் அவர் தான். எழுந்தவுடன் இருள் புலருமுன்பாகவே ஆலமுற்றத்தை ஒட்டிய கடற்கரை ஓரமாக நெடுந்தொலைவு நடந்து போய் விட்டுத் திரும்பி வருவார் அவர். கடற்காற்று மேனியில் படுமாறு அப்படி நடந்து போய்விட்டு வருவதில் அவருக்குப் பெரு விருப்பம் உண்டு. கதிரவன் ஒளி பரவுமுன்பே தமது உடல் வலிமைக்கான எல்லாப் பயிற்சிகளையும் முடித்துக் கொண்டு நீராடித் தூய்மை பெற்று விடுவார் அவர். நீலநாகமறவர் நீராடிவிட்டுப் புறப்படுவதற்கும், ஆலமுற்றத்து அண்ணல் கோயிலில் திருவனந்தல் வழிபாட்டு மணி ஒலி எழுவதற்கும் சரியாயிருக்கும்.

வழக்கம் போல் அன்று அவர் துயில் நீங்கிக் கடற்கரையில் தனியே உலாவி வருவதற்காகப் புறப்பட்டுப் படைக்கலச்சாலையின் வாயிலுக்கு வந்த போது அங்கே வெண்புரவிகள் பாய்ந்து இழுத்துவரும் அலங்காரத் தேர் ஒன்று அழகாக அசைந்து திரும்பி வந்து நிற்பதைக் கண்டு வியப்படைந்தார்.

அந்தத் தேரிலிருந்து இரண்டு பெண்கள் இறங்கி வருவதைக் கண்ட போது நீலநாகமறவரின் வியப்பு இன்னும் மிகையாயிற்று. படைக்கலச் சாலைக்குள் நுழைகிற வாயிலை மறித்துக் கொண்டாற் போல் அப்படியே நின்றார் அவர். தேரிலிருந்து இறங்கி முன்னால் வந்த பெண் அரசகுமாரி போல் பேரழகுடன் தோன்றினாள். உடன் வந்தவள் அவள் தோழியாக இருக்கலாமென்று அவர் புரிந்து கொள்ள முடிந்தது.

சிலம்பொலி குலுங்க அன்னம் போல் பின்னிப் பின்னி நடந்து வரும் மென்னடை, சூடிய பூக்களும் பூசிய சந்தனமும் அவர்களிடமிருந்து காற்றில் பரப்பிய நறுமணம் இவற்றால் சற்றும் கவரப் படாமல் கற்சிலை போல் அசையாமல் நிமிர்ந்து கம்பீரமாக நின்றார் நீலநாகமறவர். அவரருகில் வந்ததும் அவர்கள் இருவரும் தயங்கி நின்றார்கள். இரண்டு பெண்களும் தங்களுக்குள் ஒருவரையொருவர் மருண்டு பார்த்துக் கொண்டார்கள். நீலநாகமறவர் அவர்களை நோக்கிக் கேட்டார்:

“நீங்கள் இருவரும் யார்? இங்கே என்ன காரியமாக வந்தீர்கள்? இது படைக்கலச்சாலை. ஆண்களும், ஆண்மையும் வளருமிடம். இங்கே உங்களுக்கு ஒரு காரியமும் இருக்க முடியாதே?”

“இங்கே இளங்குமரன் என்று ஒருவர் இருக்கிறாரே, அவரை அவசரமாக நாங்கள் பார்க்க வேண்டும்” என்று அவருக்குப் பதில் கூறினாள் முன்னால் நடந்து வந்த பெண். நீலநாகமறவருடைய முகபாவம் மாறியது.

“இளங்குமரனை உங்களுக்குத் தெரியுமா, பெண்களே?”

“நன்றாகத் தெரியும்.”

“எப்படிப் பழக்கமோ?”

“எங்களை அவருக்கு நன்றாகத் தெரியும். இன்று பகலில் பட்டினப்பாக்கத்திலிருக்கும் எங்கள் மாளிகைக்குக் கூட அவர் வந்திருந்தார்.”

“எதற்காக வந்திருந்தான்?”

அவர்களிடமிருந்து பதில் இல்லை. நீலநாகமறவருடைய கடுமையான முகத்தில் மேலும் கடுமை கூடியது.

“இப்போது நீங்கள் அவனைப் பார்க்க முடியாது.”

“அவசரமாகப் பார்த்தாக வேண்டுமே...”

“இந்த அகால நேரத்தில் ஓர் ஆண்பிள்ளையைத் தேடிக் கொண்டுவர வெட்கமாக இல்லையா உங்களுக்கு?” என்று சற்றுக் கடுமையான குரலில் கேட்டுவிட்டுத் திறந்து கிடந்த படைக்கலச் சாலையின் பெரிய கதவுகள் இரண்டையும் இழுத்து அடைத்தார் அவர். அந்தக் கதவுகளை இழுத்து அடைக்கும்போது, அவருடைய தோள்கள் புடைப்பதைப் பார்த்தாலே பெண்கள் இருவருக்கும் பயமாயிருந்தது. தழும்புகளோடு கூடிய அவர் முகமும், பெரிய கண்களும், ‘இவரை நெகிழச் செய்ய உங்களால் முடியவே முடியாது’ என்று அந்தப் பெண்களுக்குத் தெளிவாகச் சொல்லின. அவர்கள் நம்பிக்கையிழந்தார்கள். கதவை மூடிக்கொண்டு நிற்கும் அவர் முன் இரண்டு பெண்களும் அவரது முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் துணிவின்றித் தலைகுனிந்தபடியே தேருக்குத் திரும்பிப் போய் ஏறிக் கொண்டார்கள். தேர் திரும்பியது. வெண்புரவிகள் பாய்ந்தன.

“நான் புறப்படும் போதே சொன்னேனே அம்மா! இந்த அகாலத்தில் நாம் இங்கே வந்திருக்கக்கூடாது.”

“வாயை மூடடி வசந்தமாலை! நீயும் என் வேதனையை வளர்க்காதே” என்று தேரைச் செலுத்தத் தொடங்கியிருந்த சுரமஞ்சரி, கோபத்தோடு பதில் கூறினாள். தேர் மறுபடியும் பட்டினப்பாக்கத்துக்கு விரைந்தது. சுரமஞ்சரியின் முகத்தில் மலர்ச்சியில்லை; நகையில்லை. யார் மேலோ பட்ட ஆற்றாமையைக் குதிரைகளிடம் கோபமாகக் காட்டினாள் அவள். வெண்பட்டுப் போல் மின்னும் குதிரைகளின் மேனியில் கடிவாளக் கயிற்றைச் சுழற்றி விளாசினாள். அடிபட்ட புரவிகள் மேலும் வேகமாகப் பாய்ந்தன. வந்ததை விட வேகமாகத் திரும்பிக் கொண்டிருந்தது அவர்கள் தேர்.

தேர் மாளிகைக்குள் புகுந்து நின்றது. சுரமஞ்சரியும் வசந்த மாலையும் கீழே இறங்கினார்கள். “குதிரைகளை அவிழ்த்துக் கொட்டாரத்தில் கொண்டு போய்க் கட்டிவிட்டு வா” என்று தலைவி உத்தரவிட்டபடியே செய்தாள் வசந்தமாலை.

பின்பு இருவரும் மாளிகையின் மூன்றாவது மாடத்துக்குச் செல்லும் படிகளில் ஏறி மேலே சென்றார்கள். சுரமஞ்சரியின் மாடத்தில் தீபங்கள் அணைக்கப்பெற்று இருள் சூழ்ந்திருந்தது. தாங்கள் வெளியே புறப்பட்ட போது தீபங்களை அணைத்ததாக நினைவில்லை சுரமஞ்சரிக்கு. “எதற்கும் நீ கீழே போய்த் தீபம் ஏற்றிக் கொண்டு வா! தீபத்தோடு உள்ளே போகலாம். அதுவரை இப்படி வெளியிலேயே நிற்கிறேன்” என்று வசந்தமாலையைக் கீழே அனுப்பினாள் சுரமஞ்சரி. சிறிது நேரத்தில் வசந்தமாலை தீபத்தோடு வந்தாள். தீப ஒளி உள்ளே பரவிய போது மாடத்தின் முதற்கூடத்துக்கு நடுவில் தன் தந்தையாரும், நகைவேழம்பரும், தங்கள் இருவர் வரவையும் எதிர்பார்த்தே காத்திருப்பது போல் அமர்ந்திருப்பதைச் சுரமஞ்சரியும் வசந்தமாலையும் கண்டு திடுக்கிட்டார்கள்.

“உள்ளே போகலாமா? இப்படியே திரும்பி விடுவோமா?” என்று பதறிய குரலில் தலைவியின் காதருகே மெல்லக் கேட்டாள் வசந்தமாலை.

“நம்மை ஒன்றும் தலையைச் சீவி விட மாட்டார்கள். வா, உள்ளே போவோம்” என்று தோழியையும் கைப்பற்றி அழைத்தவாறு துணிவுடன் உள்ளே புகுந்தாள் சுரமஞ்சரி.
-----------

முதல் பருவம் : 1.28. வேலும் விழியும்

ஓவியனின் அந்த வார்த்தைகளை மறுபடி நினைத்தாலும் மனம் கொதித்தது இளங்குமரனுக்கு. ‘எவ்வளவு துணிவு இருந்தால் அவன் என்னிடம் அப்படிக் கூறியிருப்பான்.’

“ஒரு காலத்தில் இன்று அலட்சியம் செய்யும் இதே பெண்ணின் சிரிப்புக்கு நீங்கள் தோற்று நின்றால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்...”

‘யாரைப் பார்த்து யார் சொல்லுகிற வார்த்தைகள் இவை? மணிமார்பனுடைய வயதென்ன? நிலை என்ன? என்னுடைய அநுதாபத்தைப் பெற்றவன் எனக்கே அறிவுரை கூற முன் வருவதா? சுரமஞ்சரி என்னும் பெண் காவிரிப்பூம்பட்டினத்திலேயே பேரழகியாக இருக்கலாம். வேறெவருக்கும் இல்லாத பெருஞ் செல்வத்துக்கு உரிமை பூண்டவரின் மகளாக இருக்கலாம். ஆனால் அவளுடைய அழகுக்கு மயங்கி நிறையிழக்கும் ஆண்பிள்ளையாக நான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே! அழகையும் அதனால் ஏற்படும் கவர்ச்சி மயக்கத்தையும் அனுபவித்துப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறதென்று வைத்துக் கொண்டாலும் அந்தச் சுகத்தைப் பெண்ணின் சிரிப்பிலும், கண்களிலும் தான் தேட வேண்டும் என்பதில்லையே! பூக்களின் மலர்ச்சியிலும், கடலின் அலைகளிலும், மேகந்தவழும் மழைக்காலத்து வானத்திலும், முழுமதி மறைந்தும் மறையாமலும் உலா வருவதிலும் அழகைத் தேடி அநுபவித்துக் கொள்ளத் தெரியும் எனக்கு. உலகத்தைப் படைத்தவன் வஞ்சகமில்லாமல் எல்லாப் பொருள்களிலும் தான் அழகை வைத்திருக்கிறான். மனிதர்கள்தான் அந்த அழகு மிகச் சில பொருள்களில் மட்டும் இருப்பதாக நினைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படித் தவிப்பவன் என்று இந்த ஓவியன் நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. ‘அப்பாவி ஓவியனே! பெண்ணின் சிரிப்பில் மட்டும்தான் உலகத்து அழகுகளெல்லாம் ஒளிந்து கொண்டிருப்பதாக நீ வேண்டுமானால் நினைத்துக் கொண்டிரு. ஆனால் இளங்குமரனையும் சேர்த்து அவ்விதமாக நினைக்காதே. நான் இவ்வளவு சிறிய மயக்கங்களுக்காக என் மனத்தை இழந்து விடச் சித்தமாயில்லை! வாழ்க்கையில் பெரிய இலட்சியங்கள் எனக்கு இருக்கின்றன. இப்போது நான் தவித்துக் கொண்டிருப்பது சுரமஞ்சரியின் அழகு முகத்துக்காகவும் சிரிப்புக்காகவும் அல்ல; என் தாயின் அன்பு முகத்தையும் சிரிப்பையும் காண்பதற்காகத்தான் நான் அல்லும் பகலும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் சிரிப்புக்கு மயங்குவதற்கு முன்பே ‘நான் யார்’ என்று எனக்குத் தெரிய வேண்டும். இவ்வளவு வலிமையான உடலையும் மனத்தையும் வைத்துக் கொண்டு, ‘நான் யார்? எனக்கு அன்னையும் தந்தையுமாக இருந்து என்னை உலகுக்கு அளித்தவர்கள் யார்?’ என்பவற்றைக் கூட நான் இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறேனே. என்னிடம் வந்து பெண்ணின் சிரிப்புக்குத் தோற்பதைப் பற்றிப் பேசுகிறாயே, அப்பனே?’

இளங்குமரன் இவ்வாறெல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தபோது தான், ஓவியனை அறைந்து அவமானம் செய்து அனுப்பியதில் தவறு ஒன்றுமில்லை என்றே தோன்றியது. ‘விவரம் தெரிந்த பிள்ளையாயிருந்தால் இப்படி அசட்டுத்தனமாகப் பேசி என் ஆத்திரத்தை வளர்த்து அறை வாங்கிக் கொண்டு போயிருக்க வேண்டாம்’ என்று ஓவியனிடம் சிறிது இரக்கமும் கொண்டான் அவன்.

இன்னும் அவனுடைய வலது கையில் தாழம்பூ மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கையால்தான் சுரமஞ்சரியின் மடலை அவன் தீண்டினான். படித்த பின் கசக்கி எறியவும் முயன்றான். நீலநாகர் படைக்கலச் சாலையின் மரங்களடர்ந்த முற்றத்தில் கடல் காற்றின் சுகத்தை நுகர்ந்து கொண்டே இளங்குமரன் கட்டிலின் மேல் சாய்ந்து உறங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் புரண்டு படுக்கும் போதெல்லாம் கையிலிருந்த இந்தத் தாழம்பூ மணம் பரவி அவன் உறக்கத்தைத் தடை செய்தது. வெறுப்போடு எழுந்து சென்று கைகளை நன்றாகக் கழுவிவிட்டு வந்து படுத்துக் கொண்டான் அவன். அவளைப் பற்றிய நினைவு நெஞ்சில் மட்டுமல்லாமல் கைகளிலும் மணக்கக்கூடாதென்று வெறுப்போடு அவற்றைத் தன்னிலிருந்து பிரித்தான் அவன்.

ஆனால் மறுநாள், முதல் நாளிரவு மனத்திலிருந்தும், கையிலிருந்தும் சேர்த்துக் கழுவிய இதே நினைவுகளை மீண்டும் இளங்குமரனை நினைக்கச் செய்துவிட்டார் நீலநாகமறவர். வானம் கண்விழிக்கும் வைகறைப் போதில் இளங்குமரனின் பவழச் செஞ்சுடர் மேனியில் இளம் பொன் வெய்யில் பட்டு அவன் கண்கள் மலர்ந்த போது அந்த விழிப்பையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிற்பவர் போல் அவனுடைய கட்டிலருகில் நீலநாகமறவர் நின்று கொண்டிருந்தார். கண்களைத் திறந்ததும் அவர் முகத்தில்தான் விழித்தான் இளங்குமரன். உடனே வாரிச் சுருட்டிக் கொண்டு துள்ளியெழுந்து அடக்கமாக நின்றான். தான் விழித்துக் கொள்வதற்கு முன்பே அவர் தனக்காகத் தன் கட்டிலருகே வந்து நின்று கொண்டிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. நீராடி ஆலமுற்றத்துச் சிவன் கோயிலின் வழிபாட்டையும் முடித்துக் கொண்டு மாணவர்கட்குப் படைக்கலப் பயிற்சி அளிப்பதற்கேற்ற கோலத்தில் இருந்தார் நீலநாகமறவர். சிரிப்பும் இன்றிச் சீற்றமும் இன்றி வெறுப்பும் இன்றி வேட்கையுமின்றி இளங்குமரனின் முகத்தையே இமையாமல் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றார் அவர். அவருடைய கைகள் வேலைப்பாடு அமைந்ததும் புதியதாகப் படைக்கலச் சாலையிலே வடிக்கப் பட்டதுமாகிய சிறிய வேல் ஒன்றைப் பற்றி அலட்சியமாகச் சுழற்றிக் கொண்டிருந்தன.

அவர் தன்னிடம் ஏதோ கேட்கப் போகிறாரென்று எதிர்பார்த்துக் கொண்டு நின்றான் இளங்குமரன். அவருக்கு முன் நிற்கும் போது இருக்க வேண்டிய பணிவும் குழைவும் அவன் நின்ற தோற்றத்திலேயே தெரிந்தன.

“தம்பீ! இந்த வேலின் நுனி இளம் பெண்ணொருத்தியின் அழகிய கண்போன்று இருக்கிறதல்லவா?” என்று தொடர்பில்லாமல் பேச்சைத் தொடங்கினார் அவர். இளங்குமரன் சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் தயங்கி நின்றான். அவர் அவனை விடவில்லை. மீண்டும் தூண்டிக் கேட்கலானார்:

“உன்னைத்தான் கேட்கிறேன் தம்பீ! வார்த்து வடித்து கூர்மையாகத் தோன்றும் இந்த வேலின் நுனி இளநங்கை ஒருத்தியின் நீள்விழியை நினைவூட்டுகிறது இல்லையா?”

“கவிகள் அப்படிச் சொல்லித் தங்களையும் உலகத்தையும் சேர்த்து ஒன்றாக ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். வேல் விழி, மீன் விழி, மான் விழி என்று உவமை சொல்லி வேலையும், மீனையும், மானையும் பார்க்க நேர்ந்த போது கூட, பெண்களின் கண்களைத் தவிரத் தங்களுக்கு வேறெதுவும் நினைவு வரவில்லை என்கிற சொந்த பலவீனத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பாடியும் நிரூபித்திருக்கிறார்கள்.”

இளங்குமரன் இவ்வாறு கூறியதும் சலனமற்றிருந்த நீலநாக மறவரின் முகத்தில் சிரிப்பின் சாயல் தென்படலாயிற்று. அந்தச் சிரிப்பை ஒளித்து மறைக்க அவர் முயன்றும் அதன் சாயல் முகத்தில் வெளிப்பட்டுவிட்டது. மேலும் அவர் அவனைக் கேட்கலானார்:

“உவமை கூறுவதைக் கவிகளின் பலவீனமென்று நீ சொல்கிறாய், தம்பீ! ஆனால் கவிகள் அதையே தங்களுடைய பலம் என்கிறார்கள். கவிதையின் அணிகளில் ஒன்றாகவும் உவமையைக் கணக்கிடுகிறார்களே! உவமை இல்லாவிட்டால் வருணனை அமையுமா?”

“வேறொரு விதமாகக் கணக்கிட்டால் அதிகமான பலமே பலவீனமாக முடியும். அளவுக்கு மீறின பலமே ஒரு பலவீனம் தான்! வேலின் நுனியில் வீரம் பிறக்கிறது. பெண்ணின் விழிக்கடையில் வீரமும் ஆண்மையும் அழிகின்றன. வீரத்தையும், ஆண்மையையும் அழிக்கின்ற இடத்தை வீரமும், ஆண்மையும் பிறக்கின்ற இடத்துக்கு உவமை சொல்வது எப்படி ஐயா பொருந்தும்?”

“ஆண்மை என்ற வார்த்தைக்கு நீ என்ன பொருள் புரிந்து கொண்டிருக்கிறாய் தம்பீ?”

“ஆளும் தன்மை என்று பொருள் புரிந்து கொண்டிருக்கிறேன்.”

“எதை ஆளும் தன்மையோ? உடம்பையா, மனத்தையா, புலன்களையா? அல்லது வேலையும், வாளையும், வில்லையும் எடுத்து ஆளும் தன்மையா? உன்னிடமிருந்து நான் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் தம்பீ!” என்றார் நீலநாகமறவர்.

“எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத்தான் நான் சொல்லுகிறேன்.”

“அதாவது வீரம் அல்லது ஆண்மை என்பது வில்லையும் வேலையும் எடுத்து ஆள்வது மட்டுமன்று, எல்லாவற்றையும் தன் வசப்படுத்தி ஆளுவது என்பதுதானே உன் கருத்து?”

“ஆமாம் ஐயா!”

“அப்படியானால் இதைக் கேள், இளங்குமரா! இப்போது இந்தப் படைக்கலச்சாலையில் எனக்கு மிகவும் வேண்டியவனும் கண்ணைக் கவரும் அழகனுமான இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு உடல் வலிமையும் வேண்டிய அளவு இருக்கிறது. வில்லையும், வேலையும் ஆள்வதற்கு மட்டும்தான் அவனுக்குத் தெரிகிறது. மனத்தையும் புலன்களையும் ஆள அவனுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. கூரிய வேலையும், வாளையும் பிடித்து வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆண்மையை பெண்ணின் கண்களுக்குத் தோற்றுப் போகும்படி செய்து கொண்டிருக்கிறான் அவன். இன்னும் கேள். அழகிய இளம்பெண்கள் அவனைத் தேடிக் கொண்டு அகாலமான இரவு நேரங்களில் இங்கே இரதத்தில் வருகிறார்கள். அந்தப் பெண்களை விசாரித்தால் அவன் தங்களைத் தேடிக் கொண்டு தங்கள் மாளிகைக்கு அடிக்கடி வழக்கமாய் வருவது உண்டென்றும் சொல்கிறார்கள். அந்த இளைஞன் வீரமும் ஆண்மையும் உள்ளவன் என்று தான் நினைப்பதா? இல்லாதவன் என்று நினைப்பதா?”

“இதில் சந்தேகமென்ன? வீரமும், ஆண்மையும் இருந்தால் அவன் ஏன் இப்படிப் பெண்களின் சிரிப்புக்கும், பார்வைக்கும் தோற்றுப் போய் அலைகிறான்?”

இதைக் கேட்டு நீலநாகமறவர் பெரிதாகச் சிரித்தார். அவர் ஏன் அப்படிச் சிரிக்கிறார் என்று இளங்குமரன் திகைத்து நின்ற போது தம் கைகளிலிருந்த வேலைக் கீழே எறிந்துவிட்டு வலது கையை உயர்த்தி ஆள்காட்டி விரலை அவன் முகத்துக்கு நேரே நீட்டியபடி கூறலானார் நீலநாகமறவர்:

“தம்பீ! அப்படிப் பெண்களின் சிரிப்புக்கும், பார்வைக்கும் தோற்றுப் போய் அலைபவன் வேறெங்கும் இல்லை. இதோ என் எதிரே இளங்குமரன் என்ற பெயரோடு நின்று கொண்டிருக்கிறான் அவன்...”

தீயை மிதித்தாற் போலிருந்தது இளங்குமரனுக்கு. எங்கோ சுற்றி வளைத்துப் பேசித் தன் பேரில் கொண்டு வந்து முடித்ததைக் கண்டு திடுக்கிட்டான் அவன். நேற்றிரவு இதே போல் ஒரு கேள்வியைக் கேட்டதற்காகத்தானே அவன் ஓவியனை அறைந்து அனுப்பியிருந்தான்? இன்றும் விடிந்ததும் விடியாததுமாக இப்படி ஒரு பழியா?

“என்ன தம்பீ! திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல் இப்படி விழிக்கிறாய்? உன்னுடைய ஆண்மையை அழித்துத் தன்னுடைய பெண்மைக்கு வெற்றிப் பெருமிதம் சேர்த்துக் கொண்ட அந்தப் பட்டினப்பாக்கத்து நங்கையின் வேல்விழிகளை நேற்றிரவு நானே பார்த்தேன்.”

“நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை ஐயா! எதையோ தப்பாகப் புரிந்து கொண்டு என் மேல் பழி சுமத்துகிறீர்களே...?” என்று தொடங்கிய இளங்குமரனை மேலே பேச விடாமல் தடுத்து அவர் பேசத் தொடங்கினார்:

“இன்னும் புரியும்படியாக விளக்கிச் சொல்ல வேண்டுமானால், இதோ கேள் தம்பீ” - என்று தொடங்கி முதல் நாள் பின்னிரவில் தேரேறி அவனைத் தேடிக்கொண்டு வந்த பெண்களைப் பற்றிக் கூறினார் நீலநாகமறவர். அவர் கூறியதிலிருந்து, வந்தவர்கள் சுரமஞ்சரியும் அவள் தோழி வசந்தமாலையுமாகத்தான் இருக்க வேண்டுமென்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. மடலோடு அறைவாங்கிக் கொண்டு திரும்பிப் போன ஓவியன் சுரமஞ்சரியையே நேரில் போகச் சொல்லி இங்கே அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தான் அவன். சுரமஞ்சரியின் மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு இப்போது ஆத்திரமாக மாறியது. “எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நீங்கள் நினைக்கிறாற்போல் ஒரு நெருக்கமும் இல்லை. அவள் எதற்காக என்னைத் தேடி வந்தாள் என்பதே எனக்குத் தெரியாது” என்று எவ்வளவோ சொல்லி, அவருடைய தவறான கருத்தை மாற்ற முயன்றான் இளங்குமரன். நீலநாகமறவர் அவ்வளவு எளிதாக அதை நம்பவில்லை.

“எனக்கு விளக்கம் தேவையில்லை, தம்பீ! உன்னுடைய வாழ்க்கையில் நீ பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இனிமேலாவது உன்னைத் திருத்திக் கொள். என்னைப் போல் ஆயுதங்களை எடுத்துக் கொள்வதுடன் புலன்களையும் ஆளத் தெரிந்து கொண்ட வீரனாக நீ உருவாக வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். உன்னை வளர்த்து ஆளாக்கிய அருட்செல்வ முனிவரின் நோக்கமும் அதுதான். அதிலிருந்து நீ விலகக் கூடாது” என்று கோபமாகச் சொல்லிவிட்டு மாணவர்களுக்குப் படைக்கலப் பயிற்சி கற்பிப்பதற்காகச் சென்றுவிட்டார் நீலநாகமறவர்.

ஏதோ நினைப்புடன் அவர் கீழே எறிந்து விட்டுப் போன வேலைக் குனிந்து கையிலெடுத்தான் இளங்குமரன். அந்த வேல் சுரமஞ்சரியின் மயக்கும் விழியாக மாறி அவனை நோக்கி ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது.

‘முடியாது! முடியவே முடியாது. இந்த மயக்கும் விழிகளுக்கும் இதற்குரியவளின் சிரிப்புக்கும் ஒரு போதும் நான் தோற்க மாட்டேன்’ என்று தனக்குத்தானே பித்தன் போல் கூறிக்கொண்டே அந்த வேலை வெறுப்புடன் தூரத்தில் வீசி எறிந்தான்.
------------------

முதல் பருவம் : 1.29. நிழல் மரம் சாய்ந்தது!

பொழுது விடிந்ததும் நடந்த இந்த நிகழ்ச்சியால் இளங்குமரனின் உள்ளம் சொல்ல முடியாத வேதனையை அடைந்திருந்தது. உடனே பட்டினப்பாக்கத்துக்கு ஓடிச் சென்று சுரமஞ்சரி, அவளுடைய தோழி, மணிமார்பன் மூவரையும் படைக்கலச் சாலைக்கு அழைத்துக் கொண்டு வந்து நீலநாகமறவருக்கு உண்மையை விளக்கிவிட்டால் நல்லதென்று எண்ணினான் இளங்குமரன். அவர் மனத்தில் பதிந்து ஊன்றிப் போன சந்தேகத்தைக் களைந்தெறிந்து விட விரும்பினான் அவன். ஆனால் அதற்கும் தடையிருந்தது. படைக்கலச் சாலையின் எல்லையிலிருந்து வெளியேறக் கூடாது என்று அவர் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். இரண்டு காரியங்களுக்காக அப்போது அவன் அங்கிருந்து வெளியே போய் வரவேண்டிய அவசியம் இருந்தது. சுரமஞ்சரி முதலியவர்களை நேரில் அழைத்து வந்து நீலநாக மறவரின் சந்தேகத்தைப் போக்குவதற்காக அவன் வெளியேறிச் செல்வதன்றி, வீரசோழிய வளநாடுடையாரிடம் ஒப்படைத்துவிட்டு வந்த அருட்செல்வ முனிவர் எப்படி இருக்கிறாரென்று பார்த்து வருவதற்காகவும் போக வேண்டியிருந்தது. தன்மேல் கோபத்தோடிருக்கும் நீலநாகமறவரிடம் போய் அங்கிருந்து வெளியேறிச் சென்று வருவதற்குத் துணிந்து அனுமதி கேட்பது எப்படி என்று அவன் தயங்கினான்.

இவ்வாறு அவன் தயங்கிக் கொண்டிருந்த போது அந்தப் படைக்கலச் சாலையில் இருந்தாற் போலிருந்து வழக்கமாகக் கேட்கும் ஒலிகளும் வீரர்களின் ஆரவாரமும் ஓய்ந்து அமைதி நிலவியது. திடீரென்று என்ன ஆகிவிட்டதென்று புரியாமல் இளங்குமரன் மருண்டான். சென்ற விநாடி வரையில் வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் நீலநாகமறவரின் கம்பீரக் கட்டளைக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த விநாடியில் அதுவும் ஒலிக்கவில்லை. வாளோடு வாள் மோதும் ஒலி, போர்க்கருவிகள் செய்யும் உலைக்களத்திலும் பட்டறையிலும் இரும்பு அடிபடும் ஓசை, வீரர்களின் பேச்சுக்குரல் எல்லாம் ஓய்ந்து மயான அமைதி நிலவியது. காற்றுக்கூட பலமாக வீசப் பயப்படுவது போன்ற அந்த அமைதி ஏன் நேர்ந்ததென்று காண்பதற்காக முற்றத்திலிருந்து படைக்கலச் சாலையின் உட்பகுதிக்கு விரைந்தான் இளங்குமரன்.

அங்கே பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த வீரர்கள் அமைதியாய் மூலைக்கு மூலை ஒதுங்கித் தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். நடுவில் நீலநாக மறவரும் வீரசோழிய வளநாடுடையாரும் கண்கலங்கி நின்றார்கள். இருவருடைய தோற்றத்திலும் துக்கத்தினால் தாக்குண்ட சோர்வு தெரிந்தது.

இளங்குமரனைப் பார்த்ததும் வீரசோழிய வளநாடுடையார் ‘கோ’வென்று கதறியழுதபடி ஓடிவந்து அவனைத் தழுவிக் கொண்டார். நீலநாகமறவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நின்ற இடத்திலிருந்து அசையாமல் அப்படியே நின்றார்.

“உனக்கு இதுவரை நிழல் தந்துகொண்டிருந்த நெடுமரம் சாய்ந்து விட்டது, தம்பீ! தவச்சாலை தீப்பற்றி எரிந்து முனிவர் மாண்டு போய் விட்டார்” என்று துயரம் பொங்கும் குரலில் கூறினார் வளநாடுடையார். இளங்குமரனுக்கு அந்தச் செய்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. “முனிவர் தவச்சாலைக்கு எப்படிப் போனார்? அவரை உங்கள் வீட்டில் அல்லவா விட்டு வந்தேன்...” என்று பதறிப் போய்க் கேட்டான் இளங்குமரன்.

கண்ணீர் பொங்கத் துயரம் அடைக்கும் குரலில் நடந்தவற்றை அவனுக்குக் கூறினார் வளநாடுடையார். இளங்குமரனுக்கு கண்கள் இருண்டன. உலகமே சுழல்வது போலிருந்தது. ‘அப்படியும் நடந்திருக்குமா? நடந்திருக்க முடியுமா?’ என்று நினைக்க நினைக்க துக்கம் பெருகியது அவனுக்கு.

பெற்றோரும் உற்றாரும் இல்லாத காலத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கித் தாயாகவும் தந்தையாகவும் இருந்து காத்து வந்த உத்தமர் தீயில் மாண்டு போனார் என்று அறிந்த போது அவனுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது. வலிமையும் வீரமும் பொருந்திய அவன், பேச்சு வராத பருவத்துப் பச்சைக் குழந்தைபோல் குமுறி அழுத காட்சி அங்கிருந்த எல்லோரையும் மனமுருகச் செய்தது. இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுதழுது சோர்ந்து போய் அவன் தரையில் சாய இருந்த போது அதுவரையில் பேசாமல் நின்று கொண்டிருந்த நீலநாகமறவர் விரைவாக ஓடி வந்து அவனைத் தாங்கிக் கொண்டார்.

“இந்தப் பாவியை மன்னிப்பாயா தம்பீ? என்னிடம் அடைக்கலமாக இருந்த போதில், அவருக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்பதை நினைத்தால் என்னால் துக்கத்தைத் தாங்க முடியவில்லையே!” என்று வீரசோழிய வளநாடுடையார் தமது ஆற்றாமையைச் சொல்லிப் புலம்பி அழுதார்.

அப்போது நீலநாகமறவர் வளநாடுடையாரை நோக்கிக் கையமர்த்தி அவருடைய அழுகையை நிறுத்தச் செய்தார்.

“அழுது ஆகப் போவதென்ன? மனிதர்களின் மரணம் காலத்தின் வெற்றிகளில் ஒன்று. புகழும், செல்வமும், பலரால் மதிக்கப்படுதலும் உலக வாழ்க்கையில் பெருமையாக இருப்பதைப் போல் நேற்று இருந்த ஒருவரை இன்றில்லாமல் செய்துவிடுவது காலத்துக்குப் பெருமை. காலத்தின் இந்தப் பெருமையால் நமக்கு துக்கம். தன்னுடைய ஆற்றலால் காலம் தான் இந்த விதமான துக்கங்களையும் மாற்ற வேண்டும். அழுது புலம்பிக் கொண்டிராமல் இறந்தவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்யப் புறப்படு” என்று நீலநாகமறவர் ஆறுதல் கூறினார். சற்றுமுன் தன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டவர்தானா இப்போது இப்படி ஆறுதல் கூறுகிறார் என்று வியப்பாயிருந்தது இளங்குமரனுக்கு. பெரிய துக்கத்தில் மனிதர்களுக்கு இடையே உள்ள சிறிய கோபதாபங்கள் கரைந்து விடுகின்றன. கலங்கிய கண்களோடு தன் மேல் சாய்ந்து கொண்டே தன் முகத்தை நிமிர்ந்து பார்த்த இளங்குமரனின் தலையைக் கோதிக் கொண்டே, “அருட்செல்வ முனிவர் எப்படி உனக்கு நிழல்மரமாக இருந்தாரோ, அப்படி இனிமேல் நான் இருப்பேன். நீ தவறாக நடந்து கொள்வதாகத் தெரிகிறபோது நான் கடிந்து கொண்டால் அதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு தந்தைக்குத் தன் மகனைக் கடிந்து கொண்டு நல்வழிப்படுத்த உரிமை உண்டு அல்லவா?” என்று பாசத்தோடு கூறினார் நீலநாகமறவர்.

“உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எனக்கு மட்டும் இப்படி ஒரேயடியாக இருண்டு விட்டதே” என்று நீலநாகமறவரின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு இளங்குமரன் துன்பத்தை ஆற்ற முடியாமல் மேலும் பொங்கிப் பொங்கி அழலானான். கதக்கண்ணன் முதலிய நண்பர்களும் கண்களில் நீர் மல்க அருகில் வந்து நின்றார்கள்.

“நினைத்து நினைத்து வேதனைப்படாதே, தம்பீ! மனத்தை ஆற்றிக் கொள். துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்குத்தான் பகலும் இரவு போல் இருண்டு தோன்றும். நீ வீரன். அப்படி உனக்குத் தோன்ற விடலாகாது” என்று மீண்டும் அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி ஆற்ற முயன்றார் நீலநாகமறவர்.

தான் வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தன் மனதுக்குள்ளேயே அழவேண்டிய பெருங்குறை ஒன்றையும் இளங்குமரனால் அப்போது நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அருட்செல்வ முனிவர் தீயில் சிக்கி மாண்டபோதே அவனுடைய பிறப்பையும், பெற்றோரையும் பற்றிய உண்மையும் எரிந்து அழிந்து போய் விட்டது. அந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்டிருந்த ஒரே மனிதரும் மாண்டு போய்விட்டார் என்று அறிந்த போது அவனுக்கு உலகமே இருண்டு போனாற் போல் துயரம் ஏற்படத்தான் செய்தது. எதை அறிந்து கொள்ளும் ஆவலினால் அவனுக்கு வாழ்க்கையில் சுவையும், விருப்பமும் நிறைந்திருந்தனவோ அதை இனிமேல் அவன் யாரிடமிருந்து அறிந்து கொள்வான்? அவனுடைய அருமைத் தாயை அவனுக்கு யார் காட்டுவார்கள்? நீலநாகமறவர் கூறியதுபோல் உலகத்தையே தாயாக எண்ணி மகிழ வேண்டியதுதானா? அவ்வளவுதான் அவனுக்குக் கொடுத்து வைத்ததா?

“இப்படி நின்று அழுதுகொண்டே இருந்தால் நேரமும் கண்ணீரும்தான் செலவாகும். வா, இறந்தவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்யலாம்” என்ற நீலநாகமறவர் அவனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு போனார்.

‘உயிரோடிருந்து கொண்டே காரியத்துக்காகச் செத்துப் போனதாகப் பொய்யைப் பரப்பிட ஏற்பாடு செய்தவருக்கு மெய்யாகவே இறந்தது போல் நீத்தார் கடனாற்ற விடலாமா?’ என்று மனத்துக்குள் தயங்கினார் வீரசோழிய வளநாடுடையார். ஆனால் அவர் இளங்குமரனைத் தடுத்து நிறுத்தவில்லை. தடுத்தால் பொய்ம்மை நாடகம் வெளியாகிவிடுமோ என்ற அச்சத்தால் மௌனமாயிருந்து விட்டார்.

நீலநாகமறவர் இளங்குமரனைச் சக்கரவாளக் கோட்டத்துக்கு அழைத்துப் போய் நீத்தார் கடன்களைச் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் வீரசோழிய வளநாடுடையார் ஆலமுற்றத்துக் கோயிலில் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

“இறைவா! இந்த இரகசியத்தை உரிய காலம் வரை காப்பாற்றும் மனத்திடத்தை எனக்குக் கொடு! எல்லாம் நலமாக முடிந்தபின் இறுதியில் என் அருமைப் பெண் முல்லை அந்தப் பிள்ளையாண்டானுக்கு மாலை சூட்டி அவனுக்கு வாழ்க்கைத் துணையாகும் பாக்கியத்தையும் கொடு” என்று வேண்டிக் கொண்டிருந்தார். இப்படி இறைவனை வேண்டிக் கொண்டே கண்களை மூடியவாறே தியானத்தில் ஆழ்ந்த போது இளங்குமரன் புன்னகை தவழும் முகத்தோடு தன் பெண் முல்லையின் கழுத்தில் மாலை சூட்டுவது போல் ஒரு தோற்றம் அவருக்கு மானசீகமாகத் தெரிந்தது. அந்தத் தோற்றத்தை மெய்யாகவே தம் கண்கள் காணும் நாள் விரைவில் வரவேண்டுமென்ற ஆவலோடு ஆலமுற்றத்திலிருந்து திரும்பினார் வளநாடுடையார்.

அவர் வீட்டுக்கு வந்ததும் முல்லை அருட்செல்வ முனிவரின் மரணத்தைப் பற்றி அவரைக் கேட்டாள்:

“என்னப்பா அருட்செல்வரின் தவச்சாலையில் தீப்பற்றி எரிந்து அவர் இறந்து போனாராமே? புறவீதியெல்லாம் எங்கும் இதே பேச்சாக இருக்கிறது. நேற்றிரவு நீங்கள் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே?” என்று பரபரப்புடன் பதறிக் கேட்ட மகளுக்குச் சுருக்கமாய்ப் பதற்றமின்றி பதில் சொன்னார் வளநாடுடையார்:

“நேற்றிரவே எனக்குத் தெரியும், முல்லை! ஆனால் நடு இரவில் உன்னிடம் அதைச் சொல்லி உன் மனத்தை வருத்த விரும்பவில்லை. இப்போதுதான் இளங்குமரனுக்கே அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று நிதானமாகக் கூறினார் வளநாடுடையார்.

‘நெருங்கிய தொடர்புள்ள ஒருவரின் மரணத்தைப் பற்றி அதிக துக்கமில்லாமல் இப்படி இயல்பான விதத்தில் அறிவிக்கிறாரே’ - என்று தந்தை அருட்செல்வரின் மரணத்தைக் கவலையின்றி அறிவித்த விதத்தை எண்ணித் திகைப்படைந்தாள் முல்லை.
-----------

முதல் பருவம் : 1.30. நெஞ்சில் மணக்கும் நினைவுகள்

தோழி வசந்தமாலை தீபத்தை ஏற்றிக்கொண்டு உடன்வர மாடத்துக்குள் நுழைந்த சுரமஞ்சரி அங்கே முன்கூடத்தில் சினத்தோடு வீற்றிருந்த தன் தந்தையாரையும் நகைவேழம்பரையும் கண்டும் காணாதவள் போல் அவர்களைப் புறக்கணிக்கும் குறிப்புடன் விலகி நேரே நடக்கலானாள். வேளையில்லாத வேளையில் அவர்கள் அங்கே வந்து அமர்ந்திருப்பது முறையில்லை என்பதை அவர்களுக்கே உணர்த்த வேண்டுமென்பதற்காகத் தான் சுரமஞ்சரி அப்படிப் புறக்கணித்தாற்போல் பாராமுகமாக நடந்து சென்றாள்.

ஆனால் அவளும் தோழியும் முன் கூடத்தைக் கடந்து, அலங்கார மண்டபம், சித்திரச்சாலை முதலிய பகுதிகளுக்குச் செல்லும் இரண்டாம் கூடத்து வாயிலை நெருங்கிய போது தந்தையாரின் குரல் பின்புறமிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியது. அந்தக் குரலில் சினமும், கடுமையும் மிகுதியாயிருந்தன.

“சுரமஞ்சரி! இப்படி வந்துவிட்டுப் போ. உன்னை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்.”

அவள் திரும்பி நின்றாள். தந்தையார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறாற் போல் ஆத்திரத்தோடு காட்சியளித்தார். நகைவேழம்பர் என்னும் கொடுமையின் வடிவமும் அவர் அருகில் இருந்தது.

“உன்னைத்தான் கூப்பிடுகிறேன், இப்படி வா மகளே!”

அமைதியான அந்த இரவு நேரத்தில் சுரமஞ்சரியின் மாடத்துச் சுவர்களில் அவளுடைய தந்தையாரின் இடி முழக்கக் குரல் இரண்டாம் முறையாக எதிரொலித்து அதிர்ந்தது. பயத்தினால் வசந்தமாலை நடுங்கினாள். அவளுடைய கையிலிருந்த தீபமும், தீபத்தின் சுடரும் சேர்ந்து நடுங்கின. சுரமஞ்சரி பதில் கூறாமல் நின்ற இடத்திலேயே நின்றாள். ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டே வலது காலைச் சாய்த்து சாய்த்து நடந்து அவரே அவளருகில் வந்தார். அவருடைய ஊன்றுகோலின் கைப்பிடியில் ஒரு யாளி வாயைப் பிளந்து கொண்டிருப்பது போன்ற சிங்கமுகத் தோற்றம் செதுக்கப் பெற்று அதன் கண்களுக்கு இரத்தக் குமிழிகள் போல் இரண்டு சிவப்பு இரத்தினக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அவர் சுரமஞ்சரியை நோக்கிக் கோபத்தோடு பாய்ந்து, பாய்ந்து நடந்து வந்த வேகத்தில் அவருடைய முகமே, ஊன்றுகோலின் சிங்க முகத்தை விடக் கடுமையாகத் தோன்றுவது போலிருந்தது. கைப்பிடியின் சிங்க முகத்தில் கண்களுக்காகப் பதித்திருந்த இரத்தினக் கற்கள் தீ மொட்டுக்களைப் போல் விளக்கின் ஒளியில் மின்னின. அசையாமல் நின்று கொண்டிருந்த சுரமஞ்சரிக்கு அருகில் வந்து சாய்ந்தாற்போல் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நின்றபின் அவர் கேட்டார்:

“பொன்னையும், மணிகளையும், முத்துக்களையும் கப்பலேற்றி வணிகம் செய்து செல்வம் குவித்துக் கொண்டிருப்பதாக நேற்று வரையில் நான் பெருமைப்பட்டதுண்டு மகளே! ஆனால் இன்றுதான், உன்னைப் போல் குடிப்பெருமையையும், மானத்தையும் சேர்த்துக் கப்பலேற்றும் மகள் ஒருத்திக்கு நான் தந்தையாக இருக்கிறேன் என்ற சிறுமையை முதல் முதலாக உணர்கிறேன்.”

இதைக் கேட்டுச் சுரமஞ்சரியின் அழகிய கண்கள் சிவந்தன. பவழ மொட்டுக்களைப் போன்ற இதழ்கள் கோபத்தினால் துடித்தன. பிறை நிலாவைப் போல் மென்மையும், தண்மையும் ஒளிரும் அவளுடைய நெற்றி மெல்லச் சுருங்கியது. சிவந்த கண்களும், துடிக்கும் இதழ்களும், சுருங்கிய நெற்றியுமாக நிமிர்ந்து தந்தையாரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் சுரமஞ்சரி. பார்த்துக் கொண்டே அவரைக் கேட்டாள்:

“மானம் கப்பலேறும்படி கெடுதலாக நான் என்ன செய்து விட்டேன், அப்பா?”

“இன்னும் என்ன செய்ய வேண்டும் மகளே? இதுவரை செய்திருப்பது போதாதா? இதோ இந்த மடல் நீ எழுதியதுதானே?” என்று கேட்டுக் கொண்டே பின்புறம் நின்றிருந்த நகைவேழம்பர் பக்கமாகத் திரும்பினார் அவர். உடனே நகைவேழம்பர் முன்னால் வந்து தம் இடுப்புக் கச்சையிலிருந்து சற்றே கசங்கினாற் போல் இருந்த வெண்தாழை மடல் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கிச் சுரமஞ்சரியிடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்ததும் சுரமஞ்சரி தலைகுனிந்தாள். திருட்டைச் செய்கிறபோதே அகப்பட்டுக் கொண்ட திருடன் போல் நாணி நின்றாள் அவள். தான் இளங்குமரனுக்காக எழுதி மணிமார்பனிடம் கொடுத்தனுப்பிய மடல் தந்தையாருக்கும், நகைவேழம்பருக்கும் எப்படிக் கிடைத்ததென்று விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது அவள் மனம். ஓவியன் தனக்கு மிகவும் வேண்டியவனைப் போல் நடித்துத் தன்னையே ஏமாற்றி விட்டானோ என்று சந்தேகம் கொண்டாள் அவள். அந்த ஒரு கணம் அவள் மனத்தில் உலகமே சூழ்ச்சியாலும், சந்தேகங்களாலும், ஏமாற்றுக்களாலும் உருவாக்கப்பட்டது போல் ஒரு பயம் ஏற்பட்டது.

“ஏன் தலைகுனிகிறாய் மகளே? நாணமும் அச்சமும் இருந்தால் நடு இரவுக்கு மேல் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தேரில் வெளியேறிச் சென்று அப்பன் பெயர் அம்மை பெயர் தெரியாத ஆண்பிள்ளையைச் சந்தித்து வரத் துணிவு ஏற்படுமா? சந்திப்பிற்கு வரச்சொல்லி மடல் எழுதத்தான் துணிவு ஏற்படுமா? இந்த மாளிகையின் பெருமை, நமது குடிப்பிறப்பு, செல்வநிலை, தகுதி எல்லாவற்றையும் மறந்து எவனோ ஊர் சுற்றும் விடலைப் பயலுக்கு, ‘நெஞ்சு களம் கொண்ட அன்பரே’ என்று மடல் எழுத நீ எப்படித்தான் துணிந்தாயோ?”

நகைவேழம்பரையும் அருகில் வைத்துக் கொண்டு தந்தையார் தன்னை இப்படிப் பேசியது சுரமஞ்சரிக்கு வேதனையாகவும், அவமானமாகவும் இருந்தது. ‘அவரையும் வைத்துக் கொண்டு தந்தையார் தன்னை இப்படிக் கண்டித்துப் பேசினால் நாளைக்கு அவர் எப்படித் தன்னை மதிப்பார்?’ என்று நினைத்து மனங்குன்றிப் போய் நின்றாள் சுரமஞ்சரி.

“இந்த வேளையில் இதற்குமேல் அதிகமாக எதையும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை மகளே! ஆனால் ஒன்றை மட்டும் நன்றாக நினைவு வைத்துக்கொள். இந்த ஏழடுக்கு மாளிகையைக் கல்லினாலும் மரத்தினாலும் மட்டும் இவ்வளவு பெரிதாக நான் ஆக்கவில்லை. இந்த மாளிகையின் கல்லோடு கல்லாய், மரத்தோடு மரமாய்ப் பன்னெடுங்காலம் பரிந்து பயந்து சம்பாதித்த குடிப்பெருமையையும், செல்வாக்கையும், புகழையும் சேர்த்துத்தான் இவ்வளவு உயரமாக இதை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறேன். இந்த உயரம் சரிந்து போக நீயே காரணமாகிவிடக் கூடாது! போ, போய்ப் படுத்துக் கொள். மற்றவற்றை நாளைக்குப் பேசிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு நகைவேழம்பரையும் உடன் அழைத்துக் கொண்டு தந்தையார் கீழே இறங்கிச் சென்று விட்டார்.

அவர் அந்த இடத்திலிருந்து சென்ற பின்பும் சிறிது நேரம் அங்கேயே அப்படியே தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. தந்தையார் குடிப்பெருமையைப் பற்றிக் கூறிய சொற்களுக்காக அவள் கவலைப்படவில்லை. கப்பல் வணிகத்திலும் பிறவற்றிலும் பல்லாண்டுகளாகப் பழகிப் பழகிச் சூழ்ச்சிகளும், சாதுரியமாகப் பேசும் ஆற்றலும் பெற்றிருந்ததைப் போலவே எதிராளியைத் தம் கருத்துக்கேற்ப வளையச் செய்ய எந்த வார்த்தைகளை எப்படி இணைத்துப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி விடுவதிலும் தந்தையார் தேர்ந்தவர் என்பது அவளுக்குத் தெரியும். மாளிகையையே குடிப்பெருமையால் நிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதாக அவர் கூறியவிதம் அழகாகவும், உருக்கமாகவும் இருந்தது அவளுக்கு. ஆனால் அவர் அப்படிக் கூறிவிட்டதற்கு ஏற்பத் தான் இளங்குமரனுக்கு மடல் எழுதியதோ, இரவில் அவனைச் சந்திப்பதற்காகத் தேடிக் கொண்டு சென்றதோ, குடிப்பெருமைக்குக் குறைதேடும் காரியங்கள் என்று அவள் ஒருபோதும் நினைக்கவோ ஒப்புக் கொள்ளவோ சித்தமாயில்லை. இளங்குமரனைக் கண்களாற் காணும்போதும் நெஞ்சினால் நினைக்கும் போது தான் உணரும் பெருமை, வேறெந்த நினைவினாலும் எய்துவதற்கு அரிதாயிருந்தது அவளுக்கு. தான் எவற்றையும் வேண்டித் தவிக்காமல், தன்னுடையவை என்றிருக்கும் எல்லாவற்றுக்காகவும் எல்லாரும் ஏங்கவும் தவிக்கவும் செய்துவிடுகிற ஓர் ஒளி அவன் முகத்திலும் கண்களிலும் இருக்கிறதே! அதற்கு முன் அவள் குடிப்பெருமை எம்மாத்திரம்? அவள் தந்தையின் அரசபோக ஆடம்பரங்களும், மலைபோல் குவிந்த செலமும் எம்மாத்திரம்? விழியிலும், மொழியிலும், இதழிலும், நகைப்பிலுமாக ஆண்மையைச் சூறையாடுவதற்கு அவள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் எழில் நுணுக்கங்கள் எம்மாத்திரம்? இளங்குமரனின் மனத்தையும், அந்த மனத்தின் விருப்பத்தையும் வெற்றி கொள்வதை விட உயர்ந்த பெருமை இந்த உலகத்தில் வேறொன்றும் இருக்க முடியாது என்பதை இந்திர விழாவின் முதல் நாள் மாலை கடற்கரையில் அவனைச் சந்தித்துப் பேசிய சில விநாடிகளிலேயே அவள் உறுதி செய்து கொண்டு விட்டாள். அந்த உறுதியையும், முடிவையும் அவள் இனிமேல் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இளங்குமரனின் இறுமாப்போடு கூடிய அழகை வெற்றி கொள்வதற்காகத் தன்னுடைய இறுமாப்பை இழந்துவிட நேருமானாலும் அவள் அந்த இழப்பை ஏற்றுக் கொள்ளத் துணிந்திருந்தாள். காதலில் இழப்பதும், தோற்பதும், விட்டுக்கொடுப்பதும் கூட வெற்றிகள்தானே?

இவ்வாறு கையில் கசங்கிய தாழை மடலும், நெஞ்சில் மணக்கும் நினைவுகளுமாக நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி, ‘படுத்துக் கொள்ளப் போகலாமே அம்மா’ என்று வசந்தமாலை அழைத்தபோதுதான் தன் நினைவு பெற்றாள்.

மென்மையான பூக்களைக் குவித்து அவற்றின்மேல் படுத்துறங்குவது போல் பட்டு மெத்தை விரித்த மஞ்சத்தில் பஞ்சணைகளிற் சாய்ந்து படுத்த போது சோர்ந்து களைத்த அவள் உடல் சுகம் கண்டது. ‘இதே வேளையில் படைக்கலச் சாலையின் கரடு முரடான தரையில் எங்காவது ஒரு மூலையில் இளங்குமரனின் பொன்னுடல் புரண்டு கொண்டிருக்கும்’ என்று நினைத்த போது தானும் மஞ்சத்திலிருந்து கீழிறங்கி வெறுந்தரையில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இளங்குமரன் எங்கெங்கே எந்தெந்த நேரங்களில் என்னென்ன வசதிக் குறைவுகளை அனுபவித்துத் துன்பப்பட்டுக் கொண்டிருப்பானோ அவ்வளவையும் தானும் தனக்கு ஏற்படுத்திக் கொண்டு துன்பத்தை அனுபவிக்க வேண்டும்போல மனத்துடிப்பு அடைந்தாள் சுரமஞ்சரி.

அருகில் வசந்தமாலை இருந்ததனால் வெறுந்தரையில் படுக்கும் எண்ணத்தை அன்றிரவு அவள் நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை. வெறுந்தரையில் படுத்தால் வசந்தமாலை ‘ஏன்’ என்று கேட்பாள். ‘இளங்குமரன் அங்கே வெறுந்தரையில் படுத்திருப்பார். அதனால்தான் நானும் இங்கே வெறுந்தரையில் படுத்துக் கொள்கிறேன்’ என்று வெட்கத்தை விட்டு அவளுக்குப் பதில் சொல்ல முடியுமா? ‘பெண்ணுக்கு நாணமும், அந்த நாணத்துக்கு ஓர் அழகும் இருப்பதற்குக் காரணமே அவளுடைய மனத்துக்கு மட்டுமே சொந்தமான சில மெல்லிய நினைவுகள் வாய்ப்பதுதானே? அந்த நினைவுகளை எல்லாரிடமும் எப்படிப் பங்கிட்டுக் கொள்ள முடியும?’ இதை நினைத்த போது சுரமஞ்சரி தனக்குத்தானே புன்னகை புரிந்து கொண்டாள்.

சிறிது நேர மௌனத்துக்குப் பின் இருந்தாற் போலிருந்து தனக்கு அருகில் கீழே தரையில் படுத்திருந்த வசந்தமாலையிடம் ஒரு கேள்வி கேட்டாள் சுரமஞ்சரி.

“ஏனடி வசந்தமாலை! செல்வத்தைச் சேர்ப்பதும், சேர்த்து ஆள்வதும் பெருமைக்கும் கர்வப்படுவதற்கும் உரிய காரியமானால், செல்வத்தையே அலட்சியம் செய்கிற தீரன் அதைவிட அதிகமாகப் பெருமையும் கர்வமும் கொண்டாடலாம் அல்லவா?”

“இப்போது திடீரென்று இந்தச் சந்தேகம் உங்களுக்கு எப்படி முளைத்தது அம்மா?”

“சந்தேகத்துக்காகக் கேட்கவில்லையடி; அப்படிப் பெருமை கொண்டாடுகிற ஒருவரை எனக்குத் தெரியும். இப்போது அவர் நினைவு வந்தது, அதனால்தான் கேட்டேன்.”

இவ்வாறு சொல்லிச் சுரமஞ்சரி சிரித்தபோது வசந்தமாலையும் எதையோ புரிந்து கொண்டவள் போல் தலைவியோடு சேர்ந்து சிரித்தாள். அப்போது தான் இருந்த மஞ்சத்துக்கு எதிரே சாளரத்தின் வழியே விண்மீன்களும், சந்திரனும் திகழும் வானத்தைக் கண்டாள் சுரமஞ்சரி. விண்மீன்கள் சாதாரண ஆண்பிள்ளையாகவும், சந்திரன் பேராண்மையாளனாகிய இளங்குமரனாகவும் மாறி அவள் கண்களுக்குத் தோன்றினார்கள்.
-----------

முதல் பருவம் : 1.31. இருள் மயங்கும் வேளையில்...

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. மாபெரும் காவிரிப்பூம்பட்டின நகரத்தின் தோற்றத்துக்கே புதிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டமான ஆரவாரங்களையும் அளித்துக் கொண்டிருந்த இந்திரவிழாவின் நாட்களில் இன்னும் ஒன்றே ஒன்றுதான் எஞ்சியிருந்தது. இருபத்தேழு நாட்கள் இருபத்தேழு வினாடிகள் போல் வேகமாகக் கழிந்துவிட்டன. நாளைக்கு எஞ்சியிருக்கும் ஒரு நாளும் முடிந்துவிட்டால் மறுபடியும் இந்திரவிழாவின் இனிய நாட்களை நுகரப் பன்னிரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். வெறும் நாளிலேயே திருநாள் கொண்டாடுவது போலிருக்கும் அந்த நகரம் திருநாள் கொண்டாடும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். விழா முடிந்த மறுநாளிலிருந்து நாளங்காடியின் கடைகள், பட்டினப்பாக்கத்தின் செல்வ வளமிக்க வீதிகள், மருவூர்ப்பாக்கத்தின் நெருக்கமான பகுதிகள் ஆகிய எல்லா இடங்களிலும் இந்திர விழாவின் புதுமை ஆரவாரங்களெல்லாம் குறைந்து, வழக்கமான ஆரவாரங்களோடு அமைதி பெற்றுவிடும்.

இந்திர விழாவின் இறுதி நாள் சிறப்பு வாய்ந்தது. அன்று தான் காவேரியின் நீராடு துறைகளில் சிறந்ததும், நகரத்திலேயே இயற்கையழகுமிக்க பகுதியுமாகிய கழார்ப் பெருந்துறையில் பூம்புகார் மக்கள் நீராட்டு விழாக் கொண்டாடுவது வழக்கம். காவிரிப்பூம்பட்டினத்தின் மேற்குப் பகுதியில் காவிரி அகன்றும் ஆழ்ந்தும் பாயும் ஓரிடத்தில் கழார்ப் பெருந்துறை என்னும் நீராடு துறை அமைந்திருந்தது. நீராட்டு விழாவுக்கு முதல்நாள் மாலையிலேயே நகரமக்கள் காவிரிக்கரையிலுள்ள பொழில்களிலும், பெருமரச் சோலைகளிலும் போய்த் தங்குவதற்குத் தொடங்கி விட்டார்கள். நகரமே வெறுமையாகிக் காவிரிக் கரையில் குடியேறிவிட்டது போல் தோன்றியது. கடுமையான வேனிற்காலத்தில் குளிர்ந்த பொழில்களிலும், நதிக்கரையிலும் வசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நகர மக்கள் அதை அநுபவிக்காமல் விடுவார்களா? காவிரிக்கரையில் சித்திரக் கூடாரங்களும், கூரை வேய்ந்த கீற்றுக் கொட்டகைகளும் அமைத்துத் தங்கி மறுநாள் பொழுது விடிவதையும் நீராட்டுவிழா இன்பத்தையும் ஒருங்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் நகர மக்கள்.

கழார்ப் பெருந்துறைக்குச் செல்லும் சோலைசூழ் சாலையின் இருபுறமும் தேர்களும், பல்லக்குகளும், யானைகளும், வேறு பல சித்திர ஊர்திகளும் நிறைந்திருந்தன. குளிர்ச்சியும் பூஞ்சோலைகளின் நறுமணமும் மிகுந்து விளங்கும் இந்தச் சாலையைத் தண்பதப் பெருவழி என்றும், திருமஞ்சனப் பெருவழி என்றும் இதன் சுகத்தையும் இன்பத்தையும் உணர்ந்த பூம்புகார் மக்கள் பேரிட்டு அழைத்துப் போற்றி வந்தார்கள். காவேரியின் நீரோட்டத்தைத் தழுவினாற் போல் அமைந்த காரணத்தினால் எக்காலத்திலும் சில்லென்று தண்மை பரவித் தங்கிய சாலையாயிருந்தது இது. அதனால்தான் ‘தண்பதப் பெருவழி’ என்று பெயரும் பெற்றிருந்தது. திருமஞ்சனம் என்றால் மங்கல நீராடல் என்று பொருள். பலவிதமான மக்கள் நீராடல்களுக்கும் இந்தத் துறை இடமாக இருந்தது. காவிரித் துறைக்குப் போய் நீராடுவது ஒருபுறமிருக்க நீராடுவதற்காக இந்தச் சாலையின் வழியே நடந்து போகும்போதே உடம்பு நீராடின சுகத்தை உணர்ந்துவிடும். அத்துணைக் குளிர்ச்சியான இடம் இது.

நகரின் கிழக்குப் பகுதியாகிய மருவூர்ப்பாக்கத்து மக்கள் மேற்குப் பகுதியாகிய காவிரித்துறையிற் சென்று தங்கிவிட்டதனால் மருவூர்ப் பாக்கமும் கடற்கரைப் பகுதிகளும் வழக்கத்துக்கு மாறான தனிமையைக் கொண்டிருந்தன. கடல் அலைகளின் ஓலமும் காற்றில் மரங்கள் ஆடும் ஓசையையும் தவிர மருவூர்ப் பாக்கத்தின் கடலோரத்து இடங்களில் வேறு ஒலிகள் இல்லை. எப்போதும் ஆள் பழக்கம் மிகுந்து தோன்றும் நீலநாகர் படைக்கலச் சாலையில் கூட அன்று பெரும் அமைதி நிலவியது. படைக்கலச் சாலையைச் சேர்ந்த இளைஞர்கள் எல்லாரும் கழார்ப் பெருந்துறைக்குப் போய்விட்டார்கள். நீலநாகமறவரும் அன்று ஊரில் இல்லை. காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகில் சிற்றரசர் குடியினரான வேளிர்களின் நகரம் ஒன்று இருந்தது. அந்த நகரத்துக்குத் திருநாங்கூர் என்று பெயர். சிறப்புக்குரிய குறுநில மன்னர் மரபினரான நாங்கூர் வேளிர்களின் தலைநகராகிய அவ்வூரில் நீலநாகமறவருக்கு ஞான நூல்களைக் கற்பித்த முதுபெரும் புலமை வாய்ந்த ஆசிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த முதுபெரும் புலவருக்கு நாங்கூர் அடிகள் என்று பெயர். ஆண்டு தோறும் சித்திரைத் திங்களில் இந்திர விழா முடியும் போது நாங்கூர் அடிகளைச் சந்தித்து வணங்கி வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வருவது நீலநாகமறவரின் வழக்கம். பூம்புகார் மக்கள் காவிரியின் குளிர் புனலாடிக் களிமகிழ் கொண்டு திரியும் இந்திரவிழாவின் இறுதி நாட்களில் நீலநாகமறவர் நாங்கூரில் வயது முத்துத் தளர்ந்த தன் ஆசிரியருக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டிருப்பார் அவ்வாறு தம் ஆசிரியருக்குப் பணிவிடைகள் புரியும் காலத்தில் தாம் சோழ நாட்டிலேயே இணையற்ற வீரர் என்பதையும், தம்முடைய மாபெரும் படைக்கலச் சாலையில் தாம் பல மாணவர்களுக்கு ஆசிரியர் என்பதையும் அவர் மறந்துவிடுவார். தம்மை ஆசிரியராக்கிய ஆசிரியருக்கு முன்பு தான் என்றும் மாணவ நிலையில் இருக்க வேண்டுமென்ற கருத்து அவருக்கு எப்போதும் உண்டு. அந்தக் கருத்திலிருந்து அவர் மனம் மாறுபட்டதே கிடையாது.

அந்த ஆண்டிலும் இந்திர விழாவின் இறுதி நாளுக்கு முதல் நாள் காலையிலேயே படைக்கலச் சாலையைச் சேர்ந்த தேரில் திருநாங்கூருக்குப் புறப்பட்டுப் போயிருந்தார் நீலநாகமறவர். நீராட்டு விழாவுக்கு முந்திய நாள் பகலிலேயே படைக்கலச்சாலை ஆளரவமற்று வெறிச்சோடிப் போய்விட்டது. நீலநாகமறவர் திருநாங்கூர் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அங்கிருந்த மற்ற இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக காவிரித்துறைக்குப் போய் நீராட்டு விழாக் கோலாகலத்தில் மூழ்கி மகிழச் சென்று விட்டார்கள். நாளைக்குத்தான் விழா நாள் என்றாலும் உற்சாகத்தை அதுவரை தேக்கி வைக்க முடியாமல் இன்றைக்கே புறப்பட்டுச் சென்றிருந்தார்கள் அவர்கள்.

ஆனால் அதே நாளில் அதே வேளையில் வெளியே சென்று நகரத்தில் இந்திர விழா மகிழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பாமல் படைக்கலச் சாலையின் எல்லைக்குள்ளேயே தனிமையும் தானுமாக இருந்தான் இளங்குமரன்.

கடந்த இருபது நாட்களில் ‘இளங்குமரன் படைக்கலச் சாலையில் எல்லைக்குள்ளிருந்து வெளியேறலாகாது’ என்ற கட்டுப்பாட்டையும் படிப்படியாகத் தளர்த்தியிருந்தார் நீலநாகமறவர். அருட்செல்வமுனிவரின் மறைவால் இளங்குமரன் அடைந்திருந்த துக்கமும், அதிர்ச்சியும் அவனை ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி அடைத்து வைத்திருப்பதனால் இன்னும் அதிகமாகி விடக்கூடாதே என்று கருதித்தான் அப்படிச் செய்திருந்தார் அவர்.

“இளங்குமரன் படைக்கலச் சாலையிலிருந்து வெளியேறி எங்காவது சென்றாலும் தடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் யாராவது அவனோடு துணை போய் வருவது அவசியம்” என்று திருநாங்கூருக்குப் புறப்படுவதற்கு முன்பு கூடக் கதக்கண்ணன் முதலிய இளைஞர்களிடம் அவர் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அப்படி இருந்தும் இளங்குமரன் தானாகவே வெளியில் எங்கும் செல்வதற்கு விருப்பமின்றிப் பித்துக் கொண்டவன் போலப் படைக்கலச் சாலைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான்.

நீலநாகமறவரைத் திருநாங்கூருக்கு வழியனுப்பி விட்டுக் கதக்கண்ணன் இளங்குமரனிடம் வந்து அவனை நீராட்டு விழா நடக்குமிடத்துக்குப் போகலாமென அழைத்தான்.

“இன்று என் மனமே சரியில்லை. வெளியில் எங்கும் போய் வர வேண்டுமென்று உற்சாகமும் எனக்கு இல்லை. முடிந்தால் நாளைக்குக் காலையில் வந்து கூப்பிடு! உன்னோடு காவிரித் துறைக்கு வந்தாலும் வருவேன்” என்று கதக்கண்ணனுக்கு மறுமொழி கூறி அவனை அனுப்பினான் இளங்குமரன்.

நீராடு துறைக்கு எல்லாரும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். இருள் மயங்கும் நேரத்துக்குப் படைக்கலச் சாலையின் முற்றத்தில் இருந்த மேடையில் வந்து காற்றாட உட்கார்ந்து கொண்டிருந்தான் இளங்குமரன். அருட்செல்வ முனிவரின் மறைவுக்குப் பின் அவனுடைய மனமும், நினைவுகளும் துவண்டு சோர்ந்திருந்தன.

நீலநாகமறவர் அவ்வப்போது ஆறுதல் கூறி, அவன் மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்தார். அன்று அவரும் ஊரில் இல்லாததனால் அவன் மனம் மிகவும் வருந்திக் கொண்டிருந்தது.

‘என்னுடைய கைகளில் வலிமை இருக்கிறது. மனத்தில் ஆவல் இருக்கிறது. ஆனால் இந்த வலிமையைப் பயன்படுத்தி என் பெற்றோரை அறியவும், காணவும் துடிக்கும் ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லையே! என் ஆவலைத் தக்க சமயத்தில் நிறைவேற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்த முனிவரும் போய்விட்டார். அவர் இருந்தவரை ஆவல் நிறைவேறாவிடினும், என்றாவது ஒருநாள் அவரால் அது நிறைவேறுமென்று நம்பிக்கையாவது இருந்தது. இப்போது அதுவும் இல்லையே’ என்று நினைத்து நினைத்து, அந்நினைவு மாறுவதற்கு ஆறுதல் ஒன்றும் காணாமல் அதிலேயே மூழ்கியவனாக அமர்ந்திருந்தான் இளங்குமரன்.

மாலைப் போது மெல்ல மெல்ல மங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. படைக்கலச் சாலையின் பெரிய வாயிற் கதவுகள் மூடப்பெற்று நடுவிலுள்ள சிறிய திட்டிவாயிற் கதவு மட்டும் திறந்திருந்தது. அதையும் மூடிவிடலாம் என்று இளங்குமரன் எழுந்து சென்ற போது, காற்சிலம்புகளும் கைவளையல்களும் ஒலிக்க நறுமணங்கள் முன்னால் வந்து பரவிக் கட்டியங் கூறிடச் சுரமஞ்சரியும் மற்றோர் இளம்பெண்ணும் அந்த வாயிலை நோக்கி உள்ளே நுழைவதற்காகச் சிறிது தொலைவில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் மனத்தில் அவள் மேல் கொண்டிருந்த ஆத்திரமெல்லாம் ஒன்று சேர்ந்தது. ‘இப்படி ஒருநாள் வேளையற்ற வேளையில் இங்கே இந்தப் பெண் என்னைத் தேடி வந்ததனால்தானே நீலநாகமறவர் என்மேல் சந்தேகமுற்று என்னைக் கடிந்து கொண்டார்’ என்பது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

கதவுக்கு வெளியிலேயே நிறுத்தி அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத் துரத்திவிட வேண்டுமென்று இளங்குமரன் முடிவு செய்து கொண்டான். ஆனால் அவனுடைய ஆத்திரமும் கடுமையும் வீணாகும்படி அந்தப் பெண்கள் நடந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் படைக்கலச் சாலையின் திட்டி வாயிற் கதவருகே அவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவனருகில் வராமலே நேராக ஆலமுற்றத்துக் கோவிலுக்குப் போகும் வழியில் திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை எப்படியும் கோபித்துக் கொண்டு ‘இனிமேல் என்னைத் தேடி இங்கே வராதீர்கள்’ என்று கடிந்து சொல்லிவிடவும் துணிந்திருந்த இளங்குமரனுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

‘அவள் எங்கே போனால்தான் என்ன? சிறிது தொலைவு பின் தொடர்ந்து சென்றாவது அவளைக் கோபித்துக் கொண்டு தன் ஆத்திரத்தைச் சொல்லித் தீர்த்துவிட வேண்டும்’ என்ற நினைப்புடன் இளங்குமரனும் அந்தப் பெண்களைப் பின் தொடர்ந்தான்.

ஆனால் என்ன மாயமோ? ஆலமுற்றத்தில் பெரிய மர வீழ்துகளின் அடர்த்தியில் அந்தப் பெண்கள் வேகமாக எங்கே மறைந்தார்கள் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரமும் திகைப்பும் மாறி மாறித் தோன்ற அவன் ஆலமரத்தடியில் நின்ற போது அவனால் அப்போது அங்கே முற்றிலும் எதிர்பார்க்கப்படாத வேறு இரண்டு மனிதர்கள் அவனுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.

அன்று பட்டினப்பாக்கத்திலிருந்து அவனைப் பின் தொடர்ந்த ஒற்றைக் கண் மனிதனும், சுரமஞ்சரியின் தந்தையும் அவன் எதிரே வந்து வழியை மறித்துக் கொள்கிறாற் போல நின்றார்கள்.

“என்ன தம்பீ! மிகவும் உடைந்து போயிருக்கிறாயே? அருட் செல்வமுனிவர் காலமான துக்கம் உன்னை மிகவும் வாட்டி விட்டது போலிருக்கிறது” என்று விசாரிக்கத் தொடங்கிய சுரமஞ்சரியின் தந்தைக்கு பதில் சொல்லாமல் வெறுப்போடு வந்த வழியே திரும்பி நடக்கலானான் இளங்குமரன். “சிறிது பேசிவிட்டு அப்புறம் போகலாமே தம்பீ!” என்று கூறிக்கொண்டே உடன் நடந்து வந்து பிடி நழுவாமல் இளங்குமரனின் கையை அவனே எதிர்பாராத விதமாக அழுத்திப் பிடித்தார் அவர்.
-----------

முதல் பருவம் : 1.32. மாறித் தோன்றிய மங்கை

ஆத்திரத்தோடு திரும்பிச் சுரமஞ்சரியின் தந்தையை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன். அவனுடைய கையை அழுத்திப் பற்றியிருந்த அவர் பிடி இன்னும் தளரவில்லை.

“கையை விடுங்கள் ஐயா!” என்று அவன் கூறிய சொற்களைக் கேட்டு அவர் மெல்ல நகைத்தார். அந்த நகை இளங்குமரனின் கோபத்தை இன்னும் வளர்த்தது. உடனே விரைவாக ஓங்கி உதறித் தன் கையை அவருடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டான் அவன். சுரமஞ்சரியின் தந்தை கோபப்படாமல் அதே பழைய நகைப்புடன் அவனை நோக்கிக் கேட்டார்.


“யாருக்கும் பிடி கொடுக்காத பிள்ளையாயிருப்பாய் போலிருக்கிறதே?”

“பிடித்தவர் பிடியில் எல்லாம் சிக்கிச் சுழல்வதற்கு நான் அடிமையில்லை. நீங்கள் ஆண்டானும் இல்லை.”

“நீ பொதுவாகப் பேசுவதற்கு வாய் திறந்தாலே உன் பேச்சில் ஒரு செருக்கு ஒலிக்கிறது, தம்பீ! ஆத்திரத்தோடு பேசினால் அதே செருக்கு மிகுந்து தோன்றுகிறது. ஆனால் இப்போது யார் முன்னால் நின்று பேசுகிறோம் என்று நீ கவனமாக நினைவு வைத்துக் கொண்டு பேசுவதுதான் உனக்கு நல்லது.”

“எங்களைப் போன்ற அநாதைகளுக்குச் செல்வமில்லை. சுகபோகங்கள் இல்லை. இந்தச் செருக்கு ஒன்று தான் எங்களுக்கு மீதமிருக்கிறது. இதையும் நீங்கள் விட்டு விடச் சொல்கிறீர்களே? எப்படி ஐயா விட முடியும்?”

அப்போது அந்த இருள் மயங்கும் வேளையில் எந்தச் சூழ்நிலையில் எவர் முன்பு நின்று பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது இளங்குமரனுக்கு நன்றாகப் புரிந்துதான் இருந்தது. தனிமையான ஆலமுற்றத்து மணல் வெளியில் சுரமஞ்சரியின் தந்தையும் அவருக்குத் துணைபோல் வந்திருந்த ஒற்றைக்கண் மனிதனுமாக எதிரே நிற்கும் இருவரும் தனக்கு எவ்வளவு பெரிய தீமையையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதை உணர்ந்திருந்த இளங்குமரன் அதற்காக அஞ்சவில்லை. ஊன்றிச் சிந்தித்துப் பார்த்த போது அன்று மாலை வேளையில் தொடக்கத்திலிருந்து அங்கு நடந்தவை அனைத்துமே திட்டமிட்டுக் கொண்டு செய்யப்பட்ட சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான் இளங்குமரன்.

சற்றுமுன் படைக்கலச் சாலையின் திட்டி வாயிற் கதவருகே சுரமஞ்சரியும் அவள் தோழியும் வருவது போல் போக்குக் காட்டி விட்டு மறைந்தது கூடத் தன்னை உள்ளிருந்து வெளியே வரவழைப்பதற்காகச் செய்யப்பட்ட தந்திரமாக இருக்குமோ என்றும் இளங்குமரன் எண்ணினான். இவ்வாறு எண்ணிக் கொண்டே அந்தப் பெண்கள் எங்காவது தென்படுகிறார்களா என்று மீண்டும் நான்குபுறமும் தன் கண் பார்வையைச் செலுத்தினான் அவன். அப்போது சுரமஞ்சரியின் தந்தை ஏளனமாகச் சிரித்துக் கொண்டே அவனை நோக்கிக் கேட்டார்:

“எதற்காக இப்படிச் சுற்றுமுற்றும் பார்க்கிறாய் என்று எனக்குத் தெரியும் தம்பீ! பெண்களுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வந்து இப்படி இந்த ஆண்களுக்கு முன்னால் வகையாக மாட்டிக் கொண்டு விட்டோமே என்று தானே பார்க்கிறாய்?”

“இன்னும் ஒரு முறை அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா! பெண்களுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு போகிற வழக்கம் எனக்கு இல்லை. அநாவசியமாக உங்கள் பெண் தான் எனக்குப் பின்னால் விடாமல் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறாள். நான் அதை விரும்பவில்லை, வெறுக்கிறேன். என்னைத் தேடிக் கொண்டோ, துரத்திக் கொண்டோ உங்கள் பெண் இனிமேல் வரக்கூடாது என்று கண்டித்துச் சொல்வதற்காகத்தான் இப்போது நான் வந்தேன்.”

“அதற்கு இப்போது அவசியமில்லை தம்பீ! நீ யாரை கண்டிக்க வேண்டுமோ, அவள் இப்போது இங்கே வரவில்லை. அவள் இங்கு வரும்போது நன்றாகக் கண்டித்துச் சொல்லி அனுப்பு. நீ அப்படிக் கண்டிப்பதைத் தான் நானும் வரவேற்கிறேன்” என்று அவர் பதில் கூறிய போது இளங்குமரன் பொறுமையிழந்தான்.

“ஏன் ஐயா இப்படி வாய் கூசாமல் பொய் சொல்லுகிறீர்கள்? உங்கள் பெண் சுரமஞ்சரி தன் தோழியுடன் இப்போது இந்த வழியாக வந்ததை நான் நன்றாகப் பார்த்தேனே? ‘வரவில்லை’ என்று நீங்கள் பொய் சொல்லுகிறீர்களே...?”

“நான் பொய் சொல்லுவதற்குப் பல சமயங்கள் நேர்ந்திருக்கின்றன, தம்பீ! சில சமயங்களை நானே ஏற்படுத்திக் கொண்டதும் உண்டு. அவற்றுக்காக நான் வருத்தமோ, வெட்கமோ அடைந்ததில்லை. இனியும் அப்படி பொய் கூறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் ஏற்படுத்திக் கொண்டாலும் அவற்றுக்காக நான் வெட்கமடையப் போவதில்லை. நான் பெரிய வாணிகன். மலை மலையாகச் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருப்பவன். உண்மையை நினைத்து, உண்மையைப் பேசி, உண்மையைச் செய்து செல்வம் குவிக்க முடியாது.

    ‘நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
    நல்லவாம் செல்வம் செயற்கு.’

என்று செல்வம் செய்வதற்கு வகுத்திருக்கும் விதியே தனி வகையைச் சேர்ந்தது, தம்பீ! இந்த நகரில் எவரும் பெறுவதற்கு அரிய எட்டிப் பட்டமும், எண்ணி அளவிட முடியாத பெருஞ்ச் செல்வமும் பெற்று, மாபெரும் சோழ மன்னருக்கு அடுத்தபடி வசதியுள்ள சீமானாயிருக்கிறேன் நான். ஆனால் என்னுடைய இந்தச் செல்வத்துக்கு அடியில் நியாயமும் நேர்மையும், உண்மையும் தான் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தால் அது பொய். நான் குவித்திருக்கும் செல்வத்தின் கீழே பலருடைய நியாயம் புதைந்து கிடக்கலாம். அதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. வெட்கமும் இல்லை. ஆனால் வாய் தவறி நான் சில உண்மைகளையும் எப்போதாவது சொல்வதுண்டு. அவற்றில் இப்போது சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியதும் ஒன்று.”

“எதைச் சொல்கிறீர்கள்?”

“என் மகள் சுரமஞ்சரியும் அவள் தோழியும் இன்று இப்போது இங்கு வரவேயில்லை என்பதை மறுபடியும் உனக்கு வற்புறுத்திச் சொல்வதற்கு விரும்புகிறேன். இது தான் உண்மை.”

“அந்தப் பெண்கள் இருவரும் இந்தப் பக்கமாக வந்ததை என் கண்களால் நானே பார்த்துவிட்ட பின் நீங்கள் சொல்கிற பொய்யை மெய்யாக எப்படி ஐயா நான் நம்ப முடியும்?”

இளங்குமரனின் இந்தக் கேள்வியைக் கேட்டதுமே படர்ந்து முதிர்ந்த தமது முகத்தில் குறும்பும் விஷமத்தனமும் பரவச் சிரித்தார் சுரமஞ்சரியின் தந்தை. அருகிலிருந்த நகைவேழம்பரும் அதே போலச் சிரித்தார்.

“நான் சொல்வதை நீ நம்ப வேண்டாம். ஆனால் மறுபடியும் உன் கண்களால் நீயே பார்த்தால் நம்புவாயல்லவா?” என்று சொல்லிக் கொண்டே பக்கத்து ஆலமரத்தை நோக்கித் திரும்பிக் கைதட்டி, “மகளே! இப்படி வா” என்று இரைந்து கூப்பிட்டார் அவர். அடுத்த கணம் பருத்த ஆலமரத்தின் அடிமரத்து மறைவிலிருந்து இளங்குமரன் கண் காணச் சுரமஞ்சரி மெல்லத் தலையை நீட்டினாள். அவள் பக்கத்தில் உடன் வந்த தோழிப் பெண்ணும் இருளில் அரைகுறையாகத் தென்பட்டாள். இளங்குமரன் அதைக் கூர்ந்து நோக்கி விட்டு அவர் பக்கம் திரும்பிக் கேட்கலானான்:

“நன்றாகப் பாருங்கள். அதோ ஆலமரத்தடியில் சுரமஞ்சரியும் அவள் தோழியும் தானே நிற்கிறார்கள்? சுரமஞ்சரி இங்கு வரவில்லை என்று நீங்கள் கூறியது பொய்தானே? ஏன் ஐயா இப்படி முழுப் பூசணிக்காயைச் சேற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள்?”

இப்படிக் கேட்ட இளங்குமரனுக்குப் பதில் ஒன்றும் கூறாமல் அவன் முகத்தையே இமையாமல் பார்த்தார் சுரமஞ்சரியின் தந்தை.

“எதற்கும் இன்னொருமுறை நன்றாகப் பார்த்து விட்டு சொல்லுங்களேன்” என்று கூறியவாறே இளங்குமரனுக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு ஒற்றைக் கண்ணரும் அவன் பொறுமையைச் சோதிக்கவே, இவனுக்குக் குழப்பத்தோடு கோபமும் மூண்டது.

“நிறுத்துங்கள், ஐயா! ஒற்றைக் கண்ணால் உலகத்தைப் பார்க்கிற நீங்கள் எப்படி இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்வது என்பது பற்றி எனக்கு அறிவுரை கூற வேண்டாம். உங்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்டிருக்கிற குழப்பத்தை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். என்னையும் சேர்த்துக் குழப்பாதீர்கள். வேண்டுமானால் ஆலமரத்தடியிலிருந்து அவளை இங்கே இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி ‘அவள்தான் சுரமஞ்சரி’ என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டியதுதான்.”

“அப்படியெல்லாம் விளக்குவதற்கு அவசியம் ஒன்றுமில்லை தம்பீ! ஆலமரத்தடியில் நிற்பவள் என்னுடைய மற்றொரு மகள் வானவல்லியாகவும் இருக்கலாமே? உனக்கு ஏன் அந்தச் சந்தேகமே எழவில்லை?” என்று சுரமஞ்சரியின் தந்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுச் சிரித்தபோதும் இளங்குமரன் அதை நம்ப மறுத்துவிட்டான்.

“உங்கள் பெண்கள் இரட்டையர் என்பது எனக்குத் தெரியும் ஐயா! ஆனால் இன்று இங்கு வந்திருப்பது வானவல்லியல்லள், சுரமஞ்சரியேதான். அவர்கள் வரும்போது திட்டி வாசலிலிருந்து நான் தான் நன்றாகப் பார்த்தேனே! நீங்களிருவரும் ஏதோ காரணத்துக்காக என்னை ஏமாற்றிச் சுரமஞ்சரியை வானவல்லியாகக் காண்பிக்க முயல்கிறீர்கள். வானவல்லி இங்கு வரவேண்டிய காரணமேயில்லை. வந்தால் சுரமஞ்சரிதான் இங்கு என்னைத் தேடி வந்து எனக்குக் கெட்ட பெயரும் வாங்கி வைப்பாள். எப்படியாவது போகட்டும். யாராக வேண்டுமானாலும் இருந்து தொலைக்கட்டும். எனக்கென்ன வந்தது? சுரமஞ்சரி வந்தால் என்ன? வானவல்லி வந்தாலென்ன? இவர்கள் யாரும் என்னைத் தேடி எனக்காக இங்கு வரக்கூடாது என்பதுதான் என் கவலை. நீங்கள் பொய் கூறுகிறீர்களே என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் வீணாக என் ஆற்றலையும் பேச்சையும் செலவழித்து மறுக்க முயன்றேன்” என்று மேலும் தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தே பேச்சை முடித்தான் இளங்குமரன்.

அருகில் நெருங்கிச் சிரித்துக் கொண்டே மறுபடியும் அவன் கைகளைப் பற்றினார் சுரமஞ்சரியின் தந்தை. முன்பு பிடித்தது போலன்றி அன்புப் பிடியாக இருந்தது இது. ஆனால் இந்த அன்புப் பிடியிலும் ஏதோ வஞ்சகம் இருப்பதை இளங்குமரன் உணர்ந்தான்.

“நீ சாதுரியமானவன் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை தம்பீ! இப்போது நாங்கள் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டு விடுகிறோம். அதோ நிற்கிறவள் சுரமஞ்சரியேதான். உன்னுடைய திறமையைப் பரிசோதிப்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் என்னென்னவோ சொல்லி உன்னை ஏமாற்ற முயன்றோம். நீ இறுதிவரை உறுதியாக இருந்து உண்மையை வற்புறுத்தி விட்டதால் உன்னுடைய நினைவாற்றலைப் பாராட்டுகிறேன்” என்று தன் கையைப் பிடித்துக் கொண்டே தழுவிக் கொள்கிறாற்போல் அருகே நெருங்கிக் குழைந்தபோது இளங்குமரன் அவர் பிடியிலிருந்து விலகித் தன்னை விடுவித்துக் கொண்டான்.

“கையை விடுங்கள் ஐயா! நான் யாருக்கும் பிடி கொடுக்காதவன் என்று நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே?” என்று அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு இளங்குமரன் திரும்பி நடந்த போது, “நீ யாருக்கும் பிடிகொடுக்காதவன் தான் தம்பீ! ஆனால் இப்போது என்னிடம் சரியாகப் பிடி கொடுத்திருக்கிறாயே!” என்று சூழ்ச்சிப் புன்னகையோடு மர்மமான குரலில் கூறினார் அவர். வேறு பொருள் செய்து கொள்ள இடமிருந்தும் இந்தச் சொற்களை அவ்வளவுக்கு பெரியனவாக மனத்தில் ஏற்றுக் கொண்டு சிந்தனையை வளர்க்காமல் வந்த வழியே திரும்பி படைக்கலச் சாலையை நோக்கி நடந்தான் இளங்குமரன்.

“பட்டினப்பாக்கத்துப் பக்கமாக வந்தால் மாளிகைக்கு அவசியம் வந்து போ, தம்பீ!” என்று அவர் கூறிய உபசாரச் சொற்களையும் அவன் இலட்சியம் செய்யவில்லை. ஆனாலும் பெரிய சூழ்ச்சி ஒன்றின் அருகில் போய்விட்டு மீண்டு வந்ததுபோல் அவன் மனத்தில் ஒரு குழப்பம் இருந்தது.

இளங்குமரன் படைக்கலச் சாலைக்குள் புகுந்து திட்டி வாசற்கதவை அடைத்துக் கொள்கிற ஒலியையும் கேட்ட பின்னர், ஆலமுற்றத்தில் நின்று கொண்டிருந்த நகைவேழம்பர் தம் எதிரே நிற்கும் எட்டிப்பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரிடம் இப்படிக் கேட்டார்:

“வாழ்நாளிலேயே ஒரே ஒரு தடவை உண்மையைச் சொல்ல முன் வந்திருக்கிறீர்களே என்று பார்த்து வியந்து கொண்டிருந்தேன். கடைசி விநாடியில் அதையும் பொய்யாக மாற்றி எப்படியோ பயனுள்ளதாக முடித்து விட்டீர்களே?”

“நான் வணிகம் செய்பவன், ஊதியம் கிடைப்பதாயிருந்தால் எதையும் எப்படியும் மாற்றிச் சொல்ல வேண்டியதுதானே? வானவல்லியைச் சுரமஞ்சரி என்று தவறாகப் புரிந்து கொண்டு சாதித்தான் அந்தப் பிள்ளை. நானும் மறுத்துதான் பார்த்தேன். நான் மறுக்க மறுக்க அவன் தன் பிடிவாதத்தை உறுதியாக்கினான். கடைசியில் அவன் சொல்லியதே மெய் என்று ஒப்புக் கொண்டுவிட்டது போல நடித்து நானும் பாராட்டினேன். என்ன காரணம் தெரியுமா நகைவேழம்பரே? அவன் கண்களில் வானவல்லி சுரமஞ்சரியாகத் தென்படுவதைப் பயன்படுத்திக் கொண்டு நாம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். அந்த அளவில் அது நமக்கு ஊதியம் தானே?” என்றார் அவர்.

“உங்கள் திட்டமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் பிள்ளையாண்டானை இவ்வளவு எளிதில் ஏமாளியாக்கி விடமுடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்றார் நகைவேழம்பர்.
--------------

முதல் பருவம்: 1.33. பூ மழை பொழிந்தது! பூம்புனல் பரந்தது!


மறுநாள் பொழுது புலர்வதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே கதக்கண்ணன் படைக்கலச்சாலைக்கு வந்து இளங்குமரனை நீராட்டு விழாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டான். இளங்குமரனுக்கும் அன்று தனியாகப் படைக்கலச் சாலையிலேயே அடைந்து கிடக்க விருப்பமில்லை. எனவே கதக்கண்ணன் வந்து அழைத்தவுடன் மறுப்புச் சொல்லாமல் உடன் புறப்பட்டு விட்டான்.

பூம்புகாரில் வழக்கமாக இந்திரவிழா நிறைவுநாளில் மழை பெய்வதுண்டு. சில ஆண்டுகளில் சாரல் போல் சிறிதளவு மழையோடு ஓய்ந்துவிடும். இன்னும் சில ஆண்டுகளில் மேக மூட்டத்தோடு வானம் அடைத்துக் கொண்டு தோன்றுமே தவிர மழை பேருக்குத் தூறி ஓய்ந்துவிடும். மிகச் சில ஆண்டுகளில் மட்டும் இந்திரவிழா இறுதியில் தொடங்குகிற மழை பெருங் கோடை மழையாக மாறி வளர்ந்து சில நாட்களுக்குத் தொடர்ந்து பெய்யும். ஒவ்வொரு பருவ காலத்துக்கும் அதன் சூழ்நிலைக்கும் ஏற்பத் தங்கள் வாழ்க்கையை அழகுற அமைத்துக் கொண்டிருந்த பூம்புகார் மக்கள் இதற்கு ‘இந்திரவிழா அடைப்பு’ என்று பெயர் சூட்டியிருந்தார்கள்.

அன்று காலை இந்திரவிழா அடைப்பு பூம்புகாரின் மேல் வானவெளியை அழகிய மேக நகைகளால் அணி செய்திருந்தது. அலங்காரக் கோலத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டு நாணி அமர்ந்திருக்கும் புதுமணப் பெண்ணைப் போல் வானம் முகில்கள் நிறைந்து கவிந்து காட்சியளித்தது. பூஞ்சிதறலாக அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறு தூறல் தூறிக் கொண்டிருந்தது. பொற் பட்டறையில் தான் உருக்கிய விலைமதிப்பற்ற பொன் உருக்குக் குழம்பைக் கரிபடிந்த தன் உலைக்களத்துத் தரையில் வெப்ப நடுக்குடன் தாறுமாறாக ஊற்றும் கொல்லனைப் போல் வெள்ளியுருக்கி வீசிய மின்னல்கள் கரியவானில் நீண்டு ஓடிச் சரிந்து மறைந்து கொண்டிருந்தன. கோடையிடிகள் வேறு கொட்டி முழங்கின. வானமும் திருவிழாக் கொண்டாடியது.

போது விழித்தும் புலரி விழியாத வானின் கீழ் இரவு விடிந்தும் இருள் விடியாத அந்த நேரத்தில் இளங்குமரனும், கதக்கண்ணனும் குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள். குளிர்ந்த சூழலும் மழைச்சூல் கொண்ட வானமும், அந்த நேரத்தின் அழகும், மக்களெல்லாம் காவிரி முன் துறைக்குப் போயிருந்ததனால் நகரமே அதிக ஒலிகளற்றிருந்த சூழலும் காவிரிப்பூம்பட்டினத்தைக் கண் நிறைந்த கனவு நகரமாகக் காட்டின. அந்த அழகை இளங்குமரன் ஆழ்ந்த சிந்தனையுடன் அநுபவித்துப் பார்த்து மகிழ்ந்தான்.

“மனிதக் கும்பலும், அவர்களின் ஓசைகளும், பூசல்களும் பிரிந்து தனியாகத் தெரியும்போது இந்த நகரம் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா கதக்கண்ணா?” என்று மனம் நெகிழ்ந்த குரலில் கூறினான் இளங்குமரன். இயக்கமும் ஓசை ஒலிகளுமற்றிருந்த கோலத்தில் நகரமே வானத்திலிருந்து நீள நெடுந்திரை கட்டிச் சுற்றிலும் தொங்கவிட்ட ஓர் பெரிய ஓவியம் போல் தோன்றியது அவனுக்கு.

அவர்களுடைய குதிரைகள் நகரின் ஒரு பகுதியில் இருந்த ‘உலக அறவி’ என்னும் பொது மன்றத்தைக் கடந்த போது அந்த மன்றத்தின் இருபுறமும் அகன்ற திண்ணைகளில் முடங்கிக் கிடந்த பல நூறு பிச்சைக்காரர்களைக் கண்டு வருந்தினான் இளங்குமரன். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்வதற்கு வேறு வழியின்றி யாசிப்பதையே தொழிலாகக் கொண்டு வயிறு துடைக்கும் பாமரர்களின் உறைவிடம் தான் இந்த உலக அறவி. ‘சோறூட்டும் விழாவுக்குத் தவிக்கும் இவர்களுக்கு நீராட்டு விழா ஏது?’ என்று எண்ணிய போது ‘உலகம் முழுவதிலும் ஏழைகளே இல்லாதபடி செய்துவிட வேண்டும்’ போல் அந்தக் கணமே அவன் மனத்திலும் தோள்களிலும் ஒரு துடிப்பும் ஏற்பட்டது. குதிரையை நிறுத்திக் கீழே இறங்கி உலக அறவியின் திண்ணையை ஒட்டினாற் போலச் சிறிது தொலைவு நடந்தான் இளங்குமரன். முன்னால் சென்றிருந்த கதக் கண்ணனும் குதிரையைத் திருப்பிக் கொண்டு வந்து இறங்கி இளங்குமரனோடு பின்னால் நடந்து சென்றான்.

தங்கள் பிச்சைப் பாத்திரங்களையே தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு உறங்குபவர்களையும், பாத்திரமுமில்லாமல் வெறும் முழங்கையை மடித்து வைத்துக் கொண்டு உறங்குபவர்களையும் வரிசையாகப் பார்த்துக் கொண்டே நடந்தான் இளங்குமரன். “என்னைப் போல் செல்வம் சேர்ப்பவர்களுக்கு வகுத்திருக்கும் விதியே தனி வகையைச் சேர்ந்தது. நாங்கள் உண்மையைப் பொய்யாக்குவோம்; பொய்யை உண்மையாக்குவோம்” என்று முதல் நாள் மாலை தன்னிடம் ஆலமுற்றத்தில் திமிர் கொண்டு பேசிய செல்வரையும், இப்போது கண்டு கொண்டிருக்கும் உலக அறவிப் பிச்சைக்காரர்களையும் சேர்த்து நினைத்துப் பார்த்தான் இளங்குமரன். படைத்தவனே கைத் தவறுதலாக ஏதோ பிழை செய்து விட்டது போல் உணர்ந்து மனம் கொதித்தான், அவன். சிறிது நேரத்துக்கு முன் கனவு நகரம் போல் அழகு கொண்டு தோன்றிய காவிரிப்பூம்பட்டினத்தின் தோற்றம் இப்போது அப்படித் தோன்றவில்லை அவனுக்கு. அந்த அழகின் மறுபுறம் வேதனைகள் நிறைந்திருப்பதாகத் தோன்றியது.

“என்ன பார்க்கிறாய், இளங்குமரா? இங்கே படுத்திருப்பவர்களில் யாரையாவது தேடுகிறாயா?” என்று கேட்டான் கதக்கண்ணன்.

“படைத்தவனின் அநியாயத்தைப் பார்க்கிறேன். நியாயத்தைத் தேடுகிறேன். இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சோறும், துணியும், வீடும், வாழ்வும் வேறு எவர்களிடம் இருக்க முடியுமென்று பார்க்கிறேன்” என்று குமுறியபடி பதில் வந்தது இளங்குமரனிடமிருந்து. கதக்கண்ணனுக்கு இவையெல்லாம் புதிய பேச்சுக்களாயிருந்தன. எதை விளங்கிக் கொண்டு எப்படி மறுமொழி கூறுவதென்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே அவன் மௌனமாக இளங்குமரனைப் பின் தொடர்ந்தான். அவர்கள் உலக அறவிக்கு அப்பாலிருந்த சக்கரவாளத்தையும், சம்பாபதி கோவிலையும் கடந்து மேலே சென்றார்கள்.

“என் தந்தையும், முல்லையும் நம் வரவை எதிர்பார்த்து அங்கே கழார்ப் பெருந்துறையில் காத்துக் கொண்டிருப்பார்கள். நாம் விரைவாகச் செல்வது நல்லது” என்று நடுவில் ஒருமுறை இளங்குமரனை அவசரப்படுத்தினான் கதக்கண்ணன்.

பூம்புகார் வீதிகளில் மீண்டும் அவர்கள் குதிரைப் பயணம் தொடர்ந்தது. ‘இலஞ்சிமன்றம்’ என்னும் பெரிய ஏரியின் கரையருகே வந்ததும், இளங்குமரன் மீண்டும் குதிரையை நிறுத்திக் கீழே இறங்கினான். அந்தக் குளத்தின் கரையிலுள்ள அம்பலத்தின் மேடைகளிலும், திண்ணைகளிலும் காவிரிப்பூம்பட்டினத்தின் அநாதை நோயாளிகள் நிறைந்து கிடந்தார்கள். மண்ணின்மேல் மனிதர்களுக்கு எத்தனை வகைக் கொடிய நோய்கள் எல்லாம் வரமுடியுமோ, அத்தனை வகை நோய்களும் வந்த நோயாளிகள் இலஞ்சி மன்றத்தில் இருந்தார்கள். தூக்கம் வராமல் அலறித் தவிக்கும் நோயாளி, தூக்கமிழந்து வலியினால் துடிக்கும் நோயாளி, தொழுநோயாளி, புழு நோயாளி, நொண்டி, கூன், குருடு, இன்னும் சொல்லில் அடங்காத நோயாளிகளையெல்லாம் சேர்த்துப் பார்க்க முடிந்த இடம் இலஞ்சி மன்றம். அழுகை ஒலி, வேதனைக் குரல், அலறல், அரற்றல் நிறைந்த அந்தக் குளக்கரையில் நின்று சிந்தித்த போது இளங்குமரனுக்கு உலகமே இருண்டு தோன்றியது. உலகமே நோய் மயமாகத் தோன்றியது.

“சொப்பனபுரியாகவும், கந்தர்வ நகரமாகவும் இந்தப் பட்டினத்தை வருணனை செய்து பாடியிருக்கிற கவிகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், கதக்கண்ணா?”

“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? உள்ளவற்றில் நல்லவற்றைச் சிறப்பித்து மட்டும் பாடியிருக்கிறார்கள் அவர்கள். மரபும் அதுதானே?”

“மரபாக இருக்கலாம்! ஆனால் நியாயமாக இருக்க முடியாது. சோழ மன்னரும் அவருடைய அரண்மனையும் சுற்றியிருக்கும் எட்டிப்பட்டம் பெற்ற செல்வர்களும் தான் காவிரிப்பூம்பட்டினம் என்றால் இந்தக் காவிரிப்பூம்பட்டினம் மிகவும் சிறியதாகக் குறுகி விடும். செல்வமும் வீடும் தவிர வறுமையும் நோயும் தானே இங்கு மிகுதியாக இருக்கின்றன? அவற்றை ஏன் மறைக்க வேண்டும்?”

கதக்கண்ணன் இதற்கு மறுமொழி சொல்லி மேலே பேச்சைத் தொடர இடங்கொடுக்காமல் குதிரையில் தாவி ஏறினான். இளங்குமரனும் தன் குதிரையில் ஏறிக் கொண்டான். அவன் மனத்தில் பல வினாக்கள் ஏறிக் கொண்டு துளைத்தன. அவற்றுக்கு விடை கேட்கவும், விவாதம் செய்யவும் கதக்கண்ணன் ஏற்புடையானாகத் தோன்றாததால் மனத்திலேயே அவற்றைச் சிந்தித்துக் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி அவனுக்குப் புலப்படவில்லை.

அவர்கள் காவிரியின் கழார்ப் பெருந்துறைக்குப் போகும் திருமஞ்சனப் பெருவழியில் நுழைந்த போது நன்றாக விடிந்து ஒளி பரவத் தொடங்கியிருந்தது. முன்பு பூஞ்சிதறலாக இருந்த மழைத் தூற்றல் இப்போது சாரலாகப் பெய்து கொண்டிருந்தது. காவிரித் துறை நெருங்க நெருங்கச் சாலையில் கூட்டமும், தேரும், யானையும், குதிரையும் மிகுந்து நெருக்கமான போக்குவரவு இருந்ததனால் அவர்களால் தங்கள் குதிரைகளை விரைந்து செலுத்த முடியவில்லை. மெல்ல செலுத்திக் கொண்டு சென்றார்கள்.

காவிரியில் நீராடுவதற்காகத் தோழிகள் வாசனைத் தைலங்கள் பூசவும், ஆலவட்டம் வீசவும், பட்டுக்குடை பிடிக்கவும், பணிப்பெண்கள் புடை சூழச் செல்வக்குடி நங்கையர்கள் அலங்காரமான சூழ்நிலையின் நடுவே விளங்கித் தோன்றினர். தங்களுக்கு நீந்தத் தெரியாததனால் தோழிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒருவரோடொருவர் கரங்கோத்தபடி நீரில் இறங்கின செல்வப் பெண்களைக் கரையிலிருந்த நீந்தத் தெரிந்த பெண்கள் நகைத்து ஏளனம் செய்தனர். தண்ணீரில் இறங்க மனமின்றிச் சாரலில் நனைந்து கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தவர்களை அவர்கள் நண்பர்கள் பின்புறமாக வந்து பிடித்துத் தள்ளி வேடிக்கை பார்த்தார்கள். மற்றொரு புறத்தில் ஆண்களும் பெண்களுமாக இளம் பருவத்தினர் சிறு சிறு படகுகளை விரைந்து செலுத்தி எவரால் வேகமாகப் படகு செலுத்த முடிகிறதென்று தங்கள் திறமையைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். தண்ணீர்ப் பரப்பிலேயே மிதக்கும் சிறு வீடுகளைப் போல் அணி செய்து அமைக்கப்பட்டிருந்த நீரணி மாடம் என்னும் படகு இல்லங்களில் மிதந்து சென்று நீராட்டு விழாவை அநுபவித்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.

*வாயில் நிறைய அவலை அடக்கிக் கொண்டு வாயையும் திறக்காமல் நீரையும் குடிக்காமல் உள்ளே அவலை மென்று தின்று கொண்டே வேகமாக நீந்தும் விளையாட்டு ஒன்றைப் பெண்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்படி நீந்தி முதலில் வருகின்றவருக்கு வெற்றி என்று முடிவு செய்வது வழக்கம். இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்த துறையில் பெண்களின் கூட்டம் கணக்கற்றுக் கூடியிருந்தது. துறையருகிலும் மணற் பரப்பிலும் எங்கும் அவல் சிதறிக் கிடந்தது. ஆவலும் பரவித் தெரிந்தது.

(* இப்படி மகளிர் விளையாடும் ஆடல் ஒன்று அக்காலத்திலிருந்ததைப் புறநானூறு 63-ஆவது பாடல் கூறும்.)

எல்லாருடைய உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தூண்டும் இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்த துறையருகே வந்ததும் இளங்குமரனும், கதக்கண்ணனும் தத்தம் குதிரைகளை நிறுத்திக் கொண்டு அவற்றில் அமர்ந்தபடியே பார்க்கலாயினர்.

அவலை வாய் நிறைய அடக்கிக் கொண்டு பெண்கள் கூட்டம் ஒன்று காவிரி நீர்ப் பரப்பில் வரிசையாக அணிவகுத்துப் புறப்பட்டு நீந்தியது. அந்த வரிசையில் பன்னிரண்டு பெண்கள் நீந்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிது தொலைவு சென்ற பின் இளங்குமரன் மறுபடியும் எண்ணிப் பார்த்த போது பதினொரு பெண்கள் தான் தெரிந்தனர். ‘யாரோ ஒருத்தி நீரில் மூழ்கியிருக்க வேண்டும் அல்லது சுழலில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும்’ என்று தோன்றியது. தனக்குத் தோன்றியதைக் கதக்கண்ணனிடம் கூறினான் இளங்குமரன். “நீரில் மூழ்கியிருந்தாலுமே நாம் என்ன செய்ய முடியும்?” என்று கதக்கண்ணன் பதில் சொன்னான். “என்னால் அப்படி நினைத்துப் பேசாமல் இருக்க முடியாது! அப்புறம் நானும் ஆண் பிள்ளை என்று நிமிர்ந்து நடக்க என்ன இருக்கிறது?” என்று கூறிக் கொண்டே, குதிரையிலிருந்து கீழே குதித்து விரைந்தான் இளங்குமரன். ‘வேண்டாம் போகாதே’ என்று நண்பன் தடுத்துக் கூறியதை அவன் கேட்கவில்லை.
-----------

முதல் பருவம் : 1.34. திருநாங்கூர் அடிகள்

பூம்புகாரின் ஆரவாரமும், வாழ்க்கை வேகமும், சோழர் பேரரசின் தலைநகரமென்ற பெருமையும் நாங்கூருக்கு இல்லாவிட்டாலும் அமைதியும் அழகுங் கூடியதாயிருந்தது அந்தச் சிறு நகரம். எங்கு நோக்கினும் பசும்புல் வெளிகளும், வெறுமண் தெரியாமல் அடர்ந்த நறுமண மலர்ச் சோலைகளும், மரக்கூட்டங்களுமாகப் பசுமைக் கோலங் காட்டியது அந்த ஊர். வெயில் நுழையவும் முடியாத பசுமைக்குள் மறைந்திருந்த அழகு காரணமாக நாங்கூருக்குப் ‘பொழில் நகரம்’ என்று சோழ நாட்டுக் கவிஞர்கள் புகழ்ப் பெயர் சூட்டியிருந்தார்கள்.

நாங்கூரின் வீரப் பெருமைக்குக் காரணமாயிருந்தவர்கள் அங்கு வாழ்ந்து வந்த வேளிர்கள் என்றால் ஞானப் பெருமைக்குக் காரணமாயிருந்தவர் ‘பூம்பொழில் நம்பி’ என்னும் பெரியவரே ஆவார். பூம்பொழில் நம்பியைத் திருநாங்கூர் அடிகள் என்ற பெயரில் சோழநாடெல்லாம் அறியும். சமய நூல்களிலும், தத்துவ ஞானத்திலும் பழுத்துப் பண்பட்ட குணக்குன்று அவர். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தொடங்கி நாங்கூருக்குச் செல்லுகிற பெருவழி அவ்வூர் எல்லையுள் நுழையுமிடத்தில் பூம்பொழில் என்றொரு குளிர்ந்த சோலை இருந்தது. அந்தச் சோலையில்தான் முதுபெருங் கிழவரும், துறவியுமாகிய நாங்கூர் அடிகள் வசித்து வந்தார். வயதும் உடலும், அறிவும் முதிர்ந்தாலும் கபடமில்லாத குழந்தை மனம் கொண்டவர் திருநாங்கூர் அடிகள். சோழ நாட்டில் அந்த நாட்களில் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த சமயவாதிகளும், அறிஞர்களும், புலவர் பெருமக்களும் தம்முடைய மாணவர்கள் என்பதை உணர்ந்திருந்தும் அதற்காக அடிகள் இறுமாப்பு அடைந்ததேயில்லை. நேரில் தம்மைப் புகழுவோரிடம் எல்லாம், “இயற்கைதான் பெரிய ஆசிரியன்! அதனிடமிருந்து நான் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பூம்பொழிலில் எத்தனையோ நாட்களாகச் செடிகள் தளிர் விடுகின்றன, அரும்புகின்றன, பூக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இவை எனக்குப் புதுமையாகவே தோன்றுகின்றன. கண்களிலும், மனத்திலும் சலிப்புத் தோன்றாமல் பார்த்து நினைத்து உணர்ந்தால் இயற்கையே பெரிய ஞானம்தான்” என்று குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டே கூறுவார். தமது பூம்பொழிலில் ஏதாவது ஒரு செடியில் புதிய தளிரையோ, புதிய அரும்பையோ பார்த்துவிட்டால் அவருக்கு ஏற்படுகிற ஆனந்தம் சொல்லி முடியாது. வித்தூன்றியிருந்த புதுச்செடி முளைத்தாலும் அவருக்குத் திருவிழாக் கொண்டாட்டம் தான். அப்படிப் புதுத் தளிரையும், புது அரும்பையும், புதுச் செடியையும் பார்த்துத் தாம் பேரானந்தம் அடைகிற போது அருகில் இருப்பவர்கள் பேசாமல் வாளாவிருந்தால், “உலகத்துக்குப் புதிய அழகு ஒன்று உண்டாக்கியிருக்கிறது! அதைப் பார்த்து ஆனந்தப்படத் தெரியாமல் நிற்கிறீர்களே? உலகம் உம்முடைய வீடு ஐயா! உம்முடைய வீட்டில் அழகுகள் புதிது புதிதாகச் சேர்ந்தால் உமக்கு அவற்றை வரவேற்று மகிழத் தெரிய வேண்டாமா?” என்று உணர்ச்சியோடு கூறுவார் அவர். இயற்கை இயற்கை என்று புகழ்ந்து போற்றுவதுதான் அவருக்குப் பேரின்பம்.

எண்ணிலாத மலர்கள் மலரும் அவ்வளவு பெரிய பூம்பொழிலில் அடிகள் ஒரு பூவைக் கூடக் கொய்வதற்கு விடமாட்டார். யாரும் எதற்காகவும் அங்கேயுள்ள பூக்களைப் பறிக்கக் கூடாது. “பூக்கள் இயற்கையின் முகத்தில் மலரும் புன்னகைகள். அந்தப் புன்னகைகளை அழிக்காதீர்கள். அவை சிரிக்கட்டும். சிரித்துக் கொண்டே மணக்கட்டும்” என்று அழகாக உருவகப்படுத்திக் கூறுவார். எத்தனை அரும்பு கட்டினாலும், எத்தனை பூப்பூத்தாலும், எத்தனை முறை மணந்தாலும், ஒரே அளவில் அரும்பு கட்டி ஒரே வித உருவில் மலர்ந்து, ஒரே வகை மணத்தைப் பரப்பும் தனித்தனிப் பூக்களைப் போல் எப்போது பேசினாலும், எதைப் பற்றிப் பேசினாலும் சொற்கள் மலரக் கருத்து மணக்கப் பேசும் வழக்கமுடையவர் அடிகள். பட்டு நூலில் துளையிட்ட முத்துக்கள் ஒவ்வொன்றாய் நழுவி இறங்கிச் சேர்ந்து கோத்துக் கொண்டு ஆரமாக ஒன்றுபடுவது போல் அவருடைய வாயிற் சொற்கள் பிறப்பதும், இணைவதும், பொருள்படுவதும் தனி அழகுடன் இருக்கும். மல்லிகைச் செடியில் பூக்கும் எல்லாப் பூக்களுக்கும் மல்லிகைக்கே உரியதான மணம் இருப்பதைப் போல் நாங்கூர் அடிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவருடைய நாவில் அது பிறந்ததென்பதாலேயே ஓர் அழகு இருப்பதுண்டு.

சிறப்பு வாய்ந்த இத்தகைய ஆசிரியர் பெருமகனாரைச் சந்திக்கச் செல்வதில் எந்த மாணவருக்குத்தான் இன்பமிருக்காது? நீராட்டு விழாவுக்கு முதல் நாள் காலையிலேயே காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாங்கூருக்குப் புறப்பட்டிருந்த நீலநாகமறவர் அந்தி மயங்கும் போதில், நாங்கூர் அடிகளின் பூம்பொழிலை அடைந்து விட்டார். கூட்டையடையும் பறவைகளின் ஒலியும், நாங்கூர் அடிகளின் மாணவர்கள் பாடல்களை இரைந்து பாடி மனப்பாடம் செய்யும் இனிய குரல்களும் அப்போது பூம்பொழிலில் ஒலித்துக் கொண்டிருந்தன.

நீலநாகமறவர் பொழிலுக்கு வெளியிலேயே தம்முடைய தேரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி மேலாடையை இடுப்பில் கட்டிக் கொண்டு பயபக்தியோடு உள்ளே நடந்து சென்றார். கவசமும், வாளும் அணிந்து படைக்கலச்சாலையின் எல்லைக்குள் கம்பீரமாகக் காட்சியளிக்கும் நீலநாக மறவர் இப்போது எளிய கோலத்தில் தம் ஆசிரியரைத் தேடி வந்திருந்தார். அவர் உள்ளே சென்ற போது ஆசிரியராகிய நாங்கூர் அடிகள் அந்தப் பொழிலிலேயே இருந்ததொரு பொய்கைக் கரைமேல் அமர்ந்து நீர்ப் பரப்பில் மலர்ந்து கொண்டிருந்த செங்குமுத மலரைப் பார்த்துக் கொண்டிருந்தார். நீரின் மேல் தீ மலர்ந்தது போல் செந்நிறத்தில் அழகாக மலரும் அந்தப் பூவின் மேல் அவருடைய கண்கள் நிலைத்திருந்தன.

தமக்குப் பின்னால் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டும் அவர் கவனம் கலைந்து திரும்பவில்லை. அவருக்கு ஒவ்வொரு அநுபவமும் ஒரு தவம் தான். எதில் ஈடுபட்டாலும் அதிலிருந்து மனம் கலையாமல் இணைந்து விட அவருக்கு முடியும். பூவின் எல்லா இதழ்களும் நன்றாக விரிந்து மலர்ந்த பின்பு தான் அவர் திரும்பிப் பார்த்தார். அதுவரையில் அவருக்குப் பின்புறம் அடக்க ஒடுக்கமாகக் காத்து நின்ற நீலநாகமறவர், “அடியேன் நீலநாகன் வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

“வா அப்பா! வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தாயோ? நான் இந்தப் பூவில் தெய்வத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே தியானத்திலும் ஆழ்ந்து விட்டேன். பூ, காய், பழம், மரம், செடி, கொடி, மலை, கடல் எல்லாமே தெய்வம் தான்! அவைகளை தெய்வமாகப் பார்ப்பதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டால் நிற்குமிடமெல்லாம் கோவில்தான். நினைக்குமிடமெல்லாம் தியானம்தான். பார்க்குமிடம் எல்லாம் பரம்பொருள்தான். இவையெல்லாம் உனக்கு வேடிக்கையாயிருக்கும் நீலநாகா! இத்தனை முதிர்ந்த வயதில் இப்படி நேரமில்லாத நேரத்தில் மரத்தடியிலும் குளக்கரையிலும் கிடக்கிறேனே என்று நீ என்னை எண்ணி வருத்தப்பட்டாலும் படுவாய்! ஆனால் எனக்கென்னவோ வயதாக ஆக இந்தப் பித்து அதிகமாகிக் கொண்டு வருகிறது. எங்குப் பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் தெய்வமாகத் தெரிகிறது. எந்தச் சிறு அழகைப் பார்த்தாலும் தெய்வத்தின் அழகாகத் தெரிகிறது. தளிர்களில் தெய்வம் அசைகிறது. மலர்களில் தெய்வம் சிரிக்கிறது. மணங்களில் தெய்வம் மணக்கிறது.”

இவ்வாறு வேகமாகச் சொல்லிக் கொண்டு வந்த அடிகள் முதுமையின் ஏலாமையால் பேச்சுத் தடையுற்று இருமினார்.

“இந்தக் காற்றில் இப்படி உட்கார்ந்திருந்தது உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை, ஐயா! வாருங்கள் உள்ளே போகலாம்” என்று அவருடைய உடலைத் தாங்கினாற் போல் தழுவி உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார் நீலநாகமறவர்.

அடிகளின் தவக்கூடத்துக்குள் சென்று அமர்ந்த பின் அவர்கள் உரையாடல் மேலே தொடர்ந்தது. நீலநாக மறவர் அடிகளிடம் வேண்டிக் கொண்டார்:

“ஐயா சென்ற ஆண்டு இந்திர விழாவின் போது தங்களைச் சந்தித்த பின் மறுபடியும் எப்போது காண்போம் என்ற ஏக்கத்திலேயே இத்தனை நாட்களைக் கடத்தினேன். பூக்களிலும், தளிர்களிலும் தெய்வத்தைக் கண்டு மகிழ்கிற உங்களிடமே தெய்வத்தைக் காண்கிறேன் நான். எனக்கு என்னென்ன கூறவேண்டுமோ அவ்வளவும் கூறியருளுங்கள். அடுத்த இந்திரவிழா வருகிறவரை இப்போது தாங்கள் அருளுகிற உபதேச மொழியிலேயே நான் ஆழ்ந்து மகிழ வேண்டும்.”

இதைக் கேட்டு நாங்கூர் அடிகள் நகைத்தபடியே நீலநாக மறவரின் முகத்தை உற்றுப் பார்த்தார்.

“இத்தனை வயதுக்குப் பின்பு இவ்வளவு மூப்பு அடைந்தும் நீ என்னிடம் உபதேசம் கேட்க என்ன இருக்கிறது நீலநாகா? உனக்கு வேண்டியதையெல்லாம் முன்பே நீ என்னிடமிருந்து தெரிந்து கொண்டு விட்டாய். உன்னைப் போல் பழைய மாணவர்களுக்கு இப்போது நான் கூறுவதெல்லாம் நட்புரைதான். அறிவுரை அல்ல. ஆனால் ஒரு பெரிய ஆசை எனக்கு இருக்கிறது. என்னுடைய எண்ணங்களையெல்லாம் விதைத்துவிட்டுப் போக ஒரு புதிய நிலம் வேண்டும். அந்த நிலம் மூப்படையாததாக இருக்க வேண்டும். நெடுங்காலம் விளையவும், விளைவிக்கவும் வல்லதாக இருக்க வேண்டும்.”

“எனக்குப் புரியவில்லை ஐயா! இன்னும் தெளிவாகக் கூறலாமே?”

“காவியத்துக்கு நாயகனாகும் குணங்கள் நிறைந்த முழு மனிதனைக் கவிகள் ஒவ்வொரு கணமும் தேடிக் கொண்டிருப்பது போல் என் ஞானத்தை எல்லாம் நிறைத்து வைக்கத் தகுதிவாய்ந்த ஓர் இளம் மாணவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன் நான்.”

இதைச் சொல்லும் போது நாங்கூர் அடிகளின் குழிந்த கண்களில் ஆவல் ஒளிரும் சாயல் தெரிந்தது. ஏக்கமும் தோன்றியது.

அடிகளிடம் வெகு நேரம் தத்துவங்களையும், ஞான நூல்களையும் பற்றிப் பேசிவிட்டு இறுதியாகக் காவிரிப்பூம்பட்டினத்து நிகழ்ச்சிகளையும் கூறினார் நீலநாகமறவர். அருட்செல்வ முனிவர் மறைவு, அவர் வளர்த்த பிள்ளையாகிய இளங்குமரன் இப்போது தன் ஆதரவில் இருப்பது, எல்லாவற்றையும் அடிகளுக்கு விவரித்துக் கூறிய போது அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டே வந்தார். நீலநாகமறவர் யாவற்றையும் கூறி முடித்த பின், “நீ இப்போது கூறிய இளங்குமரன் என்னும் பிள்ளையை ஒரு நாள் இங்கு அழைத்து வர முடியுமா நீலநாகா?” என்று மெல்லக் கேட்டார் நாங்கூர் அடிகள்.

அவர் என்ன நோக்கத்தோடு அப்படிக் கேட்கிறார் என்று விளங்கிக் கொள்ள இயலாவிடினும், நீலநாகமறவர் இளங்குமரனை ஒரு நாள் அவரிடம் அழைத்து வர இணங்கினார்.

மறுநாள் இரவு நீலநாக மறவர் திருநாங்கூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் திரும்பும் போது அடிகள் மீண்டும் முதல் நாள் தாம் வேண்டிக் கொண்ட அதே வேண்டுகோளை வற்புறுத்திக் கூறினார்.

“என்ன காரணமென்று எனக்கே சொல்லத் தெரியவில்லை நீலநாகா, அந்தப் பிள்ளை இளங்குமரனை நான் பார்க்க வேண்டும் போல் ஒரு தாகம் நீ அவனைப் பற்றிச் சொன்னவுடன் என்னுள் கிளர்ந்தது. மறந்துவிடாமல் விரைவில் அவனை அழைத்து வா.”

இளங்குமரனுடைய வீரப் பெருமைக்கு ஆசிரியரான நீலநாக மறார், இப்போது இந்த இளைஞனின் வாழ்வில் இன்னும் ஏதோ ஒரு பெரிய நல்வாய்ப்பு நெருங்கப் போகிறதென்ற புதிய பெருமை உணர்வுடன் திருநாங்கூரிலிருந்து திரும்பினார்.
------------

முதல் பருவம் : 1.35. தெய்வமே துணை!

நீரில் மூழ்கிவிட்ட அந்தப் பெண் யாராயிருந்தாலும் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உறுதியான எண்ணத்துடன், இரு கரையும் நிரம்பிடப் பொங்கிப் பெருகி ஓடும் காவிரிப்புனலில் இளங்குமரன் தன்னுடைய நீண்ட கைகளை வீசி நீந்தினான். கரையிலிருந்து பார்த்தபோது அவள் இன்ன இடத்தில் மூழ்கியிருக்க வேண்டுமென்று முன்பு குறிப்பாகத் தெரிந்த சுவடும் இப்போது தெரியவில்லை. மூழ்கிய பெண்ணைப் பற்றிக் கவனமே இல்லாமல் வாயில் அடக்கிய ஆவலோடும் தங்கள் திறமையை நிரூபிக்கும் ஆசையோடும் மற்றப் பெண்கள் நீரில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

மிக அருகில் நேர் கிழக்கே கடலோடு கலக்கப் போகும் ஆவலுடன் ஓடிக் கொண்டிருந்த காவிரியில் நீரோட்டம் மிகவும் வேகமாகத்தான் இருந்தது. தேங்கி நிற்கும் நீர்ப் பரப்பாயிருந்தாலாவது மூழ்கியவளின் உடல் மிதந்து மறைவதை எதிர்பார்க்கலாம். ஒரு வேளை நீரோட்டத்தின் போக்கில் கிழக்கே சிறிது தொலைவு அந்தப் பெண் இழுத்துக் கொண்டு போகப்பட்டிருப்பாளோ என்ற சந்தேகம் இளங்குமரனுக்கு ஏற்பட்டது. உடனே அவள் மூழ்கின துறைக்கு நேரே கிழக்குப் பக்கம் சிறிது தொலைவு வரை நீந்தினான் இளங்குமரன். நினைத்தது வீண் போகவில்லை. அவன் நீந்திக் கொண்டிருந்த இடத்திலிருந்து ஒரு பனைத் தூரத்தில் விரிந்த கருங்கூந்தலோடு எழுந்தும் மூழ்கியும் தடுமாறித் திணறும் பெண்ணின் தலை ஒன்று தெரிந்தது. கணத்துக்குக் கணம் அந்தத் தலைக்கும் அவனுக்கும் இடையிலிருந்த நீர்ப்பரப்பின் தொலைவு அதிகமாகிக் கொண்டு வந்தது. அவன் தன் ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி எவ்வளவோ வேகமாக நீந்தியும் கூட விரைந்தோடும் நீரின் ஓட்டம் அவனை இன்னும் கிழக்கே இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

கடலும் காவிரியும் கலக்குமிடம் நெருங்க நெருங்க, ஆழமும் அலைகளும் அதிகமாயிற்றே என்று தயங்கினாலும் இளங்குமரன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை.

‘பூம்புகார் போல் பெரிய நகரத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கே வாய்ப்புக்கள் குறைவு. அப்படியிருந்தும், அரிதாக ஏற்பட்ட ஓர் உதவியைச் செய்யாமல் கைவிடலாகாது’ என்பதுதான் அப்போது இளங்குமரனின் நினைப்பாக இருந்தது. முகம் தெரியாத அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரை சேர்த்து அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து கொண்டே, பாய்ந்து நீந்தினான் அவன். நகரத்து மக்களெல்லாம் மகிழ்ச்சியோடு நீராட்டு விழா முடிந்து திரும்பும் போது, பெண் காவிரியில் மூழ்கி மாண்டதற்காக அழுது புலம்பும் பெற்றோருடைய ஓலம் ஒன்றும் காவிரிக் கரையில் இருந்து ஒலிக்கக் கூடாது என்பதுதான் அவன் ஆசை.

இதோ அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. அருகில் நெருங்கி அவளுடைய கூந்தலை எட்டிப் பிடித்துவிட்டான் இளங்குமரன். அவளுடைய கூந்தல் மிகப் பெரிதாக இருந்ததனால் அவளை இழுத்துப் பற்றிக் கொள்ள இளங்குமரனுக்கு வசதியாயிருந்தது. தன் உடலோடு இன்னோர் உடலின் கனமும் சேரவே நீந்த விடாமல் நீரோட்டம் அவனை இழுத்தது. மேகக் காடுபோல் படர்ந்து நறுமணத் தைலம் மணக்கும் அந்தப் பெண்ணின் கூந்தல் அவளுடைய முகத்தை மறைத்ததோடன்றி அவனுடைய கண்களிலும் வாயிலும் சரிந்து விழுந்து தொல்லை கொடுத்தது. எதிரே பார்த்து நீந்திப் பயனில்லை. நீரோட்டத்தை எதிர்த்து மேற்குப் பக்கம் நீந்தினால்தான் காவிரித்துறைகளில் ஏதாவதொன்றின் அருகே கரையேறி மீள முடியும். கிழக்கே போகப் போகக் கடல் நெருங்கிக் கொண்டிருந்தது. நீரும் உப்புக் கரிக்கத் தொடங்கியது. ஆழம் அதிகமாவதோடு அலைகளினால் பெரும் எதிர்ப்பும் கிழக்கே போகப் போக மிகுதியாகி விடுமே என்று எண்ணி நடுக் காவிரியில் தத்தளித்தான் இளங்குமரன். செய்வதற்கு ஒன்றும் தோன்றவில்லை.

இந்தச் சமயம் பார்த்து மழையும் பெரிதாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. நாற்புறமும் பனி மூடினாற் போல மங்கலாகத் தெரிந்ததே தவிர ஒன்றும் தெளிவாகக் காண முடியவில்லை. மேகங்கள் தலைக்குமேல் தொங்குவது போலக் கவிந்து கொண்டன. காற்று வெறி கொண்டு வீசியது. அலைகள் மேலெழுந்து சாடின.

உயிர்களை எல்லாம் காக்கும் காவிரி அன்னை தன் உயிரையும், அந்தப் பேதைப் பெண்ணின் உயிரையும் பலி கொள்ள விரும்பி விட்டாளோ என்று அவநம்பிக்கையோடு எண்ணினான் இளங்குமரன். நீரோட்டம் இழுத்தது. உடல் தளர்ந்தது. பெண்ணின் சுமை தோளில் அழுத்தியது. கால்கள் நிலை நீச்சும் இயலாமல் சோர்ந்தன. நம்பிக்கை தளர்ந்தது.

ஆனால் காவிரி அன்னை இளங்குமரனைக் கைவிட்டு விடவில்லை. சிறிதளவு சோதனைதான் செய்தாள். கிழக்கு நோக்கி நீரோட்டத்தோடு நீரோட்டமாக கவனிப்பாரின்றி மிதந்து வந்த படகு ஒன்று இளங்குமரனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று கொண்டிருந்தது. படகில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நீராட்டு விழா ஆரவாரத்தில் படகுக்குரியவர்களின் கவனத்தை மீறி அறுத்துக் கொண்டு வந்த அநாதைப் படகு போல் தோன்றியது அது. பலங்கொண்ட மட்டும் முயன்று ஒரு கையால் அந்தப் பெண்ணின் உடலைப் பற்றிக் கொண்டு இன்னொரு கையை உயர்த்திப் படகைப் பற்றினான் இளங்குமரன். நீரின் வேகம் அவனையும் படகையும் சேர்த்து இழுத்தது. அவனும் விடவில்லை. படகும் அவன் பிடித்த சுமை தாங்காமல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அரை நாழிகை நேரம் படகோடும் நீரோட்டத்தோடும் போராடி முயன்று எப்படியோ தன்னையும், அந்தப் பெண்ணையும் படகுக்குள் ஏற்றிக் கொண்டான் இளங்குமரன். படகுக்குள் ஏறிக்கொள்ள மட்டும் தான் அவனால் முடிந்ததே ஒழிய கடலை நோக்கி ஓடும் படகை எதிர்த் திசையில் காவிரித் துறையை நோக்கி மறித்துச் செலுத்த முடியவில்லை. அப்போதிருந்த காற்றிலும், மழையிலும், நீர்ப் பிரவாகத்தின் அசுர வேகத்திலும் அப்படி எதிர்ப்புறம் படகைச் செலுத்துவது முடியாத காரியமாக இருந்தது. காவிரி கடலோடு கலக்கும் சங்க முகத்தை நோக்கி வெறி கொண்ட வேகத்தில் இழுத்துக் கொண்டு போயிற்று அந்தப் படகு. படகு சென்ற வேகத்தினாலும், அலைகளின் அசைப்பினாலும் உள்ளே கிடத்தியிருந்த பெண்ணின் தலை படகின் குறுக்கு மரச் சட்டத்தில் மோதி இடிக்கலாயிற்று. இளங்குமரனின் உள்ளம் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வருந்தியது. அந்தப் பெண்ணின் தலையை மெல்லத் தூக்கித் தன் மேலங்கியைக் கழற்றி மடித்து அவள் தலைக்கு அணைவாக வைத்தான். அவள் தலை மோதி இடிப்பது நின்றது.

பெருமழை பெய்யவே மழைநீர் படகில் சிறிது சிறிதாகத் தேங்கலாயிற்று. மிகச் சிறிய அந்தப் படகில் இருவர் சுமையுடன் நீரும் தேங்குவது எவ்வளவு பயப்படத்தக்க நிலை என்பதை எண்ணியபோது இளங்குமரன் தனக்கிருந்த சிறிதளவு நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கினான். மனம் உறுதி குன்றியது.

காவிரி கடலோடு கலக்குமிடம் நெருங்க நெருங்கப் படகின் ஆட்டம் அதிகமாயிற்று. அலைகளும் சுழிப்புக்களும் படகை மேலும் கீழும் ஆட்டி அலைத்தன. படகினுள்ளே தேங்கிய நீரை முடிந்தவரை அப்புறப்படுத்த முயன்றும் மேலும் மேலும் நீர் சேர்ந்து கொண்டிருந்தது. புயலில் உதிர்ந்த அரசிலையாகப் படகு அலைபட்ட போது, மனித நம்பிக்கைகள் குன்றியவனாக இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கூப்பினான், இளங்குமரன். “பூம்புகாரைக் காக்கும் தெய்வமே! சம்பாபதித் தாயே! என்னையும் இந்த அபலைப் பெண்ணையும் காப்பாற்று. நான் இன்னும் நெடுங்காலம் வாழ ஆசைப்படுகிறேன். என்னை அழித்துவிடாதே, என் ஆசையை அழித்து விடாதே” என்று மனமுருக வேண்டிக் கொள்வதைத் தவிர, வேறு முயற்சி ஒன்றும் அப்போது அவனுக்குத் தென்படவில்லை.
--------------

முதல் பருவம் : 1.36. இன்ப விழிகள் இரண்டு

ஊழிக் காலமே நெருங்கி வந்து விட்டதோ என அஞ்சினான் இளங்குமரன். கீழே அலை அலையாக நீர்க் கடல். மேலே அலை அலையாக மேகக் கடல். நெடுந்தொலைவுக்கு அப்பால் இருப்பது போல் தெரிந்து இல்லாததாய் முடியும் தொடுவானம் இப்போது தெரியவில்லை. தன்னையும், தன்னால் காப்பாற்றப்பட்டவளையும், இருவருடைய உயிர்களையும் பற்றிய நம்பிக்கையையும், அதன் விளைவுகளையும் தெய்வத்தினிடம் ஒப்படைத்து விட்டுப் படகினுள் சோர்ந்து ஒடுங்கிப் போய் வீற்றிருந்தான் இளங்குமரன். காலையா, நண்பகலா, மாலையா என்று பொழுதைப் பற்றியே தெரிந்து கொள்ள இயலாதபடி மழை மூட்டத்தில் சூழ்ந்த பொய்யிருள் ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொழுதும் அந்தப் பொய்யிருளில் மறைந்திருந்தது.

இளங்குமரன் இருந்த படகு சங்குமுகத்தைக் கடந்து பழ நாழிகைத் தொலைவு கடலுக்குள் அலைந்து திரிந்தாகி விட்டது. காவிரியின் சங்கமுகத்துக்குக் கிழக்கே தொலைவில் நடுக் கடலுள் ‘கப்பல் கரப்பு’ என்ற ஒரு திடல் இருந்தது. மண் திடலாகச் சிறிய மலை போன்று உயர்ந்து தோன்றும் மேட்டு நிலத்தீவு அது. தென்னை மரங்கள் நெருக்கமாகச் செழுத்து வளர்ந்து தோன்றும் அந்தத் தீவுக் குன்றம் நீலக் கடலின் இடையே மரகதப் பச்சை மலைபோல் அழகாய்த் தெரியும். சங்க முகத்திலோ, அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலோ நின்று கடலுள் பார்த்தால் நன்றாகத் தெரியக் கூடிய அந்தத் தீவும் மழை மூட்டத்தினால் இன்று தெரியவில்லை. காவிரியிலும் கடற்பரப்பினுள்ளும் இவ்வாறு அமைந்திருந்த நிலத் திடல்களுக்குத் ‘துருத்தி’ என்று பெயரிட்டிருந்தார்கள். இத்தகைய தண் மணல் துருத்திகளும், தாழ்பூந்துறைகளும், நீர்ப்பரப்பைச் சூழ்ந்த பெரிய பெரிய சோலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட ‘படப்பை’ என்னும் வேனில் காலத்து வீடுகளும் காவிரிப்பூம்பட்டினத்தைச் சுற்றி மிகுதியாக இருந்தன. அவற்றில் ஏதாவது ஒன்றின் அருகேயாவது தன் படகு ஒதுங்காதா என்று எண்ணித் தவித்தான் இளங்குமரன். படகு நெடுங் கடலுக்குள் சென்றுவிட்ட பின் இப்படி எண்ணித் தவிப்பதற்கு வழியில்லாமற் போயிற்று.

‘இனிமேலும் நாம் தப்பி உயிர்பிழைக்க வழியிருக்கிறது’ என்று அவன் இறுதியாக நம்பிக் கொண்டிருந்த ஒரே இடம் ‘கப்பல் கரப்பு’ என்னுடம் தீவுத்திடல் தான். கடற்கரையோரங்களில் வசிக்கும் பரதவர்களும், துறைமுகத்துக்கு வந்து போகும் கப்பல்களின் மீகாமர்களும் ஒரு காரணத்துக்காக அந்தத் தீவைக் ‘கப்பல் கரப்பு’ என்று அழைத்தார்கள். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிற கப்பல்களைக் கரையிலிருந்து பார்க்க முடிந்த கடைசி எல்லை அந்தத் தீவுதான். அதற்குப் பின் தீவின் தோற்றமே கப்பல்களைக் கண்பார்வைக்குத் தென்படாமல் மறைத்து விடும். அதுபோல வெளிநாடுகளிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்துக்குள் நுழையும் கப்பல்களும் கப்பல் கரப்புத் தீவுக்கு இப்பால் புகுந்ததும் அந்தப் பக்கத்திலிருந்து காண்பவர்களுக்குத் தோற்றம் மறைந்து விடும். அப்படிக் கப்பல்கள் கண்பார்வைக்கு மறையக் காரணமாயிருந்த தீவு ஆகையினால் தான் கப்பல் கரப்பு என்று அழைக்கப்பட்டு வந்தது அந்தத் தீவு.

நடுக்கடலில் தன் போக்காக விழுந்து மிதக்கும் மரகத மணியாரம் போன்ற அந்தத் தீவின் ஓரமாக ஏதாவதொரு பகுதியில் படகு ஒதுங்க வேண்டும் என்பதுதான் இளங்குமரனின் சித்தத்தில் அப்போதிருந்த ஒரே ஆசை. மழையும் புயலுமாயிருந்த அந்தச் சமயத்தில் கப்பல் கரப்பினருகே ஒதுங்கினால் மற்றொரு பயனும் கிடைக்கும். துறைமுகத்துக்கு வரும் கப்பல்களும், துறைமுகத்திலிருந்து போகும் கப்பல்களும் கப்பல் கரப்பை ஒட்டியே செல்வதினால், தீவிலிருந்து மீண்டும் நகர் திரும்ப எந்தக் கப்பலிலாவது சொல்லி உதவியை நாடலாம் என்று நினைத்திருந்தான் இளங்குமரன்.

அருட்செல்வ முனிவரின் மறைவு பற்றிய வேதனையையும் படைக்கலச் சாலையின் தனிமையையும் மறந்து காவிரித்துறை நீராட்டு விழாவில் ஆரவாரத்தில் கலந்து திரியலாம் என்று தான் கதக்கண்ணனோடு வந்திருந்தான் அவன். ஆனால் நினைத்தபடி நடக்கவில்லை. நினையாதவையெல்லாம் நடந்துவிட்டன. ‘எந்தப் பெண் தண்ணீரில் மூழ்கினால் எனக்கென்ன வந்தது? அது அவளுடைய தலையெழுத்து’ என்று கதக்கண்ணன் நினைத்ததைப் போலவே தானும் நினைக்க முடிந்திருந்தால் இளங்குமரனுக்கு இந்தத் துன்பங்களெல்லாம் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. என் செய்வது? மனிதர்களை நினைத்தால் அவனுக்கு இரக்கமாயிருக்கிறது. அவர்களுடைய குணங்களைப் புரிந்து கொண்டால் கோபம் வருகிறது. முதன்முதலாக ஓவியன் மணிமார்பனுக்கு உதவ நேர்ந்ததை நினைத்துக் கொண்டான் அவன். பிறருக்காகத் துன்பப்படுகிறவர்கள் தங்களுக்காகவும் சேர்த்துத் துன்பப்பட வேண்டியிருக்கிறதென்பதை இளங்குமரன் பல அனுபவங்களால் விளங்கிக் கொண்டிருந்தாலும், பிறருக்கு உதவப் போனதன் காரணமாகத் தனக்கு வம்பிழுத்து விட்டுக் கொள்ளும் சம்பவங்களே தொடர்ந்து ஏற்படுவதனால் அவன் மனம் சற்றே இறுகியிருந்தது எனினும் அது அடிக்கடி நெகிழும் சம்பவங்களும் நேர்ந்தன.

அன்று காவிரிக்கரையில் நின்று கொண்டிருந்த போது அந்தப் பெண் நீரில் மூழ்கியதைக் கண்டு அவனுடைய இறுகிய மனமும் இளகியது. வரும் போது உலக அறவியையும் இலஞ்சி மன்றத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்திருந்ததனால் காவிரித் துறையில் நிற்கும்போது உலகத்து இன்ப துன்பங்களை எண்ணி வியந்து நெகிழ்ந்த சிந்தனையிலாழ்ந்த மனத்தினனாக இருந்தான் அவன். காவிரியில் ஒரு பெண் மூழ்கியதைக் கண்ட போது அவன் தன் மனத்தில் “என்னுடைய தாயும் ஒரு காலத்தில் இப்படி இளம் பெண்ணாக இருந்திருப்பாள். இது போன்ற நீராட்டு விழா நாளில் அவல் அடக்கிக் கொண்டு காவிரியில் நீந்தியிருப்பாள்” என்று எண்ணிக் கொண்டிருந்தான். ‘எவ்வளவுதான் திறமையாக நீந்தத் தெரிந்தவளாக இருந்தாலும் அவல் விக்கியாவது மூச்சடக்க முடியாமல் தவறிக் குடித்த நீருடன் புரையேறியாவது, நீந்த முடியாமல் தளர்ந்து விடுவது இயல்புதானே’ என்று நிலைமையைப் புரிந்து கொண்டுதான் உதவ முன் வந்திருந்தான் அவன். அது இவ்வளவு பெரிய உதவியாக நீண்டுவிடும் என்று அப்போது அவன் எதிர்பார்க்கவில்லை.

இங்கே தான் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் கழார்த் துறையில் கதக்கண்ணன், முல்லை, வளநாடுடையார் மூவரும் தன்னைப் பற்றி என்ன நினைத்து எப்படி உரையாடிக் கொண்டிருப்பார்கள் என்று கற்பனை செய்ய முயன்றது அவன் சிந்தனை. மழையினாலும், காற்றினாலும் நீராட்டு விழாவே சீர் குலைந்து மக்களெல்லாம் தாறுமாறாகச் சிதறி நகரத்துக்குள் திரும்பிப் போயிருப்பார்களோ என்று அவன் ஐயமுற்றான்.

‘இதோ படகில் துவண்டு கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு உதவ நேரும் என்பதற்காகவே இன்று நான் நீராட்டு விழாவுக்கு வர நேர்ந்திருக்க வேண்டும். என்னுடைய ஒவ்வொரு நாளும், நிகழ்ச்சிகளும், திட்டமும் தொடர்பில்லாமல் கழிவதாக நான் நினைப்பதுதான் பிரமை. தொடர்பில்லாமல் தோன்றும் ஏதோ ஒரு தொடர்பு திட்டமிட்டுத்தான் எல்லாம் செய்கிறது போலும்’ என்று நினைத்து மனத்தைத் தேற்றிக் கொண்டு கப்பல் கரப்புத் திடலின் கரை தென்படுகிறதா என்பதை ஆவலோடு கவனிக்கலானான் இளங்குமரன். கரை தெரியவில்லை. ஆனால் கரையை நெருங்கும் அறிகுறிகள் தெரிந்தன. கடல் அலைகளில் அழுகின தென்னை மட்டைகளும், சிறுசிறு குரும்பைகளும், வேறு பல இலை தழைகளும் மிதந்து வந்தன. இந்த அடையாளங்களைக் கண்டு அவன் முகம் சிறிது மலர்ந்தது. கப்பல் கரப்பில் இறங்கி அந்தப் பெண்ணின் மயக்கத்தைத் தெளியச் செய்து அவளையும் அழைத்துக் கொண்டு அவ்வழியாகத் துறைமுகத்துக்குச் செல்லும் கப்பல் ஒன்றில் இடம்பிடித்து நகருக்குள் சென்று விடலாம் என்று அவன் தீர்மானம் செய்து கொண்டான். நகருக்குள் சென்று அந்தப் பெண்ணை அவள் இல்லத்திற் கொண்டு போய்ச் சேர்த்த பின் நேரே புற வீதியை அடைந்து கதக்கண்ணனையும், முல்லையையும், அவர்கள் தந்தையையும் சந்திக்கலாமென எண்ணிக் கொண்டிருந்தான் அவன். நீராட்டு விழாவிலிருந்து மழையினால் கலைந்து போய்க் கதக்கண்ணன் முதலியவர்கள் வீடு திரும்பியிருப்பார்களென்று அவன் அநுமானம் செய்து கொண்டிருந்ததனால் அவர்களைப் புறவீதியிலேயே தான் திரும்பிச் சென்று சந்திக்கலாமென்பது அவன் தீர்மானமாயிருந்தது.

சிறிது தொலைவு சென்ற பின் ‘கப்பல் கரப்புத் தீவு’ மங்கலாகத் தெரிந்தது. காற்றில் அங்குள்ள தென்னை மரங்கள் பேயாட்டமே ஆடிக் கொண்டிருந்தன. அந்தத் தீவின் கரையைக் கண்டதும் தான் சம்பாபதித் தெய்வம் தன்னைக் காப்பாற்றி விட்டதென்ற நம்பிக்கை இளங்குமரனுக்கு ஏற்பட்டது. படகிலிருந்து இறங்கிக் கரை ஏறுவதற்காக அந்தப் பெண்ணை அவன் தூக்கியபோது அவலும், நீருமாகக் குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்தாள் அவள். இளங்குமரனின் பொன்நிறத் தோள்களில் அவள் உமிழ்ந்த அவலும் நீரும் ஒழுகி வடிந்தன. ஓர் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதத்தில் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டான் இளங்குமரன். ‘அழுக்குப் படாமல் பிறருக்கு உதவி செய்துவிட நினைத்தால் உலகத்தில் உதவிகளே இல்லாமற் போய்விடும்’ என்று நினைத்த போது அவனுக்கு அவள் வாந்தி எடுத்தது வெறுப்பதற்குரியதாகப் படவில்லை.

கப்பல் கரப்புத் தீவின் ஈரமான செம்மண் தரையில் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு நடந்த போது இளங்குமரனின் மனம் கருணை மயமாக நெகிழ்ந்திருந்தது. பிறருக்கு உதவி செய்வதில் இருக்கிற மகிழ்ச்சி பிறரிடமிருந்து உதவியைப் பெறுவதில் இருக்க முடியாதென்று எப்போதும் அவனுக்கு ஒரு கருத்து உண்டு. அதையே மீண்டும் நினைத்துக் கொண்டு மகிழ்ந்தான் அவன்.

அந்தச் சமயத்தில் கப்பல் ஒன்று அவ்வழியே பூம்புகாரின் துறைமுகத்தை நோக்கி வருவதை அவன் கண்டான். உடனே தான் சுமந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டுக் கப்பலை அழைப்பதற்கு விரைந்தான். மழையும், காற்றுமான அந்த நேரத்தில் தான் உதவி கோருவது கப்பலிலிருப்பவர்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத் தீவிலேயே மிகவும் மேடான ஓர் இடத்தில் போய் நின்று கூவினான் அவன். கூவியும் கைகளை ஆட்டியும் வெகுநேரம் முயன்றும் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் கவனம் அவன் பக்கம் திரும்பவில்லை. அவனுடைய கூக்குரலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. தோற்றத்தைத் தொலைவும் மழையும் தெரியவிடாமற் செய்துவிட்டன. ‘இன்னும் ஏதாவது கப்பல் வருகிறதா’ என்று கவனித்துக் கொண்டு அங்கேயே நின்றான் இளங்குமரன். கப்பல்கள் வந்தன, போயின. ஆனால் ஆதரவு தேடிக் கூக்குரலிட்ட அவனைத்தான் அவை கவனிக்கவில்லை. வெகு நேரத்துக்குப் பின்பு, ‘இனியும் கப்பல்களை நம்பிக் காத்திருப்பதில் பயனில்லை!’ என்ற முடிவுடன் அந்தப் பெண்ணை விட்டு வந்த இடத்துக்குத் திரும்பினான் இளங்குமரன். மழை மூட்டப் பொய்யிருளோடு மெய்யிருளாகிய இரவின் கருமையும் கலந்த தீவினுள் ஒளி மங்கி அந்தகாரம் கவிந்து கொள்ள முற்பட்டிருந்தது. ‘இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டிவிடுமே’ என்ற கவலையோடு திரும்பி வந்த இளங்குமரன் அங்கே அந்தப் பெண் தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தான். அவளுடைய நிலை அவன் கவலையை ஓரளவு குறைத்தது. அவன் அருகில் வந்த போதும் அவள் அவனைக் கவனிக்கவில்லை. எதிர்ப்பக்கமாகக் கடலைப் பார்த்தவாறு கூந்தலை அள்ளிமுடித்துக் கொண்டிருந்தாள் அவள். நீரில் நனைந்து வெளுத்திருந்ததனால் வெண் தாமரைப் பூப்போன்ற அவளுடைய சிறிய பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு தீட்டினாற்போல் தீவின் ஈரச் செம்மண் நிறம் பூசி அலங்காரம் செய்திருந்தது. தெப்பமாக நனைந்த நிலையில் குளிரில் உதறும் மணிப்புறாவைப் போல் அவள் பொன்னுடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வெண் சங்கு போல் நளினமாகத் தோன்றிய அவள் கழுத்துப் பின்புறம் பிடரியில் முத்து முத்தாக நீர்த்துளிகள் உருண்டு ஒட்டியும் ஒட்டாமலும் சிதறின. அவை முத்தாரம் போல் தோன்றின. இளங்குமரன் மெல்லிய குரலில் அவளிடம் கூறினான்:

“பெண்ணே உன்னைக் காப்பாற்றியதற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவனை நீ சிறிது திரும்பிப் பார்க்கலாமே...”

தோகை பொலியத் தோற்றமளிக்கும் பெண் மயில் போல் அவள் திரும்பினாள். அவள் முகத்தில் நகை மலர்ந்தது.

அந்த முகத்தைப் பார்த்து இளங்குமரன் அதிர்ந்து போய் நின்றான். அவன் முகத்தில் வெறுப்பும் கடுமையும் பரவின.

“நீயா?... உன்னையா நான் இவ்வளவு சிரமப்பட்டுக் காப்பாற்றினேன்?”

“ஏன்? நான் காப்பாற்றுவதற்குத் தகுதியுடையவளில்லையா?” என்று கேட்டாள் சுரமஞ்சரி. அவள் முகத்திலும், கண்களிலும், இதழ்களிலும் குறும்புச் சிரிப்புக் குலவித் தெரிந்தது. அவளுடைய இன்ப விழிகள் இரண்டும் அவனை விழுங்கிவிடுவது போல் பார்த்தன.
--------------

முதல் பருவம் : 1.37. கருணை பிறந்தது!

கப்பல் கரப்புத் தீவு இருளில் மூழ்கிவிட்டது. மழையும் காற்றும் முன்பிருந்த கடுமை குறைந்திருந்தன. பகைவர்களைப் போல் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் இருளில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சுரமஞ்சரியும் இளங்குமரனும். கடல் இருந்த இடம் தெரியாவிட்டாலும் கப்பல்கள் போவதும் வருவதுமாக இருந்ததனால் தொலைவில் ஒளிப் புள்ளிகள் தெரிந்தன.

நடுங்கும் குளிர். இருவர் உடலிலும் ஈர உடைகள். இருவர் வயிற்றிலும் பசி. இருவர் மனத்திலும் எண்ணங்கள். இருவர் எண்ணங்களிலும் துயரங்கள். அமைதியில்லை; உள்ளும் இல்லை - புறத்திலும் இல்லை. நீண்ட நேர மௌனத்துக்குப் பின் சுரமஞ்சரியின் கேள்வி இளங்குமரனை நோக்கி ஒலித்தது.

“என்னைக் காப்பாற்றியதை நீங்கள் விரும்பவில்லைதானே?”

“...”

இளங்குமரனிடமிருந்து பதில் இல்லை.

“நான் கடலோடு சீரழிந்து இறந்து போயிருந்தால் உங்களுக்குத் திருப்தியாகியிருக்கும் இல்லையா?”

“...”

“என் கேள்வியை மதித்து எனக்குப் பதில் சொல்வது கூட உங்களுக்குக் கேவலம் போலிருக்கிறது?”

“...”

சுரமஞ்சரி எழுந்து நின்றாள். மெல்லிய விசும்பல் ஒலி அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து ஒலித்தது. இளங்குமரன் அதைக் கேட்டும் அசையாமல் கற்சிலை போல் அமர்ந்திருந்தான்.

எழுந்து நின்ற அவள் கடலை நோக்கி வேகமாக நடக்கலானாள். நடையில் பாய்ந்தோடும் வெறி. நெஞ்சில் தவிப்புக்கள். அதைக் கண்டு இளங்குமரனின் கல் நெஞ்சில் எங்கோ சிறிது கருணை நெகிழ்ந்தது. எழுந்து நின்று அவளைக் கேட்டான்:

“நில்! எங்கே போகிறாய்?”

“எங்கேயாவது போகிறேன்? எங்கே போனால் உங்களுக்கென்ன? உங்கள் மனத்தில்தான் எனக்கு இடம் கிடையாது! கடலில் நிறைய இடமிருக்கிறது.”

“இருக்கலாம்! ஆனால் நான் உன்னைச் சாக விட மாட்டேன். நீ என்னால் காப்பாற்றப்பட்டவள். தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ உன்னைக் காப்பாற்றி விட்டேன். என்னுடைய அன்பை நீ அடைய முடியாது; ஆனால் கருணையை அடைய முடியும்.”

சுரமஞ்சரி நின்றாள். அவனுக்குக் கேட்கும்படி இரைந்து சிரித்தாள்:

“அன்பில்லாமல் கருணையில்லை. எல்லையை உடையது அன்பு, எல்லையற்றது கருணை. அன்பு முதிர்ந்துதான் கருணையாக மலர வேண்டும். அன்பேயில்லாத உங்கள் கருணையை நான் அங்கீகரிப்பதற்கில்லை.”

“உன்னிடம் தர்க்கம் புரிய நான் விரும்பவில்லை. உன் சிரிப்புக்கும் பார்வைக்கும் நான் தோற்று நிற்பதுதான் அன்பு என்று நீ நினைப்பதாயிருந்தால் அதை ஒரு போதும் என்னிடமிருந்து அடைய முடியாது. எனக்கு பொதுவான இரக்கம் உண்டு. பொதுவான கருணை உண்டு. அது உன் மேலும் உண்டு. ஈ, எறும்பு முதல் எல்லா உயிர்கள் மேலும் உண்டு.”

“அப்படிக் கருணையையும், இரக்கத்தையும் பொதுவாகச் செலுத்தக் கடவுள் இருக்கிறார். நீங்கள் தேவையில்லை. மனிதர்கள், மனிதர்களிடமிருந்து, மனித நிலையில் எதிர்பார்க்கும் ஈரமும் பாசமும் இணைந்து குழைந்த உலகத்து அன்புதான் உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்.”

“அந்த அன்பை நான் உனக்குத் தருவதற்கில்லை.”

“வேறு யாருக்குத் தருவதாக உத்தேசமோ?”

“யாருக்குமே தருவதற்கில்லை. அந்த அன்பை என் தாயின் கால்களில் விழுந்து கதறுவதற்காகச் சேர்த்துக் கொண்டு வருகிறேன் நான். உலகத்திலேயே நான் அன்பு செலுத்துவதற்கு ஒருத்திதான் பிறந்திருக்கிறாள். அவள் யாரென்று எனக்கே தெரியவில்லை. அவளுக்காகத்தான் என் இதயத்தில் அன்பு தேங்கியிருக்கிறது. அவளுக்கு முன்னால்தான் நான் கண்ணில் நீர் நெகிழ ‘அம்மா’ என்று குழைய முடியும். துரதிர்ஷ்டவசமாக அவள் யாரென்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. அவளைப் பார்க்கிற வரை நான் பார்த்துக் கொண்டிருக்கிற பெண்களெல்லாம் என் கண்களுக்கு அவளாகவே தெரிகிறார்கள்.”

“எனக்குத் தாய் இருக்கிறாள். ஆகவே அந்த வகையிற் கருணைக்குக் குறைவில்லை. ஆனால் தாயும், தந்தையும் செலுத்துகிற அன்பு மட்டும் இப்போது என் மனத்தை நிறைவு செய்யவில்லையே! உங்களைப் போல் ஒருவருடைய மனத்திலிருந்து என்னைப் போல் ஒருத்தியின் மனம் எதையோ வெற்றி கொள்வதற்குத் தவிக்கிறதே!”

அவள் இப்படிச் சிரித்துக் கொண்டே கேட்ட போது மறுபடியும் இளங்குமரனின் குரல் சினத்தோடு சீறி ஒலித்தது:

“அந்த வெற்றி உனக்கு கிடைக்குமென்று நீ கனவிலும் நினைக்காதே. பெண்ணே! உன் தந்தையார் சேர்த்துக் குவித்திருக்கிற செல்வத்துக்கு ஆசைப்பட்டுச் சோழநாட்டு இளவரசனே உன்னை மணந்து கொள்ள முன்வந்தாலும் வரலாம். ஆனால் இளங்குமரன் வரமாட்டான். உன் தந்தையார் பொன்னையும் மணியையும் தான் செல்வமாகச் சேர்த்திருக்கிறார். ஆனால் இளங்குமரன் தன்மானத்தையும், செருக்கையுமே செல்வமாகச் சேர்த்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்க.”

எதிரே தள்ளி நின்றிருந்த சுரமஞ்சரி இளங்குமரனுக்கு மிக அருகில் வந்தாள். அழுகையும், சிரிப்புமின்றி உறுதியான எண்ணம் மட்டுமே வெளிப்படும் குரலில் ஏதோ சபதம் போடுவதுபோல் அவனிடம் கூறலானாள்:

“ஐயா! இந்த இருளும், மழையும், காற்றும், கடலும் சாட்சியாக உங்களுக்குச் சொல்கிறேன். தன்மானத்தையும் செருக்கையும் உங்களை விடக் குறைவாக நான் சேர்க்கவில்லை. உங்களிலும் பல மடங்கு அதிகமாகச் சேர்த்திருந்தேன். அதை அழித்து என் மனத்தை பலமில்லாமல் நெகிழ்ந்து போகச் செய்தது யார் தெரியுமா?”

“யார்...?”

“கேள்வியைப் பார்! சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் தான்!... நீங்களே தான்.”

“நான் என்னுடைய தன்மானத்தையும், செருக்கையும் வளர்ப்பதற்கு முயல்வது உண்டே தவிரப் பிறருடைய தன்மானமும் செருக்கும் அழிவதற்கு முயன்றதாக எனக்கு நினைவில்லையே?”

“எப்படி நினைவிருக்கும்? உங்கள் செருக்கு வளரும் போதே என் செருக்கு அழிந்து உங்களுக்கு உரமாகிக் கொண்டிருக்கிறதே! பூ அழிந்து தானே கனி?”

இளங்குமரன் திகைத்துப் போனான். அவளுடைய சாமர்த்தியமான பேச்சில் அவனது உணர்வுகளின் இறுக்கம் சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது.

“சோழ இளவரசன் மட்டுமில்லை. அகில உலகிலுமுள்ள எல்லா இளவரசர்களும் வந்தாலும் என் மனத்தைத் தோற்கவிட மாட்டேன். என் தந்தையாரின் செல்வம் எனக்குத் தூசியைப் போலத்தான். பதவி, குடிப்பெருமை எல்லாம் அப்படியே! ஆனால் நான் என் மனம் அழிந்து ஏங்கி நிற்கும் நிலை ஒன்று உண்டு. அது இப்போது என் எதிரில் நின்று கொண்டிருப்பவரின் அழகிய கண்களுக்கு முன் தோன்றும் நிலை தான்.”

உணர்வுமயமாகிவிட்ட அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். கப்பல் கரப்புத் தீவில் எங்கோ புதரில் மலர்ந்து கொண்டிருந்த தாழம்பூ மணம் காற்றில் கலந்து வந்து அவன் நாசியை நிறைத்தது. இந்த மணத்தைத்தான் அன்றொரு நாள் கைகளிலிருந்தும் மனத்திலிருந்தும் கழுவித் தீர்த்திருந்தான் அவன். இன்று அதே மணம் மிக அருகில் கமழ்கிறது.

கீழே குனிந்து அவன் பாதங்களைத் தன் பூவிரல்களால் தீண்டி வணங்க முயன்றாள் சுரமஞ்சரி. இளங்குமரன் தன் பாதங்களைப் பின்னுக்கு இழுத்து விலகிக் கொண்டான். அவன் இழுத்துக் கொண்ட வேகத்தையும் முந்திக் கொண்டு வந்து பாதத்தில் அவளுடைய கண்ணீர் முத்து ஒன்று சிந்திவிட்டது. அவள் ஏமாற்றத்தோடு எழுந்தாள்.

“நீங்கள் என்னைக் கடுமையாகச் சோதிக்கிறீர்கள்.”

“தெய்வம் எனக்கு என் தாயைக் காண்பிக்காமல் இதைவிடக் கடுமையாகச் சோதிக்கிறது பெண்ணே!” என்று கூறிக்கொண்டே மரத்தடியில் உட்கார்ந்தான் இளங்குமரன். அவள் நின்று கொண்டேயிருந்தாள். இருவருக்குமிடையே அமைதி நிலவியது.

சிறிது நாழிகையில் சோர்வு மிகவே அப்படியே ஈரத் தரையில் சாய்ந்து படுத்துக் கொண்டு விட்டான் இளங்குமரன். அவள் மட்டும் முன்போலவே நின்று கொண்டிருந்தாள்.

“ஏன் நின்று கொண்டேயிருக்கிறாய்?”

“நிற்காமல் வேறென்ன செய்வது?”

“விடிவதற்கு முன் ஒன்றும் செய்வதற்கில்லை! விடிந்த பின் ஏதாவது கப்பலில் இடம் பிடித்து ஊர் திரும்பலாம்! அதுவரை இப்படியே நிற்கப் போகிறாயா?”

அவன் தலைப்பக்கத்தில் வந்து அவள் மெல்ல உட்கார்ந்து கொண்டாள். அந்த உரிமையும், நெருக்கமும் சற்று மிகையாகத் தோன்றின அவனுக்கு. “அதோ அந்த மரத்தடியில் போய்ப் படுத்துத் தூங்கு” என்று பக்கத்திலிருந்த வேறொரு மரத்தைக் காண்பித்தான் இளங்குமரன்.

“அங்கே போகமாட்டேன். பயமாயிருக்கும் எனக்கு.”

“பயப்படுவதற்கு இந்தத் தீவில் ஒன்றுமில்லை.”

‘நீங்கள் இருக்கிறீர்கள்’ என்று குறும்புத்தனமாகச் சொல்லிச் சிரிக்க நினைத்தாள் சுரமஞ்சரி. ஆனால் அப்படிச் சொல்லவில்லை. பயத்தினால் நாவே சொல்லுக்குத் தடையாகிவிட்டது.

“பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதே எனக்கு ஒரு பயமாகி விடும். ஈரத் தரையில் தலைக்கு ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் படுத்துத் தூங்கிப் பழக்கமில்லை எனக்கு. நான் இப்படியே நிற்கிறேன்” என்று மறுபடியும் எழுந்திருக்கப் போனவளைக் கைப்பற்றி உட்கார வைத்தான் இளங்குமரன். அவன் கை தன் கையைத் தீண்டிய அந்த விநாடி அவள் நெஞ்சில் பூக்கள் பூத்தன. மணங்கள் மணந்தன. மென்மைகள் புரிந்தன. தண்மைகள் நிறைந்தன.

“இதோ இப்படி இதன் மேல் தலை வைத்து உறங்கு” என்று தன் வலது தோளைக் காட்டினான் இளங்குமரன். சுரமஞ்சரி முதல் முதலாக அவனுக்கு முன் நாணித் தலை கவிழ்ந்தாள்.

“ஏன் பேசாமல் இருக்கிறாய்? உனக்குத் தலையணை இன்றி உறக்கம் வராதென்றால் என் கையை அணையாகத் தருகிறேன். இது பொதுவாக உன் மேல் எனக்கு ஏற்படும் கருணையைக் கொண்டு நான் செய்யும் உதவி. விரும்பினால் ஏற்றுக் கொள். இல்லாவிட்டால் நின்று கொண்டே இரு” என்றான் கடுமையாக.

செம்பொன் நிறத்துச் செங்கமலப் பூவினைப் போன்ற அவன் வலது தோளில் தலை சாய்த்தாள் சுரமஞ்சரி. அவள் மனத்தில் நினைவுகள் மிக மெல்லிய அரும்புகளாக அரும்பிக் கொண்டிருந்தன.

அப்போது, “பெண்ணே! இப்படி இன்றிரவு என் தாயோடு இந்தத் தீவில் தங்க நேர்ந்து அவளுக்குத் தலையணை இல்லாமல் உறங்க முடியாது போயிருந்தாலும், இதே வலது தோளைக் கருணையோடு அவளுக்கு அளித்திருப்பேன் நான். பிறருக்கு உதவுவதே பெருமை, அதுவும் இயலாதவர்களுக்கு உதவுவது இன்னும் பெருமை” என்று நிர்மலமான குரலில் கூறினான் இளங்குமரன்.

“நான் ஒன்றும் இயலாதவளில்லை. எனக்கு உங்களிடமிருந்து அன்பு வேண்டும்; கருணை வேண்டியதில்லை” என்று சீற்றத்தோடு தோளைத் தள்ளி விட்டுத் துள்ளி எழுந்தாள் சுரமஞ்சரி. அவள் இதயத்து ஆசை அரும்புகள் வாடி உதிர்ந்தன.
----------------

முதல் பருவம் : 1.38. உள்ளத்தில் ஒரு கேள்வி

பரிவும், ஏக்கமும், பசியும், குளிருமாகக் கழிந்த அந்த நீண்ட இரவுக்குப் பின் கப்பல் கரப்புத் தீவில் பொழுது புலர்ந்த பொழுது மங்கல நீராடி எழுந்த கன்னிகை போல் தீவு முழுவதும் புத்தழகு பூத்திருந்தது. மழை இரவுக்குப் பின்னர் விடியும் காலை நேரத்துக்கு எப்போதுமே மிகுந்த வனப்பு உண்டு. தண்மையும் மலர்ச்சியுமாக விடிந்த அந்தக் காலைப் போதில் இளங்குமரனும் சுரமஞ்சரியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. வெளியே எங்கும் குளிர்ச்சி, எங்கும் மலர்ச்சி. அவர்கள் இருவர் நெஞ்சங்களில் மட்டும் வெம்மையும், பிணக்கும் விளைந்திருந்தன. முதலில் இளங்குமரன் தான் துயில் நீங்கிக் கண்விழித்து எழுந்திருந்தான். அப்போது சுரமஞ்சரி எதிர்ப்புறமிருந்த வேறொரு மரத்தடியில் உட்கார்ந்தபடியே சாய்ந்து கண்மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்புவதற்காக அருகில் சென்று நின்று கொண்டு இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டி ஓசையுண்டாக்கினான் இளங்குமரன். அந்த ஓசையைக் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள் அவள். எதிரே அவனைப் பார்த்ததும் கோபத்தோடு முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். சிறு குழந்தையைப் போல் சீற்றம் கொண்டாடும் அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன்.

அவளுடைய கோபத்தையும், பிணக்கையும் பொருட்படுத்தாமல் நகரத்துக்குச் செல்லும் கப்பல்களைக் கூவியழைத்து ஏதாவதொரு கப்பலில் இடம் பெற்றுக் கொள்ள முயல்வதாக மேட்டில் ஏறினான். இளங்குமரன். விரைவில் அவனது முயற்சி பயனளித்தது. பச்சைக் கற்பூரத்தையும் வளைகளையும், பட்டுக்களையும் ஏற்றிக் கொண்டு சீன தேசத்திலிருந்து பூம்புகார்த் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த சீனத்துக் கப்பல் ஒன்று இளங்குமரனின் கூப்பாட்டுக்குச் செவி சாய்த்தது. மாதக் கணக்கில் கடல்பயணம் செய்து துறைமுகத்தை அடைவதற்கிருந்த அந்தக் கப்பலில் சுரமஞ்சரிக்கும் இளங்குமரனுக்கும் இடம் கிடைத்தது. இளங்குமரனும், சுரமஞ்சரியும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு தான் இருந்தார்கள். கப்பல் நிறையக் கற்பூரம் மணந்து கொண்டிருந்தது.

கப்பலின் தலைவன் மிகவும் இளகிய மனமுள்லவனாக இருந்தான். நனைந்தும், கசங்கியுமிருந்த அவர்கள் ஆடைகளைக் கண்டு மனம் இரங்கி, “இவற்றை அணிந்து கொண்டு பழைய ஆடைகளைக் களைந்தெறியுங்கள்” என்று புத்தம் புதிய பட்டாடைகளைக் கொண்டு வந்து அவர்களிடம் அளித்தான் அந்தச் சீனத்துக் கப்பலின் தலைவன்.

“பட்டுக்களின் மென்மையை அனுபவித்துச் சுகம் காணும் பழக்கம் இதுவரை எனக்கு இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. தயை கூர்ந்து என்னை விட்டுவிடுங்கள். ஆனால் இதோ என் அருகில் நிற்கும் இந்தப் பெண்ணுக்குப் பட்டாடை என்றால் கொள்ளை ஆசை. இவளுடைய வீட்டில் மிதித்து நடந்து செல்வதற்குக் கூடப் பட்டு விரிப்பைத் தான் பயன்படுத்துவார்கள். இவளுடைய உடலுக்குப் பட்டாடையும் கைகளுக்குப் புதிய வளையல்களும் நிறையக் கொடுத்தால் காவிரிப்பூம்பட்டினத்திலேயே பெருஞ்செல்வராகிய இவள் தந்தையின் நட்பும் உங்களுக்குக் கிடைக்கலாம்” என்று புன்னகையோடு கப்பல் தலைவனுக்கு மறுமொழி கூறினான் இளங்குமரன். அப்போது சுரமஞ்சரி கண்களில் சினம் பொங்க இளங்குமரனை எரித்து விடுவது போலப் பார்த்தாள்.

சுரமஞ்சரியின் தந்தையைப் பற்றியும், அவருடைய கப்பல் வாணிகத்தின் பெருமையைப் பற்றியும் இளங்குமரன் இனஞ் சொல்லி விளக்கிய பின்பு கப்பல் தலைவனின் மனத்தில் அவள் மேல் மதிப்பு வளர்ந்தது. உடனே விதவிதமான பட்டு ஆடைகளையும், வளையல்கள், ஆரங்கள் ஆகியவற்றையும் அவளுக்கு முன்னால் கொண்டு வந்து குவித்து, “இதைப் பாருங்கள், அதைப் பாருங்கள்” என்று வேண்டிக் கொள்ளத் தொடங்கி விட்டான் அவன்.

“நான் ஒன்றையும் பார்க்க வேண்டாம். முதலில் நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று சுரமஞ்சரி சீற்றத்தோடு கூறிய பின்பே அந்தக் கப்பல் தலைவனின் ஆர்வம் நின்றது.

கப்பல் காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தை அடைந்த போது அதன் தலைவனுக்கு நன்றி கூறிவிட்டுக் கீழே இறங்கினா இளங்குமரன். அவனை அடுத்துக் கீழே இறங்கிய சுரமஞ்சரி அவனிடமோ, கப்பல் தலைவனிடமோ சொல்லி விடைபெற்றுக் கொள்ளாமலே வேகமாக முன்னால் நடந்து செல்லலானால். இளங்குமரனும் விரைவாக அவளைப் பின் தொடர்ந்து அருகில் சென்று நின்று கொண்டு, “பெண்ணே! இப்படிச் சினத்தோடு முகத்தை முறித்துக் கொண்டு போவதனால் ஒரு பயனுமில்லை. என்னுடைய உதவியை இப்போதும் நான் உனக்கு அளிப்பதற்குச் சித்தமாயிருக்கிறேன். நீ விரும்பினால் உன்னுடைய மாளிகை வரை உனக்குத் துணை வருவேன்” என்றான். இதைக் கேட்ட பின்பும் சுரமஞ்சரியின் முகம் மலரவில்லை; மனம் நெகிழவில்லை.

“என் மேல் அன்பு செலுத்துகிறவர்களின் உதவிதான் எனக்கு வேண்டும். என்னை ‘எவளோ ஓர் அப்பாவிப் பெண்’ என்று நினைத்து வெறும் கருணையை மட்டும் காண்பிக்கிறவர்களிடம் நான் உதவியை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய மாளிகைக்குப் போய்ச் சேர்வதற்கு வழி எனக்குத் தெரியும்” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பாராமலே எடுத்தெறிந்து பேசிவிட்டு முன்னைக் காட்டிலும் வேகமாக நடந்தாள் சுரமஞ்சரி. அவள் அவனிடம் இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டுச் செல்வதைக் கண்டு அருகில் நின்ற சிலர் பெரிதாகச் சிரித்தனர். தன்னை ஏளனம் செய்கிற தொனியில் அவர்கள் சிரிப்பு ஒலித்தாலும் இளங்குமரன் அதைக் கேட்காதவன் போல் வேறு பக்கமாகத் திரும்பி நடந்தான். ஏற்றுமதி செய்வதற்குக் குவித்த பொருள்களும், இறக்குமதி செய்து குவித்த பொருள்களுமாக அம்பாரம் அம்பாரமாய்ப் பல்வேறு பண்டங்கள் நிறைந்திருந்த துறைமுகப் பகுதிகளைக் கடந்து வெளியே வந்தான் இளங்குமரன். அன்று காலையிலிருந்தே அவன் மனமும், எண்ணங்களும் சுறுசுறுப்பாயிருந்தன. அங்கே துறைமுக வாயிலில் இருந்த ‘பார்வை மாடம்’ என்னும் மேடையில் ஏறி நின்று பார்த்தால் பூம்புகாரின் அக நகரும், புறநகரும், கடலுக்குள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை உள்ள காட்சிகளும் தெரியும். பெரிதும் சிறிதுமான கப்பல்களும் காட்சியளிக்கும். துறைமுகத்தில் வந்து இறங்கும் வெளிநாட்டு மக்கள் ஏறிப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்த மாடமாளிகை யாகையால் அது பார்வை மாடம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பார்வை மாடத்தில் ஏறி நின்று பார்த்த இளங்குமரனுக்கு முதல் நாள் மழையில் நனைந்திருந்த நகரும், சுற்றுப் புறங்களும் அற்புதமாய்த் தோன்றின. எல்லையற்ற பெருநீர்ப் பரப்பினிடையே குளிர்ந்த வைகறைப் போதில் பனித்துளி புலராது தலைதூக்கி மலர்ந்து கொண்டிருக்கும் பெரும் பூவைப் போல் மழையில் நனைந்திருந்த நகரத்தில் பகல் பிறந்து விரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த போது இளங்குமரன் மனத்தில் விசித்திரமானதோர் ஆவல் அரும்பியது. அப்போதே நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கால் போகும் போக்கில் நடந்து சுற்றிவிட்டு வரவேண்டும் போலிருந்தது அவனுக்கு. இப்படிப் பல சமயங்களில், மழையிலும் வெயிலிலும் காரணமும் நோக்கமுமின்றி அநுபவத்தைத் தேடும் அநுபவத்திற்காக ஊர் சுற்றியிருக்கிறான் அவன். கப்பலிலிருந்து இறங்கி வந்த போது புறவீதியில் வளநாடுடையார் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் தங்கிய பின் அங்கிருந்து நேரே படைக்கலச் சாலைக்குப் போய்விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த அவன் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். உற்சாகத்தோடு ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். ஒவ்வொரு இடமாகப் பார்த்து விட்டுப் பௌத்தப் பள்ளியும் புத்தர் பெருமானுக்குரிய ஏழு பெரிய விகாரங்களும் அமைந்திருந்த இடமாகிய ‘இந்திரவிகாரம்’ என்னும் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான் அவன். தூபிகளோடு கூடிய வெண்ணிற விமானங்கள் ஏழும் தோட்டத்துக்கு நடுவே தூய்மையின் வடிவங்களாகத் தோன்றின. புத்த விகாரங்களுக்கு முன்னால் அங்கங்கே சிறு சிறு கூட்டங்களுக்கு நடுவே நின்று கொண்டு பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவிகள் அறிவுரைகளைப் பகர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சில துறவிகள் ‘எங்களை எதிர்த்துச் சமய வாதம் புரியும் திறமையுள்ளவர்கள் வரலாம்’ என்று அழைப்பது போல் தத்தம் கொடிகளைக் கம்பங்களின் உயரத்தில் பறக்க விட்டுக் கொண்டு வெற்றிப் பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

அந்த புத்த விகாரங்களுக்கு முன்னால் சமயவாதிகளின் திறமையான பேச்சில் மயங்கிக் கூடியிருந்த கூட்டத்துக்குள் இளங்குமரனும் புகுந்து நின்று கொண்டான். இலைத்த தோற்றத்தையுடைய நெட்டையான பௌத்த சமயத் துறவி ஒருவர் புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகுக்கு விளையும் நன்மைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் கதிரவனும் சந்திரனும் தீங்கின்றி விளங்குவார்கள். நாளும், கோளும் நலிவின்றி நல்லனவாய் நிகழும். வானம் பொய்க்காது, வளங்கள் குறையாது. உலகத்து உயிர்கள் துன்பமின்றி இன்பமே நுகரும். மலைகளும், கடலும் பெரும்பயன் நல்கும். பசுக்கள் கலம் நிறையப் பால் பொழியும். உலகத்தில் நோய்களே இல்லாமற் போய்விடும். கொடிய விலங்குகளும் பகை நீங்கி வாழும். கூனும், குருடும், ஊமையும், செவிடும் இன்பமயமாக மாறிவிடும்...” என்று தாமரை மலர் போன்ற வலக் கையை ஆட்டி உயர்த்திப் பேசிக் கொண்டிருந்த அந்தத் துறவிக்கு மிக அருகிற் சென்று அவருடைய வலது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு கேட்டான் இளங்குமரன்: “எனக்கு ஒரு சந்தேகம். அருள்கூர்ந்து அதைத் தெளிவாக விளக்கிய பின் நீங்கள் மேலே பேசலாம்.”

“ஆகா! அப்படியே செய்கிறேன் அப்பா. முதலில் உன் சந்தேகத்தைச் சொல்” என்று அவன் பிடியிலிருந்து தம் கையை விடுவிடுத்துக் கொள்ளாமலே கேட்டார் அவர். அவனுடைய செய்கையால் அவர் சிறிதும் அதிர்ச்சியோ, அச்சமோ அடைந்ததாகவே தோன்றவில்லை. அமைதியாக நகைத்துக் கொண்டே நின்றார்.

“புத்த ஞாயிறு தோன்றுங் காலத்தில் உலகத்தில் பசி, பிணி, துன்பம் ஒன்றுமே இல்லாமற் போகும் என்று சற்று முன் நீங்கள் கூறியது மெய்தானா அடிகளே?”

“மெய்தான்; இதில் உனக்குச் சந்தேகம் ஏன்?”

“அப்படியானால் இப்போது என்னோடு நான் கூப்பிடுகிற இடத்துக்கு வாருங்கள், அடிகளே!” என்று கூறிக் கொண்டே அவரைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு விரைந்து நடந்தான் இளங்குமரன். அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்க இயலாத துறவி அவனுடன் இழுபடுவது போல் தட்டுத் தடுமாறி விரைந்தார். இந்த வம்பு எதில் போய் முடிகிறதென்று காணும் ஆவலினால் கூட்டத்தில் சிலரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். இளங்குமரனுக்கும், துறவிக்கும் பின்னால் ஒரு பெரிய கூட்டமே தொடர்ந்து நடந்து வரத் தொடங்கியிருந்தது. உலக அறவியின் பொது அம்பலத்துக்குள் நுழைந்து அங்கே பசிப் பிணியாலும், வறுமை வேதனைகளாலும் நொந்து கூடியிருந்த ஏழ்மைக் கூட்டத்தை அந்தத் துறவிக்குச் சுட்டிக் காண்பித்தான் இளங்குமரன்.

“இவர்களைப் போன்றவர்களைக் கண்டு. இவர்களைப் போன்றவர்களின் துன்பங்களிலிருந்துதான் உங்கள் புத்தருக்கு ஞானம் பிறந்தது. ஆனால் இவர்களைப் போன்றவர்களின் பசியும், நோவும் தீர வழிதான் இன்னும் பிறக்கவில்லை. இவர்களைப் போன்றவர்கள் தலைமுறை தலைமுறையாக இன்னும் உலகத்தில் இருக்கிறார்கள். நோயும், நொடியும், பசியும், பாவமும் இவர்களோடு வழிமுறை வழிமுறையாக இருக்கின்றன. நீங்களோ இந்திரவிகாரத்து வாயிலில் நின்று கொண்டு புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகமே சுவர்க்க பூமியாக மாறிவிடும் என்று கதை அளந்து பாமரர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள், இவர்களுடைய இருண்ட வாழ்க்கையில் புத்த ஞாயிறு தோன்றிப் புத்தொளி பரப்பாதது ஏன்? இவர்களுடைய குழிந்த வயிறுகளில் சோறு குவியாதது ஏன்? ஒளியிழந்த கண்களில் ஒளி தோன்றாதது ஏன்?” என்று ஆவேசம் கொண்டவன் போல் உணர்வு மயமாக மாறி அவரைக் கேட்டான் இளங்குமரன். அவர் அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். பதில் கூறாமல் மெல்லச் சிரித்தார். தம்மையும் அவனையும் சுற்றிக் கூடியிருந்த கூட்டத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்தார்.

சிறிது நேரம் ஏதோ சிந்திப்பவர் போல் அமைதியாக நின்றார். பின்பு இளங்குமரனை நோக்கிக் கூறலானார்:

“தம்பீ! உன் கேள்விகள் மிக அழகாக இருக்கின்றன. சார்வாக மதத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இவ்வளவு அழகாகப் பேச வரும். அவர்கள் தாம் இப்படிப் பொருளற்ற கேள்விகளைக் கூட அழகான சொற்களால் கேட்பார்கள். இறைவன் என ஒருவன் இல்லை என்பார்கள். நல்வினை தீவினைகளின் விளைவை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தங்கள் இன்ப துன்பங்களுக்குத் தங்களுடைய வினைகளே காரணமென்று புரிந்து கொள்ளாமல் இறைவனே காரணமென்று மயங்கி அவனைப் பழிப்பார்கள்.”

“அடிகளே! நான் யாரையும் எதற்காகவும் பழிக்கவில்லை. இவர்கள் இப்படி வாழ நேர்ந்ததன் காரணத்தைத் தெரிந்து கொள்ள மட்டுமே ஆசைப்படுகிறேன்” என்றான் இளங்குமரன்.

“நல்லது! அதைத் தெரிந்து கொள்வதற்கு நீயும், நானும் சிறிது நேரம் விரிவாகப் பேசி வாதமிட வேண்டும். இதோ இங்கே என்னையும், உன்னையும் சுற்றிக் கூடியிருக்கும் காவிரிப்பூம்பட்டினத்துப் பொதுமக்கள் சாட்சியாக உன்னைக் கேட்கிறேன். சமயவாதம் புரிகிற இருவரும் ஒத்த அறிவுடையவராக இருக்க வேண்டியது நியாயம். என்னோடு சமயவாதம் புரிவதற்கு நீ கல்வியினால் தகுதி உடையவனா என்று முதலில் நான் தெரிந்து கொண்டு விடுவது நல்லது. நீ எந்தெந்த நூல்களைக் கற்றிருக்கிறாய் என்று சொல் பார்க்கலாம்.”

“வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வாட்போர்...” என்று சில பெயர்களை வரிசையாக அடுக்கினான் இளங்குமரன். துறவியும், கூடியிருந்தவர்களும் கொல்லென்று சிரித்துக் கைகொட்டி ஏளனம் செய்தார்கள்.

“தம்பீ! உன்னுடைய வாட்டசாட்டமான உடம்பையும் முரட்டுத் தோற்றத்தையும் பார்த்தாலே நீ பெரிய வீரன் என்பது தெரிகிறது. ஆனால் நான் இப்போது கேட்கும் கேள்வி உன் உடம்பின் வளர்ச்சியைப் பற்றி அன்று; மனத்தின் வளர்ச்சியைப் பற்றித்தான் கேட்கிறேன். மனம் வளர்வதற்காக நீ என்னென்ன நூல்களைக் கற்றிருக்கிறாய்? சமயங்களையும் தத்துவங்களையும் பற்றி என்னென்ன தெரிந்து கொண்டிருக்கிறாய்? என்னென்ன புரிந்து கொண்டிருக்கிறாய்?” என்று நிமிர்ந்து நின்று கை நீட்டி வினாவும் அந்தத் துறவிக்கு முன் இளங்குமரனின் தலை தாழ்ந்தது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக உடலின் பலத்தால் எதிர்க்க முடியாத ஓர் எதிரிக்கு முன் தாழ்ந்து தளர்ந்து போய்த் தலை குனிந்து நின்றான் அவன். என்ன பதிலை அவருக்குக் கூறுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. சர்வநாடியும் ஒடுங்கித் தளர்ந்து போர் தொடங்குமுன்பே எதிரியிடம் தோற்றுப் போய் நிற்கும் பேதை போல் நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை அவனுக்கு.

“புத்தமதத்தைப் பற்றியாகிலும் உனக்கு ஏதாவது தெரியுமா?”

‘உங்களைப் போன்ற மொட்டைத்தலைச் சாமியார்கள் அந்த மதத்தில் நிறைய இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும்’ என்று முரட்டுப் பதிலாகக் கூறி அவரை மடக்கலாமா என நினைத்தான் இளங்குமரன். ஆனால் உடலும் மனமும் குன்றிப் போய் அத்தனை பேருக்கு முன் அவமானப்பட்டு நின்ற அந்தச் சூழ்நிலையில் வாய் திறந்து பேசும் துணிவையே இழந்திருந்தான் அவன்.

‘உனக்கு என்ன தெரியும்? உனக்கு எதைப் பற்றி ஞானம் உண்டு?’ என்று அவன் உள்ளத்தில் பெரிதாய் எழுந்து இடையறாமல் ஒலிக்கலாயிற்று ஒரு கேள்வி. அந்தக் கேள்வியில் அவன் உள்ளத்தின் செருக்கெல்லாம் துவண்டு ஒடுங்கியது.

சுற்றிக் கூடியிருந்த கூட்டத்திலிருந்து வாய்க்கு வாய் தன்னை ஏளனம் செய்து இகழ்ந்து பேசும் குரல்கள் ஒலிப்பதை அவன் செவிகள் கேட்டன. அந்தக் கணத்தில் அவன் உடம்பும் மனமும் அதற்கு முன் எப்போதுமே அடைந்திராத கூச்சத்தை அடைந்தன. வெட்கத்தை உணர்ந்தன. வேதனையை அனுபவித்தன.

இந்திர விகாரத்தின் வாயிலில் இருந்து அந்தத் துறவியைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்த போது தன்னிடமிருந்த மிடுக்கும், கம்பீரமும் இப்போது போன இடம் தெரியாமல் பொலிவிழந்து நின்றான் இளங்குமரன்.

“மறுபடி எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் இப்படி வெறுமையான மனத்தோடு, வெறுங்கையை வீசிக் கொண்டு வராதே தம்பி! மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர். மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே” என்று அவனுக்குக் கேட்கும்படி உரத்த குரலில் கூறிவிட்டுக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தார் அந்த பௌத்த சமயத்துறவி.
--------------

முதல் பருவம் : 1.39. மனம் மலர்கிறது!

உலக அறவியல் பௌத்த சமயத்துறவியிடம் தோற்று அங்கே கூடியிருந்தவர்களின் ஏளனத்தையும் இகழ்ச்சியையும் ஏற்க நேர்ந்த பின், நடைப்பிணம் போல் தளர்ந்து படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டிருந்தான் இளங்குமரன். மனமும் நினைவுகளும் தாழ்வுற்று வலுவிழந்திருந்த அந்த நிலையில் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எவரையும் எதிரே சந்திக்காமல் இருந்தால் நல்லதென்றெண்ணி ஒதுங்கி மறைந்து நடந்தான் அவன். முதல் நாள் இரவு கப்பல் கரப்பு தீவின் தனிமையில் சுரமஞ்சரி என்னும் பேரழகியைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நிமிர்ந்து நின்ற செருக்கும், தன்மானமும் இன்று எலும்பும் தோலுமாய் இளைத்துப் போன துறவி ஒருவருக்கு முன் தோற்றுத் தாழ்ந்து போய் விட்டதென்பதை நினைத்த போது அவன் மனம் தவித்தது.

‘என் மனம், என் மனம்’ என்று அவன் மற்றவர்களிடம் பெருமை பேசித் தருக்கிய அதே மனத்தில் ‘என்ன இருக்கிறது?’ என்று கேட்டு விட்டார் அந்தத் துறவி. முரட்டுத் திமிரையும், வறட்டு ஆணவத்தையும் தவிர அங்கே இருப்பது வேறு ஒன்றுமில்லை என்றும் நிரூபித்து விட்டார். பலர் நகைத்து இகழும்படி நிரூபித்து விட்டார்.

‘அப்படியில்லை! ஒரு போதும் அப்படியில்லை. என் மனத்தில் கருணையும் இருக்கிறது. ஓவியன் மணிமார்பனுக்கும், சுரமஞ்சரி என்ற பெண்ணுக்கும் துன்பம் நேர்ந்த காலங்களில் நான் கருணை காட்டியிருக்கிறேன். உலக அறவியிலும் இலஞ்சிமன்றத்திலும் உள்ள ஏழைகள் மேலும், இளைத்தவர் மேலும் இரக்கம் கொண்டிருக்கிறேன். இயலாதவர்களுக்கு உதவுவதில் இன்பம் கண்டிருக்கிறேன்.’

‘இருக்கலாம்! ஆனால், நம்மால் பிறரிடம் கருணை காட்ட முடியும் என்ற ஆணவ நினைப்புத்தான் உன்னுடைய கருணைக்குக் காரணம். ‘இரக்கப்பட முடியும்’ என்ற பெருமைக்காகவே இரக்கப்படுகிறவன் நீ! கருணைக்காகவே கருணை செலுத்தவும் இரக்கத்துக்காகவே இரங்கவும் உனக்குத் தெரியாதுதானே?’

இப்படி அவன் மனத்துக்குள்ளேயே அவனைப் பற்றி வாதப் பிரதிவாத நினைவுகள் எழுந்தன. தன்னைப் பற்றிய நினைவுகளைத் தானே தனக்குள் எண்ணி மெய்யின் ஒளியைத் தேட முயன்று தவிக்கும் ஆத்மாநுபவத் தூண்டுதலை அவன் அடைந்தான். அந்தத் தூண்டுதல் ஏற்பட ஏற்பட மனத்தின் கனங்களெல்லாம் குறைந்து மனமே மென்மையானதொரு பூவாகி விட்டது போலிருந்தது அவனுக்கு. தன் மனத்தின் குறிக்கோள் இப்போது புதிய திசையில் திரும்புவதையும் அவன் உணர்ந்தான்.

பதினெட்டு வயதில் இளமையின் நுழைவாயிலில் அவன் மனதில் ஏற்பட்டு ஆறிய ஆசைப் பசிகள் இரண்டு. ஒன்று உடம்பை வலிமையாகவும் வனப்பாகவும் வைத்துக் கொண்டு எல்லாருடைய கவனத்தையும் கவர வேண்டுமென்பது. மற்றொன்று விற்போரும், மற்போரும் போன்ற படைக்கலப் பயிற்சிகளில் எல்லாம் தேறித் தேர்ந்த வீரனாக விளங்க வேண்டுமென்பது. இந்த இரண்டு ஆசைகளும் நிறைவேறி மறந்து போன பின், தன்னுடைய தாய் யார், தந்தை யார், தனக்கு உறவினர்கள் யார் என்று அறியும் ஆசை எழுந்தது. நிறைவேறாத அந்த ஆசையில் நைந்து நைந்து அது இறுதியில் தாயை மட்டுமாவது காணும் விருப்பமாகக் குறைந்தது. அருட் செல்வ முனிவரின் மறைவுக்குப் பின் அந்த ஆசையும் நிறைவேறும் வழியின்றித் தவிப்பாக மாறி மனத்திலேயே தங்கிவிட்டது.

இன்றோ, முப்பதாவது வயதுக்கு இன்னும் சிறிது காலமே எஞ்சியிருக்கக் கூடிய முழுமையான இளமையின் கனிவில் நிற்கிறான் அவன். அவனுடைய சுந்தர மணித்தோள்களிலும், பரந்த பொன்நிற மார்பிலும், ஏறு போன்ற நடையிலும், எடுப்பான பார்வையிலும் மெல்லியலார் சொல்லிப் புகழுகிற இளநலம் மலரும் பருவம் இது. இந்தப் பருவத்தில் இன்று அவனுக்கு ஏற்பட்ட ஆசையோ விசித்திரமானதாயிருந்தது. இலக்கண இலக்கியங்களையும், சமய சாத்திரங்களையும், தத்துவங்களையும் முற்றிலும் முறையாகக் குறைவின்றிக் கற்றுக் காலையில் இந்திரவிகாரத்தில் சந்தித்த துறவியைப் போல் ஞான வீரனாக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்னும் ஏக்கம் அவன் மனத்தில் ஏற்பட்டிருந்தது. வெறும் ஏக்கமாகத் தோன்றிய இது அவன் வாழ்க்கையில் புதிய திசையில் பிறந்த புது வழியாகவும் அமையும் போலிருந்தது. உடம்பை வலிமையாகவும், வனப்பாகவும் வளர்த்ததைப் போலவே மனத்தையும் வளர்க்க ஆசைப்பட்டான் அவன். ‘சோற்றுக்கு இல்லாமையும் துணிக்கு இல்லாமையும் பெரிய ஏழ்மையல்ல. மெய்யான ஏழ்மை அறிவின்மைதான்; மெய்யான செல்வம் அறிவுடைமை தான்’ என்ற புதிய உணர்வு என்றுமில்லாமல் இன்று தன் மனத்தில் ஆழ்ந்து தோன்றுவதற்குக் காரணமென்ன என்பது இளங்குமரனுக்கே புரியாத பெரும் புதிராயிருந்தது.

இந்திர விகாரத்தில் அந்தத் துறவியைச் சந்தித்து அவரோடு வம்புக்குப் போக நேர்ந்திராவிட்டால் இப்படியொரு தவிப்பைத் தான் உணர இடமில்லாமற் போயிருக்குமோ என்று சிந்தித்தான் அவன். அந்தச் சிந்தனையின் போது தன் வாழ்வில் மலர்வதற்கிருந்த அல்லது மலர வேண்டிய வேறு ஓர் அழகிய பருவத்துத் தூண்டுதல் போலவே இந்திர விகாரத்துத் துறவியின் சந்திப்பு வாய்த்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் உறுதிப்பட்டது.

மனம் சென்ற போக்கில் சிந்தித்தவாறே கால்கள் சென்ற போக்கில் சுற்றிவிட்டு அவன் படைக்கலச் சாலையை அடைந்த போது நேரம் நண்பகலுக்கு மேல் ஆகியிருந்தது. நீலநாக மறவர் திருநாங்கூரிலிருந்து திரும்பி வந்திருந்தார். ஆனால் மீண்டும் எங்கோ புறப்படுவதற்குச் சித்தமாயிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக வாயிற்புறத்தில் அவருடைய தேர் குதிரைகள் பூட்டப் பெற்றுப் பயணத்துக்குரிய நிலையில் நின்று கொண்டிருந்தது. வழியனுப்புவதற்கு நிற்பது போல் படைக்கலச் சாலையின் மாணவர்களும் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். களைப்புத் தீர நன்றாக நீராடித் தூய்மை பெற்ற பின் உண்பதற்காகப் படைக்கலச் சாலையின் உணவுக் கூடத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இளங்குமரனை நீலநாக மறவர் உடனே கூப்பிடுவதாக ஒரு பணியாள் வந்து தெரிவித்தான். வயிற்றில் மிகுந்த பசியாயிருந்தாலும், அவரைச் சந்தித்து விட்டுப் பின்பு உண்ணச் செல்லலாமென்று அந்தப் பணியாளுடன் நீலநாகரைச் சந்திக்கச் சென்றான் இளங்குமரன்.

“உன்னை எதிர்பார்த்துத்தான் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன், இளங்குமரா! நேற்றிரவுதான் திருநாங்கூரிலிருந்து நான் திரும்பினேன். மறுபடியும் இப்போது திருநாங்கூருக்கே புறப்படுகிறேன். நீயும் என்னுடன் அங்கே வரவேண்டும். நாங்கூர் அடிகள் உன்னைக் காண்பதற்கு மிகவும் ஆவலோடிருக்கிறார். உடனே புறப்படலாம் அல்லவா?” என்று நீலநாக மறவர் கேட்ட போது, ‘நான் இன்னும் உண்ணவில்லை’ என்பதைச் சொல்லுவதற்குக் கூசிக் கொண்டு, “புறப்படலாம் ஐயா! நானும் வருகிறேன்” என்று கூறி உடனே இணங்கினான் இளங்குமரன்.

நீலநாக மறவர் தேரில் ஏறுவதற்கு முன் தேர்த்தட்டின் படியில் ஒரு காலும் தரையில் ஒரு காலுமாக நின்று கொண்டு மீண்டும் இளங்குமரனிடம் கூறினார்:

“தம்பீ! சோழ நாட்டிலேயே சான்றாண்மை மிக்கவரும் பெரிய ஞானியுமாகிய அடிகளின் அருள் நோக்கு உன் பக்கம் திரும்பியிருக்கிறது. முக்காலமும் உணரவல்ல அருமை சான்ற பெரியவர்களுடைய அன்பும் ஆதரவும் வலுவில் ஒருவனைத் தேடிக் கொண்டு வருவது பெரும் பாக்கியம். அந்த பாக்கியம் இப்போது உனக்குக் கிடைக்க இருக்கிறது! அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது உன் பொறுப்பு.”

நாத்தழுதழுக்க அவர் இவ்வாறு கூறியதைக் கேட்ட போது இளங்குமரனுக்கு என்ன காரணத்தாலோ மெய் சிலிர்த்தது. அவரை உள்ளே அமரச் செய்து தேரை அவனே செலுத்திக் கொண்டு சென்றான். தேர் புற வீதிக்குள் நுழைந்து வளநாடுடையார் இல்லத்தைக் கடந்த போது வாயிலில் நின்று கொண்டிருந்த முல்லை கையை உயரத் தூக்கி ஏதோ சொல்லிக் கூப்பிட்டதை இளங்குமரன் கவனித்தும் அப்போது அவளுக்காகத் தேரை நிறுத்தவில்லை. அதே போல் நாள்காடியின் திருப்பத்தில் எதிரே மிக அருகில் வந்த மற்றொரு தேரில் சுரமஞ்சரியும், வானவல்லியும், வசந்தமாலையும் அமர்ந்திருந்ததைக் கண்டும் அவன் தேரை நிறுத்தவில்லை. ஆனாலும் விநாடியில் தேர்களின் வேகத்தையும் மீறிச் சுரமஞ்சரியின் முகத்தில் தன்னைப் பார்த்ததால் ஏற்பட்ட சிறிது மலர்ச்சியை அவன் கவனிக்கும்படி நேர்ந்தது. காலையில் துறைமுகத்தில் தன்னிடம் கோபித்துக் கொண்டு பிணங்கி ஓடிய போது அவள் இருந்த நிலையையும், இப்போது எதிரே தேரில் சந்தித்த போது இருந்த நிலையையும் ஒப்பிட்டு நினைத்தான் இளங்குமரன். மிகவும் அழகிய பெண்களின் மனத்துக்கு அழகைப் போலவே பலவீனங்களும் மிகுதி என்று தோன்றியது அவனுக்கு. தேர் காவிரிப்பூம்பட்டினத்தின் அழகிய பகுதிகளை ஒவ்வொன்றாகக் கடந்து திருநாங்கூருக்குச் செல்லும் வழியில் இளங்குமரனுக்குப் பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டு வந்தார் நீலநாக மறவர். நாங்கூர் அடிகள் என்ன நோக்கத்தோடு இளங்குமரனை அழைத்திருக்கக் கூடும் என்பதையும் விளக்கிக் கூறினார். இளங்குமரனுக்கு அவற்றைக் கேட்டு மிகவும் பூரிப்பு உண்டாயிற்று. “ஐயா! ஊழ்வினை என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எத்துணைத் தொடர்பாகக் கோவைப்படுத்துகிறது பார்த்தீர்களா? இன்று காலையில் தான் தற்செயலாக நேர்ந்த ஒரு அநுபவத்தினால் எனக்கே ஞான நூல்களைக் கற்க வேண்டுமென்ற தீராப் பசி எழுந்தது. உடனே யாரோ சொல்லி வைத்தது போல் நீங்கள் என்னைத் திருநாங்கூருக்கு அழைத்தீர்கள். எல்லாம் எவ்வளவு இயைபாகப் பொருந்தி வருகின்றன, பாருங்கள்!” என்று நன்றியோடு அவரிடம் கூறினான் இளங்குமரன். தான் இந்திர விகாரத்துத் துறவியிடம் அவமானப் பட்டதையும் மறைக்காமல் சொல்லிவிட்டான் அவன்.

“இதையெல்லாம் அவமானமாக நினைக்கலாகாது தம்பீ! நோயும், மூப்பும், மரணமுமாக உலகில் மனிதர்கள் நிரந்தரமாய் அடைந்து கொண்டிருக்கிற அவமான இருளில் தான் புத்த ஞாயிறு பிறந்து ஒளி பரப்பியது” என்று அவர் மறுமொழி கூறினார்.

அவர்களுடைய தேர் நாங்கூர் அடிகளின் பூம்பொழிலை அடைந்த போது தற்செயலாக நிற்பவர் போல் நாங்கூர் அடிகளே வாயிலில் வந்து நின்று கொண்டிருந்தார்.

ஆயிரம் கதிர் விரிக்கும் ஞாயிற்றொளி அலைகடற் கோடியில் மேலெழுவது போல் அலர்ந்திருந்த அடிகளின் முகத்தைப் பார்த்த போது இளங்குமரனின் உள்ளத்தில் பணிவு குழைந்தது. அவன் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். நீலநாகமறவரும் வணங்கினார். அடிகளின் கண்கள் இளங்குமரனையே பார்த்துக் கொண்டிருந்தன.

சிறிது நேர அமைதிக்குப் பின், “நீ மிகவும் பசித்துக் களைத்துப் போயிருக்கிறாய்” என்று இளங்குமரனை நோக்கிச் சிரித்தவாறே கூறினார் நாங்கூர் அடிகள். அவருடைய சிரிப்பில் எதிரே இருப்பவர்களின் அகங்காரத்தை அழித்து விடும் ஆற்றல் இருப்பதை இளங்குமரன் உணர்ந்தான்.

“அவன் பசித்திருப்பது மெய்தான்; ஆனால் அந்தப் பசி சோற்றினாலும் நீரினாலும் தீராத பசி, ஞானப்பசி. நீங்கள் தான் அந்தப் பசியைத் தீர்த்தருள வேண்டும்” என்றார் நீலநாகமறவர். அடிகள் முகம் மலர நகைத்தார். பின்பு மெல்லக் கேட்டார்:

“பசி தீர்க்கிறவர்களுக்கு இந்தப் பிள்ளை என்ன விலை கொடுப்பானோ?”

“மனம் நிறைய அறியாமையையும், ஆணவத்தையும் தவிரக் கொடுப்பதற்கு வேறொன்றும் நான் கொண்டு வரவில்லையே ஐயா!” என்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே பதில் கூறினான் இளங்குமரன். அப்போது அவன் கண்களில் நீர் நெகிழ்ந்தது. அழுகிறாற் போல் குரல் நைந்து ஒலித்தது.

அடிகள் இளங்குமரனுக்கு அருகில் வந்து அவனைத் தழுவிக் கொண்டார்.

“நீ வேறு ஒன்றும் விலை தரவேண்டாம். உன்னையே எனக்குக் கொடு. என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்யும் விளை நிலமாக நீ இரு. அதுவே போதும்.”

“என் பாக்கியம்” என்று கூறியவாறே மீண்டும் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் இளங்குமரன்.

“இந்தப் பாதங்களை நன்றாகப் பற்றிக் கொள். இவற்றை விட்டு விடாதே. உன் அறியாமையும் ஆணவமும் இவற்றின் கீழ்த் தாமே கரைந்து போகும்” என்று கூறிவிட்டுத் தேரில் ஏறினார் நீலநாக மறவர். மறுகணம் அவருடைய தேர் திரும்பி விரைந்தது. நாங்கூர் அடிகள் இளங்குமரனின் கைகளைப் பற்றிக் கொண்டார். மகிழ்ச்சியோடு அவனிடம் கூறலானார்:

“என்னுடைய மனத்தில் உதயமாகும் காவியம் ஒன்றிற்கு நாயகனாவதற்கு முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். அவன் இன்று எனக்குக் கிடைத்து விட்டான்! அந்தக் காவியம் உருவாக இனித் தடையில்லை.”

முதல் பருவம் முற்றும்.


This file was last updated on 25 Dec. 2018
Feel free to send the corrections to the Webmaster.